30 Apr

அம்பரய-தர்மினி

 நாவல் விமர்சனம்

-ஒரு மீன் அகப்பட்டதும் அவனுக்குச் சந்தோசமாக இருந்தது.ஒரு முழுக்கூடையை நிரப்பச் சின்னதொரு மீன்–

‘அம்பரய’ நாவல் சுமனே என்ற சிறுவனின் சாதுரியங்கள், குழப்படிகள், பாட்டிக்கும் தங்கைகளுக்குமான நாளாந்த உணவுக்காக அவன் படும் பாடுகளும் மட்டுமில்லை. 1970களில் எழுதப்பட்ட இக்கதை 2017ல் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. ஓர் ஓவியத்தை வரைந்தது போன்ற கலை, இயற்கையும் எளிமையும் எழுத்தின் போக்கில் நகர்கின்றன.தேவா அவர்களின்  மொழிபெயர்ப்பும் இயல்பான மொழிப் பாவனையும் அந்த வாழ்வை அறிந்த அனுபவமும் அந்நியத்தன்மையற்ற வாசிப்பைத் தருகின்றன எனச் சொல்லலாம்.

இலங்கையின் மீனவக்கிராமமும்  ஒரு சொந்த வீட்டுக்கு ஏங்கும் ஏழைச் சிங்களக் குடும்பத்தின் எளிய நம்பிக்கைகளும் ஆசைகளுமாக மனிதர்களின் ஒற்றுமையும் பொறாமையும் கொண்ட கிராமத்தின்  கதை. அதே போல, அக்காலகட்டத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீடமைப்பு அபிவிருத்தித்திட்டத்தால் ஏழைகள் பலனடைவது என்பது ஒரு நாவலுக்கான கதையாகியுள்ளது என்பதையும் உணரலாம்.

சுமனேயினால் நாளாந்தக் கூலிவேலைகளாலும் ஆற்றை நம்பி மீன்களைப் பிடித்தும் வாழ்க்கைக்குத் தேவைான அளவு உழைக்கமுடியாத போது அம்பரய (கடலாம்பல்: நறுமணத்தைலங்கள் தயாரிப்புக்கு பயன்படும் விலையுயர்ந்த பொருள். திமிங்கலத்தின் வயிற்றில் இரசாயன மாற்றத்துக்குள்ளாகி வெளியேறும் கழிவு) தேடுவது அவனுக்கு பணக்காரனாகிவிடுவதற்கான நம்பிக்கையைத் தருகின்றது.

முதல் கோழியின் கூவலும் பக்கத்துக்கிராமத்துப் பள்ளியின் தொழுகைக்கான அழைப்பும் கேட்கும் நேரம் உறக்கத்திலிருந்து விழித்துக் கடற்கரைக்கு ஆம்பல் தேடப் புறப்படுபவனைப் பார்த்துப் பாட்டி, ‘சுமனே எங்கே போகின்றாய்? பேய்கள் மரத்திலேறும்நேரமல்லவா இது… திடீரென்றுபணக்காரனாக நினைக்காதே,வேண்டுமென்றால் ஓர் அதிர்ஷ்ட இலாபச் சீட்டொன்றை நாளை வாங்கு’  என்கிறார்.

‘அதற்குப் 10 ரூபாய் யார் கொடுப்பார்கள்?’ என்று கேட்டுக்கொண்டே ஆம்பல் தேட நடக்கிறான் சுமனே.

கடற்கரையோரமாக வந்து ஒதுங்கும் அம்பரயவைக் கண்டெடுத்துப் பெரும் விலைக்கு விற்கலாமென்று அதைத் தேடப்போவதையும் ஒரு வேலையாகக் கொள்கிறான் சுமனே. அதைக் கேலி செய்யும் கிராமத்தவர்களால் ‘அம்பரய’ என்ற பட்டமும் சுமனே பெறுகின்றான். தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில், ஏதாவது நல்லது எதிர்பாராமல் நடந்து விடாதா என்ற எதிர்பார்ப்பு. அன்றாடத் துயரங்களையும்  தீராப் பசியையும் தணிப்பதற்கும் நாட்களைக் கழிப்பதற்குமாக அதிர்ஷ்டமொன்று வரும் என்ற நம்பிக்கை அச்சிறுவனை உற்சாகமாய் இயங்க வைக்கின்றது.

நோணாவின் தோட்டத்தில் இருக்கும் தேவைக்கு அதிகமான தேங்காய்களைத் பிடுங்குவதைப் பிழையாக நினைக்காதவன், மாட்டுக்குக் கயிறு எதற்கு?குளிக்க வாளிக்குக் கட்ட எடுத்தேன் என்பவன், சகோதரிகளைப் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துபவன், பணத்தேவைக்காகக் கசிப்புக் கடத்துபவன், ஊருக்குள் வந்த புதிய மனிதனின் காசைக் காப்பாற்றுபவன்,  உறவினர்கள் மற்றும் ஊரவர்களால் குழப்படிக்காரன் என்று ஒதுக்கப்படுபவன் என்று  எழுதப்பட்டதைப் படிக்கும் போது, வாசகர்களுக்கு துடியாட்டக்காரனான பொடியன் சுமனே மீது பச்சாத்தாபம்  ஏற்படும். அவனுக்கு மீனாம்பல் கிடைக்கவேண்டுமென்று நாமும் உளமார ஆசைப்படுவோம்.

