29 Mar

காணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி!

– கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் –

சிவபாலன் தீபன்
1..
“சித்தாந்தமாய், சிந்தனையாய், கருத்தியலின் மொழியாய், குருவியின் குறியாய் களத்தினில் வழிந்த உயிராய், நிலத்தினில் கிடந்த உடலாய் என்று எல்லா விதங்களிலுமாய் நாங்கள் போரை சந்தித்திருக்கிறோம். எங்கள் அன்றாடம் போர் எழுதிய துயரம் மிகுந்த வாழ்வாய் இருந்தது.கட்டங்கள் கடந்தததும் காலங்கள் கடந்ததுமான போரின் சகல விளைவுகளையும் சுமந்து ஒரு சனக்கூட்டம் எஞ்சியிருக்கிறது. வாய் விட்டழவும் வலிகள் எதுவும் நினைவில்லாத மனித கூட்டம் அது. துயரத்தின் பேசாத சாட்சிகளாக போரின் தடயங்கள் ஒரு ரேகையைப்போல படர்ந்திருக்கிறது எல்லாவிடமும் எல்லோரிடமும். சாவையும் பிறப்பையும் சாதாரணமாக்கியதில் பெரிய பங்கு போருக்கு போகிறது. ஏணிகளை எடுத்தெறிந்து விட்டு பாம்புகளை மட்டும் வைத்து சாவு ஆடிய பரமபதம் நிகழ்ந்தது நேற்று. எங்களை துரத்தி துரத்தி தீண்டியது மரணம். அதற்கொரு எல்லையும் இருக்கவில்லை எவரும் தடுக்கவுமில்லை .அழுவதை மறந்து நாங்கள் ஓடிக்கொண்டே இருந்தோம். எங்கள் இனத்தில் வடிந்த துயரத்தை நீங்கள் கைகள் கொண்டு கழுவ முடியாது காலம் கொண்டு நழுவ முடியாது எங்கள் உயிரை, சதையை, குருதியை, கண்ணீரை பெருங்கதறலை உங்கள் காலடிக்கு கொண்டுவந்தபோது நீங்கள் வேட்டைப்பற்கள் தெரிந்துவிடும் என்ற சங்கடத்தில் மௌனித்தீர்கள். எங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுப்போம் நீங்கள் நீதி பேசும் சபையில் சிரிக்க.”
இறப்பு குறித்தான நிஜங்களும் வாழ்வு குறித்தான கற்பனைகளும் ஒரு கதையாகவே நிகழ்கின்ற ஒரு நிலத்தின், இனத்தின் தொடச்சியாக நாமிருக்கிறோம். இந்த தொடர்ச்சி அதன் சகல பரிமாணத்திலும் பதிவு செய்யப்பட வேண்டியாதாகிறது. இங்கே எமக்காக நாமே அழவும் சிரிக்கவும் தேவைகள் இருக்கிறது.
2..
போர்ச் சர்ப்பம் வால் விழுங்கிச் சுழலும் ஒரு வேளையில் எழுதப்பட்ட கவிதைகளை வடலி வெளியீடாக தொகுத்திருக்கிறார்கள். பலியாடு என்ற பெயரில் வெளிவந்திருக்கின்ற கருணாகரனின் கவிதைகள் குறித்து பேச நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது எனக்கு. விடுபடுதல்கள் விளங்கிக்கொள்தல்களின் இயல்பான அச்சம் இது குறித்து தடுத்தாலும் என்னால் பேசாமலும் இருக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
“நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப் பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கெதுவும் புரியவில்லை
பகலையும் இரவையும் கண்டு
அஞ்சும் என் கண்களை என்ன செய்வேன்”
என்கின்ற முகப்பு கவிதை பேசுகின்ற மொழிதான் இந்த தொகுப்புக்கான கட்டியம். உண்மையிலேயே அச்சந்தருவதாயிருக்கிறது இந்த தொகுப்பு முழுவதும். ஏன் என்றும் புரியவில்லை எது குறித்து என்றும் தெரியவில்லை எந்தன் வாசிப்பனுபவம் முழுதும் விந்தி விந்தி வழிந்தது அச்சத்தின் எல்லாச் சாயலும். நான் அதை மறைத்து மறைத்து வாசித்து ஒவ்வொருதடவையும் தோற்றேன்.
“வன்னிக்கான தொடர்புகளை யுத்தம் முற்றாக அழிக்குமுன் கிடைக்கப் பெற்ற அவரது கவிதைகளது தொகுப்பு அவருடன் தொடர்புகள் ஏதுமற்ற இந்த யுத்த காலத்தில் வெளிவருகிறது.” – என்பது தான் இந்த கவிதை தொகுப்பின் அட்டையில் உள்ள மிக இறுதி வாசகம். இப்போது சொல்லுங்கள் நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம்? அல்லது எதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்?
ஒரு முதியவனை கண்டேன், அவன் பிறந்த போதும் வளர்ந்த போதும் இருந்தது ஒன்றே அது போர்; அது சார்ந்த மரணங்கள் வலிகள் இன்னபிறவும் சேர்ந்து எப்போதும் சூழ்ந்து கொள்ளும் அவமானங்களாயும்.. அவன் அதற்குள்ளே பிறந்தான் அங்கேயே வளர்ந்தான் அவன் இருப்பு முழுதும் மரணம் சூழ்ந்திருந்தது. எதற்கும் அவன் பெயர்ந்தவன் இல்லை. அவனை எடுக்க அச்சப்பட்டேன் அவன் பேசியது கேட்க பயப்பட்டேன். எந்தன் கையில் கிடந்தான் ஒரு தொகுதித் துயரமாய். எனக்கு தாகமாக இருந்தது நீரருந்தவும் தயங்கினேன் அவன் சாலை முழுதும் பாலையாய் இருந்தது குருதி காய்ந்து. அவனிடம் ஒரு சோடிக் கண்கள் இருந்தது அது பேச வல்லதாயும் புலன் நிறைந்ததாயும் இருந்தது. அவன் இரப்பவனாய் இருக்கவில்லை. அவன் இரந்தபோது அதை கொடுப்பவனாயும் எவனும் இங்கு இருக்கவில்லை. இப்போது சொல்லுங்கள் நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம் அல்லது எதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்? – ஒரு முதியவனை கொண்டிருந்த முகப்போவியம் என்னுள் எழுப்பிய வாசிப்பு இது.
முகப்போவியமாய் இங்கே முதுமையோடு தீட்டப்பட்டிருப்பதை எங்கள் வாழ்க்கை என்றே வாசிக்கத்தோன்றுகிறது. இந்த இடத்தில் மறைந்த பெண் கவிஞர் சிவரமணியின் பின்வரும் கவிதைகளின் மீதான வாசிப்பும் பொருத்தம் மிக்கது என நினைக்கிறேன் .
யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்
நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.
எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்….
எங்கள் குழந்தைகள்
திடாரென்று
வளர்ந்தவர்களாகி விடுகிறார்கள்
“பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.”
-சிவரமணி
யுத்தகாலம் சகலதையும் முதுமைக்குள்ளாக்கும் நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது நீண்ட காலமாய். எல்லோரிடமும் பாதுகாப்பு வேண்டி நாங்கள் முதுமையடைகிறோம் , இதில் இயற்கையாகவும் யுத்தத்தின் இயல்பாகவும் மரணம் நம்மை நிரந்தரமாக ஆட்கொள்கிறது. யுத்த காலத்தில் தவறிப்போன இளமைக்காலம் குறித்த வருத்தம் வேதனை தருவதாக இருக்கிறது.
சாவை வளர்த்து வாழ்வுக்கு கொடுத்ததன் மூலம் சாவே வளர்ந்த சூழலில் வந்த கவிதைகள் இவை, கரு முட்டையை நோக்கி சிரமத்துடன் நீந்திச் செல்லும் விந்தணுவைப்போல இந்தக் கவிதைகளினது ஜீவிதம் குறித்தான முனைப்புகளும் பெரியவை. வாழ்ந்தாக வேண்டும் என்ற உயிரின் துடிப்பு ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் குரலாய் ஒலிக்கிறது. ஒவ்வொருவருடைய குருதியாலும் உடைந்துபோன சுவரில் எழுதப்பட்டிருக்கிறது மானுடத்தின் பாடல்.
“போர் அறுத்தெறிந்த வாழ்க்கை
குருதி சிந்தக் கிடக்கிறது நடுத்தெருவில்
நாய் முகர…
……………………..
யாரும் உரிமை கோராத
இந்த இரத்தத் துளியை என்ன செய்வது?
