இரு சிறுகதைத் தொகுதிகளைத் தொடர்ந்து வெளிவருகின்ற யோ.கர்ணனின் மூன்றாவது புத்தகம். எத்திசையென்று இன்றி மரணம் விதியாக நின்ற யுத்த நிலத்திலிருந்து பொருளாதார பலம் – அதிகார பலம் – உடற் பலம் இன்ன பிற வலிமையுடன் தப்பிச் செல்ல முடிகிறவர்கள் மற்றும் அத்தகையை பலங்களுள் அடங்காதவர்களது தப்ப முனையும் தப்பவியலாப் பயணத்தை விபரிக்கிறது கொலம்பசின் வரைபடம். கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட இவ் அனுபவங்களை அச் சூழலிலிருந்து வந்தவரைத் தவிர வேறு யார் தான் எழுதிவிடமுடியும்? கொலைக்குற்ற சாட்சியங்களாய் தொடர்பூடகங்களில் பதிவான நிர்வாண உடல்கள் – அப்பாவிச் சனங்களது – போராடியவர்களது எனப் பதிவான சடலங்களுக்குப் பின்னாலுள்ள உயிர்-முகங்களை பதிவுசெய்கிறது. அம் முகங்களை எதிர்கொள்ள முடியாதவாறு தோற்றுப் போயுள்ளது காலம். போரின் இறுதிக் காட்சிகளின் யதார்த்தத்தை அறிய விரும்புகிறவர்கள் படிக்க வேண்டியதொரு பதிவு.
கொலம்பசின் வரைபடங்கள்
யோ. கர்ணன் ,குறு நாவல்,விலை – 50
vadaly –
‘மன்னன் இல்லை. தளபதிகள் இல்லை. போர் வீரர்களென்று யாரும் இல்லை. நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசையறியாத பயணிகள். கடலடிக்கும் எல்லை வரையாகவும் இருகரையும் விரிந்திருந்த ராஜ்யம் சுருங்கி ஒரு பொட்டல்வெளியில் எரிந்தழிந்தது. உயிராலும் ரத்தத்தினாலும் சதைகளினாலும் கட்டியெழுப்பப்பட்டு இருந்த கனவு சிதறிக்கிடந்தது. நந்திக்கடலில் கலந்த இன்னோர் ஆறாக ரத்த ஆறுமிருந்தது’ – ஈழத்தின் இன்றைய நிலைகுறித்த யோ.கர்ணனின் காட்சிப்படுத்துதல் இதுதான். இந்த நிலைக்கு முன்னதாக இறுதிகட்டத்தில் நடந்த கலங்கவைக்கும் நிகழ்வுகளை மனக்கண் முன் கொண்டுவருகிறார். படிக்க முடியாத அளவுக்கு நெஞ்சு பதறும் காட்சிகள் இவை. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர். போரில் ஒரு காலை இழந்தவர். ‘தேவதைகளின் தீட்டுத் துணி’, ‘சேகுவேரா இருந்த வீடு’ ஆகிய சிறுகதைத் தொகுதிகள் மூலமாக இலக்கிய கவனத்தைப் பெற்றவர். அவரது மூன்றாவது புத்தகம் இது. இறுதிகட்ட போரின் இறுதிகட்ட நிமிடங்களை தன்னுடைய சுயவாழ்க்கைப் பதிவுகளாகச் சொல்கிறார்.
அது என்ன கொலம்பசின் வரைபடம்? சிங்கள பயங்கரவாதத்தின் சித்ரவதை தாங்க முடியாமல் தப்பிக்க நினைத்த ஈழத்தமிழர்கள், எப்படியாவது தமிழகத்துக்கோ வேறு வெளிநாடுகளுக்கோ படகு பிடித்து போய்விட மாட்டோமா என்று தவிக்கிறார்கள். ஆனால், படகு கிடைக்க வேண்டும், வெளியில் வர வேண்டும், பாதை தெரிய வேண்டும், நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்தானே. அப்படி நடக்காமல் நடுக்கடலில் நிர்மூலம் ஆனவர்கள் எத்தனையோ பேர். தான் தேடிவந்த நாட்டை கொலம்பஸ் மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டார். ஆனால், ஈழத் தமிழ் மக்கள் பலரால் அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத்தான் குறிப்பால் உணர்த்துகிறார் யோ.கர்ணன். ‘கொலம்பஸுக்கு இருந்தது ஒரு சவால். கடலுக்கு மட்டுமே வரைபடம் வரைய வேண்டியிருந்தது. எங்களுக்கோ இரண்டு சவால்கள். கடற்பயணங்கள் புறப்படுவதற்காக கடற்கரைகளைச் சென்றடைவதற்கும் வரைபடங்கள் வரைய வேண்டியிருந்தது’ என்கிறார்.
