நூல் அறிமுகம்: யதார்த்தனின் ’நகுலாத்தை’ நாவல்
Review By:
ஹனீஸ் மொஹம்மத்
பொங்கியெழுந்து தீய்ந்த கதை.
‘ஆச்சி காட்டின் மீதும் குளத்தின் மீதும் அதனில் உறையும் தெய்வங்கள் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையைச் சிறிதும் தளர்த்தினாளில்லை. மாறாக அவளுக்கு மனிதர்கள் மீதும் ஏன் தன்மீதும் கொண்டிருந்த அவநம்பிக்கை வலுப்பெற்றுக்கொண்டே போனது.’
- நாவலிலிருந்து
ஈழப்பரப்பில் கடந்து சென்ற நாற்பது, ஐம்பது நிறம் பூக்காத இக்காலத்தை மையமாகக் கொண்டெழுதப்படும்
எவ்வகையான இலக்கிய வகையராக்களாக இருந்தாலும் பேரினவாதத்தையும், போரையும் தவிர்த்துவிட்டு எழுதப்பட முடியாத ஒன்றாகவே எண்ணுகிறேன்.
அண்மித்து இவ்வகையான படைப்புகளுக்கு சில எதிர்ப்புக் குரல்களும் எழுகின்றன. அவர்களது குற்றச்சாட்டுக்களாக; தமிழ் நாட்டிலுள்ள ஈழ ஆதரவுத்தளத்தினை கவர்ந்து கொள்வதற்கான கழிவிரக்க குரல்களாக இருக்கின்றன, ஒரே சரக்கே மாறி மாறி பேசப்படுகின்றன என்று முன்வைக்கப் படுகிறது. ஆனால் இவற்றை ஆக்கப்பூர்வமான குற்றக் காட்டுக்களாக நான் காணவில்லை. போரும், அழிவும், அதனால் ஏற்பட்ட அனந்தரமும் முற்று முழுதாக எழுதித் தீர்க்கப்பட்டு விட்டதா என்ற கேள்விக்கு யாரால் ‘முடிந்து விட்டது’ என்று சொல்ல முடியும். அதே மாதிரியே உலகில் ஏற்பட்ட அத்தனை அழிவுகளும் இன்னமும் வெவ்வேறு கலை இலக்கிய வடிவத்தில் உருப்பெறுகின்றது. சிங்கள இலக்கியப் படைப்புக்களில் இப்போதும் கூட இடதுசாரி இயக்க போராட்டங்களும், அவர்கள் மீதான அடக்குமுறையின் தாக்கத்தை மெல்லிய கோடுகளாகக் காணமுடியும். ஆனால் தற்போது போரைப் பற்றிய நேரடியான படைப்புக்கள் அரிதாகி விட்டது. மக்கள் வாழ்வியலோடு சேர்த்துப் போரும் அழிவும் பேசப்படுவதோடு போராட்ட மாயச் சுழியிலிருந்த அடக்குமுறையையும் தோலுரிக்கப்படுவது நல்லதொரு போக்கு. அப்படியானதொரு படைப்புதான் யதார்த்தன் எழுதிய ‘நகுலாத்தை’ நாவலாகும்.
யதார்த்தன் எனும் புனைபெயரில் எழுதிவரும் பிரதீப் குணரட்னம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மொழியியல் துறையில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். மரபுரிமை பற்றிப் பேசும் ‘தொன்ம யாத்திரை’ இதழின் ஆசிரியர்களில் ஒருவரும் ஆவார். ‘மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ என்ற கதைத் தொகுப்பே யதார்த்தனின் முதலாவது படைப்பாகும். இந்நாவல் அவரது முதல் நாவலென்று சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியாகப் பயணிக்கிறது. நாவலின் ஆரம்பத்திலேயே முல்லைத்தீவு நிலவியல் வரைபடம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. அதில் குறித்துக் காட்டப்பட்டிருக்கும் பிரதேசங்களினூடாக நாவல் ஒரு இடப்பெயர்வாகக் காலத்தின் துணையுடன் நகர்கிறது. நானூ ற்றியெழுபது பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் ஈழப்போரின் இறுதிக்கட்ட யுத்த காலப்பகுதியை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இதன் மொத்தமான கதைகளையும் என்னால் நான்கு பகுதிகளாக அணுக முடிந்தது.
1 வாழ்வியல்- காடும் வேட்டையும், வழக்காறும் வழிபாடும்
2 காதல்- ஆத்தையும் ஆச்சியும், தாமரையும் வெரோனிகாவும்.
3 அதிகாரம்- ஆத்தையின் சோர்வும்,
பிள்ளைபிடிக்காரர்களின் ஆட்சியும்
4 அழிவு- மண்ணினதும்,மனிதர்களினதும்.
கீரிப்பிள்ளை மேடு என்ற ஊர் அதை அண்மித்த கீரிக்குளம், நகுலாத்தை வளவு அதன் பின்புள்ள காட்டுப்பகுதி. முதல் மூன்று கதைகளின் தளமாக இவையே இருக்கின்றன. நாவல் பரம்பரை வழிவந்த வேட்டைக்காரனான சின்ராசனிலிருந்து ஆரம்பிக்கின்றது. கதையில் வரும் வேட்டையாடும் பகுதிகள் அவ்வளவு காத்திரமாகக் காட்சியாக விரிக்கிறார் நாவலாசிரியர். கதையின் ஆரம்பத்திலேயே சின்ராசனின் கட்டுத்துப்பாக்கி இயக்கத்தினால் பறிமுதல் செய்யப்படுகிறது. இருந்தாலும் அவன் இறுதிவரை ஒரு வேட்டைக்காரன் என்ற மமதையிலேயே வாழ்கின்றான். ஒவ்வொரு கிளை பகுதிகளில் புதிய கதை மாந்தர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே போகிறார் நாவலாசிரியர். அப்படி வந்து மறையும் சில உபகிளை பாத்திரங்களுக்கான விவரிப்பு சற்று மிகுதியாக இருப்பதுபோல தோன்றினாலும் ரசிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அப்படியொரு கதாபாத்திரம் தான் பனங் கள் இறக்கி விற்கும் காங்கேசன். அவனைத் தொந்தரவு படுத்தும் குரங்குகளின் நடத்தைகளின் விவரிப்பும் அபாரிதம். கதையில் முக்கிய மாந்தர்களில் ஒருவர் ஆத்தையும் ஆச்சியும்.
கிரீக்குளம், வீரக்காடு, யுத்த நடைபெறும் எல்லைக் கிராமங்களின் நிலப்பரப்புக்கள் பற்றியும், நாட்டார் தெய்வங்களின் மீதான நம்பிக்கை, அவைகளுக்கான வழிபாடும், சடங்கு முறைகளும், இளம் பிள்ளைகளின், அவர்களின் பெற்றோர்களின், விதவைகளின், போராளிகளின் உணர்வுகள், கிராமத்து வழக்குச் சொற்கள், கதையாடல் முறை, கிராமத்து வைத்தியம். பெறுமதியானதும் கனதியானதுமான ஒரு உழைப்பை யதார்த்தன் கொடுத்து எல்லாத் தகவல்களையும் கோர்த்து நாவலாக்கியிருக்கிறார். சம்பவங்களை நாவலாக்குவதை விடத் தகவல்களை நாவலாக்குவது சிரத்தையான ஒன்று. அதை யதார்த்தன் நேர்படச் செய்திருக்கிறார். அதனால் என்னவோ இந்தக் கதையின் பிரதான கதைமாந்தர் யாரெனத் தெரியவில்லை. ஆரம்பித்தலிலும் முடிவிலும் வரும் சின்ராசனா? நட்டார் தெய்வம் நகுலாத்தையா? ஆச்சியா? தமயந்தியா? கீரிப்பிள்ளை மேடா? கிரீக்குளமா? அதேபோல கதை கூறும் முறையும் கதைக்கான தளத்திற்கு ஏற்றதுபோல மாறிக்கொண்டு போகிறது. நாவலின் கதை கூறலை மாந்தர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. நாவலில் காதலும், வெறுப்பும் உணர்வுகளும் மேலிடும் இடங்களில் கவித்துவம் நிறைந்த வரிகள் நிறைந்திருக்கின்றன.
“வியர்த்துக் கசியும் உடல் நதியின் மேற்பரப்பில் வீழ்ந்து நீரூறிக் குளிர்ந்த ஐந்து கிளைகள் கொண்ட மரத்தின் கொம்பாக விரல்கள் ஓடி நெழிந்தன. ”
”ஊருக்குள் நுழையும் போது கிரவல் வீதிகளில் வெள்ளம் சிவந்து ஓடிக் கொண்டிருந்தது”
நாவலில் நாவலாசிரியர் மிகக் கடுமையாகப்
போராட்டத்திற்கான கட்டாய சேர்ப்பை, சிறுவர்களின் ஆட்சேர்ப்பை பல இடங்களில் சாடுகிறார். அறம் என்பதை அவர்களுக்குச் சாதகமான முறையில் விளங்கிக் கொள்கிறார்கள் என்பது போலவே சம்பவங்கள் கதையில் அமைந்திருக்கின்றன.
…வெரோனிக்கா முடிக்க முதல் அருகில் இருந்த தளபதி இவளை இடைமறித்து “இஞ்ச பாரும் பிள்ளை, நாங்கள் ராணுவம் இல்லை. நாங்கள் விடுதலைப்போராளியள், ஒரு இராணுவ எதேட்சதிகார கட்டமைப்புக்கும். விடுதலைக்காகப் போராடுற எங்களுக்கும் இதுதான் வித்தியாசம், அதாலை நீங்கள் இந்த விசயத்தை சரியாய் விளங்கிக் கொள்ளவேணும், என்னதான் கோவம் சுவலை இருந்தாலும், நிதானமில்லாமல் நடக்கக்கூடாது. …., ஒரு ராங் மட்டும் குறைச்சு மெடிக்ஸ்சுக்கு அனுப்புறம். விளங்குதோ?”
“அப்ப என்னை விருப்பமில்லாமல் பிடிச்சுக்கொண்டு வந்து இயக்கத்தில் சேத்தது எந்த மானுட அறத்தில் வரும்?” வாய் உன்னியது. மானிட அறம் என்ற அந்த வார்த்தை அவர்களிடமிருந்து மிகுந்த செயற்கைத்தனத்துடன்
வெளிப்பட்டதை நெஞ்சு உணர்ந்து…
இப்பிரதி ஏந்தியிருக்கும் கதைகளினூடாக அதற்குரிய அரசியலை அதுவே தேடிக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
நாவலை வாசிக்கும்போது காட்சிகளினதும், சம்பவங்களினதும் விவரிப்புக்கள் காட்சியாக விரிவடைகின்றது. வேட்டையாடும் சம்பவங்கள் புதிய அனுபவங்களாக இருந்தது. நிலத்தின் வரைபடம் முதல் கூட்டங்களிற்கு இடையில் தோன்றும் ஓவியங்களைப் போல் அழிவடைந்துபோய் ஒரு குறும் பரப்பினுள் மக்கள் சிறையாகிக் கொள்வதின் நான் உணர்ந்த உணர்வுகளை எழுத்தில் கொண்டு வர முடியாது. நாவலை வாசிப்பதன் மூலமாகவே அதை அடைந்துகொள்ளலாம். ஒரு இலக்கியப் படைப்பால் வாசகர்களின் மீது எந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி கேள்விக்கு உட்படுத்தப்பட்டே வருகின்றது. அது யதார்த்தமும் தான். அடுத்த வாசிப்புக்கு அந்த வாசகர் நகரும் போது புதியதொரு உணர்வுகளால் ஆட்கொள்ளப்படுகின்றான், ஆனால் முந்திய வாசிப்பின் சாறு நம்மில் தேங்கி நின்று ஏதோவொன்று கசடும், சுயத்தை, அன்பை, பரிதாபத்தை அல்லது சினத்தையாவது. அப்படியொரு உணர்வை நாவலில் வரும் நிலத்தின் மீது, அதன் கதை மாந்தர்களின் மீதும் பொலிய யதார்த்தனின் வரிகள் என்மீது இன்னமும் சிராய்ந்து கொண்டிருக்கின்றன.
– ஹனீஸ் மொஹம்மத், இலங்கை.
Nantri: https://bookday.in
[
]