07 May

ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்

இந்த மிக எளிமையான வரியில் ஆழம் நிறைந்த வலியை பதிவு செய்திருக்கும் என் சகோவின் (என் சகோதரன் என்று தன்னிச்சையாக நான் அழைக்கும் அகிலனின்) இந்தப்புத்தகத்தை எந்த வித வண்ணத்தின் வழி பரிதாபத்தையும் எதிர்நோக்காத ஒர் ஆவணப்படத்தின் எழுத்துருவாக்கமாகவே உணர்கிறேன்.

மதிப்புரை வழங்கும் அளவிற்கு நான் என்னை உயர்த்திக்கொள்ளாத(சரியான வார்த்தையா தெரியவில்லை) இந்த சூழலிலும், இந்த பதிவை ஒரு வாசகப்பதிவு என்றும் அந்நியப்படுத்த ஏலாது. மேலும் என் சகோவிற்கும் (மற்ற ஈழநண்பர்கள் பலருக்கும்) எனக்கும் இடையில் எளிதில் கடக்க முடியாத எப்பொழுதும் நிறைந்திருக்கும் நிழல்களின் சில அடையாளங்களை அறிய ஏதுவாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது.

(இந்த பதிவின் உண்மைத்தன்மை அறிய விரும்புவோர்க்கு ஒரு தகவல். இன்னொரு மரணத்தின் வாயிலில் நானே நேரில் சகோவிடம் கேட்டுப்பெற்ற இந்த புத்தகத்தில் அவர் கையெழுத்திடவும் இல்லை. நான் பணம் தரவுமில்லை)

 

ஒவ்வொரு பகுதி தொடங்கும் பொழுதும் அந்தப்பகுதியில் முன்னிலை படுத்தப்படும் உயிரின் மரணம் இறுதியில் அறிவிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. மேலும்

போருக்கும் மரணத்திற்குமான தொடர்பும் புதிதல்ல.

ஆயினும் இங்கு எளிமையான ஒரு மனிதனின் அண்ணன் பாட்டி சித்தி தந்தை தோழி காதலி நாய்குட்டி பூனை இன்ன பிற உறவுகளின் / உற்ற உயிர்களின் வாழ்க்கைக்கும் போருக்கும் உள்ள அதீதத்தொலைவும் அந்த தொலைவை மிகச்சில நொடிகளில் வென்றுசெல்லும் செல்களையும் பற்றிய உண்மைகளோடும் தீராத அமைதியோடு அழுகுரல்களையும் பதிவுசெய்திருக்கிறது இந்த புத்தகம்.

 

குறுக்காசும், பெடியல் மற்றும் ஆமிக்காரர்கள் எல்லாரும் போரின் சாட்சிகளாக வந்துபோகிறார்கள்.அதாவது இங்கு சொல்லப்படும் அனைத்து மரணத்திற்கும் போர் காரணம் எனபதை மட்டும் சொல்லிவிட்டு போருக்கு யார் காரணம் என்ற கேள்வியை காலத்தின் கையிலேயே விட்டுவிட்டுத் தொடரும் இந்த எழுத்துக்களின் மௌனம் நம்மை தடுமாறவே செய்கிறது.

 

இந்தப்புத்தகத்தில் உள்ளது போல குண்டு விழுந்ததை கூட ‘நேற்று இரவு குண்டு விழுந்தது’ என்று இயல்பாக எழுத முடியுமா என்பது அதிர்ச்சியாய் தோன்றுகிறது. அகிலனைப்போன்று போருக்கிடையிலே வாழ்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு எழுதமுடியும் என்றும் இது போரின் மிகக்குரூரமான முகம் என்றும் சற்றே நிதானிக்கும் பொழுது அவதானிக்கமுடிகிறது.

 

அதே நேரம் போர் சூழலிலே பிறந்து வளர்ந்த மனிதனுக்குள்ளும் நகைச்சுவை உணர்வு உள்ளது என்பதை பதிவு செய்ய மறக்கவில்லை அகிலன். முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகம் பதற்றத்தோடு கேட்டறிந்த ‘தந்திரோபாய பின்நகர்வு’ என்ற சொற்றொடர் இந்த புத்தகத்தில் பயன்படுத்திய இடத்தில் வாய்விட்டு சிரிக்க வைத்ததை மறக்க ஏலாது. மற்றும் ‘தொடங்கீற்றான்ரா சிங்கன்’

 

இந்த புத்தகத்தின் மூலம் ஈழ வாழ்வை நெருங்கிபார்க்க முடிந்தது என்பதில் நிறைவும் அதை வேளை துர்மரணங்கள் ஏற்படுத்தும் வெறுமையும் ஒரே நேரத்தில் உணர்வது சற்றே எதிர்கொள்ள இயலாத கணத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இங்கு மரணத்தின் வாசனை யின் உள்ளீடுகளை அதிகம் பதிவு செய்ய விருப்பமில்லை.அதன் மீதான என் மீ-பார்வைகளை மட்டுமே பதிவுசெய்கிறேன்.மற்றவை படித்து அறியவும்.

 

மரணத்தின் வாசனை என்ற தலைப்பு முதலில் என்னை அசௌகரியப்படுத்தியது. அதற்கு அகிலன் காரணமல்ல.இங்கே பலவார்த்தைகளை நம் வியாபார நோக்கிற்காக அதன் அர்த்த ஆழங்களை பற்றி சிறிதும் அக்கறையற்று வெறும் உவமையாகவும் ஈர்ப்புக்காகவும் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு முலை,யோனி,மரணம்,ரத்தம்,வெளி,பிரபஞ்சம் இன்னபிற.

 

ஈழம் குறித்து பலரும் எழுதுகிறோம். அது கேள்வி ஞானத்தால் ஆனது. வாசனை என்பது நேரில் சந்தித்த வாழ்க்கை என்பதன் தெளிவை ஏற்படுத்துகிறது. உண்மையில் இந்த புத்தகம் ஒரு சிறுவனின் வாக்குமூலத்தின் வழி ‘மரணத்தின் வாசனை’ என்ற இரண்டு வார்த்தைகளின் ஆழத்தை நோக்கி பயணிக்கிறது.

 

ஈழம்வாழ்வின் பகல் இரவை அறிய எண்ணுபவர்களுக்கு இந்தப்புத்தகம் மிகவும் நெருக்கமானதாக அமையும் என்றே கருதுகிறேன்.

நன்றி : இராவணன்