இப்படி வெளியேறவிடாமல் இலங்கை ராணுவம் ஒரு பக்கமும் புலிகள் அமைப்பு இன்னொரு பக்கமுமாக துப்பாக்கி மூலமாக தடுத்த காட்சிகள் இந்தப் புத்தகத்தில் விரிகிறது. புலிகள் அமைப்பின் அரசியல் துறைக்கும் புலனாய்வு துறைக்குமான இடைவெளியை அம்பலப்படுத்துகிறது. தாக்குதல் அணிப் போராளிகளுக்கும் அரசியல் போராளிகளுக்கும் இருந்த இடைவெளியையும் சொல்கிறது. ‘பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்த அநீதியும், ரகசியமாக நடைமுறையில் இருந்த நீதியுமாக அந்த நாட்கள் அமைந்திருந்தன’ என்கிறார்.
‘நாம் வாழ்ந்த வாழ்வும் மரணமும் பயனற்றவை என்றான பின், லட்சியங்களுக்கும் கனவுகளுக்கும் பொருள் என்ன?’ என்று யோ.கர்ணன் கேட்கும் கேள்விதான் புத்தகத்தை மூடிவைத்த பிறகும் யோசிக்க வைக்கிறது.
– புத்தகன்
https://www.vikatan.com/government-and-politics/literature/95268-
vadaly –
கொலம்பசின் வரைபடங்கள்: Columbasin Varaipadankal (Tamil Edition) Format Kindle
https://www.amazon.fr/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Columbasin-Varaipadankal-Tamil-ebook/dp/B07M7G2PJ3
vadaly –
கொலம்பசின் வரைபடங்கள் – video dailymotion
விமர்சனம்: தோழர் சந்துஸ்
https://www.dailymotion.com/video/x2ciygx
vadaly –
உயிர் பிழைக்க வரைபடங்களைத் தேடிய சபிக்கப்பட்ட சனங்களில், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக யாரைச் சொல்வது?
பிழையான வரைபடங்களுடன் சரியான பயணங்களைச் செய்தவர்களையா?
அன்றியும் யாரைச் சாடுவது..?
சரியான வரைபடங்களுடன் பிழையான பயணங்களைச் செய்தவர்களையா?
நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசை அறியாத பயணிகளாய், அகதிகளாய்த் திகைத்து நிற்கையில், வாழ்க்கைப் பயணங்களுக்காய் மனதில் தோன்றி மறைந்திருக்கும் ஆயிரமாயிரம் கொலம்பசின் வரைபடங்கள்!
முடிந்தால் வாங்கி வாசித்துப் பாருங்கள்.
– bella-dalima
http://bella-dalima.blogspot.com/2014/02/blog-post.html
vadaly –
எழுபத்திரண்டு பக்கங்களைமட்டுமே கொண்டுள்ள இந்தக் குறுநாவல், தனக்காக எடுத்துக்கொண்டுள்ள பக்கங்கள் அறுபத்தாறுதான். அவையும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவது பயண முயற்சி முதலாம் பகுதியிலும், இரண்டாம் பயண முயற்சி மூன்றாம் பகுதியிலும் விவரணமாகின்றன. இரண்டாம் பகுதி இறுதி ஈழ யுத்தத்தின் சிலநாள்கள் முன்னரையும், சிலநாள்கள் பின்னரையும் கொண்டிருக்கிறது. ஓர் உரைக்கட்டாகமட்டும் அமைந்து மற்ற இரண்டுபகுதிகளோடும் ஒட்டாமலிருந்திருக்கவேண்டிய பகுதிகூட. இதை ஓர் உரைக்கட்டாக இல்லாமல் ஆக்கிய முக்கியமான அம்சம், அது புனைவின் வீறுக்கான மொழியின் வலிமையைக் கொண்டிருப்பது. மற்றது, அது விரிக்கும் களம், அக்காலகட்டத்திய வாழ்க்கைக் களமாக இருந்தமை. இந்த இரண்டாம் பகுதியின் தன்மை எட்டுணையளவு மாறியிருந்தாலும், இரண்டு பயண முயற்சிகளைமட்டுமே கொண்டிருந்து ஒரு குறுநாவல் வடிவத்துள் அமையமுடியாத தன்மை கொண்டிருந்துவிடும்.
‘மனிதர்களினால் பிறந்தவர்கள், மனிதர்களினாலேயே வீழ்த்தப்பட்டார்கள். நடக்கக் காலுடனும் ,பற்றிக்கொள்ளவும் பகிரவும் கைகளுடனும் பிறந்தவர்களையெல்லாம் யுத்தம் முறித்து வீழ்த்தியிருந்தது. விசித்திரப் பிராணிகளைப்போல வீதியோரமாக ஊர்ந்து ஊர்ந்து திரிந்தார்கள்’என்பது ஒரு விபரிப்புமட்டுமில்லை, இறந்தவர்களுக்குப் பின்னால் ஞாபகமாக்கப்படும் எஞ்சியுள்ள துயரங்கள்
– Devakanthan
தாய்வீடு, 2014
http://devakanthan.blogspot.com/2014/08/nool-vimarsanam-7.html
vadaly –
புலிகளின் de facto தமிழீழ ஆட்சி நடந்த வட இலங்கையில் இருந்து, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தென்னிலங்கையில் கொழும்பு நகரிலும், இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் தமது புதிய வசிப்பிடங்களை தேடிக் கொண்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு யோ.கர்ணன் எழுதியுள்ள “கொலம்பஸின் வரைபடங்கள்” என்ற நூல் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.
…
உண்மையில், இந்த நூலானது ஒரு மேற்கத்திய நாட்டவரான கோர்டன் வைஸ் எழுதிய “கூண்டு” நூலை ஒத்திருக்கிறது. இரண்டிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் வருகின்றன. ஆனால், கூண்டு நூலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய தீவிர புலி ஆதரவாளர்கள், கொலம்பஸின் வரைபடங்கள் நூலை தூற்றிக் கொண்டிருந்தனர். இந்த இரட்டை வேடத்திற்கு காரணம், கோர்டன் வைஸ் ஒரு மேற்கத்திய நாட்டு வெள்ளையர், யோ.கர்ணன் ஒரு தமிழீழத்து கறுப்பர் என்பது மட்டும் தான்.
– Kalaiyarasan
http://kalaiy.blogspot.com/2016/02/blog-post_8.html
vadaly –
கடந்த 30 வருடங்களாக நடந்த விடயங்கள் எமது ஞாபகத்தில் இல்லாது போகின்றன. இது பற்றி கல்வியாளர்களும் கதைப்பதில்லை. எழுத்தில் மட்டும் கொண்டுவருதல் என்ற குறுகிய வட்டத்தினை தாண்டி கதைப்பதற்கான வழிகள் உருவாக்கப்பட வேண்டும். நினைவுகளினை மீளக் கொண்டு வருவதற்கான சூழ்நிலைகள் இல்லாது போகின்ற போதுதான் தற்கொலை எண்ணங்கள் தலை தூக்குகின்றன. இது பற்றி கதைப்பதற்கான வெளி எமது சூழலில் இல்லை.
இத்தொகுப்பில் (கொலம்பசின் வரைபடங்கள்) உள்ள கதைகள் யாரையும் அழிப்பதற்கல்ல. இந்நூல்கள் எங்களை நாங்களே கேள்வி கேட்பதற்கும் எம்மை நாமே விளங்கி கொள்வதற்குமானவையாகும். பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்தில் வாசித்த ‘புதியதோர் உலகம்’, அண்மையில் வந்த ‘ஈழத்தின் வலி’ போன்ற நூல்களின் வரிசையில் இந்நூல் உள்ளது.
நூலாசிரியர்களுக்கு இந்நூல்களினை ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது என்பதினை இலக்கியங்களிற்கு அப்பால் பார்க்கப்பட வேண்டும். வன்முறை மிக்க சூழலில் மனிதத்தை நோக்குவதற்காக இவை படைக்கப்பட்டன. எங்களிடம் நிறைய ஆவணங்கள் உள்ளன. இப்பின்னணியில் வைத்து எங்களது பிரச்சினைகளினைப் புரிந்து கொள்ள வேண்டும்.
– ஜெயசங்கர்
http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/2014-03-23-05-39-58/71-104180
vadaly –
முள்ளிவாய்க்காலின் பின்னராக விடுதலைப் போராட்டத்தின் தோல்வி குறித்தும், அதன் போராட்ட அவலம், அராஜகப்போக்கு, வன்முறையரசியல் குறித்தும் சில நாவல்கள் வந்திருக்கின்றன. தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’, யோ.கர்ணனின் ‘கொலம்பசின் வரைபடங்கள்’ , செழியனின் ‘வானத்தைப்பிளந்த கதை’ , சாத்திரியின் ‘ஆயுத எழுத்து’ ஆகிய முக்கியமான நாவல்கள் வெளியாகியுள்ளன.
….
கோவிந்தனிடமொரு உண்மையிருக்கிறது.
ஷோபாசக்தியிடமொரு உண்மையிருக்கிறது.
குணாகவிழகனிடமொரு உண்மையிருக்கிறது,
தமிழ்க்கவியிடமொரு உண்மையிருக்கிறது,
யோ.கர்ணனிடமொரு உண்மையிருக்கிறது,
செழியனிடமொரு உண்மையிருக்கிறது.
இதில் எந்த உண்மை சாஸ்வதமானது. இதில் யாருடைய உண்மை எக்காலத்திற்கும் உண்மையானதும், நிச்சலமானதும்? பின்-நவீனத்துவ வாசித்தல் இந்த முரண் உண்மைகளை வாசித்துத் தொகுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை நமக்களித்திருக்கிறது. இம்முரண்உண்மைகளின் தொகுப்பிலிருந்துதான் வருங்காலம் தமக்கான போராட்டம் குறித்தான சித்திரத்தைத் தீட்டிக்கொள்ளப்போகிறது. போராட்டம் எழுந்ததன் பின்னாலிருந்த திண்மமான காரணிகளையும் அதன் இயங்கு திசைகளையும் இந்த முரண் தொகுப்பிலிருந்து தான் வருங்காலம் தொகுத்துக் கொள்ளவிருக்கிறது. அதற்கான வெளி மிக அவசியம்.
https://dhpirasath.wordpress.com/2016/10/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/