பலி ஆடு தொகுதி பற்றி: தி. ஞானசேகரன்
” போருக்குப்பின்னரான இலக்கியங்கள் மக்களின் மனச்சாட்சியைத் தூண்டி போரினால் சீரழிந்த நாட்டை, சமூகத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்து கின்றது. நமது நாட்டிலும் போருக்குப்பின்னரான பாதிப்புகள், அவல நிலைகள் குறித்த இலக்கியங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
தற்போது சுய தணிக்கைகள் எதுவுமின்றி தமது படைப்புகளை எழுதும் சூழ்நிலை அங்கு உள்ளது. போரில் இடம்பெற்ற தவறுகளை விமர்சிக்கும் எழுத்துக்கள் வருகின்றன. போராளிகள் சிலர் வெளிப்படையான தமது எண்ணங்களை எழுதுகின்றனர். ” -இவ்வாறு கடந்த 4 ஆம் திகதி அவுஸ்திரேலியா – கன்பராவில் நடைபெற்ற கலை இலக்கியம் – 2016 நிகழ்ச்சியில் உரையாற்றிய ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் ஞானம் இதழின் ஆசிரியருமான மருத்துவர் தி. ஞானசேகரன் உரையாற்றினார்.
[……]
ஞானம் ஆசிரியரின் பவளவிழாவை முன்னிட்டும் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் கன்பரா, மெல்பன், சிட்னி ஆகிய நகரங்களிலுமிருந்து பல கலை, இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.
“ஈழத்து இலக்கியத்தின் இன்றைய நிலை “ என்ற தலைப்பில் தி. ஞானசேகரன் மேலும் உரையாற்றியதாவது:
” உலக அரங்கில் போர் முடிந்த பின்னர், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை விபரிக்கும் இலக்கியங்கள் பல வெளிவந்துள்ளன. இத்தகைய இலக்கியங்களில் வியட்னாம் யுத்ததிற்குப்பின்னர் வெளிவந்த இலக்கியங்கள் முக்கியமானவை. THE SARROW OF WAR என்ற நாவல் வட வியட்னாம் போராளியால் எழுதப்பட்டது. VIETNAM: THE TEN THOUSAND DAY WAR என்ற நாவல் MAC LEAR என்பவரால் எழுதப்பட்டது. THE GIRL IN THE PICTURE வியட்னாம் போரில் அகப்பட்டு குண்டுத்தாக்குதலினால் எரிகாயங்களுடன் உடம்பிலே உடுப்புகள் ஏது மின்றி ஓடிவரும் 7 வயதுச் சிறுமி பற்றிய நாவல். அவள ஓடிவரும் காட்சியை உலகு எங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் திரையில் பார்த்தார்கள். அதன்பின்னர் மேற்குலக மக்களின் அபிப்பிராயம் போருக்கெதிராக மாறியது. போர்நிறுப்பட்டது.
அகதி நிலை, சிறை வாழ்க்கை, கணவன்மார்களை இழந்த கைம்பெண்கள், தாய்தந்தையரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த தாய்தந்தையர், ஊனமுற்ற போராளிகளின் வாழ்க்கைப் போராட்டம், போராளிப் பெண்களின் பிரச்சினைகள், சொந்த நிலங்களை இழந்து பிறிதோர் இடத்தில் வாழ நேரிடும் அவலம், இராணுவப்பிரசன்னம், போரின் பின்னர் சமூகத்தில் ஏற்படும் சமூகச் சீரழிவு, பண்பாட்டுச் சீரழிவு போன்றவை இன்றைய ஈழத்து இலக்கியச் செல்நெறியின் பாடு பொருளாகியுள்ளன. இவை போருக்குப்பின்னரான இலக்கியங்கள்.
ஏராளமான சிறுகதைகளும் கவிதைகளும் சிலநாவல்களும் வெளிவந்துள்ளன.
குறிப்பாக அதிக கவிதைத் தொகுதிகள் போருக்குப் பின்னரான விடயப் பரப்பைக் கொண்ட தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
கருணாகரன் யுத்தகளத்தில் போராளியாக இருந்தவர். தற்போது அவரது அந்த நிலைமை மாறி போரின் சரி பிழைகளை விமர்சிக்கும் கவிதைகளை எழுதிவருகிறார். யுத்தம் பற்றிய சிறந்த ஆவணமாக இவரது பலி ஆடு, எதுவுமல்ல இதுவும் போன்றவை திகழ்கின்றன.
[……………….]
நன்றி: ரஸஞானி – மெல்பன்
Excerpt from: தமிழ்முரசு அவுஸ்திரேலியா