அதில் மிதக்கும் மிதக்கும் கண்களையும்
ஒலிக்கும் குரல்களையும் என்ன செய்வது?”
எங்கள் எல்லோரிடமும் அடை காக்கப்பட்ட மௌனங்களை தவிர பதில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
என்றென்றும் நான் ஆராதிக்கின்ற கவிதை இது. வாழ்தலின் உச்சபட்ச வேண்டுதலையும் இருத்தலின் எல்லாவித சாத்தியப்பாட்டையும் வெளிப்படுத்திய மானுடத்தின் மண்டியிட்டழும் குரல் இது. விழியோடும் உவர்ப்போடும் விரல் கொண்ட நடுக்கத்தோடும் நான் இதனை வாசித்து முடித்தேன் ..
“எந்தப் பெருமையும் இல்லை
போங்கியோடும் கண்ணீரின் முன்னால்
மரணத்தின் முன்னே
மண்டியிட்டழும் நாட்களை பெறுவதில்
எந்தச் சிறுமையும் இல்லை
மரணத்திலும் எளியது
கசப்பின் துளிகள் நிரம்பியதெனினும்
ஒரு பொழுதேனும் வாழ்தல் மேலானது
என்று எவ்விதம் உரைப்பேன்? …..” .
(சாட்சிகளின் தண்டனை)
ஊசலாடுகின்ற பெண்டுலம் கடிகாரத்தை உயிர்ப்பிப்பது போல இந்தக் கவிதை என்னுள்ளே அலைந்து கொண்டே இருக்கிறது படித்த நாள் முதல். மிக அண்மையில் யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட சிறுவர்களை மறுவாழ்வின் முடிவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வின் புகைப்படங்களை காண நேர்ந்த போது கண் நெடுக வழிந்தது மேற்சொன்ன கவிதை வரி. மகாகனம் பொருந்தியவர்களே போரை முடித்து விட்டீர்கள், போர்க்கணக்கை நீங்கள் விரும்பியவாறு எழுதிக்கொள்ளுங்கள், புகழை எப்படியும் எழுப்பிக்கொளுங்கள் வேண்டுவதை எடுத்துக்கொள்ளுங்கள்; கூண்டுகளில் இருக்கும் எங்கள் மனிதர்களை திருப்பிதாருங்கள். மண்ணுலகில் உங்களின் மாட்சிமைக்கெதிரே மண்டியிடுகிறோம் வேண்டுவதெல்லாம் அவர்கள் வாழ்க்கை ஒன்றே! விட்டுவிடுங்கள் எல்லோரையும்.
“ஒரு வரிசையில் நீ
இன்னொரு வரிசையில் நான்
சனங்களின் கண்களை எடுத்துக் கொண்டு
அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்…”.
சனங்களின் கண்கள் இரண்டு வரிசையிலும் பிடுங்கப்பட்டது எந்த வரிசையில் இருந்தவர்களும் தப்பவில்லை. அவர்களிடம் கண்களை தவிர வேறதுவும் இருக்கவில்லை அதனால் அவர்கள் கொடுக்கவும் இல்லை. போர் தனக்கு ஒரு முகமே இருப்பதாகச் சொல்லி எல்லோர் கண்களையும் பிடுங்கியது. போரிடம் நல்ல முகம் என்பதே இல்லை என்றறிந்த மக்களிடம் கண்கள் பிடுங்கப்படிருந்தன.
3..
கருணாகரனின் கவிதைகள் பேசும் அரசியல் குறித்து அவதானத்தோடே பேச இருக்கிறது. அவரது படைப்புலக அரசியல் குறித்த ஆய்வை ஒரு பாதுகாப்பு கருதி சற்று வெளியே நிறுத்தி விட்டு இந்த தொகுப்பை வாசிக்க வேண்டிய பொறுப்பு உயிர் குறித்தான அச்சங்கள் அற்று இலக்கியம் பேசுகின்ற எங்களுக்கு இருப்பதாகவே உணர்கிறேன். அதுவே இங்கு அரசியல் சார்பு விமர்சனங்களை மீறி இந்த தொகுப்பு மீதான ஒரு மட்டுப்படுத்திய வாசிப்பை கொடுக்கிறது ஆனால் அது கவிதை அனுபவத்தில் எந்தக் கட்டுப்பாட்டையும் விதித்தாக தெரியவில்லை . ஆனாலும் அவரும் தீவிர நிலையில் கவிதைகளை எழுதிய படைப்பாளியே என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இங்கே கருணாகரனின் படைப்புகளில் உள்ள சிறப்பம்சமாக ஒன்றை சொல்ல வேண்டும், அவருடைய கவிதைகளுக்கும் வாசகனுக்கும் இடையில் எப்போதும் இன்னொன்றை அனுமதிப்பதில்லை. அவரது கவிதைகளே அதன் வாசகனோடு இயல்பாய் பேசிவிடுவதால் அவரது கவிதை குறித்து பேச வருபவர்களுக்கு இன்னொரு தளம் இலகுவாக கிடைக்கிறது அதன் விளைவுகள் குறித்து உரையாட .இது ஏற்படுத்தி தரும் வெளி வசதியானது இது போன்ற வாசிப்புநிலை குரல்களை செவிமடுக்க.
கருணாகரனின் கவிதைகளில் நாங்கள் சரளமாக சந்திக்க கூடிய இன்னொரு நபர் கடவுள் மற்றும் தேவதூதன், தேவாலயம், கோவில் சார்ந்த அவரது துணைப்படிநிலைகள் – குறியீடுகளாகவும் படிமங்களாகவும் நிறைந்திருக்கிறது கவிதைகள் நெடுக. நிராசைகள் நிறைந்திருக்கும் உலகில் முதல் விமர்சனப் பொருள் நம்பிக்கைகளும் கோட்பாடுகளும்தான். அவர்களால் நம்ப வைக்கப்படுகின்ற – அல்லது அவர்கள் நம்புகின்ற ஒன்றிடம் அலைகழிக்கப்பட்ட கேள்விகள் சென்றடைகின்றன. சார்போ எதிர்ப்போ பதிலளிக்க வேண்டியது அங்கே அவர்கள் தான். கையறு நிலையில் துயரம் மிகுந்தவர்களின் பிரார்த்தனைதான் பிதாக்கள் மீதான ஏளனப்பாடலாகிறது – அவர்களுமறியாமல். எல்லாமறிந்த கடவுள்களின் அபயமளிக்கின்ற புன்னகையையும் குண்டு துளைத்திருக்கிறது. கோபுரத்தில் கொல்லப்பட்டிருக்கின்ற புறாக்களின் குருதி பீடத்தில் வழிந்திருக்கும் போது கேள்விகள் இடம்பெயர்ந்தலைகின்றன உயிரை காப்பாற்றிக்கொள்ள.
“…………………………………………………
முடிவற்ற சவ ஊர்வலத்தில்
சிக்கியழிகிறது பொழுது
புனித நினைவாலயலங்கள்
ஒவ்வொன்றாக வீழ்கின்றன
எங்களை கைவிட்ட கடவுளர்கள்
எங்களால் கைவிடப்பட்ட கடவுளர்கள்
எல்லாம் இங்கேதான்
இனிவரும் முடிவற்ற இரவு
நமது பிணங்களின் பரிசாக “
(இருள்)
முடிவற்ற இரவு குறித்தான பதட்டங்களில் எழுதப்படுகிறது பிரார்த்தனையின் பாடல் – நம்பிக்கை அழிந்திருப்பவர்களிடம் இருந்து – எழுத்துப் பிழைகளுடன் தாறுமாறாக..
……………………………………………………………
சந்தையிலுருந்து திரும்பிய
பெண்ணிடம்
தன்னை அறிமுகப்படுத்திய கடவுள்
கேட்டார் இரண்டு காசுகளை கடனாக
பசி தணிந்த பிறகு காத்திருந்த
கடவுளை ஏற்றிச் செல்லவில்லை
எந்தப் பேருந்தும்
யாரும் பேசாமல் சென்றபோது
தனித்த கடவுள்
வாழ்ந்து விட்டு போங்கள் என்றார்
சலிப்பு நிரம்பிய கோபத்தோடு
…………………………………………………………………
( கண்ணழிந்த நிலத்தில் )
மேற்குறித்த வரிகளை கடந்து செல்ல எமக்கு தேவையாயிருப்பது ஒரு புன்னகை மட்டும் அன்று – கைவிடப்பட்ட மனிதர்களின் சார்பாக கடவுளை புறக்கணிக்க வேண்டியிருக்கிறது வருத்தத்துடன்.