சல்வீனியாக் கொடிகள் படரும் ஆறு, கடல், கபூக்கற்களையுடைய நிலம், கிணறு, பேயோட்டுதல், மந்திரவாதி, தென்னைகள், பலாமரங்கள், ஆட்களுக்குப் பட்டம் தெளித்தல், சுவரில் கிறுக்கி அவமானப்படுத்துதல், ஒரு மரத்துக்காகச் சண்டை பிடித்துச் சகோதரனைக் கொலை செய்தல்,மழைக்கு ஒழுகும் பத்தியில் உறங்கமுடியாமல் அயல்வீட்டிற்குப் போவது,ஒரு துண்டு நிலமும் சொந்த வீடும் கனவாயிருப்பது, கறி இல்லாத போது பக்கத்துவீட்டுக்குக் கிண்ணத்தைக் கொடுத்தனுப்புவது, நன்மையோ தீமையோ குடிசை நிறைந்து விடுமளவு கூடிவிடுகின்ற சனம் என்று எழிலான எளிமையான கிராமம் தான் திக்கலை.

13 மற்றும் 14 வயதான இரு தங்கைகளும் வறுமையிலும் மகிழ்ச்சியும் உற்சாகமுமாக வாழ்கின்ற கெட்டிக்காரிகள்.பாட்டி சுவாரசியம் மிக்க மனுசி. காட்டெருமையைக் கூடக் குரலை உயர்த்தாமல் துரத்தும் சாமர்த்தியக்காரி எனச் சுமனேயால் பாராட்டப்படும் புத்திசாலி.  குற்றவாளியாக வெலிக்கடைச் சிறைக்குப் போன சுமனே சிறையதிகாரியின் கடிதத்தோடு சொந்தமாக வள்ளத்திற்கும் வலைக்கும் சொந்தக்காரனாகிவிடுவது புனர்வாழ்வு. பிரதமரின் வீடமைப்புத் திட்டத்தில் ஒரு துண்டு நிலம் பெறுவதென்றால் அவனுக்கு 18 வயதாகவில்லை. பாட்டிக்கோ 75 வயதாகிவிட்டது. தந்தை கொலைக்குற்றத்தில் சிறை வாழ்வு. தாய் உயிரோடு இல்லை. ஆனாலும் கூர்ந்த அறிவுடைய சுமனே பிரதமருக்குத் தனக்கு வீடு கட்ட உதவும்படி கடிதம் எழுதுகின்றான். அது போய்ச் சேர்கின்றது.கடைசி நேரத்தில் சினிமா போல காணி பங்கிட உத்தரவும் கிடைக்கின்றது. பல இடைஞ்சல்களுக்கு நடுவில் சுமனேயும் தங்கைகளுமாகக் கிணறு வெட்டுதல்,நிலத்தைச் சமப்படுத்துதல், சுவர்களுக்குச் சாந்து எடுத்து நிறந்தீட்டல்…என்று விளையாட்டுப் போல வீட்டைக்கட்டி முடித்துவிடுகின்றனர்.       கெட்டநாற்றமுடைய அம்பரய நறுமணங்கமழும் திரவியமாகின்றதைப் போல; கிராமத்தின் முரட்டுச்சிறுவன்,யாருடனும் இடக்குமடக்காகவே கதைப்பவன், சிறைக்குச் சென்று வந்தவனான சுமனே. பொறுப்பான அண்ணனாகவும் தன் நுண்ணறிவால் நிலத்தையம் வீட்டையும் உரிமை கொண்ட அரசாங்கத்தின் பாராட்டைப் பெற்று உறவினர்களதும் ஊரார்களினதும் அன்பைப் பெற்று அம்பரய என்ற கேலிப் பெயருக்குப் பொருத்தமாகிவிடுகின்றான்.

பிரதமர் வந்து குறைந்த செலவில் அழகான வீடு என்ற பாராட்டுக்கும் ஆளாகின்றான். வெற்றிலை கொடுத்துப் பிரதமரை வரவேற்கப் பரபரப்பாக ஆயத்தம் செய்வதும் குக்கிராமங்கள் வரை அரசாங்கத் திட்டங்கள் சரியாக முறையாக நிறைவேறுவதும் என்று படிக்க மகிழ்ச்சியைத் தரும் சம்பவங்கள். எழுபதுகளில் தான் இலங்கையில் சிங்கள இளைஞர்களது ஜே.வி.பி கிளர்ச்சியும் வடக்கு-கிழக்கில் தமிழ் இளைஞர்களது எழுச்சியும் ஏற்பட்டன. அம்பரய நாவலும் எழுபதுகளில் இலங்கையில் வெளியாகிய நாவல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ‘மதிப்புமிக்க மனிதர்’ என்ற வார்த்தை பிரதமரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கதையில் ஓரிடத்தில் படித்த போது ஆசையாகவே இருந்தது. ஓர் இலக்கியப் பிரதியில் நாட்டின் பிரதமரை மதிப்பு மிக்க மனிதர் என எழுதப்பட்டிருக்கிறதென்றால், அது எப்பேர்ப்பட்ட காலம்?

அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்திற்கு விளம்பரக் கையேடு போலவும் அக்காலத்தில் இந்நாவல் பயன்பட்டிருக்கலாம் என்ற என் வாசிப்பு நினைக்க வைத்தது. இவையெல்லாம் தவிர்த்து, தொலைவில் எங்கோ இருக்கும் ஒரு சிங்களக் கிராமத்தின் வாழ்வைத் தமிழ் வாசகர்கள் அறிய அழகான கதையொன்று தான் அம்பரய.