09 Feb

“கொலம்பஸின் வரைபடங்கள்”

புலம்பெயர்ந்த புலி விசுவாசிகளின் கதையைக் கூறும் “கொலம்பஸின் வரைபடங்கள்”

 

புலிகளின் de facto தமிழீழ ஆட்சி நடந்த வட இலங்கையில் இருந்து, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தென்னிலங்கையில் கொழும்பு நகரிலும், இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் தமது புதிய வசிப்பிடங்களை தேடிக் கொண்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு யோ.கர்ணன் எழுதியுள்ள “கொலம்பஸின் வரைபடங்கள்” என்ற நூல் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.
யோ.கர்ணன் புலிகள் இயக்கத்தில் போராளியாக அல்லது உறுப்பினராக இருந்தவர். அவர் தான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியேற எத்தனித்து, அது கைகூடாமல் திரும்பி வந்த அனுபவத்தை எழுதி உள்ளார். அது மட்டுமல்லாது, இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் வரை நடந்த சம்பவங்களை விலாவாரியாக எழுதியுள்ளார்.
உண்மையில், இந்த நூலானது ஒரு மேற்கத்திய நாட்டவரான கோர்டன் வைஸ் எழுதிய “கூண்டு” நூலை ஒத்திருக்கிறது. இரண்டிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் வருகின்றன. ஆனால், கூண்டு நூலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய தீவிர புலி ஆதரவாளர்கள், கொலம்பஸின் வரைபடங்கள் நூலை தூற்றிக் கொண்டிருந்தனர். இந்த இரட்டை வேடத்திற்கு காரணம், கோர்டன் வைஸ் ஒரு மேற்கத்திய நாட்டு வெள்ளையர், யோ.கர்ணன் ஒரு தமிழீழத்து கறுப்பர் என்பது மட்டும் தான்.
தமிழருக்கு வாக்களிக்கப் பட்ட புனித பூமியான தமிழீழத்தில் இருந்து பணக்காரர்கள் மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இது இறுதிப் போர்க் காலத்தில் மட்டும் நடக்கவில்லை. அதற்கு முன்னரே, காலங்காலமாக நடந்து கொண்டிருந்தது. அந்த உண்மையை யோ.கர்ணன் கூட காலந் தாமதித்து தான் அறிந்து கொண்டார். (அவர் வயதால் இளையவர், கொள்கைப் பற்றுடன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்தார் என்பது ஒரு முக்கிய காரணம்)
இங்கே இன்னொரு வேடிக்கையையும் அவதானிக்கலாம். யோ. கர்ணனையும் அவரது இந்த நூலையும் தூற்றிக் கொண்டிருக்கும் “புலி விசுவாசிகளில்” பெரும்பான்மையானோர், ஒரு காலத்தில் இதே மாதிரியான நிலைமையில் வாழ்ந்தவர்கள் தான். ஒரு வேளை, யோ. கர்ணனின் வெளியேறும் முயற்சியும் வெற்றியடைந்து, அவர் இன்றைக்கு ஒரு மேற்கத்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தால், அவரும் புலம்பெயர்ந்த புலி விசுவாசிகளில் ஒருவராக இருந்திருக்கக் கூடும். யார் கண்டது?
1986 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், வட இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் உருவாகியது. அப்போதே இளம் வயதினர், அதாவது 16 க்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டோர் வெளியேற தடை விதித்திருந்தனர். அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த குடும்பங்களுக்கும் வெளியேற அனுமதி அளிக்கவில்லை. பலருக்கு அடிக்கடி கொழும்பு செல்ல வேண்டிய தேவை இருந்தது. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டுப் பணம் பெறுபவர்களும், கொழும்புக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் ஒரு குடும்ப உறுப்பினரை பணயம் வைத்து விட்டு செல்ல வேண்டும். திரும்பி வராவிட்டால் அவருக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.
இத்தனை தடைகளையும் தாண்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறி, மேற்கத்திய நாடுகளில் குடியேறியவர்கள் யாராக இருக்கும்? பணக்காரர்கள் மற்றும் வசதி படைத்த மத்திய தர வர்க்கத்தினர். புலிகளின் உத்தியோகபூர்வ பிரச்சார சாதனங்கள், இவர்களை துரோகிகள் என்று தூற்றிக் கொண்டிருந்தன.
 
உண்மையிலேயே, அன்றிருந்த மேட்டுக்குடியினரில் பெரும்பான்மையானோர், புலிகளை அல்லது தமிழீழத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. யுத்தத்திற்குள் அகப்படாமல் தங்களது உயிரையும், வர்க்க நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, “கொலம்பஸின் வரைபடங்களுடன்” உலகம் முழுவதும் அகதிகளாக சென்றார்கள். 
 