மேலும் கடவுளர்கள் குறித்து நிரம்புகிறது கவிதைக்கான பாடு பொருள்
..கொலை வாளை வைத்திருந்தான் என்று
குற்றஞ்சாட்டப்பட்ட பழக்கடைக்காரனின்
தலையை கொய்துகொண்டு போன
புதிய கடவுளை சனங்கள் திட்டினார்கள்..
பாடுகள் சுமக்கின்ற மனிதர்களால் வரையப்படும் கடவுள் குறித்தான சித்திரங்கள் முடிவுறுவதாக தெரியவில்லை, கொடும் பாலையில் அனல் காற்று வீசியிறைக்கும் மணல் துகளாய் நிறைகிறது விழியோடும் வழியோடும்.
சாத்தானும் கடவுளும்
ஒரே ராஜ்ஜியத்தில் பங்கு வைத்துக்கொண்ட
உலகத்தில்
சனங்களின் நிழலைக் கண்டு
நெடுங்காலம் என்று சொல்லிச் செல்லும்
ஒருவனை கண்டேன்
அன்றிரவின் இறுதிக் கணத்தில்
( வளாகத்தின் நிழல்களில் படிந்திருக்கும் பயங்கரம்)
சாத்தான்களாலும் கடவுளர்களாலும் பங்கு போடப்பட்டிருக்கும் உலகில் சனங்களின் நிழலைத் தன்னும் கண்டவனை காணமுடியாமை உச்சநிலைத் திகிலை வாசிப்பு மனதில் நிகழ்த்துகிறது. மேற்குறித்த கவிதைகளில் எல்லா நிலைகளிலும் கடவுளர்கள் ஒருவராக இருப்பதில்லை அனால் சோதிக்கப்படும் பாடு நிறைந்த மக்கள் ஒருவராகவே இருக்கிறார்கள் என்பது எத்தனை முரண் நகை.
4.
இந்த தொகுப்பு ஏறத்தாள நூற்றுப்பதினைந்து பக்கங்களில் கருணாகரனின் ஐம்பது கவிதைகளை உள்ளடக்குகிறது. வடலி வெளியீட்டின் தொகுப்பு. அவரது கவிதைகளை நன்கு புரிந்த அவரது நண்பர்களால் பெரும் சிரமத்தின் மத்தியில் நேர்த்தியோடு பதிப்பிடப்பட்டிருகிறது. இதில் உள்ளடக்கப்படிருக்கும் எல்லாக்கவிதைகளையும் யுத்தத்தின் அவலச்சுவை என வகைப்படுத்த முடியாது. குற்றமும் தண்டனையும் மன்னிப்பும், தேவ தேவனின் பறவை, மூடிய ஜன்னல், சிரிக்கும் பறவை, பெண்நிழல், மாமிசம், பறக்கும் மலைகள், உறக்கத்தில் வந்த மழை, குழந்தைகளின் சிநேகிதன் முதலிய கவிதைகள் வாழ்வியலின் தொடர்ச்சியை அதன் தருணங்களில் பதிவு செய்பவை. அந்த வகையில் குழந்தைகளின் சிநேகிதன் எனக்குபிடித்த கவிதை – இன்பம் தொற்றிக்கொள்ளக் கூடியது எப்போதும் நீங்கள் அதை காவிச் செல்பவராய் இருங்கள் என்கிறது ஒரு பொன்மொழி – இங்கே குளிர் விற்பவர்கள் குழந்தைகளிடம் அப்படித்தான் இருக்கிறார்கள் இன்பத்தை அதன் கரைந்து விடும் (நிலையற்ற) நிலையில் எடுத்துச் செல்பவர்களாக..
“குளிர் விற்பவனின் மணியொலியில்
காத்துக்கொண்டிருக்கிறது
குழந்தைகளின் மகிழ்ச்சி“
என்ற எளிய கவிதை மொழி சிறுவர்களை நோக்கி பேசுகிறது. இதன் எளிமைக்காகவே இதனை நேசிக்கிறேன்.
…………………..
என்னிடமும் உண்டு
பள்ளி நாட்களில் குளிர் விற்றவனின்
மணியொலியும்
குளிர்ந்தினிக்கும் துளிகளும்
அவனிதயத்தில் நிறைந்திருந்த குழந்தைகளின் மகிழ்ச்சியும்”
யாரிடம் இல்லையென்று சொல்லுங்கள்? மணியொலி, மகிழ்ச்சி மற்றும் குளிர்ந்தினிக்கும் துளிகளைத் தந்தவர் புன்னகை.
போர் தன் சமன்பாட்டை எங்களில் எழுதிவிடுகிறது, அதற்கு விடையளிக்க முடியாதவர்களை தன் வாயால் விழுங்கி விடுகிறது. உண்மையில் அதற்கொரு விடையும் இல்லை எனக் கண்டிருக்கின்ற நாங்கள் இறந்திருக்கிறோம் எல்லா விதமாகவும். யுத்தத்தின் விளைவுகள் எவருக்கும் எப்போதும் மகிழ்ச்சிகுரியவை அன்று. யுத்தம் தன் சாட்டையை எல்லோரிடமும் விசிவிட்டு செல்கிறது அதன் வலிகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமாய் இருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் போரின் வால் எங்களை சூழ்ந்திருக்கிறது. அது தருகிற அப்பாலான விளைவுகள் வெளிவருகிறது வேறுபட்ட வடிவங்களில்.
“வாசலைத் திறந்து
செல்ல முடியாத
பொம்மை
எல்லோரும்
வெளியேறிச் சென்றபின்
தனித்திருக்கிறது
குழந்தையின் ஞாபகங்களுடன்”
குழந்தைகளும் வாசலைத் திறந்து வெளியேறிவிட்ட வீடுகளில் ஞாபகங்களுடன் பொம்மைகளாக இருக்கிறார்கள் அவர்களை பெற்றவர்கள். உண்மையில் போர் வரின் பிரிதலோ இல்லை பொருள் வரின் பிரிதலோ, பிரிதல் வேதனையானது அது வாழ்வின் பிடிமானம் குறித்தான கடைசி நூற்புரியையும் பரிசோதித்து விடும் வல்லமை உள்ளது. எங்கள் பிடி நழுவிக்கொண்டிருக்கிறது எல்லா வகையிலும். மேற்குறித்த அருமையான கருணாகரனின் இந்தக் கவிதை இத் தொகுப்பில் இடம் பெறவில்லை. அனால் மேற்குறித்த கவிதை எம்மக்குள் நிகழ்த்தும் கிளர்வை இன்னொரு கவிதை சாத்தியப்படுத்துகிறது தொகுப்பில்.
“பின்னிரவில் தூக்கமின்றித் தவிக்கும் கிழவன்
கனவு அழைத்து போகும்
இளமைக் காலத்துக்கும்
பிள்ளைகள் கொண்டு சென்ற
தூக்கத்துக்கும் இடையில் கிடந்தது அவிகிறான்“
என்று ஆரம்பிக்கிறது தூக்கத்தை தொலைத்த கிழவன் கவிதை
“கால முரணுக்கிடையில்
தன்னை கொடுத்திருக்கிறது
அன்பை ஊற்றிச் செல்லும் தொலைபேசி
கண்டங்களுக்கும் கடலுக்கும் அப்பாலான கருணையில்..“
காலம் எல்லாவிதத்திலும் முரண்தான் – யார் அறிந்தோம்?
சர்வதேச தேதிக்கோடு என்று சொல்லப்படுகின்ற பூமிக்கோட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு நீர்த்துளிகளின் இடைவெளியை தூரக்கணக்கில் சொன்னால் பூச்சியம் நேரக்கணக்கில் சொன்னால் நாள்; அது போலதான் உறவுகளை கருணையின் கணக்கில் ஒன்றாகவும் காலத்தின் கணக்கில் வேறாகவுமாக பிரித்து வைக்கிறது கண்டங்கள்.
“வெவ்வேறு கண்டங்களுக்கு இடையில்
வெட்டித் துண்டாடப்பட்ட
அன்பின் உடல் கிடந்த துடிக்கிறது
தந்தையென்றும் பிள்ளை என்றும்
அங்கும் இங்குமாக“
அன்பின் உடலின் துடிப்பு குழந்தையின் ஞாபகங்களோடு தனித்திருக்கின்ற பொம்மையை அழைத்து வருகிறது மீண்டும் மீண்டும்.
