06 Mar

நூல் அறிமுகம்: யதார்த்தனின் ’நகுலாத்தை’ நாவல்

Review By:

ஹனீஸ் மொஹம்மத் 

பொங்கியெழுந்து தீய்ந்த கதை.

‘ஆச்சி காட்டின் மீதும் குளத்தின் மீதும் அதனில் உறையும் தெய்வங்கள் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையைச் சிறிதும் தளர்த்தினாளில்லை. மாறாக அவளுக்கு மனிதர்கள் மீதும் ஏன் தன்மீதும் கொண்டிருந்த அவநம்பிக்கை வலுப்பெற்றுக்கொண்டே போனது.’

  • நாவலிலிருந்து

ஈழப்பரப்பில் கடந்து சென்ற நாற்பது, ஐம்பது நிறம் பூக்காத இக்காலத்தை மையமாகக் கொண்டெழுதப்படும்
எவ்வகையான இலக்கிய வகையராக்களாக இருந்தாலும் பேரினவாதத்தையும், போரையும் தவிர்த்துவிட்டு எழுதப்பட முடியாத ஒன்றாகவே எண்ணுகிறேன்.

அண்மித்து இவ்வகையான படைப்புகளுக்கு சில எதிர்ப்புக் குரல்களும் எழுகின்றன. அவர்களது குற்றச்சாட்டுக்களாக; தமிழ் நாட்டிலுள்ள ஈழ ஆதரவுத்தளத்தினை கவர்ந்து கொள்வதற்கான கழிவிரக்க குரல்களாக இருக்கின்றன, ஒரே சரக்கே மாறி மாறி பேசப்படுகின்றன என்று முன்வைக்கப் படுகிறது. ஆனால் இவற்றை ஆக்கப்பூர்வமான குற்றக் காட்டுக்களாக நான் காணவில்லை. போரும், அழிவும், அதனால் ஏற்பட்ட அனந்தரமும் முற்று முழுதாக எழுதித் தீர்க்கப்பட்டு விட்டதா என்ற கேள்விக்கு யாரால் ‘முடிந்து விட்டது’ என்று சொல்ல முடியும். அதே மாதிரியே உலகில் ஏற்பட்ட அத்தனை அழிவுகளும் இன்னமும் வெவ்வேறு கலை இலக்கிய வடிவத்தில் உருப்பெறுகின்றது. சிங்கள இலக்கியப் படைப்புக்களில் இப்போதும் கூட இடதுசாரி இயக்க போராட்டங்களும், அவர்கள் மீதான அடக்குமுறையின் தாக்கத்தை மெல்லிய கோடுகளாகக் காணமுடியும். ஆனால் தற்போது போரைப் பற்றிய நேரடியான படைப்புக்கள் அரிதாகி விட்டது. மக்கள் வாழ்வியலோடு சேர்த்துப் போரும் அழிவும் பேசப்படுவதோடு போராட்ட மாயச் சுழியிலிருந்த அடக்குமுறையையும் தோலுரிக்கப்படுவது நல்லதொரு போக்கு. அப்படியானதொரு படைப்புதான் யதார்த்தன் எழுதிய ‘நகுலாத்தை’ நாவலாகும்.

யதார்த்தன் எனும் புனைபெயரில் எழுதிவரும் பிரதீப் குணரட்னம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மொழியியல் துறையில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். மரபுரிமை பற்றிப் பேசும் ‘தொன்ம யாத்திரை’ இதழின் ஆசிரியர்களில் ஒருவரும் ஆவார். ‘மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ என்ற கதைத் தொகுப்பே யதார்த்தனின் முதலாவது படைப்பாகும். இந்நாவல் அவரது முதல் நாவலென்று சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியாகப் பயணிக்கிறது. நாவலின் ஆரம்பத்திலேயே முல்லைத்தீவு நிலவியல் வரைபடம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. அதில் குறித்துக் காட்டப்பட்டிருக்கும் பிரதேசங்களினூடாக நாவல் ஒரு இடப்பெயர்வாகக் காலத்தின் துணையுடன் நகர்கிறது. நானூ ற்றியெழுபது பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் ஈழப்போரின் இறுதிக்கட்ட யுத்த காலப்பகுதியை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இதன் மொத்தமான கதைகளையும் என்னால் நான்கு பகுதிகளாக அணுக முடிந்தது.

