சல்வீனியா
பஷீரின், மஜீத்திடம் ஒன்றும் ஒன்றும் எத்தனையென ஆசிரியர் கேட்கிறார். அவன் கொஞ்சம் பெரிய ஒன்று என்கிறான். பிரிந்து கிடக்கும் இரண்டு ஆறுகள் சேர்ந்து பெரிதாகுவதை ஊர்க் கோடியில் பார்த்திருக்கிறான் மஜீத். பஷீரின் கதைகளில், பிரிந்தும் பிளந்தும் கிடப்பவை பிணைந்துகொள்ளும் இரசவாதம் நிகழ்கின்றது. பஷீரின் சிறுவர்கள் தனியான உடைந்த மீமொழியும், பார்வையுமுள்ளவர்கள். அவர்களுடைய உலகில் கோணல்களும் அழகாகிவிடுகின்றன. ஆனால் அம்பரய ’சுமனே’ சிறுவனாகவும், வளர்ந்தவனாகவும் இருக்கிறான். ஊராருக்குக் கோணலாகவும் ஊராருடன் எதிர்வினைபுரிபவனாகவும் இருக்கிறான். அவனது சிந்தனை, செயலில் முதிர்ச்சியும் வயதில் சிறியவனாகவும் இருக்கிறான். சுமனேயைப் பஷீரின் சிறுவர்களிடமிருந்து நகர்த்தி இன்னொரு தளத்திற்குக் கொண்டுசெல்வது அவன் கிராமத்தினருடன் கொள்ளும் முரணும் நட்பும்தான். அவனுக்கு நண்பர்கள் என யாருமில்லை. நோனாவின் தோட்டத்தில் தென்னங்கன்றுகளின் ’பூரானை’ உடைத்துச் சாப்பிடுகிறான். நோனா கோபத்துடன் விசாரித்தால் ‘நான் உன்னிடமிருந்து கடைசி வரையும் களவெடுக்க மாட்டேன்’ என்கிறான். குணபால மாத்தையாவின் மாட்டின் கயிற்றை வெட்டிவிடுகிறான். குணபால சாத்தானுக்குப் பிறந்தவனே என்று திட்டினால் அவன் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ‘நான் குளிக்கப் போனேன். வாளியில் கயிறு இல்லை. உனது மாட்டின் கழுத்தில் கயிறு இருந்தது. அது மாட்டிற்குத் தேவையில்லை அதனால் வெட்டினேன்’ என்கிறான். சுமனே சிறையிலிருந்து திரும்பிவரும் போது குணபால சொல்கிறார் ‘இனி இந்த ஊரில் மாடுகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை’. சுமனே தன்னைத் தானே வழிநடத்திச் செல்லும் இயல்பில் இருக்கிறான்.
தினவாழ்விற்கும், ஒரு வேளை சாப்பாட்டிற்குத் திண்டாடும் சூழலில் அவன் தன் நல்வாய்ப்பை நம்பி ஆம்பல் தேடி அலைகிறான். நல்வாய்ப்புத்தேடி கடற்கரை முழுவதும் அலைந்து திரிந்தாலும் அதை மட்டுமே நம்பியவனல்ல. ஆம்பல் ஒரு முரணாக அவன் முன்னே இருக்கிறது, அதுவோ அவனுக்கு மிக இலகுவில் பணம் கிடைக்கும் வழியாகவும் இருக்கிறது. விலையான ஆம்பல் தேடி கடற்கரையில் அலைந்து திரியும் சுமனேயை ஊரார் அம்பரய என்று பகடி செய்கின்றனர். அழுகிய வாசனையும் சாணம்போன்ற வழுவழுப்புமாக இருக்கும் ஆம்பல் ஒருமுறை அவனுக்குக்கிடைக்கிறது. ஆனால், அதன் அழுகிய வாசனையால் அவனால் அதை ஆம்பல் தானாவென்று சந்தேகித்து அதனை நண்பனும் ஊரின் பெரும் ஏமாற்றுக்காரனுமான மார்டீனிடம் கொடுத்து விடுகின்றான். ஆம்பலின் ஒரு சிறுதுண்டு கிடைத்தாலும் வாழ்வின் சிறுதுரும்பைப் பற்றிப் பிடித்து ஏறிவிடும் மூர்க்கத்துடனும் அலையும் அவனுக்கு, ஆற்றில் மலிவான மீன்களே கிடைக்கின்றன. நல்ல விலையான மீன்களைப் பிடிக்க வலையோ படகோ அவனிடமில்லை. கிடைக்கும் வேலைகளைச் செய்தாலும் ஒரு வேளை பசிக்குச் சாப்பிடவே வருமானம் போதவில்லை. கொலைகாரனின் மகனாக, நல்வாய்ப்பு அற்றவனாக அவன் ஊரிலிருந்து சாராயத்தை நகரிற்கு மறைவாக எடுத்துச் செல்கிறான்.