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை. சிலர் காணமல் போனபோது அழுதோம் சிலர் காணாமல் போனபோது மகிழ்ந்தோம். சிலர் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார்கள். சிலர் எழுத வைத்து விட்டு காணாமல் போனார்கள். சில காணாமல் போதலுக்காய் இன்னும் சில காணாமல் போதலை நியாயம் செய்தார்கள். நாங்களே எங்களுக்குள் காணாமல் போதலை நிகழ்த்தினோம் இன்னும் என்னவாய் எல்லாம் சாத்தியமோ அவ்வாறாய் எல்லாம் நாங்கள் காணாமல் போயிருக்கிறோம். சரியோ-தவறோ, நியாயமோ- அநியாயமோ, காலத்தின் தேவையோ-களத்தின் தேவையோ ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரொரு துயர் மிகுந்த இரவை உருவாக்கியது எங்கள் வரலாற்றில் . அந்த இரவில் விளித்திருந்தவர்களுக்கு தெரியும் அதன் வலி.
காணாமல் போனவனின் புன்னகை என்கின்ற கவிதை எங்கள் ஞாபகங்களில் சில கேள்விகளை எழுப்புகிறது. திரும்பிச் செல்லவும் முடியாது அங்கிருக்கவும் முடியாது என்கின்ற நிலையில் காணாமல் போனவன் புன்னகை எங்களை தொடர்கிறது அல்லது எங்களை தடுக்கிறது. காயமறுக்கும் கண்ணீர்த்துளிகளின் முன்னிலையிலும் குருதியின் அருகாமையிலும் சில கேள்விகள் சிந்திக்கிடக்கிறது – காலம் பதில் சொல்லக் கடவது.
” திரும்பிச் செல்ல முடியவில்லை
காணாமல் போனவனின் புன்னகையை விட்டு..”
பெருந்துயரமாக இருக்கிறது காணாமல் போனவனின் புன்னகையில் இன்றும் உறைய மறுத்திருக்கும் குருதித் துளி குறித்து.
நன்றி: தீபன், வைகறை மாதஇதழ் (கனடா)
07 Mar

ஃபஹீமா ஜஹான் கவிதைகள் – எம். ஏ. நுஃமான்

1
ஃபஹீமா ஜஹான் 1990களின் பிற்பகுதியில் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலை மாணவி. கலாசாலை ஆண்டுமலருக்காக என் னிடமிருந்து ஒரு பேட்டி எடுக்கவேண்டும் என அவர் விரும்பினார். என் மனைவி மூலம் தொடர்புகொண்டு பேட்டிக்கான வினாக்களை எழுதி அனுப்பியிருந்தார். அந்த வினாக்களைப் படித்தபோது அவர் ஒரு சராசரி ஆசிரியை அல்ல, நன்கு விபரம் தெரிந்தவர்தான் என்று நினைத் தேன். அவரை நேரில் சந்திக்காமலே தபால் மூலம் நிகழ்ந்த அந்தப் பேட்டி கலாசாலைச் சஞ்சிகையான கலையமுதத்தில் வெளிவந்தது.
அப்போது அவர் கவிதைகளும் எழுதுபவர் என்று எனக்குத் தெரியாது. பின்னர் பத்திரிகைகளில் அவ்வப் போது வெளிவந்த அவரது சில கவிதைகளைப் படித்த போது அவர் மேலெழுந்துவரக்கூடிய கவிஞர் என்பது உறுதிப்பட்டது. மிக அண்மையில்தான் ஒரு கடல் நீரூற்றி என்ற அவரது முதலாவது தொகுப்புப் படிக்கக் கிடைத்தது. அதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் ஃபஹீமாவின் கவியாளுமை பற்றிய ஒரு மன நிறைவைத் தந்தன.
சமீபத்தில் வெளியான தனது இரண்டாவது தொகுப்பான ‘அபராதி” க்கு ஒரு முன்னுரை தருமாறு அவர் கேட்டபோது மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். ஆயினும் பதிப்பகத்தாரின் அவசரம் காரணமாகவும், எனது அவ காசமின்மை காரணமாகவும் எனது முன் னுரை இல்லாமலே அபராதி வெளிவர நேர்த்தது. இப்போது தனது முன்னையத் தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகளையும் சேர்த்து தனது மூன்றாவது தொகுப்பை ஃபஹீமா வெளியிடுகிறார். இது எனது முன்னுரையோடு வெளிவர வேண்டும் என்பது அவரது விருப்பம். அவ ரது கவிதைகளைப் பற்றிய எனது அபிப்பிராயத்தைத் தெரிவிப்பதற்கு இது ஒரு சந்தர்ப்ப மாக அமைவதால் அதை நானும் விருப்புடன் ஏற்றுக்கொண்டேன்.
ஃபஹீமாவின் உடனடியான இலக்கியச் சூழல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அவரை இன்னும் நேரில் சந்தித்ததில்லை. அவர் இலங்கையில் சிங்களம் பேசுவோர் பெரும்பான்மையாக வாழும் குருணாகலை மாவட்டத்தில், தமிழ் பேசும் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழும் மெல்சிரிபுரவில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே கல்வி கற்று அங்கேயே கணித ஆசிரியராகப் பணிபுரிகிறார். இடையில் ஆசிரிய பயிற்சிக்காக கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் பெரும் பான்மையினராக வாழும் சூழலில் இரண்டு ஆண்டுகளைக் கழித்திருக்கிறார். என்றாலும் அவரது தமிழ் மொழி ஆளுமையும் இலக்கிய ஆர்வமும் அபார மானது. சமீபத்தில் நான் படித்த ஃபஹீமாவின் சில கட்டுரைகளும் விமர்சனக் குறிப்புகளும் அருக்கு ஒரு பரந்துபட்ட வாசிப்புத் தளமும், இலக்கியப் பரிச்சய மும், சுய நிலைப்பாடும் இருக்கின்றன என்பதை உணர்த்தின. இது பெரிதும் அவரது சுயமுயற்சியின் அறுவடை என்று நினைக்கிறேன். எனினும் பள்ளியில் தனக்குத் தமிழ் கற்பித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனது ஆசிரியை பராசக்தி இளையதம்பியை நினைவு கூர்ந்து அவருக்குத் தனது இரண்டாவது தொகுதியை சமர்ப்பணம் செய்திருக்கிறார். தனது மொழித் திறனின்; மூலவேரை தனது தமிழாசிரியரிடம் இனங்காணும் இவரது மனப்பாங்கு மகிழ்ச்சிக்குரியது.
ஃபஹீமா 90களின் நடுப்பகுதியிலிருந்து கவிதை எழுதிவருகிறார் என்று நினைக்கிறேன். என்றாலும் கடந்த சுமார் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் இவர் ஏராளமாக எழுதிக் குவித்தவர் அல்ல. அவரது முதல் தொகுதியில் (ஒரு கடல் நீரூற்றி) 28 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது தொகுப்பில் (அபராதி) 30 கவிதைகள் உள்ளன. பத்திரிகைகளில் வெளிவந்த, வானெலியில் ஒலிபரப்பாகிய அவரது ஆரம்பகாலக் கவிதைகளையும் சேர்த்தால் அவரது மொத்தக் கவிதைகள் சுமார் இருநூறைத் தாண்டியிருக்கா என்று நம்புகிறேன். இத்தொகுப்பில் அவர் தன் எல்லாக் கவிதைகளையும் சேர்த்துக்கொள்ளவில்லை. தான் எழுதிய வரிகள் எல்லாம் பொன் வரிகள் என்று கருதும் மனப்பான்மை அவரிடம் இல்லை. தன் வளர்ச்சிப் போக்கில் ஒரு சுயமதிப்பீட்டையும் சுய விமர்சனத்தையும்கூட வளர்த்திருக்கிறார் என்பது இன்றைய இலக்கி யச் சூழலில் முக்கியமானது.
இத்தொகுப்பில் அவர் எழுதியவற்றுள் அவரே தேர்ந்தெடுத்த 60 கவிதைகள் உள்ளன. சுமார் 15 ஆண்டுகால அறுவடை இவை. ஆண்டு ஒன்றுக்கு சராசரி நான்கு கவிதைகள். இலக்கிய உலகில் ஒரு படைப்பாளியின் நிலை எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படு வதில்லை, தரத்தினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அந்தவகையில் குறைவாக எழுதி தன் இருத்தலை உறுதிப்படுத்திக்கொண்டவர்களுள் ஃபஹீமாவும் ஒரு வராகிறார். இளம் தலைமுறையைச் சேர்ந்த ஈழத்தின் முக்கியமான கவிஞர்களுள் ஃபஹீமாவும் ஒருவர் என்பதை இத்தொகுப்பில் உள்ள அவரது கவிதைகள் உறுதிப்படுத்துகின்றன என்பதை நான் அழுத்திக் கூறலாம்.
