10 Oct

ஃபஹீமாஜஹானின் “அபராதி”

 

படைப்பொன்றை பதிந்து செல்லும் பொது அது வெவ்வேறு அனுபவங்களை படைப்பாளிக்கும் வாசிப்பவனுக்கும் விட்டுச் செல்கிறது. படைப்பாளி நின்று பேசும் தளம் யாதாகவிருப்பினும் எந்த சூழ்நிலையில், எதன் பொருட்டு நிகழ்த்தப்படிருப்பினும் அந்தப்படைப்பை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் வாசிப்பவரின் பிரவேசம் எழுத்துக்குள் நிகழ்கிறது. ஒரு படைப்பின் பின் படைப்பாளி மரணித்துவிடுகிறார் என்று குறிப்பிட்டார் ஒருவர். அவ்வாறே, ஃபஹீமாஜஹான் அவர்களின் கவிதைத் தொகுப்பான அபராதியை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இந்தப் பதிவு.

“ஆருயிரே வருக” என்ற தலைப்பிட்ட கவிதையுடன் திறக்கும் அபராதியின் பக்கங்களை முப்பத்தொரு கவிதைகள் நிரப்பியிருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் வாசகருக்கு வெவ்வேறு அனுபவங்களைத் தந்து நகர்கின்றன.
“நிழல் மரங்களற்றுச்
சூரியன் தவிதவித்திடும் நெடுஞ்சாலையோரம்
வெய்யிலை உதறி எறிந்தவாறு
நடக்கிறாள் மூதாட்டி”
என்பதாகத் “துயர்” என்னும் கவிதையில் எழுதும் கவிஞர் கொதிமண்ணில் நடக்கும் அவளின் முன்
“வெயில்
மிகப் பெருந் தண்டனையை
வழி நீளப் பரவ விட்டுள்ளது” என்கிறார்.
ஆதி முதல் தொடரும் பயணத்தில் ஒளிந்திருக்கும், ஏலவே அனுமானிக்கக் கூடிய முடிவு தெருவின் வளைவுக்குள் மறைந்திருக்கிறது. கூடவே வரும் ஆனால் நீள அகலம் மாறி மாறித் தோன்றும் நிழல் போல அவளுடனும், அவளுள் உறைந்தும் பயணிக்கிறது துயர்.
“என்றோ விதியாகித் தொடரும்
நியதிகளில் நசுங்குண்டவாறு
இரவு நெடு நேரம் வரை
துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்”
என்றவாறு “அம்மா”வை உருவகிக்கும் கவிஞர், எல்லா வீடுகளிலும் விறாந்தையில் தலைக்குக் கை வைத்துப் படுத்தபடி காவலிருக்கும் தாய்மார்களை நினைவுகளில் காட்சிப்படுத்தி மௌனிக்கிறார். ஊரில் விறாந்தைகளில் காவலிருக்கும் தாய்மார்களின் பிரதிநிதிகளை இங்கே, புலம்பெயர் தேசங்களில் குளிர் ஊறும் அறைகளுக்குள்ளே ஆற்றாமையில் புலுங்கியழும் மனதுகளுக்கு சொந்தக்காரர்களாய் காணக் கிடைக்கிறது. தாய்மார்கள் மீது அமைதியாகக் கட்டவிழ்க்கப்படும் வன்முறையை யாரும் ஆத்மார்த்தமாக உணர்ந்து கொண்டதாகத்தான் தெரியவில்லை.
“கருங்கல் சிலையொன்று
அதிகாரம் செய்தபடி அலைகின்ற வீட்டில்
மோதி மோதியே செத்துவிட்டன
அவள் வளர்த்த எல்லா மான் குட்டிகளும்..”
என்று முடியும் அந்தப் பதிவில் இவ்வாறாகத் தங்கள் மனதுக்குள் பிறப்புவித்து உயிர் கொடுத்து வளர்த்தெடுத்த உணர்வுகளைக் காவு கொடுத்து நடைப்பிணமாய் வாழும் தாய்மார்கள் எனப்படும் பெண்களை நினைத்து எம்மாலும் மௌனம்தான் கொள்ள முடிகிறது.
