நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்குகையில், என்னுடன் வேலை செய்யும் சக சிங்கள நண்பர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. ஒருவேளை சொல் மயக்கம் அல்லது உச்சரிப்பு காரணமாக அவர்களுக்கு விளங்காமல் இருந்திருக்கலாம்.
’இலங்கையைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளரான உசுல. பி. விஜய சூரிய ஆங்கிலத்திலேயே அதிகமும் எழுதியவர். அம்பரய 1970 களில் இலங்கையில் வெளியிடப்பட்டது. இதைத்தவிர அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லை.
அதே போல ஆங்கில வழி மூலம் தமிழிற்குக் கொண்டு வந்தவர் தேவா. தேவா சுவிஸ் நாடைச் சேர்ந்தவர் என்பதைத்தவிர அவர் பற்றிய தகவலும் தெரியவில்லை. இவரது மொழிபெயர்ப்பில் ஏற்கனவே ’சைனா கெய்ரெற்சி’ எழுதிய ‘குழந்தைப் போராளி’ சுயசரிதையை வாசித்திருக்கின்றேன்.
இவை ஒன்றுமே இந்த நாவலுக்குத் தேவையற்றவை என்பதுமாப்போல் அற்புதமான மொழிபெயர்ப்பு, ஆற்றொழுக்கான நடை, எந்த இடத்திலும் வாசிப்பின் ஓட்டத்தை தேவாவின் மொழிபெயர்ப்பு தடை செய்யவில்லை.
ஒரு இடத்தில் இந்த நாவல் ‘அம்மாறை’ என்ற இடத்தைப் பற்றிச் சொல்கின்றதோ எனவும் ஐயுற்றேன். இதற்கு ’பாகம் 6’ இல் விடை கிடைக்கின்றது.
அம்பரய (ஆம்பல், மீனாம்பல்) என்பது திமிங்கிலத்தின் ஒர் கழிவுப்பொருள். கெட்ட நாற்றம் வீசும் அதிலிருந்து உலகின் விலை உயர்ந்த வாசனைத் திரவியத்தைத் தயாரிக்கின்றார்கள். இந்த அம்பரயவைத் தேடி கடற்கரை எங்கும் அலையும் சுமனே என்பவனைப் பற்றிய கதைதான் ’அம்பரய’. குழூக்குறியாக சுமனேக்கும் அந்தப் பெயர் அமைந்துவிடுகின்றது.
சுமனே பதினாறு வயது நிரம்பிய சிறுவன். தாய் இறந்துவிட்டார். தந்தையார் ஒரு பலா மரத்துக்கான சண்டையில் தனது சகோதரனைக் கொன்றுவிட்டு வெலிக்கடை ஜெயிலில் இருக்கின்றார். சுமனே தனது பாட்டியுடனும் – சிரியா, றூபா என்ற இரு தங்கைமார்களுடனும் வாழ்ந்து வருகின்றான்.
பாட்டிக்கு நான்கு மகன்மார்கள். தந்தையை ஜெயிலில் இருந்து எடுப்பதற்கான வழக்கிற்குச் செலவு செய்வதற்காக தமது வீட்டை இன்னொரு சித்தப்பாவிற்கு விற்றுவிடுகின்றான் சுமனே. அந்த வீட்டிலேயே ஒரு பத்தி இறக்கி அங்கேயே இவர்கள் நால்வரும் வாழ்கின்றார்கள்.
சுமனே குடும்பத்திற்கு சாப்பாடு போடும் உழைப்பாளி. மீன் பிடிக்கின்றான், கூலி வேலை செய்கின்றான். எத்துனை இடர் வந்த போதும் தங்கைமாரின் கல்வியில் அக்கறை கொள்கின்றான். ஒரு குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் சிறுவனாக, குழப்படிப் பையனாக, சண்டியனாக, குறும்புகள் செய்பவனாக, கசிப்பு விற்று ஜெயில் தண்டனை பெறுபவான பல அவதாரங்கள் எடுக்கின்றான் சுமனே.
பாட்டிமாருக்கு பகலில் கண் தெரிவதில்லை. ஆ.. ஊ என்று கத்துவார்கள். இரவு வந்துவிட்டால் கண்பார்வை அதிகமாகிவிடும். பேப்பர் படிப்பார்கள். ரிவி பார்ப்பார்கள். யாராவது காதல் செய்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். அப்படிப்பட்டதொரு பாட்டி சுமனேக்கு வாய்த்து விடுகின்றாள்.
இடையிடையே நகைச்சுவை இழையோடும் விறுவிறுப்பான சம்பவங்களைக் கொண்டது இந்நாவல்.