ஃபஹீமாவை ஒரு பெண் கவிஞர் என்றோ, பெண் ணியக் கவிஞர் என்றோ நான் அடையாளப்படுத்த விரும்பவில்லை. அவர் ஒரு பெண் என்ற உயிரியல் அம்சமும், ஆணாதிக்கச் சமூகச் சூழலில் அவர் தான் பெண் என்ற பெண்ணிய அரசியல் சார்ந்த சமூகநிலைப் பட்ட பிரக்ஞை பெற்றிருப்பதும் அவரது கவிதைகளில் அழுத்தமாக வெளிப்படுவது உண்மைதான். ஆனால், பெண் என்ற அடையாளத்துக்கு அப்பாலும் அவரது கவிதைகள் விரிவுபெற்றுள்ளன. தனது சமூகத்தின், தனது தேசத்தின், தான் வாழும் உலகத்தின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அவரது கவிதைகளின் உணர்வுத் தளம் இவை எல்லாவற்றையும் தழுவி நிற்கின்றது.
2
1980க்குப் பிறகு தமிழ்க் கவிதையில் வலிமையாக ஒலிக்கத் தொடங்கிய பெண்ணின் குரல் – பல ஆண் கவிஞர்களையும், ஆண் முதன்மைச் சிந்தனை வட்டத் தினரையும் அசௌகரியப்படுத்திய அதே குரல் – ஃபஹீமாவின் கவிதைகளிலும் தீர்க்கமாக ஒலிப்பதை நாம் காண்கிறோம். பெண் என்ற வகையில் தனக்கு ஆண்களால் வரையறுக்கப்பட்ட எல்லையை அவர் உடைக்கிறார். அதை அவர் கேள்விக்கு உட்படுத்து கிறார். ‘அவள் அவளாக” என்ற கவிதை இதுபற்றிய ஒரு பிரகடனமாகவே அமைகின்றது
உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம்
உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூசைப்பீடம் வேண்டாம்
உனது ஆபாசத் தளங்களில்
அவளது நிழலைக்கூட
நிறுத்தி வைக்க வேண்டாம்.
வாழ்க்கைப் பாதையில்
அவளை நிந்தனை செய்திட
உனது கரங்கள் நீளவே வேண்டாம்
அவளது விழிகளில்
உனது உலகத்தின் சூரிய சந்திரர்கள் இல்லை
அவளது நடையில்
தென்றல் தவழ்ந்துவருவதில்லை
அவளது சொற்களில்
சங்கீதம் எழுவதும் இல்லை
அவள் பூவாகவோ தளிராகவோ
இல்லவே இல்லை
காலம் காலமாக நீ வகுத்த
விதிமுறைகளின் வார்ப்பாக
அவள் இருக்கவேண்டுமென்றே
இப்போதும் எதிர்பார்க்கிறாய்……..
எல்லா இடங்களிலும்
அவளது கழுத்தை நெரித்திடவே
நெருங்கிவருகிறது உனது ஆதிக்கம்
அவள் அவளாக வாழவேண்டும்
வழிவிடு.
‘கிரீடங்களை அவமதித்தவள்” என்ற கவிதையிலும் இதே குரல் இன்னும் உரத்து ஒலிக்கின்றது.
எக்காலத்திலும் இனி
உங்கள் பீடங்களில் முழந்தாளிட வரமாட்டேன்
நீங்கள் ஆராதிக்கும் நாமங்களிலும் சேரமாட்டேன்.
ஆதிமுதல் போற்றிவரும்
அந்தக் கிரீடங்களின்மீது
அவமதிப்பை விட்டெறிகிறேன்
உங்கள் அலங்காரப் பட்டினங்களின்
துர்வாடையையும் பேரிரைச்சலையும்
சகித்திட முடியாமல் அகன்று போகிறேன்.
இந்த வகையான எதிர்ப்புணர்வு ஃபஹீமாவின் பல கவிதைகளில் வெளிப்படுகிறது. பெண்ணின் துயரத் துடனும், குமுறலுடனும், கோபத்துடனும் அது பதி வாகியுள்ளது. அம்மா, அவளை வழியனுப்பிய இடம், எல்லைக் கோட்டில் தடுக்கப்பட்டவள், காட்டுமிராண் டியிடம் சிக்குண்டவள், ஊற்றுக்களை வரவழைப்ப வள், பேய்களால் தின்னப்படுபவள், பேறுகள் உனக்கு மட்டுமல்ல, எனது கைமாற்றி ஏந்திக்கொள், அவளுக் குச் சட்டம் வகுத்தது யார்? தற்கொலை, வயற்காட்டுக் காவற்காரி போன்ற கவிதைகளை இதற்கு உதாரண மாகக் காட்டலாம். விழிப்புற்ற பெண்மைபற்றிய பிரக் ஞையின் வெளிப்பாடாக நாம் இக்கவிதைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆதித் துயர், ஆதித் திமிர் ஆகிய தொடர்களை சமூகத்தில் வேரோடியுள்ள நெடுங்காலப் பால்நிலைப் பிளவின் குறியீடுகளாகத் தன் கவிதைகள் சிலவற்றில் ஃபஹீமா கையாண்டுள்ளார். இவ்வகையில் ‘ஆதித் துயர்” என்ற கவிதை மிகவும் கவனிப்புக்குரியது. பாலை வெய்யிலில் ஒரு மூதாட்டியின் வழிநடைப் பயணத்தின் ஊடாக துயர் படிந்த பெண்ணின் வாழ்வு இக்கவிதையில் சித்திரமாகின்றது. பெண்ணின் நெடுங் காலத் துயரின் குறியீடாகவே இச் சிறிய கவிதை அமை கின்றது எனலாம்.
நிழல் மரங்களற்றுச்
சூரியன் தவித்திடும் நெடுஞ்சாலையோரம்
வெய்யிலை உதறி எறிந்தவாறு
நடக்கிறாள் மூதாட்டி
குதி கால்களால்
நெடுங் களைப்பை நசுக்கித் தேய்த்தவாறு
காற்றைப் பின் தள்ளிக்
கைகளை வீசுகிறாள்
வெய்யில்
மிகப் பெரும் தண்டனையை
வழி நீழப் பரவ விட்டுள்ளது
வேட்டை நாய்போல
அவள் முன்னே ஓடிச் செல்கிறது நிழல்
பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும் தேங்கித் துடிக்கிறது
ஆதிமுதல் அவளைத் தொடரும் துயர்
பெண்ணின் துயர் ஆதித் துயரெனின், ஆணின் திமிர் ஆதித் திமிராகின்றது ஃபஹிமாவின் கவிதை களில். ‘தற்கொலை’ ஆணால் வஞ்சிக்கப்பட்ட பெண் ணைப்பற்றிய கவிதை. வலுவான மொழியில் ஆணின் ஆதித் திமிர் பற்றி அது பேசுகிறது:
அற்ப புழுதான் – நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித் திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்…..
நீ கொடுத்த சுமைகளையும்
அந்த உடலையும்
உன்னிடமே எறிந்துவிட்டாள்
இனி எக்காலத்திலும்
உன்னெதிரே வரப்போவதில்லை
நீ துன்புறுத்திய அவள் ஆத்மா
ஆணின் ஆதித் திமிரை நிராகரிக்கும் பிறிதொரு கவிதை ‘கடைசிச் சொல்.’ ‘நம்மெதிரே வீழ்ந்து கிடக் கிறது காலத்தின் பிறிதொரு முகம்” என கவித்துவ வீச்சோடு தொடங்குகிறது கவிதை.
நீ உரிமை கொண்டாடிய
எல்லாவற்றிலிருந்தும்
எனை விடுவித்துக்கொண்டேன்
துயரத்தில் பதைபதைத்த சொற்களையும்
துரோகத்தால் நசுங்குண்ட சத்தியங்களையும்
உனது சுவர்களுக்குள்ளேயே விட்டுவிட்டு
வெளியேறிப் போகிறேன்
இப்பொழுதும்
ஆதித்திமிர் தடுத்திட உன்னிடம் எஞ்சியுள்ளது
ஒரு சொல்
விதி தன் கண்ணீரை வழியவிட்ட சொல்
நாம் நமக்குக் கிடைத்திடக்
காத்திருந்த கடைசிச் சொல்
அந்தக் கடைசிச் சொல் எதுவாகவும் இருக்கலாம். அது அவ்விருவரின் இழப்பையும் மீட்டெடுக்கக்கூடிய சொல். ஆதித்திமிர் அதையும் தடுத்துவிட்டது என் கிறாள் பெண். இவ்வாறு ஆணின் ஆதித் திமிருக்கு எதிரான, பெண்ணின் ஆதித் துயரிலிருந்து மீழ்வதற்கான விழிப்புற்ற பெண்ணின் குரலாக அமைகின்றன ஃபஹி மாவின் பெரும்பாலான கவிதைகள்.காதல் உணர்வு சார்ந்த அவரது சில கவிதைகளிலும்கூட ஆண்மைக்கு அடிமைப்பட்டுப் போகாத சமத்துவமான காதலுக்கான குரலே ஒலிக்கின்றது. மிகை யுணர்ச்சியற்று வாழ்வின் முரண்பாடுகளை எதிர்கொள் ளும் குரல் இது.