1 வாழ்வியல்- காடும் வேட்டையும், வழக்காறும் வழிபாடும்
2 காதல்- ஆத்தையும் ஆச்சியும், தாமரையும் வெரோனிகாவும்.
3 அதிகாரம்- ஆத்தையின் சோர்வும்,
பிள்ளைபிடிக்காரர்களின் ஆட்சியும்
4 அழிவு- மண்ணினதும்,மனிதர்களினதும்.

கீரிப்பிள்ளை மேடு என்ற ஊர் அதை அண்மித்த கீரிக்குளம், நகுலாத்தை வளவு அதன் பின்புள்ள காட்டுப்பகுதி. முதல் மூன்று கதைகளின் தளமாக இவையே இருக்கின்றன. நாவல் பரம்பரை வழிவந்த வேட்டைக்காரனான சின்ராசனிலிருந்து ஆரம்பிக்கின்றது. கதையில் வரும் வேட்டையாடும் பகுதிகள் அவ்வளவு காத்திரமாகக் காட்சியாக விரிக்கிறார் நாவலாசிரியர். கதையின் ஆரம்பத்திலேயே சின்ராசனின் கட்டுத்துப்பாக்கி இயக்கத்தினால் பறிமுதல் செய்யப்படுகிறது. இருந்தாலும் அவன் இறுதிவரை ஒரு வேட்டைக்காரன் என்ற மமதையிலேயே வாழ்கின்றான். ஒவ்வொரு கிளை பகுதிகளில் புதிய கதை மாந்தர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே போகிறார் நாவலாசிரியர். அப்படி வந்து மறையும் சில உபகிளை பாத்திரங்களுக்கான விவரிப்பு சற்று மிகுதியாக இருப்பதுபோல தோன்றினாலும் ரசிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அப்படியொரு கதாபாத்திரம் தான் பனங் கள் இறக்கி விற்கும் காங்கேசன். அவனைத் தொந்தரவு படுத்தும் குரங்குகளின் நடத்தைகளின் விவரிப்பும் அபாரிதம். கதையில் முக்கிய மாந்தர்களில் ஒருவர் ஆத்தையும் ஆச்சியும்.