“முறைப்பாடுகளுக்கு அஞ்சிய
எல்லாக் காவலரண்களும்
அவளை வெளியே துரத்துகின்றன”
என்று “எல்லைக் கோட்டில் தடுக்கப்பட்டவள்” கவிதையில்
“இன்று
கின்னரர் தம் இசையிழந்த
நிலமெங்கும்
அவளது ஒப்பாரி அலைகிறது
அரசரைத் துதி பாடிச் செல்வோரின்
கால்களின் கீழே
பேரவலத்தின் ஓசை மாண்டழிகிறது” என்கிறார்.
ஆமாம்; பேரவலத்தின் ஓசை, தாய்மார்களின், மனைவிமார்களின், குழந்தைகளின், எல்லோரினதும் குரலுந்தான் மாண்டழிந்தது. மாண்டழிகிறது. தங்கள் புத்திரர்களை வெறிகொண்டு தாழப்பறக்கும் பருந்தொன்றுக்குப் பறிகொடுத்துவிட்டு வீதிவீதியாய், தெருத்தெருவாய் மெல்லிய தீற்றாய்ப் பதிந்த அவர்களது காலடித் தடங்கள் தேடி அலையும் தாய்மார்களையும், உறவுகளையும் நினைத்து அதிர்ந்து அடங்குகிறது மனது.
“மழை” என்ற கவிதையில்
“இறுகி மூடப்பட்ட
வீட்டினும் வர முடியாது
நனைந்து கொடிருக்கிறது
மழை”
என்னும் கவிஞர்
“அது புகார் கொண்டு
தன்னைப் போர்த்தியவாறு
தென்னந் தோப்பினுள்
வழி தவறியலைகிறது” என்று தொடர்கிறார்.
யன்னலின் வெளியே தூறிக் கொண்டிருக்கும் மழை பெலத்து மனதுக்குள் துமிக்கிறது ஊர் ஞாபகங்களை அதே கருஞ்சாம்பல் நிறத்துடன் உடல் சுற்றிப் படரும் புகாருடன்;
“இன்னொரு வெப்பமழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமேல்லாம் ஒடுங்கிப் போய்விட
பெய்வதை நிறுத்தி
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை”
என்றவாறு முடியும் அந்தக் கவிதை தனித்திருக்கும் பெண்ணின் பிரிவின் வலியை, தனிமையின் கனத்தை, வஞ்சிக்கப்பட்ட கோபத்தை உவமித்து அகல்கிறது. மழை மட்டுமா பெருமூச்செறிந்தது?
“நொந்த உடலுக்கான நஞ்சு” என்ற கவிதையில் பால்ய பருவத்தைப் பீடித்து நிற்கும் நோயையும், நோயிலிருந்து மீட்கும் பொருட்டு அன்னைமாரால் நிகழ்த்தப்படும் சாகசங்களையும் பகிரும் கவிஞர் நிகழ்காலத்தைக் குறித்து இப்படி சொல்கிறார்.
“துடைத்தழித்திட முடியாமல்
நோயின் வழியைத் தாங்கி நிற்கும் முகத்தை
விசாரிக்க வருவோரிடமிருந்து
மறைப்பது பற்றிச் சிந்திக்கிறேன்”
கனவுகளாலும், எதிர்பார்ப்புக்களாலும் நிரப்பப்பட்ட பால்ய பருவத்தின் நாட்கள் அற்ப ஆயுள் கொண்டவை. அந்த நாட்களில் எம்முடன் பயணிக்கும் உறவுகளை வெறுத்துவிட அல்லது கோபப்பட ஒரு சிறு நூழிலையளவுக்கான காரணம் போதுமாக இருக்கிறது. அவர்களை அன்பு செய்யவும் அதுவுமே போதும். விரைவாக சுழலும் காலத்தின் மாற்றங்கள் ஏற்படுத்திப் போகும் பாதிப்புக்களில் வாழ்க்கையை, உறவுகளைப் புரிந்து கொள்ளவும் அனுபவங்கள் தேவைப்படுகின்றன. இல்லாவிடின் உணர்ந்து கொள்ளும் பக்குவத்தை உலக நடப்புக்கள், சம்பவங்களைப் பார்த்தாவது அறிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகிறது. இந்தப் பொழுதில் பிறரிடமிருந்து எமது இயலாமையை, வலியை மறைத்துவைக்கும் மனதின் விருப்பத்தை செயலாற்றுவதற்கு உடல் எவ்வாறு ஒத்துழைக்கும் என்ற கேள்வி தொக்கி நிற்கவே
“மின் கம்பியில் குந்தியவாறு
எனதறையையே பார்த்திருந்த வெண் பறவைக்கு
மரணத்தின் துர்க்குறிகள் கிட்டவில்லை”
என்று சொல்லிக் கொள்கிறார் கவிஞர்.