குறைந்த சொற்களில் கோட்டுச் சித்திரம் போல கிராமத்தவர்கள் அறிமுகமாகின்றனர். குரோதமும், அன்பும் கொண்டவர்கள். அவன் நல்வாய்ப்பைப் பற்றிக் கொள்ளும் போது சண்டைக்குவரும் கிராமத்தார் அவன் அடிபட்டுத் துவளும் போது உதவிக்கு முதல் ஆட்களாக வந்து நிற்கிறார்கள். அவனால் கிராமத்தவர்களைப் விளங்கிக் கொள்ள முடிவதில்லை. கிராமம் விளங்கிக் கொள்ளப்பட முடியாத புதிராகத் தன்னுள்ளே பிளவுகளும், குரோதமும் நிறைந்ததாகவும் சேர்ந்தும் பிளந்தும் கிடக்கிறது. யதார்த்தவாதக் கதை சொல்லல் ஒரு லட்சியவாதத்தை அவன் முன்னே வைக்கிறது. கிராமத்துச் சிறுவனின் பெருவிருப்பாக ஒரு அழகிய வீடும் துண்டுநிலமுமிருக்கிறது. நாவல் லட்சியவாதத்தை முன்வைத்தாலும் சுமனேயை ’லட்சியவாதம்’ வழிநடத்திச் செல்லவில்லை. அவனே அவனுக்கு ஒளியாக இருக்கிறான். அவனைப் புரிந்து கொள்வதும் அவனோடு உறவாடுவதும் சிக்கலாக இருக்கிறது. பசிக்கும்போது நோனாவின் தோட்டத்திலிருந்து திருடிக் கொள்கிறான்; கேட்டால் மேலதிகமாக இருப்பதை எடுத்ததாகச் சொல்கின்றான், மீன்களைத் திருடுகிறான், சாராயம் கடத்துகிறான், சிறைக்குப் போகிறான், சித்தப்பாவைக் கொலை வெறியோடு துரத்துகிறான், தங்கைகளுக்கு நல்ல அண்ணனாகவும் இருக்கிறான், எல்லாப் பக்கங்களும் கூரான கத்தி போல பளபளப்புடனும் கூர்மையுடனுமிருக்கிறான்.
சிறைச்சாலை அதிகாரிகளிலிருந்து, நாட்டின் பிரதமர் வரை மிக நல்லவர்களாக இருக்கிறார்கள். நல்ல நிர்வாகமுள்ள நாட்டில் உதவிகள் மிகக் கடைக்கோடிகிராமம் வரையும் வேர்பிடிக்கிறது. பிரதமர் குறித்த சித்திரிப்புகளைப் பார்த்தால் அவரைப் ‘பிரேமதாச’ என ஊகித்துக் கொள்ளலாம். இது வாசிப்பின் குதர்காமான அனுமானம்தான். சிறையிலிருக்கும் சுமனேயின் செயலும், பேச்சும் பிடித்துப்போகும் சிறையதிகாரி அவனுக்குப் பெரியமீன்களைப் பிடிக்க படகும், வலையும் கிடைக்க ஏற்பாடு செய்கிறார். அவருடையை உதவிகளை பார்த்து சுமனே இவற்றுக்கெல்லாம் உங்களுக்கு எப்படி மறு உதவிசெய்யப் போகிறேன் என்கிறான். ’நீ இங்கு திரும்ப வாராமலிருந்தலே பெரிய உதவி தான்’ என்கிறார். அவன் ஒருபோதும் அங்கு திரும்பிச் செல்லவில்லை. சிறை அவனுடைய சீற்றத்தை எல்லாம் உறிஞ்சிவிடுகிறது. வன்முறையற்ற சிறை, நல் நோக்கங்களையும், சீர்திருத்தங்களையும் முன்வைக்கும் சிறையாகவும் இருக்கிறது. ஆனால், அது எல்லோரையும் சுமனே போல உருமாற்றி விடுவதில்லை.
அம்பரய என்ற மிகச் சிறிய நாவலை வாசித்து முடித்ததும் இதனை எப்படி வகைபடுத்திக் கொள்வதெனச் சிறு குழப்பம் வந்தது.கதை அதிக சிக்கலில்லாத நேர்கோட்டில் செல்கிறது. மொழி கிராம வாழ்வை மிக நுட்பமாகச் சித்திரிக்கின்றது. குறைந்த சொற்களில் பிருமாண்டமான கிராமம் உருப்பெறுகிறது. அதன் இயல்புகளை, செயல்களை, பகடியான பேச்சுகளையும் நாவலில் நுட்பமாக வாசித்துக் கொள்ள முடியும். நாவல் அதன் குறைந்த சித்திரிப்புகளிலும் நுட்பமான கூறு முறையிலும் தனித்துவமாக இருக்கிறது.அதை மொழிபெயர்ப்பாக உணர்ந்து கொள்ள முடியாதவளவு தேவாவின் மொழிபெயர்ப்பு சரளமாக இருக்கிறது. தமிழ்நாவல் போன்றே வாசித்துக் கொள்ள முடியும். அதன் களமும், மனிதர்களும் நாம் மிக நெருக்கி வாசித்துக் கொள்ளும் விரிவுடனிருக்கிறது.
அம்பரய / சுமனே என்ற இந்தச் சிங்களப் கதாபாத்திரமும், மீன்பிடி செய்யும் ஆற்றோரக்கிராமமும் தமிழுக்குப் புதிதானவை அல்ல. ஆனால், அவற்றின் தனித்துவமான தன்மை இனவாதத்தின் விஷ நாக்குகள் தீண்டாத ’புனிதவுருக்கள்’ என்பதாக உருவாக்கப்பட்டிருப்பதே. இன்னொரு பண்பாட்டுத் தளத்தில் நாவல் கனதியாக இருக்கிறது. கிராம வாழ்வின் கூடிவாழும் தன்மையை, அதன் குரோதமும், அன்பும் படரும் மேன்மையைப் பேசுகின்றன. கிராமம் மீண்டு செல்ல நினைக்கும் கனவின் வழித்தடமாகவும் இருக்கிறது. இனவாதம் போரலையாக சிறுபான்மையினங்கள் மீது கொடூரமாக ஆதிக்கம் செய்யத் தொடங்கிய காலத்தினை புனைவினூடு சொல்லும் போது அதன் விஷ நாக்குகள் தீண்டாததாக கிராமம் நம் முன்னே விரிகிறது. இனவாதத்தின் பேரலையில் சிதைத்திருக்கும் சமூகச் சட்டகங்கள், கிராமிய வாழ்வும், அதிகாரத்தின் நெருக்கமான கண்கானிப்பில் இருக்கும் நம் சூழலிலிருந்து இந்த நாவலை வாசிப்பதினூடு நாம் இனவாதம் தீண்டாதவொரு காலத்தை வாசித்துக் கொள்ளலாம். நாவல் சொல்லும் வாழ்வை மறுத்தவொரு காலத்தில் வாழவே நமக்கு வாய்த்திருக்கிறது. அதுவே பேரழிவான போரை நமக்குக் கொடுத்திருக்கிறது.
சிங்களத்திலிருந்து தமிழுக்கு மிகக் குறைவான படைப்புகளே மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. இரண்டு மொழிச் சமூகங்களும் கருத்துக்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட முடியாதவொரு சிடுக்கான சூழலிலேயே இந்த மொழிபெயர்ப்புகள் அவசியமானதாக இருக்கின்றன. சல்வீனியா போல இனவாதத்தின் அடரிலைகள் மூடியிருக்கும் பொதுவுரையாடல் வெளியை இனவாதக் கருத்துகளே நிரப்பியும் கொள்கின்றன. அம்பரய போன்ற நாவல்களை நாம் இன்னும் வலிமையாக மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. புனைவுகளை மொழிபெயர்ப்பதனூடாகவும் அவற்றை உரையாடுவதனூடாகவும் இனவாதச் சிக்கல்களுக்கான பன்முகவெளியைத் திறந்து கொள்ளலாம். சுய வரலாற்றுப் பெருமிதங்களிலும், போலிக் கற்பிதங்களிலும் திளைத்திருக்கும் பொது உரையாடல் வெளியில் சுமனோயைப் போன்ற தன்னைத் தானே வழிநடத்திச் செல்லும் கதாபாத்திரத்தின் வருகையே தேவையாயிருக்கிறது. அவனாலேயே இனவாதச் சல்வீனியாவை விலத்தி நல்ல கொழுத்த தம்பலையாவைப் பிடித்துக் கொள்ள முடியும்.
0
நன்றி: தர்மு பிரசாத், புதிய சொல்