அன்பு பொங்கிப் பிரவகித்த அபூர்வ நாட்களில்
நிழல்போலப் பிரிவைச் சொல்லிப் பின்வந்தது காலம்
நான் வரச் சாத்தியமற்ற இடங்களில் நீயும்
நீ வரத் தேவையற்ற இடங்களில் நானும்
வாழ்வின் விதிமுறைகள்
எனதுலகையும் உனதுலகையும்
வேறு பிரித்தவேளையில்
விடைபெற்றோம்
ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம்
இறுதியாக அன்றுதான் அழகாகச் சிரித்தோம்
எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தேபோயிற்று
(எனது சூரியனும் உனது சந்திரனும்)
உனது மகிழ்ச்சிகளையெல்லாம்
என்னிடமிருந்தே பெற்றுக் கொண்டாய்
எனது துயரங்களையெல்லாம்
நீயன்றோ ஏற்படுத்தித் தந்தாய்?
தாங்க முடியாத வலிதருகின்ற உன்
தளைகளிலிருந்து
என்னை விட்டுவிடேன் – போகிறேன்…
உனது அதிகாரங்களையும்
எனது அண்டிவாழ்தலையும்
கீழிறக்கிவைத்துவிடுவது
சாத்தியமெனில் ஒன்று சேர்வோம்
(நீ அவனைக் காதலித்தாயா)
நெடுங்காலத் தாமதத்தின் பின்
இப்போது அழைக்கிறாய்
எந்த மன்னிப்புமற்ற வியாக்கியானங்களோடு
பதுங்கிப்பதுங்கி வந்திருக்கிறாய்
முதன் முறையாக உன்னை எறிந்தேன்
இதயத்திலிருந்து சாக்கடைக்கு
மாசுற்றவைகளைத் தூக்கியெறிந்திட
இருதடவைகள் சிந்தித்ததேயில்லை நான் …
சொல்
அன்பானவனாக இருந்தாயா? ..
தாரை வார்த்துத் தந்திட
எவருமே முன்வராத வாசலொன்றில்
தாகித்தக் கிடந்தவளைக் கைவிட்டுச் சென்றபோதும்
அன்பானவனாக இருந்தாயா?
எனக்கும் உனக்குமான உலகின்
கடைசி வாசலையும் மூடி
முத்திரையிட்டாயிற்று
அந்தப் பிசாசை இருகூறாக்கி
நெஞ்சத்துச் சீசாக்களில் அடைத்தாயிற்று
(உன்னால் நான் நனைந்த மழை)
3
இனத்துவ மோதல், அரசியல் வன்முறை, யுத்தம் என்பவற்றால் நேரடியாகப் பாதிக்கப்படாத தென்னி லங்கைக் கிராமம் ஒன்றை வாழிடமாகக் கொண்டவர் ஃபஹீமா ஜஹான். ஆயினும் ஒடுக்குமுறைக்கு எதிரான, யுத்தத்துக்கும் வன்முறைக்கும் எதிரான மனச் சாட்சியின் குரலாக அவரது கவிதைகள் சில அமைந் திருப்பது அவரது அரசியல் பிரக்ஞையின் விசாலத்தைக் காட்டுகின்றது எனலாம். 1980களிலிருந்து ஈழத்தில் வளர்ச்சியடைந்த – தமிழ் இலக்கிய வரலாற்றில் முற்றிலும் புதுமையான, இன விடுதலை சார்ந்த அரசி யல் போராட்ட – எதிர்ப்புக் கவிதைகளில் ஃபஹீமா வின் பங்கு சிறிதெனினும் இது தொடர்பான குறிப்பிடத் தக்க சில கவிதைகளையேனும் அவர் எழுதியுள்ளார்.
இலங்கையின் இனத்துவ அரசியல் சூழல் சிக்கலானது, குழப்பங்கள் மலிந்தது. இனத்துவ முரண்பாட் டையும் மோதலையும் வெள்ளை, கறுப்பு என மிகை எளிமைப்படுத்தி, அதன் ஒரு பக்கத்தைச் சார்ந்து நிற்பது இனத்தேசியவாதிகளைத் தவிர நிதானமான அரசியல் பார்வை உடையவர்களுக்குச் சாத்தியமல்ல. இது தொடர்பான ஃபஹீமாவின் ஒரு சில கவிதைகளில் ஒரு புறச் சார்பு, அதாவது தமிழ்த் தேசிய நோக்குநிலை, வெளிப்படுகின்றது எனினும் பொதுவாக அரசியல் வன்முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிரானவராகவே அவர் இருக்கிறார். ‘அவர்களுக்குத் தெரியும்’ கவிதை அமைதி நிலவிய தமிழ்ப் பிரதேசத்தில் அரச வன்முறை புகுந்தமை பற்றிப் பேசுகின்றது.
அறிமுகமற்ற பேய் பிசாசுகளையெல்லாம்
அழைத்துக்கொண்டு இரவுகள் வந்தடைந்தன
எமது வான வெளியை
அவசரப்பட்டு அந்தகாரம் ஆக்கிரமித்தது
அடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவியபடி
எம் மீது பூச்சொரிந்த வேம்பின்
கிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே
அட்டுப்பிடித்த கவச வாகனங்கள்
யாரையோ எதிர்கொள்ளக் காத்திருந்தன
எமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்
எமது பெண்களின் வாழ்வில் கிரகணம் பிடித்திட எதிர்காலப் பலாபலன்கள் யாவும்
சூனியத்தில் கரைந்தன
தற்போதெல்லாம் குழந்தைகள்
இருளை வெறுத்துவிட்டு
சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்
அவர்தம் பாடக் கொப்பிகளில்
துப்பாக்கிகளை வரைகிறார்கள்
பூக்களும் பொம்மைகளும் பட்டாம்பூச்சிகளும்
அவர்களைவிட்டும் தூரப் போயின
இத்தகைய சித்திரத்தை 1980க்குப் பிந்திய ஈழத்துக் கவிதைகளில் நாம் அடிக்கடி காணலாம். அரச வன் முறையின் வருகை ஆயுதப் போராட்டத்தின் உடன் விளைவுதான். கடந்த சுமார் முப்பது ஆண்டுகளில் வன் முறை, வன்முறைக்கு எதிரான வன்முறை என தொடர்ச் சியாக ஈழத்து வாழ்வு சிதறடிக்கப்பட்டது. அரச வன் முறையினால் வெஞ்சினமுற்ற இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் விடுதலை இயக்கங்களில் இணைந்து விடு தலைக்காகத் தம் வாழ்வைத் தியாகம் செய்ய முன்வந்த னர். (இன்னும் ஆயிரக் கணக்கானோர் சுயவிருப்பற்று பலாத்காரமாக இயக்கங்களுள் உள்வாங்கப்பட்டனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.) முக வரியற்ற நெருப்பு நிலவுக்கு, ஒரு கடல் நீரூற்றி அகிய ஃபஹீமாவின் கவிதைகள் இவ்வாறு உயிர்த்தியாகம் செய்ய முன்வந்த தமிழீழ விடுதலைப் போராளிகளை மகிமைப்படுத்தி அங்கீகரிக்கும் கவிதைகளாக உள்ளன. முகவரியற்ற நெருப்பு நிலவுக்கு என்ற கவிதையில் ஆதிரை என்ற பெண் போராளி அவளது சக மாணவி யால் நெருப்பு நிலவாக உருவகிக்கப்படுகிறாள். அதன் சில வரிகள்:
…….