தற்கொலை குறித்தும், மரணம் குறித்தும் பாடாத கவிஞர்கள் வெகு குறைவு எனலாம். மரணத்தைப் பாடுதலும், அதிலும் சுய மரணத்தைப் பாடு பொருளாகக் கொள்வதற்கான மனம் எந்தப் பொழுதில் வாய்க்கும் என்ற கேள்வி எப்போதாவது மனதில் அலையாய் அடித்து மறைவதுதான். தற்கொலை செய்துகொண்ட (பெண்) கவிஞர்கள் எழுதிவைத்துப் போன பாடல்களின் தாக்கமும், கனத்த மனதும் ஒன்றாய் வாய்க்கையில் பீடிக்கும் அந்த ஒரு பொழுதின் அடர்த்தியை வார்த்தைகளில் கொண்டு வருதல் எத்துனை சாத்தியமாயிருக்கும் என்பதுதான் சூட்சுமமானது.
ஃபஹீமாவின் “தற்கொலை” என்ற கவிதையில்
“ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கும்
விழுமியங்களினூடாக
பரவிச் சென்றிருக்கும் வேரினை
விடுவிக்க முடியாதவளாக
அண்ட சராசரங்களின் எதிரே வீழ்ந்து கிடக்கிறாள்”
“நீ கொடுத்த சுமைகளையும்
அந்த உடலையும்
உன்னிடமே எறிந்துவிட்டாள்
இனி எக்காலத்திலும்
உன்னெதிரே வரப்போவதில்லை
நீ துன்புறுத்திய
அவள் ஆத்மா”
தொடரும் ஆதிப் பெருந்துயரின் வீச்சுக்குள் மூழ்கிப் போயின தொன்மைமிகு முகங்கள் எனினும் புதியனவற்றையும் தன் சுழல் நாக்குக்கு தின்னக் கொடுத்து நகர்கிறது அது. வழங்கப்பட்ட உடலைத் துறந்து புது உடல் கொண்டு விலகும் பெண்மையின் பிறப்பு எத்துணை சுலபமானதாக அமைந்துவிடும்? மரணித்த தன் உணர்வுகளைக் கனவுகளைக் கொண்டு கட்டிய வாழ்க்கையின் இன்னொரு பாதையை நோக்கிய புதிய அடிகளின் அமைவு அந்த அரூபத்தின் மரணத்தின் பின்னானதாக எந்தவகையில் அவளால் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும், தெரியவில்லை.
“நம்மெதிரே வீழ்ந்து கிடக்கிறது
காலத்தின் பிறிதொரு முகம்”
என்று “கடைசிச் சொல்” கவிதையில் பிரிவைக் காட்சிப்படுத்தும் கவிஞர் “கிரீடங்களை அவமதித்தவள்” என்ற இன்னொரு கவிதையில்
“ஆதி முதல் போற்றிவரும்
அந்தக் கிரீடங்களின் மீது
அவமதிப்பை விட்டெறிகிறேன்” என்கிறார்.
அபராதியின் கவிதைகளூடே பயணிக்கும் பெண்ணொருத்தியைக் கண்கூடாகக் காணக்கிடைக்கிறது. அவளின் உணர்வுகளை, பிரிவின் கதையை, நினைவுகளை அவை நிகழ்ந்த நொடிகளின் உயிர்ப்பு மாறாமல் தன் கவிதைகளுக்குள் பொதித்து வைத்திருக்கிறார் கவிஞர். அந்தப் பெண்ணுடன் உரையாடும் பொருட்டு ஒவ்வொரு கவிதையையும் நெருங்கின் அவலச்சுவையை, வலியின் நுனியில் துளிர்த்திருக்கும் புது இரத்தத்துளியை அதன் சூட்டுடன், துவர்ப்புச் சுவை மன நாக்கின் மெல்லிய இடுக்குகளில் பரவ உணரமுடிகிறது.