நகுலாத்தை அப்பிரதேசத்தின் பிரசித்திபெற்ற நாட்டார் தெய்வம். அதைப் பரிபாலித்து வருவது ஆச்சி எனும் கிழவி. நாவலாசிரியர் நாட்டார் தெய்வமான நகுலாத்தையின் வழிபாடு முறைகளை ஆச்சியின் ஊடாக கதையில் பல்வேறு கட்டத்தில் விவரிக்கிறார். மக்களின் நாளாந்த நடவடிக்கையில் இயக்கத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சந்தர்ப்பத்தில் அப்பிரதேச மக்களின் வாழ்வில் நகுலாத்தையின் மீதான நம்பிக்கையும், ஆச்சியின் சொல்லதிகாரமும் அப்பகுதி இயக்கப் பொறுப்பாளரின் தன்மானத்தை உரசி நிற்கிறது. ஆச்சிக்கு அடுத்தவளாக சின்னாத்தை என்று அழைக்கப்படும் தாமரையும் அவளது நண்பியான வெரோனிக்கா, இவர்களுக்கு இடையில் அழகான காதலொன்றை மெல்லிய படலமாகக் கதையில் வெளிப்படாமல் ஓடவிட்டிருக்கிறார் யதார்த்தன்.
வீரச்சாவடைந்த போராளிகளின் மனைவியான தமயந்தி, நிர்மலா ஊடாக அக் காலப்பகுதி இளம் விதவைகளின் உணர்வுகளையும், தவிப்புக்களையும் புரிந்து கொள்ளலாம். எல்லைப் பிரதேசங்களில் யுத்தம் அதிகரிக்கும் போது ஆத்தையின் மீதான வழிபாடும் நம்பிக்கையும் சோர்விழந்து போகக்  கிராமங்களின் உட்பகுதியில் இயக்கத்தின் கெடுபிடிகளும், கட்டாய ஆட்பிடிப்புக்களும் அதிகரித்துச் செல்கின்றது.
படித்த பிள்ளைகளும், படிக்கின்ற பிள்ளைகளும் கொழித்தெடுத்துப் பிடிக்கப்பட்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் போதிய பயிற்சிகளுமின்றி கொத்துக் கொத்தாக மடிவதாக வரும் சம்பவங்கள் நெருடலையும், அவநம்பிக்கையும் தருகிறது. கதையில் வெரோனிக்காவைப்   பிடித்துச் செல்வதும், சிறிய பையனான அட்சகனை பணயமாகப் பிடித்து ஊர்விட்டு ஒழிந்து திரிந்த தாமரையைத் தானாகவே சரணடைய வைத்ததுமாக இன்னும் பல சம்பவங்கள் இழையோடிச் செல்கின்றது கதையில். நாவலின் முடிவுப்பகுதி  கதையைக் கீரிப்பிள்ளை மேட்டிலிருந்து நகர்த்தி அது வரை காலமும் நம்பிக்கைக்கு உரித்தான நகுலாத்தையை தனித்து விடப்பட்டு கதையும் கதை மாந்தர்களும் வாழ்ந்த  இடங்களை எரிகணைகளும், ஆட்லறிக் குண்டுகளும் ஆக்கிரமிக்கின்றன. இறுதி நாட்களின் மக்களின் இடர்களையும்,
இடப்பெயர்வுகளையும் சொல்லுமிடங்கள் மனதில் இன்னமும் தேங்கியிருக்கின்றது. தங்கள் உயிர்களைக் காப்பதற்கு எதற்கும் தாயாராக இருந்தார்கள் என்பதைக் கதையில் அரச படையிடம் புகழிடம் தேடிச் செல்ல வழி சொல்லும் புலி உறுப்பினரை “டைகர் தெய சேர்” என்று காட்டி கொடுத்ததன் மூலம் சுட்டிக்காட்டுகிறார். இப்படியான பல வசனங்கள் நுணுக்கமான முறையில் நேர் எதிர் அரசியலைப் பேசுகின்றது. வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல என்பதற்கமைய, கதையில் நாவலாசிரியர் ஆயுதத்தோடு சம்மந்தப்பட்ட யாரும் இறுதியாக உயிரோடு இருப்பதாகக் காட்டவில்லை. வழமையான பாணியில் இதைப் பேரிலக்கியம், கழிவிரக்கம் எனத்தட்டி விட்டுச் செல்ல முடியாது. யதார்த்தன் போரின் பின்வீட்டுத் திண்ணையைப் பற்றிப் பேசியிருக்கிறார். யுத்தத்தினால் சீரழிந்த ஊர்கள் பற்றியும், வழிந்து உள்வாங்கப்பட்ட சிறார்களின் ஏக்கங்களுக்கு உருவம் கொடுத்திருக்கிறார்.
இந்த நாவலுக்கான முயற்சியையும் அவரின் தேடலும் பிரமிக்க வைக்கிறது. யதார்த்தன் மரபு, வரலாறு துறைகளில் தொடர்ந்து இயங்கும் அனுபவம் இந்த நாவலின் வெற்றிக்கு உதவியிருக்கின்றது என்றே கூறலாம். கீரிப்பிள்ளை மேடு,
கிரீக்குளம், வீரக்காடு, யுத்த நடைபெறும் எல்லைக் கிராமங்களின் நிலப்பரப்புக்கள் பற்றியும், நாட்டார் தெய்வங்களின் மீதான நம்பிக்கை, அவைகளுக்கான வழிபாடும், சடங்கு முறைகளும், இளம் பிள்ளைகளின், அவர்களின் பெற்றோர்களின், விதவைகளின், போராளிகளின் உணர்வுகள், கிராமத்து வழக்குச் சொற்கள், கதையாடல் முறை, கிராமத்து வைத்தியம். பெறுமதியானதும் கனதியானதுமான ஒரு உழைப்பை யதார்த்தன் கொடுத்து எல்லாத் தகவல்களையும் கோர்த்து நாவலாக்கியிருக்கிறார். சம்பவங்களை நாவலாக்குவதை விடத் தகவல்களை நாவலாக்குவது சிரத்தையான ஒன்று. அதை யதார்த்தன் நேர்படச் செய்திருக்கிறார். அதனால் என்னவோ இந்தக் கதையின் பிரதான கதைமாந்தர் யாரெனத் தெரியவில்லை. ஆரம்பித்தலிலும் முடிவிலும் வரும் சின்ராசனா? நட்டார் தெய்வம் நகுலாத்தையா? ஆச்சியா? தமயந்தியா? கீரிப்பிள்ளை மேடா? கிரீக்குளமா? அதேபோல கதை கூறும் முறையும் கதைக்கான தளத்திற்கு ஏற்றதுபோல மாறிக்கொண்டு போகிறது. நாவலின் கதை கூறலை மாந்தர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. நாவலில் காதலும், வெறுப்பும் உணர்வுகளும் மேலிடும் இடங்களில் கவித்துவம் நிறைந்த வரிகள் நிறைந்திருக்கின்றன.
“வேட்டை முடிந்த அந்த மரத்தடி நிழல், மீண்டும் பழைய அமைதிக்குத் திரும்பியது.”