ஆதிரை
கடைசியாக நீ கல்லூரி வந்த தினம்
அதுவென்றுதான் நினைக்கிறேன்
அன்று சிரித்திடவே இல்லை நீ
சிந்தனை வயப்பட்ட முகத்துடன்
கல்லூரி வளவெங்கும் அலைந்து திரிந்தாய்
பின்னர் நான் பார்க்க நேர்ந்த
போராளிகளின் படங்களிலெல்லாம்
உன் முகத்தைத் தேடித் தோற்றேன்…
துப்பாக்கி வரைந்த
உன் இரசாயனக் குறிப்பேட்டைப்
பத்திரப்படுத்திவைத்துள்ளேன்
பாடத்தை விட்டு
உன் கவனம் திசைமாறிய தருணங்களில்
ஓரங்களில் நீ எழுதியுள்ள வாசகங்கள்
விட்டுவிடுதலையாகும்
உன் சுதந்திரக் கனவைச் சொல்கின்றன
உன் நகர்வுகளை மோப்பம் பிடிக்கும் அறிமுகமற்ற சப்பாத்துக்கால்கள்
சனியன்களால் ஆட்டுவிக்கப்படும் நாளைகளிலும்
எமது வாழிடங்களில் பதிந்துசெல்லலாம்
நீ கவனமாயிருந்து இலட்சியத்தை வெற்றிகொள்
ஒருகடல் நீரூற்றி என்ற கவிதை கடற்போரில் மாண்ட போராளிக்காக இரங்கும் அவனது காதலியின் ஆழ்ந்த சோகக் குரலாக அமைந்துள்ளது. அக்கவிதை யின் இறுதிப்பகுதி:
பரணி..
உன் நினைவுகள் தேய்ந்துகொண்டிருந்த வேளை
மாரிக்கால அந்திப்பொழுதொன்றில்
நனைந்த சீருடைகளிலிருந்து நீர் சொட்டச்சொட்ட
மீளவும் வந்தாய்
அலையெழுப்பும் கடல்பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட
மழைப் புகாரினூடே மறைந்து போனாய்
திரைகடல் சென்ற திரவியமானாய்
ஆழிப்பரப்பெங்கும் ஊழித் தீ எழுந்து தணிந்தது – நீ
திரும்பிவரவே இல்லை
இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெருமௌனம் கவிந்துள்ளது
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே!
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் அதன் முளையிலேயே மக்கள் விரோத அம்சத்தையும் கொண்டிருந்தது. அரச அடக்குமுறைக்கு எதிராக எழுச்சியடைந்த போராட்டம் விரைவிலேயே சகோதர இயக்கங் களுக்கு எதிரானதாகவும், அப்பாவித் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாகவும் வளர்ச்சியடைந் தது. இதன் ஊடாக விடுதலைப் போராட்டம் ஒரு பயங்கரவாதக் குணாம்சத்தைப் பெற்றுக்கொண்டது. அரச பயங்கரவாதம் அதற்கு எதிரான தமிழ் தேசிய பயங்கரவாதம் என இது விரிவடைந்தது. இதுபற்றிய ஃபஹீமாவின் எதிர்வினைகள் தாக்கமானவை. ‘ஒரு மயானமும் காவல் தேவதைகளும்” என்னும் கவிதை முஸ்லீம்களுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் வன் முறை பற்றிப் பேசுகின்றது. புலம் பெயர்ந்த ஒரு இளை ஞனை முன்னிறுத்திப் பேசுவதாக அது அமைந்துள் ளது. அதேவேளை பொதுவாக வன்முறையின் கொடூரம் பற்றியும் பேசுகின்றது.
அக்கவிதையின் சில பகுதி கள் இவை:
சுழலும் சோகச் சூழலிடை
உனக்கு எதை எழுத?
ஆடிப்பாடி பின் அவலம் சுமந்து நீங்கிய
சோலை வனத்தைத் தீயின் நாக்குகள் தின்று தீர்த்தன
நெற்கதிர்கள் நிரம்பிச் சலசலத்த வயல்வெளிகளை
இரும்புச் சக்கரங்கள் ஊடுருவித் தகர்த்தன
எஞ்சிய எமது பள்ளிவாசல்களும் அசுத்தமாக்கப்பட்டன
மண்ணை மீட்டெடுக்கும்
போராட்டத்தில் மனிதர்கள் வீழ்ந்திட
பேய்கள் உலாவிடும் பூமிமாத்திரம்
தரிசுதட்டிக் கிடக்கிறது
இரத்தம் உறிஞ்சிய மண்ணில்
எத்தகைய வசந்தம் துளிர்த்திடுமினி …
தளைகளை வெட்டியெறிந்திடப் புறப்பட்ட விடுதலைப்
பிரவாகம் உனை வீடுதுறக்கவைத்தது
நீ வாழ்ந்த தேசம் இன்றுன்னை
எந்தப் பாடலைக் கொண்டும்
வரவேற்கும் நிலையிலில்லை …
உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப் பட்டபின்… என்னும் கவிதையும் முஸ்லிம் விவசாயிகள் மீது கட்விழ்த்துவிடப்பட்ட புலிகளின் வன்முறை பற்றியே பேசுகின்றது.
அந்த வயல்வெளி மீது வாழ்வும் மொழியும்
வேறுபிரிக்கப்பட்டது
வானமும் திசைகளும் விக்கித்து நின்றிட
விதியெழுதப்பட்டது
எனத் தொடங்கும் கவிதை இவ்வாறு முடிகின்றது:
மாலைப் பொன்னொளி கவியெழுத வரும்
அழகிய வயல்வெளியைச்
சனியன்கள் தம் துயரப் போர்வை கொண்டு மூடின
மரணப் பீதியுடனான ஓலம் திசைகளை உலுப்பிற்று
வயல்வெளி கடந்து அவ்வதிர்வு
நீலம் பூத்த மலைகளையும் அடிவானையும்
நீண்டு தொட்டது
அறுவடைக்குச் சென்ற அப்பாவிகள்
அறுவடை செய்யப்பட்டனர்
பின் உழவு இயந்திரப் பெட்டிகளில்
நெல் மூடைகளுக்குப் பதிலாகத்
துண்டாடப்பட்ட சடலங்கள்
எடுத்துவரப்பட்டபோது
எல்லாம் தடுமாறி நின்றன
இவ்வாறு வன்மமும் வெறுப்பும்
வாரியிறைக்கப்பட்ட
வரலாற்றுக்காயம் நிகழ்ந்தது எல்லாவற்றையும் வீழ்த்திச் சிதைத்து
அள்ளிப்போனது பிரளயத்தின் பெருங்காற்று
பொதுவாக வன்முறைக்கு எதிரான கவிதை வரிகள் ஃபஹீமாவின் கவிதைகளில் விரவிக்கிடக்கின்றன. என் றாலும், ஈழத்தின் வன்முறைச் சூழல் பற்றிய ஒரு மொத் தமான சித்திரத்தைத் தருகிறது அவரது அடவி – 2007 என்ற சிறிய கவிதை. செறிவான படிமங்களால் நிரம்பிய இக்கவிதை ஈழத்தின் அவலம் பற்றிய ஒரு முழுமை யான குறியீடு எனலாம்.
தீ மூட்டப்பட்ட
வனத்தை விட்டுத்
தப்பித்துப் பறக்கிறது
பறவை
சிங்கத்தோடு நரிகளும்
புலியோடு ஓநாய்களும்
அணிதிரண்ட அடவியில்
அபயம் தேடியலைகிறது
மான்குட்டி
வற்றிய குளத்தில்
வந்திறங்கிய கொக்குகள்
நீர் ததும்பும் நதிகளில்
சேர்ப்பிக்கும் கதைகள் பேசி
மீன்களைக் காவிப்
பறக்கின்றன மலையுச்சிக்கு
தேனீக்களை விரட்டியடித்துத்
தேன் சொட்டும் வதையை
அபகரித்துக்கொண்டது
கரடி
அடவியெங்கும்
அதிர்ந்து ஒலிக்கிறது
என் தேசத்து
மானுடத்தின் பேரவலம்
சிங்கத்தோடு நரிகளும் புலியோடு ஓநாய்களும் அணிதிரண்ட அடவியில் அபயம் தேடி அலையும் மான்குட்டி ஈழத்து வாழ்க்கையைக் கச்சிதமாக உரு வகிக்கும் படிமமாகும்.
4
ஃபஹீமாவின் கவிதைகள் இயற்கையின் வண்ணங் கள் பற்றிய காட்சிப் படிமங்களால் நிறைந்திருக்கின் றன. அவை தனித்து நிற்காது சங்கக் கவிதையியல் கூறுவதுபோல் முதல், கரு, உரி மூன்றும் பின்னிப் பிணைந்தனவாக உரிப்பொருளுக்கு ஊட்டம் கொடுப் பனவாக அமைகின்றன. இனிய குரலெடுத்துப் பாடும் உன் பாடலுடன்
வசந்தகாலமொன்று என் அடவிகளில் வந்துவிழும்
துயரங்கள் நிரம்பித் தாக்கும் வேளைகளில்
வேதனையில் உன் சிரிப்பொலி எழும்போது
அகால இடிமுழக்கத்தில் என் வானம் அதிரும்
ஏதோ ஓர் ஆறுதலில்
நீ என் கிளைகளில் தாவிக் குரலலெழுப்பும்போது
கார்காலமொன்று என் வேர்களைச் சூழும்
மரணத்தைப் பற்றியும்
நிலையற்ற வாழ்வின் நியதிகள் பற்றியும்
மகானைப்போல் நீ போதிக்கும் தருணங்களில்
கடும் கோடைகாலமொன்று என்
கால்களைச் சுற்றிவந்து பெருமூச்செறியும்
ஆனாலும் அன்பே!