“தம்பிக்கு” என்ற தலைப்பிட்ட கவிதையில்
“அபயம் தேடித் தவித்த
உன் இறுதிச் சொற்கள்
எனது அறையெங்கும்
எதிரொலித்தபடியலைகின்ற இந்நாளில்
நம்பிக்கையும் ஆறுதலும் தரக்கூடிய
எல்லாச் சொற்களையும் நானிழந்து நிற்கிறேன்” என்கிறார்.
தங்கள் உறவுகளைப் புலம்பெயர அனுப்பிவிட்டு ஊர் எல்லையில் தொடர்பு வெளிக்கு அப்பால் நிற்கும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான உறவுகளைக் காணக்கிடைக்கிறது இந்தக் கவிதையில். மொழி மௌனித்து நிற்கும் அந்தப் பொழுதில் உறைந்து நிற்கும் அன்பின் வெளிப்பாடு யாதாகவிருக்கும், கண்ணீராக, இந்நிலைக்குக் காரணமானவருக்கான சாபமாக, சுயபச்சாபத்தின்/கையாலாகாததனத்தின் பொருட்டுக் கிளம்பும் கதறலாக, அடுத்த கவிதையை நோக்கி நகருவதற்கு சில நொடிகள் தேவைப்படுகிறது.
“அபராதி” என்ற தொகுப்பின் தலைப்பைத் தாங்கி வரும் கவிதை இவ்வாறு முடிகிறது.
“கொடூரச் சாவுகளைக்
கண்டு கண்டு அதிர்ந்த மண்
பலி கொல்லும் கண்களுடன்
உன்னையே பாத்திருக்கிறது
உனது அரசியல்
சகித்திட முடியாத் துர் வாடையுடன்
வீதிக்கு வந்துள்ளது
சுபீட்சம் மிகுந்த தேசத்தின் ஆன்மா
கைவிடப்பட்ட களர் நிலமொன்றில்
புதையுண்டு அழுகிறது”
“அபராதி” என்ற கவிதை பேசும் நுண்ணரசியல் வலிமையானதாக இருக்கிறது. அதிகாரத்தைச் சாடும் கவிஞர் நீ செய்தவற்றுக்கான அபராதத்தை நீ கட்டும் வேளை வரும், அதை உன்னைப் பழிவாங்கக் காத்திருக்கும் கண்களின் தீவிரம் உனக்கு உணர்த்தும் என்பதாக உருவகிக்கிறார். “அபராதி” என்னும் தலைப்பு தொகுப்புக்கு எங்கணம் பொருந்துகிறது எனக் கேட்டால், ஏலவே குறிப்பிட்டபடி கவிகளுக்குள் ஊடாடித் திரியும் பெண்ணால் எழுப்பப்படும் கேள்விகள் நினைவின் பதிவுகள் வஞ்சிக்கப்பட்டவளுக்கான அல்லது காயப்படுத்தப்பட்டவளுக்கான குரலில் ஒலிக்கின்றன. ஆக கவிதைகளின் தொனியும் செலுத்தப்படவேண்டிய அபராதத்தின் மையத்தை நோக்கி எறியப்படும் கயிறின் வழியே தம் சுவடுகளைப் பதியவிட்டுக் காத்திருக்கின்றன என்றும் கொள்ளலாம்.
“அவளை வழியனுப்பிய இடம்,” “பேய்களால் தின்னப்பட்டவள்,” “அவள் வளர்க்கும் செடிகள்,” “நஞ்சூட்டப்பட்ட செடி,” “உயிர்வேலி” அடங்கலாக முப்பதொரு கவிதைகளின் தொகுப்பான ஃபஹீமாஜஹானின் தொகுப்பான “அபராதி” வாசிப்பின் முடிவில் வார்த்தைகளின் கனதியை மனதில் பதியவிட்டு தான் கொண்ட கவிதைகளின் பேரால் படைப்பிற்குரிய வெற்றியைப் பெறுகிறது.
————————————-
குறிப்பு – கனடாவில் 09-10-2011 அன்று இடம்பெற்ற வடலியின் நான்கு நூற்கள் அறிமுகவிழாவில் வாசிக்கப்பட்டது சில திருத்தங்களுடன் மீள் வாசிப்புக்குட்படுத்தப்பட்டு இங்கே பதியப்படுகிறது.
———————————
நன்றி : மயூ மனோ