“வியர்த்துக் கசியும் உடல் நதியின் மேற்பரப்பில் வீழ்ந்து நீரூறிக் குளிர்ந்த ஐந்து கிளைகள் கொண்ட மரத்தின் கொம்பாக விரல்கள் ஓடி நெழிந்தன. ”

”ஊருக்குள் நுழையும் போது கிரவல் வீதிகளில் வெள்ளம் சிவந்து ஓடிக் கொண்டிருந்தது”

நாவலில் நாவலாசிரியர் மிகக் கடுமையாகப்
போராட்டத்திற்கான கட்டாய சேர்ப்பை, சிறுவர்களின் ஆட்சேர்ப்பை பல இடங்களில் சாடுகிறார். அறம் என்பதை அவர்களுக்குச் சாதகமான முறையில் விளங்கிக் கொள்கிறார்கள் என்பது போலவே சம்பவங்கள் கதையில் அமைந்திருக்கின்றன.

…வெரோனிக்கா முடிக்க முதல் அருகில் இருந்த தளபதி இவளை இடைமறித்து “இஞ்ச பாரும் பிள்ளை, நாங்கள் ராணுவம் இல்லை. நாங்கள் விடுதலைப்போராளியள், ஒரு இராணுவ எதேட்சதிகார கட்டமைப்புக்கும். விடுதலைக்காகப் போராடுற எங்களுக்கும் இதுதான் வித்தியாசம், அதாலை நீங்கள் இந்த விசயத்தை சரியாய் விளங்கிக் கொள்ளவேணும், என்னதான் கோவம் சுவலை இருந்தாலும், நிதானமில்லாமல் நடக்கக்கூடாது. …., ஒரு ராங் மட்டும் குறைச்சு மெடிக்ஸ்சுக்கு அனுப்புறம். விளங்குதோ?”

“அப்ப என்னை விருப்பமில்லாமல் பிடிச்சுக்கொண்டு வந்து இயக்கத்தில் சேத்தது எந்த மானுட அறத்தில் வரும்?” வாய் உன்னியது. மானிட அறம் என்ற அந்த வார்த்தை அவர்களிடமிருந்து மிகுந்த செயற்கைத்தனத்துடன்
வெளிப்பட்டதை நெஞ்சு உணர்ந்து…

இப்பிரதி ஏந்தியிருக்கும் கதைகளினூடாக அதற்குரிய அரசியலை அதுவே தேடிக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

நாவலை வாசிக்கும்போது காட்சிகளினதும், சம்பவங்களினதும் விவரிப்புக்கள் காட்சியாக விரிவடைகின்றது. வேட்டையாடும் சம்பவங்கள் புதிய அனுபவங்களாக இருந்தது. நிலத்தின் வரைபடம் முதல் கூட்டங்களிற்கு இடையில் தோன்றும் ஓவியங்களைப் போல் அழிவடைந்துபோய் ஒரு குறும் பரப்பினுள் மக்கள் சிறையாகிக் கொள்வதின் நான் உணர்ந்த உணர்வுகளை எழுத்தில் கொண்டு வர முடியாது. நாவலை வாசிப்பதன் மூலமாகவே அதை அடைந்துகொள்ளலாம். ஒரு இலக்கியப் படைப்பால் வாசகர்களின் மீது எந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி கேள்விக்கு உட்படுத்தப்பட்டே வருகின்றது. அது யதார்த்தமும் தான். அடுத்த வாசிப்புக்கு அந்த வாசகர் நகரும் போது புதியதொரு உணர்வுகளால் ஆட்கொள்ளப்படுகின்றான், ஆனால் முந்திய வாசிப்பின் சாறு நம்மில் தேங்கி நின்று ஏதோவொன்று கசடும், சுயத்தை, அன்பை, பரிதாபத்தை அல்லது சினத்தையாவது. அப்படியொரு உணர்வை நாவலில் வரும் நிலத்தின் மீது, அதன் கதை மாந்தர்களின் மீதும் பொலிய யதார்த்தனின் வரிகள் என்மீது இன்னமும் சிராய்ந்து கொண்டிருக்கின்றன.

– ஹனீஸ் மொஹம்மத், இலங்கை.

Nantri: https://bookday.in  

[February 25, 2023]

06 Mar

நகுலாத்தை – யதார்த்தன்

Review By

சரவணன் மாணிக்கவாசகம்

 

 

ஆசிரியர் குறிப்பு:

இலங்கையின் யாழ்பாணத்திலுள்ள சரசாலை என்ற கிராமத்தில் பிறந்தவர். சமூக செயற்பாட்டாளர். தொன்ம யாத்திரை எனும் இதழின் ஆசிரியர்களில் ஒருவர்.
‘மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. இது சமீபத்தில் வெளியான இவருடைய முதல் நாவல்.

நூலிலிருந்து:

‘அவள் என்றைக்குமில்லாத நிறங்களை உடலெங்கும் பரவவிடுவதும், அவளுடைய கரிய வாளிப்பான உடல் ஒரு கருங்கடலைப்போல் அலைகொள்ளத் தொடங்கி, அவன் நிதானத்தை நடுக்கடலுக்கு எடுத்துச்சென்று புதைப்பதையும் அவனால் பார்க்கமட்டும் தான் முடிந்தது. தான் வீழ்த்தப்படுவதைக் கவனித்துக் கொண்டே மனம் அவள் இசைத்தலுக்கு சதிர் கொண்டது. காங்கேசனுக்குள் ஒரு ஒப்பிடுதலையும் குற்ற உணர்வையும் அவள் நிறுவ முயன்றாள். ஆனால் ஒரு வார்த்தை கூட அவளுக்கு அதற்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. தேகத்திலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்க்கயிறும் இறுக்கிக் கட்டுவதற்குப் பதிலாக மனமத்தில் சுழன்று காங்கேசனைக் கடைந்தன. அவளாக விலகினால் மட்டும் தான் அவன் விலகமுடியும்.’

ஈழத்தில் பல குழுக்கள். பல அரசியல் நிலைபாடுகள். தமிழர்கள் கணிசமாக இருக்கும் எந்த நிலத்திலும் குழுக்கள் உருவாகாமல் இருந்ததில்லை. அவற்றை விட்டுவிட்டு இலக்கியம் என்ற மையப்புள்ளியில் எல்லோரையும் இணைத்தால், ஈழத்திலிருந்து வரும் இலக்கியம் சமீபகாலங்களில் தமிழுக்கு மிக முக்கியமான பங்களிப்பை அளித்திருக்கிறது. தனியாகப் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை, ஆனால் இலக்கிய நுட்பத்தில் அவர்கள் இங்கே யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர். அந்த வரிசையில் யதார்த்தன் வந்து சேர்கிறார். முதல் அத்தியாயத்திலேயே விருந்து தயாராக இருக்கிறது என்ற ஆர்வமும், ஈழத்தமிழ்மொழி விரைவான வாசிப்பிற்கு உகந்ததல்ல, ரசித்துப் படிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் வந்துவிட்டன.

ஈழத்தில் இயக்கங்கள் அதிகாரத்துடன் இருக்கும், போர் மூளும் அபாயம் இருப்பதாக எல்லோரும் பதறும் காலம். போர்க்காலச் சூழல் பின்னணியில் வருகிறது. ஆனால் இது போர் நாவலல்ல.
கீரிமேடு என்ற வன்னியின் சிறுகிராமம் ஒன்றின் அந்த நாளைய வாழ்க்கை. மையக்கதாபாத்திரம் என்று தனியாக ஒருவரைச் சொல்ல முடியாத வகையில் பலரது வாழ்க்கையையும் படம்பிடிக்கும் நாவல். சிறுதெய்வங்கள் காக்கும் என்று திடமாக நம்பிய எளிய மக்களின் வாழ்க்கை அலைக்கழிக்கப்படப் போகிறது.

விடுதலைப்புலிகள் ஆண் மற்றும் பெண் சிறார், சிறுமிகளைப் பிள்ளைபிடிப்பவர்கள் போல் பிடித்துச் செல்வது நாவல் நெடுகிலும் வருகிறது. கட்டாய ராணுவசேவை பல நாடுகளில் உண்டு. விருப்பமில்லாதவர்களை வற்புறுத்தித் தூக்கி செல்லுதல் தவறு. நாவலில் விடுதலைப்புலிகள் மற்ற இயக்கங்களின் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொல்கிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் இல்லையென்றால் ஈழத் தமிழர் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இன்னும் எத்தனை பெடியள்களின் மேல் கை வைக்கப்பட்டிருக்கும்! பொதுமக்கள் கூடி இருக்கும் இடத்தில் குண்டுகளை வீசுவது என்ன மாதிரியான அரசு? போர்க்குற்றங்களில் இருந்து எளிதாக சிங்களவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். தமிழர்கள் வீழ்ந்துபட்டனர்.

நாவலில் பல நுட்பமான காட்சிகள் வந்து போகின்றன. துவக்கில்லாத சின்ராசு ஊனமுற்றவனாய் நினைப்பது. காங்கேசு துரிதம் உறவு வளர்வது. உன் குழந்தையா என்று நிரூபிக்க பால் கொடு என்று கன்னிப்பெண்ணிடம் சொல்வது, ராணுவப்பகுதிக்கு செல்லும் மக்கள் தன்ஊர் என்று கொல்லாமல் விட்ட விடுதலைப்புலி இருக்கும் இடத்தை இராணுவத்திடம் காட்டிக் கொடுப்பது, மார்கழி எதற்காக இரகசியமாய் பொறுப்பாளரிடம் பேசினாள் என்பது தெரிய வருவது என்று பல அற்புதமான தருணங்கள்.

பாவுநூல் இழையறுந்தது போல் பலரது முடிவு வேண்டுமென்றே சட்டென முடிக்கப்படுகின்றன. பலரது கதைகள் ஒரு வாழ்வியலையும், போரால் அது நிலைகுலைந்ததையும் சொல்வதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. சிறுதெய்வங்கள், நம்பிக்கைகள், பண்பாடு, தொன்மம், சடங்குகள், மரபின் எச்சங்கள் போன்றவற்றிற்கு யதார்த்தன் கொடுக்கும் அழுத்தமே ஒரு சமூகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. சொல்லப்போனால் போர் ஒரு பின்னணி இசை மட்டுமே. நாவலின் கடைசிப்பகுதி, தொன்மம், Metaphor, Symbols என்று பலவற்றின் கலப்பில் கனவின் சாயலோடு, இதயத்தில் பாரத்தை ஏற்றி முடிகிறது.

ஈழத்தமிழில் நல்ல பரிட்சயம் இருப்பவர்களால் மட்டுமே விரைவாக வாசிக்கமுடியும் மொழி, சில நேரங்களில் Visualsஆக, பலநேரங்களில் ஆற்றொழுக்கு நடையாக விரியும் மொழிநடை, தொன்மத்தையும் நவீனத்தையும் இணைக்கும் கதைசொல்லல், சாரங்கன் போல, செயல்களை வைத்தே அந்தந்தக் கதாபாத்திரத்தைத் தெளிவாக சித்தரித்திருப்பது, விடுதலைப்புலிகளின் சில போர்கள் குறித்த நீண்ட வர்ணனைகள் வந்த போதிலும் எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி முன்னால் நிற்கும் வன்னி கிராமத்தின் வாழ்வு என்று பல விஷயங்கள் இந்த நாவலில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றன. அரசியல் பார்வையைத் தாண்டி, இது ஒரு நல்ல நாவல். இலக்கிய வாசகர்கள் தவறாது வாசிக்க வேண்டிய நூல்.

பிரதிக்கு:

வடலி வெளியீடு
விற்பனை உரிமை கருப்புப் பிரதிகள்
94442 72500
முதல்பதிப்பு ஆவணி 2022
விலை ரூ.750.

 

Thanks:
Saravanan Manickavasagam