இலையுதிர் காலத்தில் விக்கித்து நின்றபோது
ஓராயிரம் இலைகளும் உதிர்ந்துபோகையில்
என்னிடம் புன்னகைக்கக் கெஞ்சிய
உன் கீச்சலுடன் பனித்துளிகள் சொரிந்திடலாயின
(குரங்குகள் பிய்த்த கூடு)
பொன்னந்திக் கிரணங்கள் படியத்தொடங்கிய மாலையில்
குளிர்ந்த மலையை விட்டுக் கீழிறங்கித்
தும்பிகள் பறந்து திரிவதும்
தங்கநிறக் கதிர்கள் ஆடுவதுமான வயல் நிலங்களையும்
நீரோடைகளையும் தென்னந் தோப்புகளையும் ஊடுருவி
மனிதர்கள் வடிந்துபோன சந்தைக் கட்டடங்களையும்
மஞ்சள் வண்ணப் பூச்சொரியும் பெருவிருட்சத்தையும்
தாண்டி நீ சந்திக்கு வந்தாய்
(எனது சூரியனும் உனது சந்திரனும்)
பகல் முழுதும்
மலைகளின் சாம்பல் நிறப் போர்வைகள்
தேங்கிக்கிடக்கும் இருள்
மாலையில் பதுங்கிப்பதுங்கி மலையிறங்கி
ஊரின் திசைகளெங்கிலும்
உறைந்திட ஆரம்பிக்கும் கணங்களில்
என்னை வழியனுப்பிவைப்பாய்
(இரகசியக் கொலையாளி)
நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது
எமக்குப் பின்னால்
பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது
தூரத்து வயல்வெளியை மூடியிருந்தது வெண்பனி
தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி
எம் செவிவழி நுழைந்தது
வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை
சந்தடி ஓய்ந்த தெருவழியே
நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் (ஒரு கடல் நீரூற்றி)அழகிய படிமங்களால் நிறைந்த மழை, வெயில் ஆகிய கவிதைகள்கூட  தனியே மழையையும் வெயி லையும் பற்றியவை அல்ல. அவையும் பெண்ணுடனும் சமூக யதார்த்தத்துடனும் உறவுபடுத்தப்படுகின்றன.
இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வரமுடியாது
நனைந்துகொண்டிருக்கிறது
மழை
எனத் தொடங்கும் ‘மழை’ கவிதை
ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்துகொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெல்லாம்
ஒடுங்கிப்போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை
என முடிகிறது. வெயில் கவிதையின் சில பகுதிகள் வருமாறு:
வெட்டியகற்றப்பட்ட மரம்
விட்டுச்சென்ற வெளியில்
அதிரடியாக
இறங்கிக்கொண்டிருக்கிறது வெயில்…
தாய்த்தேசத்தில் அனாதையாக்கப்பட்ட மகள்
புகலிடம் ஒன்றைத் தேடிப் போகிறாள்
நிழல்களை விரட்டும் பிறிதொரு வெயில்
அவள் பின்னே போகிறது
கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன்
கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு
இரத்தக்கறைகளை அப்படியே விட்டுவிட்டு
‘நஞ்சூட்டப்பட்ட மரம்”, ‘அழிவின் பின்னர்’ ஆகிய கவிதைகள் இயற்கை அழிக்கப்படுவதை மிகுந்த கோபத்துடனும் சோகத்துடனும் பேசுகின்றன. பெண் ணுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிணைப்பை யும் உறவையும் ஃபஹீமாவின் கவிதைகள் மிக நுட்ப மாகச் சித்திரிக்கின்றன. ‘ஊற்றுக்களை வரவழைப்ப வள்”, ‘அவள் வளர்க்கும் செடிகள்”, ‘நிலம்” ஆகிய கவிதைகள் நிலத்தை உயிர்ப்பிக்கும் பெண்களைப் பற்றி மிகுந்த கவித்துவத்துடன் பேசுகின்றன. இந்தக் கவிதைகள் அவரின் இளமைக்கால அனுபவங்களின் வெளிப்பாடு என நினைக்கிறேன். இந்தக் கவிதைகளில் வரும் சிறுமி அவராகவே இருக்கலாம். இயற்கையை ரசிக்கும் உள்ளத்தில் இருந்துதான் கவிதை ஊற்றெடுக் கும். அவள் வளர்கும் செடிகள் ஃபஹீமாவின் சிறந்த கவிதைகளுள் ஒன்று எனலாம். ஃபஹீமாவின் கவிதை களிலே மிகவும் நீளமானது நிலம் என்னும் கவிதை. இதுவும் அவருடைய சிறந்த கவிதைகளுள் ஒன்று எனத் தயக்கமின்றிக் கூறலாம். நிலத்தை உயிர்ப்பித்து, நிலத் துக்கே தன் வாழ்வை அர்ப்பணித்து, அந்த நிலத்தி லேயே அடங்கிப்போன ஒரு பெண்ணைப் பற்றிய ‘காவியம்’ என இதனைக் கூறலாம். இதில் வரும் பெண் அவருடைய அம்மம்மாவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்;. தன் சிறு பராயத்தோடு பிணைந்திருந்த அம்மம்மா பற்றி உணர்வு கொப்பளிக்கும் கவிதைகள் சிலவற்றை ஃபஹீமா எழுதியிருக்கிறார். ‘இரகசியக் கொலையாளி” அதில் முக்கியமானது. அம்மம்மாவின் மரணத்தின் துயர் வழிந்தோடும் கவிதை அது. நிலம் என்னும் கவிதை நிலத்தோடு பிணைந்த பாட்டியைப் பற்றிய சிறுமியின் நினைவுகளாக விரிகிறது. பாட்டி நிலத்துக்கு உயிர் கொடுத்தவரலாற்றையும் அவளது அன்றாட உழைப்புச் செயற்பாடு பற்றியும் பேசுகிறது. அவளது ‘வியர்வையையும் நீரையும் பருகிப்பருகி அவளைச் சூழப் புதிது புதிதாய்” செழிப்படைந்த நிலத்தோடு அவளுக்கு இருந்த பிணைப்பு பற்றிப் பேசுகிறது. கடைசியாக அவளுடை தனிமைத்துயர் பற்றிப் பேசுகிறது.
இறுதியில்,
ஓயாது அழைத்துக் கொண்டிருந்த
அரூபக் குரல் ஒன்றுக்குப் பதில் அளித்து
அவள் போனாள்
புற்களையும் செடிகளையும் வளரவிட்டு
அந்த நிலம்
அவளைப் பத்திரப்படுத்திக் கொண்டது
என முடிகிறது கவிதை.
விழிப்படைந்த பெண்மையின் குரலாகவும், அதி காரத்துக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான குரலாக வும், அன்பு, பாசம், சமத்துவமான காதல் என்பவற்றின் குரலாகவும், இயற்கையின் குரலாகவும் அமையும் ஃபஹீமாவின் கவிதைகள் எளிமையானவை, நேரடியா னவை, அதிக அலங்காரங்கள் அற்றவை. அதேவேளை, படிமச் செறிவு மிக்கவை. இவை இவரது கவிதைகளின் பலம் என்று சொல்வேன். இளம் தலைமுறையைச் சேர்ந்த முக்கியமான ஈழத்துக் கவிஞர்களுள் ஒருவராக ஃபஹீமாவின் கவிதைகள் அவரை அடையாளப் படுத்துகின்றன.
இன்று எழுதும் பெரும்பாலான கவிஞர்களைப் போல் ஒரேவகையான மொழி நடையையே இவரும் கையாள்கின்றார். பன்முகப்பட்ட கவிப் பொருளும் பன்முகப்பட்ட மொழி நடையும் கவிதைக்கு ஒரு பன்முகத் தன்மையைத் தருவன. ஃபஹீமாவின் எதிர்காலக் கவிதை இப்பன்முகத்தன்மையைப் பெற்று தமிழ்க் கவிதைக்கு மேலும் வளம் சேர்க்கும் என்று நம்புகிறேன்.

 

 

நன்றி: