28 Dec

சிங்கள நாவல்: அம்பரய

‘அம்பரய’ அப்படியென்றால் என்னவாக இருக்கும்? யாருடையதாவது பெயரா? போராளியின் பெயராக இருக்குமா? சிங்களத்தின் மொழியாக இது இருக்குமா?  உசுல. பி. விஜய சூரிய என்ற பெயர் சிங்களப்பெயர் எனில் ‘அம்பரய’ என்பது சிங்கள வார்த்தையாகத்தான் இருக்கும். என்ன அது? இப்படியான சந்தேகங்களோடு இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியும் என எனக்குத் தோணவில்லை.

என்னவாக இருக்கும் என்ற சந்தேகத்தோடு வாசிக்க ஆரம்பித்த இந்தச் சிறிய நாவலில் அதற்கான பதில் சில பங்கங்களிலேயே கிடைத்தது.

 

‘அம்பரய’  என்றால் திமிங்கிலத்தின் வயிற்றிலிருந்து வெளியேறும் ஒருவகை கழிவு. அதை நறுமணத்தைலங்கள் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும். அதிக விலைபோகக்கூடிய இரசாயன திரவம் அது. ஆனால், அந்த ‘அம்பரய’ கிடைக்கிறது சுலபமல்ல. அதற்காகக் காத்துக்கிடக்கும் மீனவர்கள் அதிகம். மேலும், கடலாம்பாலும் லேசில் கிடைக்கும் ஒரு பொருளும் இல்லை.

ஒருமுறை அவனுக்கும் அந்தத் திரவம் கிடைத்தும் அதன் துர்நாற்றம் கிடைத்தது ஆம்பல் என அவனால் அடையாளம் காண முடியவில்லை. அதை மார்டீனிடம் கொடுத்து விடுகின்றான்.   மார்டீன் அதை அவனுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான்.

 

சுமனே எனும் மீனவனைச் சுற்றி கடலோர மீனவ கிராமத்தில் நடக்கிறது கதை. நாவல் முழுதும் தன் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறான் சுமனே. கொலையாளியான தந்தை, தங்கைகள் , ஆதரவற்ற சிற்றப்பா , கொலைகாரனின் மகன் என்று விமர்சிக்கும் ஊரார் இவர்களுக்கு மத்தியில் முன்னேறத் துடிக்கும் இளைஞனாகத் துடிக்கிறான் சுமனே. நேர்வழி ஏதும் கிடைக்காமல் , குறுக்கு வழியிலும் முயல்கிறான். சிறிசேனாவை சந்தித்து கசிப்பு விற்கச் செல்கிறான். அதனால் சிறைக்கும் போகிறான். கசிப்பு என்பது கள்ள சாராயமாகும்.

சிறையில்  பிரதமரின் வீடமைப்புத் திட்டத்தை அறிந்து அதைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறான். அதற்காகப் பிரதமருக்கு அவனே ஒரு கடிதத்தையும் எழுதுகிறான்.

 

பின் காணிக்காக போராடுகிறான். பயன்படுத்தமுடியாத ஒரு  காணி கிடைக்கிறது. கிடைத்த காணியோடு போராடி ஒரு வீட்டை கட்டி முடிக்கிறான்.

இதுவரை அறிந்துகொள்ளாத, அறிய விரும்பாத, சிங்களம் என்றாலே துஷ்டரைப்போல தூர நிற்கிற, ஒரு சமுதாயத்தைப்  பற்றிய  அதிலும் வறிய நிலையில்  கடல்சார்ந்து வாழ்கிற ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையை இந்த நாவல் மிக அழகாகவும் எதார்த்தமாகவும்  அறிமுகப்படுத்திவைக்கிறது.

 

கிட்டதட்ட இந்திய வாழ்க்கை முறையோடு ஒன்றிவிட்ட சில சடங்குகளை சிங்களவரும் பின்பற்றிக்கொண்டிருப்பது தெரியவருகிறது. மேலும், உறவு முறைகளிலும் எந்த வித்தியாசமும் இல்லை. இதை எளிமையாக நமக்கு உணர்த்துகிறது அம்பரய. மொழிபெயர்ப்பு பொறுத்தவரை மொழிபெயர்ப்புதானா என  எண்ண வைக்கிறது. மொழிபெயர்ப்பு நாவலை படிக்கிறோம் என்ற எண்ணமே வரவில்லை.