ஒரு இடத்தில் ஊரான் ஒருவனின் மாட்டின் கயிற்றை அறுத்துவிட்டு, ‘நான் கிணற்றடிக்கு குளிக்கப் போனேன். கிணற்று வாளியில் கயிறு இல்லை. உனது மாட்டில் கயிறு இருந்தது. அதனால் அறுத்தெடுத்தேன்’ என்கின்றான் சுமனே. கசிப்பு விற்று ஜெயிலில் இருந்தபோது, சிறையதிகாரி சுமனேக்கு மீன்பிடிக்க உதவும் முகமாக படகும் வலையும் கிடைக்க வழி செய்கின்றார். சிறை அதிகாரியின் இந்த உதவிக்கு என்ன கைம்மாறு செய்வேன் எனப் புலம்புகின்றான் சுமனே. ‘நீ இங்கு திரும்பி வராமல் இருந்தால் அதுவே எனக்குப் போதும்’ என்கின்றார் சிறையதிகாரி.
சிறிசேனா ஊரில் கசிப்பு காய்ச்சுபவன். அவனுக்கும் சுமனேக்கும் ஆகாது. ஒருநாள் வேலை தேடி அங்கு போகின்றான். ‘நான் சிறிசேனா மாமாவை பார்க்க வேண்டும்’ சிறிசேனாவின் மனைவியிடம் தெரிவிக்கின்றான். ‘மாமா’ எப்போது இந்த புதுச் சொந்தம் வந்தது? என்கின்றாள் அவள். ‘அவரின் சகோதரி எனது மாமனுடன் ஓடிப்போன அன்றிலிருந்து’ என்கின்றான் சுமனே. இன்னொரு தடவை ‘அம்பரய’ எங்கே என்று சுமனேயிடம் மாட்டீன் கேட்கின்றான். சுமனே அது தன் காற்சட்டைக்குள் என்று பதிலடி கொடுக்கின்றான்.
கதை நிகழும் காலத்தை நினைவில் வைத்துக் கொண்டால், அக்காலத்தில் றணசிங்க பிரேமதாசா பிரதமராக இருந்திருக்கின்றார். இந்தக்கதை பிரதமரின் கிராம மறுமலர்ச்சித்திட்டம் (காணிப் பங்கீடு, வீடமைப்புத் திட்டம்) பற்றியெல்லாம் சொல்லிச் செல்கின்றது. இடையிடையே பில்லி சூனியம் மந்திரித்தல் பேயோட்டுதல் என்று சங்கதிகள் வேறு.
அம்பரய தேடி அலைந்த சுமனேக்கு ஒரு தடவை ஆம்பல் கிடைக்கின்றது. உண்மையில் அது எப்படி இருக்கும் என்று சுமனேக்குத் தெரியாததால் மாட்டீன் என்பவனிடம் குடுத்து ஏமாந்து விடுகின்றான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதைதான். அம்பரய தேடி மூர்க்கமாக அலையும் சுமனேக்கு இறுதியாகக் கிடைத்த ‘அம்பரய’ என்ன என்பதுதான் கதை.
ஒரு மனிதனுக்கு எத்துனை இடர் வந்த போதிலும், அவற்றையெல்லாம் முறியடித்து முன்னேற்றப் பாதையில் சென்று உயர்ந்து நிற்கின்றான் சுமனே.
1970களில் வெளிவந்த இந்த நாவல், தமிழிற்கு ‘வடலி’ வெளியீடாக 2016 இல் வந்திருக்கின்றது.
இந்தப் புத்தகத்தை நான் வாசித்துக் கொண்டிருக்கும்போது, கணேசன் சுப்பிரமணியம் என்பவரின் முகநூல் பதிவு ஒன்று (செப்டம்பர் 23, 2017) என்னை ஈர்த்தது. முகநூலில் பல விடயங்கள் அடங்கிக் கிடக்கின்றன. முகநூலை சரியாகப் பாவித்தால் பல பயனுள்ள விடயங்களை நாம் பெற்றுக் கொள்ளலாம். அவரின் பதிவில் இருந்து, மீனம்பர் AMBERGRIS பற்றி மேலும் சில தகவல்களை இங்கு தருகின்றேன்.
அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது.
ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் அன்றாட உணவாக பீலிக் கணவாய்களை வேட்டையாடித் தின்பது வழக்கம். இந்த கணவாய்களின் ஓடு செமிபாடு அடைவதில்லை. இதைச் சுற்றி எண்ணெய் வடிவப் படலம் ஒன்று உருவாகும். இந்த எச்சத்தை நீண்டநாட்களின் பின்னர் திமிங்கிலம் வாந்தியாக வெளியே தள்ளும். அதுவே அம்பர்கிரிஸ் என்று சொல்லப்படுகின்றது. பார்ப்பதற்கு அருவருப்பாக துர்நாற்றமாகக் காணப்படும் இதை சூடாக்கினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இவற்றை பலகோடிகள் குடுத்து வாங்குகின்றார்கள்.
நன்றி: திண்ணை