தஞ்சம் கோருவதற்கு வசதியாக புதிய புதிய நாடுகளை கண்டுபிடித்தார்கள். அங்கே தமது வாழ்க்கையை உறுதிப் படுத்திக் கொண்டதும் என்ன செய்தார்கள்? அப்படியே 360 பாகையில் சுழன்று கரணம் அடித்து, தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டார்கள். இது அவர்களது கதை.
யோ. கர்ணன் தனது நூலுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் என்று தலைப்பிட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. ஈழப்போர் நடந்து கொண்ட இடங்களில் இருந்து வெளியேறிய தமிழர்கள், உலகம் முழுவதும் அடைக்கலம் கோரியதை அது உவமைப் படுத்துகின்றது. தானும் ஒரு வரைபடம் தயாரித்து, அது கைகூடாமல் போன அனுபவத்தை இந்த நூலில் எழுதி உள்ளார். சரித்திர கால கொலம்பஸின் கப்பல் பயணத்திற்கு பெருமளவு பணம் செலவானது. அதே போன்று, “தமிழ்க் கொலம்பஸ்கள்” ஒழுங்கு படுத்தும் பயணத்திற்கும் பெருமளவு பணம் செலவாகின்றது. அண்மைக் காலத்தில் இருபதாயிரம் டாலர் அல்லது யூரோ கட்டிக் கூட வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.
பணக்கார மேற்கத்திய நாடுகளில் வாழும் சாதாரண மக்களிடம், ஆயிரம் டாலர்/யூரோ கூட சேமிப்பில் இல்லை. அப்படி இருக்கையில், வறிய நாடான இலங்கையில் இருந்து, பெருமளவு பணம் செலவழித்து வெளிநாடு செல்வதற்கு யாரால் முடியும்? வசதி படைத்தவர்களால் மட்டுமே அது முடிந்த காரியம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், தமது காணிகளை புலிகளிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறியோர் ஏராளம் பேருண்டு.
வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் வசதியான வீடுகளில் புலிகளின் அலுவலகங்கள் இயங்கின. இதை எல்லாம் ஆண்டு அனுபவித்து வந்த பணக்கார வர்க்கம், விருப்பத்துடன் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? சொத்துக்கு ஆசைப்பட்டு யுத்தத்திற்குள் அகப்பட்டு சாவதை விட, மேற்கத்திய நாடொன்றுக்கு சென்றால் இதை விட அதிகமான சொத்து சேர்க்கலாம் என்று கணக்குப் போட்டார்கள். உண்மையிலேயே வெறுங்கையுடன் வெளிநாடு சென்று பணக்காரர்களாக திரும்பி வந்தவர்கள் ஆயிரம் உண்டு.

இறுதிப்போர் வரையில், புலிகளின் de facto தமிழீழத்தில் இருந்து, வசதி படைத்தோர் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். “பணம் கொடுத்தால் எல்லா வழிகளும் திறந்தன” என்று யோ.கர்ணன் இந்த நூலில் எழுதி இருக்கிறார்.

புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள், இலட்சக் கணக்கான பணத்தை (லஞ்சமாக) வாங்கிக் கொண்டு, குடும்பத்துடன் வெளியேறிச் செல்ல அனுமதித்தார்கள். சிலநேரம் அந்தப் பணம் இயக்க நிதி என்ற பெயரில் “விரும்பிக்” கொடுக்கப் பட்டது.

இறுதிப் போரில் இராணுவம் சுற்றி வளைத்ததும், கட்டுப்பாட்டுப் பகுதிகள் சுருங்கியதும், போரை நடத்துவதற்கு போதுமான போராளிகள் இருக்காமையும் வெளியேற்றத்தை முற்றாகத் துண்டித்தது. குடும்பத்திற்கு ஒரு பிள்ளை கட்டாய இராணுவப் பயிற்சிக்கு வர வேண்டும் என்று புலிகள் அறிவித்தனர். அது ஏழை, பணக்காரர் எல்லோரையும் பாதித்தது. அப்போதும் சில பணக்காரர்கள் புலிகளுக்கு பணம் கொடுத்து தமது பிள்ளைகளை மீட்டு வந்தனர்.

கொள்கை எல்லாம் குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான். கட்டாய இராணுவ பயிற்சியை ஊக்குவித்த புலிகளின் முக்கியஸ்தர்கள் கூட, தமது பிள்ளைகளை சேவையில் ஈடுபடுத்த விரும்பி இருக்கவில்லை. தனது பிள்ளையும் படையில் இணைக்கப் பட்டதை அறிந்து கொண்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை (முக்கிய தலைவர்களில் ஒருவர்), சம்பந்தப் பட்ட பொறுப்பாளரின் சட்டையை பிடித்து உலுக்கி, பிள்ளையை மீட்டு வந்தார். இந்தச் சம்பவத்தை யோ. கர்ணன் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
யோ. கர்ணன் தனது நூலுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் என்று பெயரிட்டாலும், அதை எவ்வாறு சரித்திர கால கொலம்பஸ் உடன் ஒப்பிடுவது என்பதில் தடுமாறி உள்ளார். கொலம்பஸ் ஸ்பானிஸ் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய நாடுகளை கண்டுபிடித்தார். ஆனால், ஈழத் தமிழர்களோ மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தை வளம் படுத்த அகதிகளாக சென்றனர். இரண்டையும் ஒப்பிட முடியாது.
இருப்பினும், யோ. கர்ணன் எதிர்பாராத ஒற்றுமை ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். கொலம்பஸ் வாழ்ந்த காலத்தில், ஸ்பெயின் நாட்டில் நூறாண்டுகளாக இருந்த, அரபு பேசும் இஸ்லாமிய மூர்களின் இராச்சியம் சுருங்கிக் கொண்டிருந்தது. அதன் மீது கத்தோலிக்க ஸ்பானிஷ் படைகள் ஆக்கிரமிப்பு போரை நடத்திக் கொண்டிருந்தன. மூர்களின் இராச்சியத்தை புலிகளின் de facto தமிழீழத்துடன் ஒப்பிடலாம். அதே மாதிரி, கத்தோலிக்க ஸ்பானிஷ் படைகளை, பௌத்த சிங்கள படைகளுடன் ஒப்பிடலாம்.
அரேபியர் மட்டுமல்லாது, ஸ்பானிஷ் மொழி பேசும் முஸ்லிம்கள், மற்றும் யூதர்கள், என்று பெருந்தொகையான அகதிகள், அன்று மூர்களின் இழந்து கொண்டிருந்த இராச்சியத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் எல்லோரும் மூர்கள் என்று பொதுப் பெயரில் அழைக்கப் படவிருந்தனர். 1492 ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின் முடிவில், ஸ்பெயின் நாடு முழுவதும் கத்தோலிக்க மன்னராட்சி நிறுவப் பட்டது. அத்துடன் ஸ்பெயினில் இருந்த “மூர் தேசியம்” அழிந்து விட்டது என்று கருத முடியாது.
புலம்பெயர்ந்த ஸ்பானிஷ் மூர்கள், அல்ஜீரியாவில் “நாடு கடந்த மூர் இராச்சியம்” அமைத்துக் கொண்டனர். அங்கிருந்த படியே, தமது தாயகத்தை ஆக்கிரமித்த “கத்தோலிக்க- ஸ்பானிஷ் பேரினவாத அரசுக்கு” எதிராக போர் தொடுத்தார்கள். இறுதிப்போரில் ஸ்பெயினில் நடந்த “மூர் இனப்படுகொலை”, அவர்களது அரசியல் பிரச்சாரங்களில் முக்கியத்துவம் பெற்றது. அந்தக் காலங்களில் ஐ.நா. மன்றம் எதுவும் இருக்கவில்லை. இருந்திருந்தால் ஜெனீவா சென்று ஸ்பெயினில் நடந்த மூர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டிருப்பார்கள்.
கிட்டத்தட்ட அதே மாதிரியான வரலாறு, 2009 ம் ஆண்டுக்குப் பின்னரான தமிழ் தேசிய அரசியல் அரங்கில் உருவானது. அந்த வருடம், அது வரை காலமும் புலிகளின் ஆட்சியில் இருந்த de facto தமிழீழமான வன்னிப் பிரதேசம், சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்டது. அதற்குப் பின்னர், அமெரிக்காவில் “நாடு கடந்த தமிழீழம்” உருவானது. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு அமைப்புகள், வன்னியில் நடந்த தமிழ் இனப்படுகொலையை தமது முக்கியமான அரசியல் கோரிக்கையாக வரித்துக் கொண்டன. இஸ்லாமிய மூர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி, அதே பாணியில் புலம்பெயர் தமிழ் தேசிய அரசியலை மீளுருவாக்கம் செய்தனர்.
முன்னாள் புலிப் போராளியான யோ. கர்ணன் எழுதியுள்ள கொலம்பஸின் வரைபடங்கள் நூலானது, “புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களின்” கதைகளை கூறுகின்றது. இது அவர்களது சொந்தக் கதை. அதனால் தான், அதை மற்றவர்கள் அறிந்து கொள்வதை விரும்பவில்லை. கொலம்பஸின் வரைபடங்கள் இருப்பதை அறிந்து கொண்டவர்களும், அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் அவர்கள் தான். கொலம்பஸ் கண்டுபிடித்த அமெரிக்காவில் நாடு கடந்த தமிழீழம் உருவானது ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது.
கொலம்பஸின் வரைபடங்கள் நூலை வாங்குவதற்கு:
0
நன்றி: கலையகம்