wrapper-che-guvera

சேகுவேரா இருந்த வீடு

Rated 5.00 out of 5 based on 8 customer ratings
(8 customer reviews)

சிறுகதைகள்,யோ. கர்ணன் ,விலை – 80

 

 

கர்ணனுடைய இரண்டாவது தொகுப்பாகிய சேகுவேரா இருந்த வீடு, அவர்மீதான விமர்சனங்களுக்கு ஓரளவுக்குப் பதிலாக வந்திருக்கிறது. மொத்தம் பதின்மூன்று கதைகள் இதிலுண்டு. ஏறக்குறைய ஏழு கதைகள். அவரை அதிகாரத்தின் ஒரு அடுக்கை மட்டுமல்ல, எல்லா அடுக்குகளையும் எள்ளிநகையாடுபவராக நிறுவி இருக்கின்றன. இதை இன்னும் திருத்தமாகச் சொன்னால் வன்னியிற் தோற்கடிக்கப்பட்ட அதிகாரத்தின் ஓர் அடுக்கைமட்டுமல்ல, இலங்கைத்தீவின் அதிகாரத்தின் ஏனைய அடுக்குகளின் மீதும் கர்ணனின் விமர்சனம் பாய்கிறது. இந்தத் தொகுப்பின் மூலம் கர்ணன் அதிகாரத்தின் எல்லா அடுக்குகளையும் எள்ளி நகையாடும் ஒருவராக – எந்த அணிகளுக்குள்ளும் சிக்காத ஒரு சுயாதீனமான கதை சொல்லியாக தன்னை வெளிப்படுத்துகிறார்.

8 reviews for சேகுவேரா இருந்த வீடு

  1. Rated 5 out of 5

    vadaly

    யுத்தத்தின் பின்னரான வாழ்க்கை குறித்தும் அது என்ன என்பதிலும் தேடல் உள்ளவர்கள் யோவின் கதைகளைப்படிக்கும் போது கூடுதல் தகவல் பெற்றுக் கொள்ள முடியுமெனக் கருதுகின்றேன், அப்படியான விடயப்பரப்பினுள் யோ அலட்டிக்கொள்ளாமல் நுளைந்து வெளியேறுகிறார். விளிம்பு நிலை மக்கள் என்றொரு சொல்லாடல் இப்போதெல்லாம் ரொம்பப் பரபரப்பாகப் பயன்படுத்தப்படுவதுண்டு அப்படிப்பட்ட மக்கள் மீதான கழிவிரக்கம் மிக முக்கியமானதொன்றாகவும் பார்க்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் வாழ்வியலுக்குள் நின்று சில விடயங்களைப் பேசுதல் என்பதும் கவனயீர்ப்புப் பெறவேண்டியதொரு அம்சமே. அந்தப் பணியையும் யோ செய்திருப்பதாகப் படுகிறது.
    http://musdeen83.blogspot.com/2014/01/blog-post_9.html

  2. Rated 5 out of 5

    vadaly

    பதின்மூன்று கதைகளில் இரண்டு தவிர்ந்து ஏனையவை இறுதி யுத்தத்தையும் முள்ளிவாய்க்காலையும் முள்ளுவேலி முகாமையும் புனர்வாழ்வையும் அவற்றுக்குள்ளான மாட்டுப்படலையுமே பேசுகின்றன. போராளியாக இருந்து இவற்றுக்குள் உள்வாங்கப்படுவதைக் காட்டுவது சொந்த அனுபவ எல்லைக்குட்படுவதால் இயல்பாயமைவதாய் விளங்கத்தக்கது. மாறாக, போராளிகளை மக்கள் முகங்கொண்டவாறும், மக்கள் இறுதியுத்த தருணங்களை அனுபவித்த வகைமையும் இயல்புகுன்றாமல் சித்திரிக்கப்பட்டமை விதந்துரைக்கத்தக்க வகையில் வடிக்கப்பட்டுள்ளது. அதீத இலட்சியம் பேசியவர், இயக்கத்துக்கு ஆள் பிடித்தவர் எல்லாம் எந்தக் கூச்சநாச்சமுமின்றி சரணடையப் போவதைக் கண்டு அதிர்வுக்குள்ளாகும் போராளிகளின் செத்துப்போகாத போர்க்குணம் ஆங்காங்கே பதிவாகியுள்ளது. “இப்ப இவர் சாவதால் என்ன ஆகிவிடப் போகிறது” எனக் கணவன் உயிரைக் காக்க போராளியிடம் இரந்து நிற்கும் மனைவி, மரணப் பிடிக்குள் தவித்து ‘காப்பாற்றுங்கோ’ என்ற பெண் குரலில் தன் வாழ்வையும் தொடர நிர்ப்பந்திக்கப்படும் போராளி, தவிர்க்க இயலாமல் போர்க்குணம்மிக்கவரும் “விரும்பாமலே இயக்கத்துக்கு உள்வாங்கப்பட்டோம்” என விசாரணையில் ஒப்பிப்பது என்ற தருணங்கள் உயிர்ப்போடு வடிக்கப்பட்டுள்ளன.
    http://n-raveendran.blogspot.com/2013/01/blog-post_29.html

  3. Rated 5 out of 5

    vadaly

    கணன் சுவாமி – சேகுவேரா இருந்த வீடு சிறுகதைத் தொகுதியின் மீதான் விமர்சனம்
    video https://www.youtube.com/watch?v=kru-ad9DWFg

  4. Rated 5 out of 5

    vadaly

    நிரூபா-சேகுவேரா இருந்த வீடு சிறுகதைத் தொகுதி மீதான விமர்சனம்
    video – https://www.youtube.com/watch?v=Y2gg4VYvMqQ

  5. Rated 5 out of 5

    vadaly

    வலியின், இழப்பின், சொல்லமுடியாத சோகத்தின் பிரதிபலிப்பாக அவசியமாக யோ.கர்ணனின் ‘சேகுவேரா இருந்த வீடு’ கதைகள் தெரிகின்றன எனக்கு. தமிழ் ஈழத்துக்கான ஆயுத போராட்டம் ஆரம்பித்த பின்னர் தமிழர்கள் ஒவ்வொருவரிடமும் அந்தபோராட்டம் குறித்து பேச ஆயிரம் கதைகள் இருக்கின்றன. அதுவும், இறுதி மோதல்களாக முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்த இலட்சக்கணக்கான மக்களிடம் எவ்வளவோ கதைகள் வடுக்களாக அவர்களோடு இருக்கின்றன. அப்படிப்பட்ட கதைகளை தன்னோடு கொண்டு சுமக்கின்ற சாட்சியான யோ. கர்ணனிடமும் நிறையக் கதைகள் இருக்கின்றன.
    இவை கற்பனைகளைக் கடந்த உண்மைக் கதைகளாக அவற்றோடு பயணித்தவர்களுக்கு அல்லது அவற்றைச் சுமந்தவர்களுக்குத் தெரியும். அப்படியான கதைகளின் சாட்சியான யோ. கர்ணனின் வாக்குமூலங்களில் சிலவற்றைத் தொகுத்ததால் வந்திருப்பது ‘சேகுவேரா இருந்த வீடு’ சிறுகதைகள்.
    http://maruthamuraan.blogspot.com/2013/05/blog-post.html

  6. Rated 5 out of 5

    vadaly

    ஈழ எழுத்தாளர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒரு சாரார் ஈழத் தமிழ் மக்களின் பண்பாடு கலாச்சாரம் ஜாதி வர்க்க ரீதியான பிரிவுகள், மோதல்கள் இவற்றைத் தம்படைப்புகளில் பிரதிபலிப்பவர்கள். இவர்கள் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள். மற்றொரு சாரார் இளைய தலைமுறையினர். விடுதலைப் போராட்டம் தீவிரத்தை அடைந்த யுத்தகளத்திலிருந்து நேரடி சாட்சியாகத் தம் படைப்புகளை முன் வைப்பவர்கள். யோ.கர்ணன் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்.
    …..
    தொகுப்பிலுள்ள முதல் கதையான திரும்பி வந்தவனை வாசித்து முடித்ததும் யாரோ நம் முகத்திலறைகிற உணர்வேற்படுகிறது. யதார்த்தம் எப்போதுமே கசப்பாகவும் ஜீரணிக்க முடியாததாகவுமே இருக்கும் என்பதுபோல. எல்லாக் கதைகளுக்கும் ஈழப்போராட்டமும், இயக்கச் செயல்பாடுகளும்தான் களம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதென இங்குள்ள தமிழ்மக்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் ஓரிடத்திலிருந்து கொண்டு விருப்பு வெறுப்பற்ற நடுநிலைத் தன்மையுடனும், நவீன கதைகளுக்கேயுரிய கூறுகளுடனும் கதை சொல்லும் கர்ணன் 13 கதைகளிலும் தன்னையும், தன் போராட்டத்தையும், தங்களது பெண்களையும், ஆண்களையும், தலைவர்களையும் சுய விமர்சனம் செய்து கொள்கிறார். எந்த இடத்திலும் தோற்றுப் போனோம் என்கிற கழிவிரக்கம் கொப்பளிக்கவில்லை. இதனாலேயே இவருடைய கதைகள் தனித்துவம் பெறுகின்றன.

    கீரனூர் ஜாகிர்ராஜா
    http://jakirraja.blogspot.com/2012/08/blog-post.html

  7. Rated 5 out of 5

    vadaly

    ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற புஷ்பராஜாவின் புத்தகமும் ராஜனி திரானகம எழுதியமுறிந்தபனை யும் காட்டிய ஈழப்போராட்ட்த்தின் மறுபக்கத்தையும் முழுமையான சித்திரத்தையும் வலி மிகுந்த வாழ்க்கையையும் துக்கத்தின் உச்சியில் பிறக்கும் பகடியாக யோ.கர்ணன் தன் சிறுகதைகளில் எழுதிச்செல்கிறார்.சேகுவேரா இருந்த வீடு ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் குறியீடாக அமைந்துவிட்ட்து.
    – ச. தமிழ்ச்செல்வன்
    http://bookdaytn.blogspot.com/2013/08/blog-post_25.html

  8. Rated 5 out of 5

    vadaly

    இன்றைய தமிழ்ச் சூழல் ஈழப்போரின் வீழ்ச்சியோடு மிகச் சிதைந்த உளநிலையிற் காணப்படுகிறது. அதனால் அது பெரும் பதற்றத்துக்குள்ளாகியுள்ளது. குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்த ஒரு பரப்பாக அது நீண்டிருக்கிறது. போராட்;டத்தின் தோல்வியும் போராட்டத்தின் பால் செய்யப்பட்ட தியாகங்களும் செயலிழக்கப்பட்ட வீரமும் சிதைந்த நம்பிக்கையும் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளுமே இந்தக் குழப்பங்களுக்கும் பதற்றத்துக்கும் காரணம். துக்கத்தையும் தோல்வியையும் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தமிழ்ப் பொதுவெளி உள்ளது. இந்த நிலையில் கர்ணன் தோல்விகளுக்கும் துக்கத்துக்கும் காரணமான விசயங்களை மையப்படுத்தி, வரலாற்றுப் பாத்திரங்களை விசாரணைசெய்யும் கதைகளை எழுதியிருப்பதென்பது கடுமையான சர்ச்சைகளையே உருவாக்கும். இதுவே நடந்து கொண்டுமிருக்கிறது.

    ஈழச் சூழலின் நிலவரம் இதுதான். ஆகவே இந்தக் கதைகளும் இந்த இறுகிய தளச் சூழலிலேயே முன்வைக்கப்பட வேண்டியனவாகின்றன. ஏனெனில், இன்னும் இலங்கையின் அரசியற் சூழல் இருண்மையானதாகவே உள்ளது. போர் முடிந்த பிறகும் ஜனநாயகத்தின் நரம்புகளில் இன்னும் ரத்தோட்டம் சீர்ப்படவில்லை. யுத்தகாலத்தில் நிலவியதை ஒத்த அச்ச நிழல் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே பகிரங்கமாக எல்லாவற்றையும் பேச முனையும் கர்ணனைப் போன்ற ஒருவர் அபாயவெளியை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளார். இதனால் தலைமறைவுக்கொப்பான நிலையில் இருந்தே உண்மையைப் பேச வேண்டியுள்ளது. பகிரங்கத்திற்கு வரும்போது ஒன்றில் கடுமையாகச் சிந்திக்க வேண்டும். அல்லது வசையை ஏற்க வேண்டும். இதையெல்லாம் எதிர்கொண்டவாறே கர்ணனும் இயங்குகிறார்.

    இதுவே கவனத்திற்குரியது. வரலாற்றின் பதிவுக்குரியது.

    – கருணாகரன்
    http://www.socialsciencecollective.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A/

Add a review