 

நன்றி: யோகி

30 Apr

அம்பரய-தர்மினி

 நாவல் விமர்சனம்

-ஒரு மீன் அகப்பட்டதும் அவனுக்குச் சந்தோசமாக இருந்தது.ஒரு முழுக்கூடையை நிரப்பச் சின்னதொரு மீன்–

‘அம்பரய’ நாவல் சுமனே என்ற சிறுவனின் சாதுரியங்கள், குழப்படிகள், பாட்டிக்கும் தங்கைகளுக்குமான நாளாந்த உணவுக்காக அவன் படும் பாடுகளும் மட்டுமில்லை. 1970களில் எழுதப்பட்ட இக்கதை 2017ல் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. ஓர் ஓவியத்தை வரைந்தது போன்ற கலை, இயற்கையும் எளிமையும் எழுத்தின் போக்கில் நகர்கின்றன.தேவா அவர்களின்  மொழிபெயர்ப்பும் இயல்பான மொழிப் பாவனையும் அந்த வாழ்வை அறிந்த அனுபவமும் அந்நியத்தன்மையற்ற வாசிப்பைத் தருகின்றன எனச் சொல்லலாம்.

இலங்கையின் மீனவக்கிராமமும்  ஒரு சொந்த வீட்டுக்கு ஏங்கும் ஏழைச் சிங்களக் குடும்பத்தின் எளிய நம்பிக்கைகளும் ஆசைகளுமாக மனிதர்களின் ஒற்றுமையும் பொறாமையும் கொண்ட கிராமத்தின்  கதை. அதே போல, அக்காலகட்டத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீடமைப்பு அபிவிருத்தித்திட்டத்தால் ஏழைகள் பலனடைவது என்பது ஒரு நாவலுக்கான கதையாகியுள்ளது என்பதையும் உணரலாம்.

சுமனேயினால் நாளாந்தக் கூலிவேலைகளாலும் ஆற்றை நம்பி மீன்களைப் பிடித்தும் வாழ்க்கைக்குத் தேவைான அளவு உழைக்கமுடியாத போது அம்பரய (கடலாம்பல்: நறுமணத்தைலங்கள் தயாரிப்புக்கு பயன்படும் விலையுயர்ந்த பொருள். திமிங்கலத்தின் வயிற்றில் இரசாயன மாற்றத்துக்குள்ளாகி வெளியேறும் கழிவு) தேடுவது அவனுக்கு பணக்காரனாகிவிடுவதற்கான நம்பிக்கையைத் தருகின்றது.

முதல் கோழியின் கூவலும் பக்கத்துக்கிராமத்துப் பள்ளியின் தொழுகைக்கான அழைப்பும் கேட்கும் நேரம் உறக்கத்திலிருந்து விழித்துக் கடற்கரைக்கு ஆம்பல் தேடப் புறப்படுபவனைப் பார்த்துப் பாட்டி, ‘சுமனே எங்கே போகின்றாய்? பேய்கள் மரத்திலேறும்நேரமல்லவா இது… திடீரென்றுபணக்காரனாக நினைக்காதே,வேண்டுமென்றால் ஓர் அதிர்ஷ்ட இலாபச் சீட்டொன்றை நாளை வாங்கு’  என்கிறார்.

‘அதற்குப் 10 ரூபாய் யார் கொடுப்பார்கள்?’ என்று கேட்டுக்கொண்டே ஆம்பல் தேட நடக்கிறான் சுமனே.

கடற்கரையோரமாக வந்து ஒதுங்கும் அம்பரயவைக் கண்டெடுத்துப் பெரும் விலைக்கு விற்கலாமென்று அதைத் தேடப்போவதையும் ஒரு வேலையாகக் கொள்கிறான் சுமனே. அதைக் கேலி செய்யும் கிராமத்தவர்களால் ‘அம்பரய’ என்ற பட்டமும் சுமனே பெறுகின்றான். தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில், ஏதாவது நல்லது எதிர்பாராமல் நடந்து விடாதா என்ற எதிர்பார்ப்பு. அன்றாடத் துயரங்களையும்  தீராப் பசியையும் தணிப்பதற்கும் நாட்களைக் கழிப்பதற்குமாக அதிர்ஷ்டமொன்று வரும் என்ற நம்பிக்கை அச்சிறுவனை உற்சாகமாய் இயங்க வைக்கின்றது.

நோணாவின் தோட்டத்தில் இருக்கும் தேவைக்கு அதிகமான தேங்காய்களைத் பிடுங்குவதைப் பிழையாக நினைக்காதவன், மாட்டுக்குக் கயிறு எதற்கு?குளிக்க வாளிக்குக் கட்ட எடுத்தேன் என்பவன், சகோதரிகளைப் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துபவன், பணத்தேவைக்காகக் கசிப்புக் கடத்துபவன், ஊருக்குள் வந்த புதிய மனிதனின் காசைக் காப்பாற்றுபவன்,  உறவினர்கள் மற்றும் ஊரவர்களால் குழப்படிக்காரன் என்று ஒதுக்கப்படுபவன் என்று  எழுதப்பட்டதைப் படிக்கும் போது, வாசகர்களுக்கு துடியாட்டக்காரனான பொடியன் சுமனே மீது பச்சாத்தாபம்  ஏற்படும். அவனுக்கு மீனாம்பல் கிடைக்கவேண்டுமென்று நாமும் உளமார ஆசைப்படுவோம்.

சல்வீனியாக் கொடிகள் படரும் ஆறு, கடல், கபூக்கற்களையுடைய நிலம், கிணறு, பேயோட்டுதல், மந்திரவாதி, தென்னைகள், பலாமரங்கள், ஆட்களுக்குப் பட்டம் தெளித்தல், சுவரில் கிறுக்கி அவமானப்படுத்துதல், ஒரு மரத்துக்காகச் சண்டை பிடித்துச் சகோதரனைக் கொலை செய்தல்,மழைக்கு ஒழுகும் பத்தியில் உறங்கமுடியாமல் அயல்வீட்டிற்குப் போவது,ஒரு துண்டு நிலமும் சொந்த வீடும் கனவாயிருப்பது, கறி இல்லாத போது பக்கத்துவீட்டுக்குக் கிண்ணத்தைக் கொடுத்தனுப்புவது, நன்மையோ தீமையோ குடிசை நிறைந்து விடுமளவு கூடிவிடுகின்ற சனம் என்று எழிலான எளிமையான கிராமம் தான் திக்கலை.

13 மற்றும் 14 வயதான இரு தங்கைகளும் வறுமையிலும் மகிழ்ச்சியும் உற்சாகமுமாக வாழ்கின்ற கெட்டிக்காரிகள்.பாட்டி சுவாரசியம் மிக்க மனுசி. காட்டெருமையைக் கூடக் குரலை உயர்த்தாமல் துரத்தும் சாமர்த்தியக்காரி எனச் சுமனேயால் பாராட்டப்படும் புத்திசாலி.  குற்றவாளியாக வெலிக்கடைச் சிறைக்குப் போன சுமனே சிறையதிகாரியின் கடிதத்தோடு சொந்தமாக வள்ளத்திற்கும் வலைக்கும் சொந்தக்காரனாகிவிடுவது புனர்வாழ்வு. பிரதமரின் வீடமைப்புத் திட்டத்தில் ஒரு துண்டு நிலம் பெறுவதென்றால் அவனுக்கு 18 வயதாகவில்லை. பாட்டிக்கோ 75 வயதாகிவிட்டது. தந்தை கொலைக்குற்றத்தில் சிறை வாழ்வு. தாய் உயிரோடு இல்லை. ஆனாலும் கூர்ந்த அறிவுடைய சுமனே பிரதமருக்குத் தனக்கு வீடு கட்ட உதவும்படி கடிதம் எழுதுகின்றான். அது போய்ச் சேர்கின்றது.கடைசி நேரத்தில் சினிமா போல காணி பங்கிட உத்தரவும் கிடைக்கின்றது. பல இடைஞ்சல்களுக்கு நடுவில் சுமனேயும் தங்கைகளுமாகக் கிணறு வெட்டுதல்,நிலத்தைச் சமப்படுத்துதல், சுவர்களுக்குச் சாந்து எடுத்து நிறந்தீட்டல்…என்று விளையாட்டுப் போல வீட்டைக்கட்டி முடித்துவிடுகின்றனர்.       கெட்டநாற்றமுடைய அம்பரய நறுமணங்கமழும் திரவியமாகின்றதைப் போல; கிராமத்தின் முரட்டுச்சிறுவன்,யாருடனும் இடக்குமடக்காகவே கதைப்பவன், சிறைக்குச் சென்று வந்தவனான சுமனே. பொறுப்பான அண்ணனாகவும் தன் நுண்ணறிவால் நிலத்தையம் வீட்டையும் உரிமை கொண்ட அரசாங்கத்தின் பாராட்டைப் பெற்று உறவினர்களதும் ஊரார்களினதும் அன்பைப் பெற்று அம்பரய என்ற கேலிப் பெயருக்குப் பொருத்தமாகிவிடுகின்றான்.

பிரதமர் வந்து குறைந்த செலவில் அழகான வீடு என்ற பாராட்டுக்கும் ஆளாகின்றான். வெற்றிலை கொடுத்துப் பிரதமரை வரவேற்கப் பரபரப்பாக ஆயத்தம் செய்வதும் குக்கிராமங்கள் வரை அரசாங்கத் திட்டங்கள் சரியாக முறையாக நிறைவேறுவதும் என்று படிக்க மகிழ்ச்சியைத் தரும் சம்பவங்கள். எழுபதுகளில் தான் இலங்கையில் சிங்கள இளைஞர்களது ஜே.வி.பி கிளர்ச்சியும் வடக்கு-கிழக்கில் தமிழ் இளைஞர்களது எழுச்சியும் ஏற்பட்டன. அம்பரய நாவலும் எழுபதுகளில் இலங்கையில் வெளியாகிய நாவல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ‘மதிப்புமிக்க மனிதர்’ என்ற வார்த்தை பிரதமரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கதையில் ஓரிடத்தில் படித்த போது ஆசையாகவே இருந்தது. ஓர் இலக்கியப் பிரதியில் நாட்டின் பிரதமரை மதிப்பு மிக்க மனிதர் என எழுதப்பட்டிருக்கிறதென்றால், அது எப்பேர்ப்பட்ட காலம்?

அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்திற்கு விளம்பரக் கையேடு போலவும் அக்காலத்தில் இந்நாவல் பயன்பட்டிருக்கலாம் என்ற என் வாசிப்பு நினைக்க வைத்தது. இவையெல்லாம் தவிர்த்து, தொலைவில் எங்கோ இருக்கும் ஒரு சிங்களக் கிராமத்தின் வாழ்வைத் தமிழ் வாசகர்கள் அறிய அழகான கதையொன்று தான் அம்பரய.

 

07 Apr

அம்பரய

அம்பரய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் முதல் சிங்கள நாவல்.

சிங்களர் வாழ்வைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. பிரசன்ன விதானேவின் சில படங்கள் வேறு சில சிங்கள படங்களின் நமக்கு மெலிந்த சித்திரங்கள் உண்டு.

 

அம்பரய என்றால் ஆம்பல் என்று பொருள் கடலில் கொழுத்த தலையுள்ள திமிங்கலத்தின் எச்சத்தையும் அம்பரய என்றே சொல்கிறார்கள். அதற்கு சந்தையில் நல்ல மதிப்புண்டு. அது வாசனைத்திரவியங்கள் உண்டாக்க பயன்படுகிறது. சாமானியத்தில் கிடைக்காது. இதை தேடும் சுமனே என்ற இளைஞனின் வாழ்வே இந்த நாவல்.

நுணுக்கமான விவரங்களின் வழி வாழ்வு சார்ந்த சித்தரிப்புகளின் வழி இந்த நாவல் மேல் செல்கிறது.

சிங்கள வாழ்வு பெருமளவு மலையாள வாழ்வை ஒத்திருக்கிறது. உணவு, வாழுமிடம், கலாச்சாரம், கட்டுமானம், நிலப்பரப்பு, இப்படி பலவகையில் சிங்கள கிராம சமூகமும் மலையாள கிராம சமூகமும் அண்மிக்கின்றன. எழுபதுகளின் சிங்கள கிராமம் அதன் வறுமை பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கிராம வாழ்விற்கே உண்டான நன்மை தீமைகள், மாசுபடாத அதன் இயற்கை, மெல்ல விரியும் கிராமம். அரசாங்க அபிவிருத்தி திட்டங்கள், இரத்த உறவுகளுக்குள் இருக்கும் தீரா பகைமை, வர்க்க வேறுபாடுகள், கொண்டாட்டம், போன்ற சித்திரங்களின் வழி நாம் அறியாதொரு வாழ்வை நமக்கு நிகழ்த்திக்காட்டுகிறார் நாவலாசிரியர் உ.சு.ல.பி. விஜய சூர்யா.

சுமனே நேர்மையான வாழ்விற்காக விடாது போராடுகிறான்.

‘கடற்கரைக்கு போவதற்கான நீண்ட நடையிலோ அல்லது ஆற்றில் இரவல் வாங்கிய கட்டுமரத்தில் மீன் பிடிக்க போகும்போதோ சுமனோ அவன் தனியே இருக்கும்போதோ சட்டை போடாத மீன்பிடிக்கும் பையன் அல்ல அவன். அவன் படித்த நல்லதொரு உத்தியோகத்தில் உள்ள இளைஞன். அவன் ஆங்கிலத்தில் கதைத்தான் அழகிய சிறிய வீடொன்றில் வாழ்ந்தான். அவனது சகோதரிகளும் வேலையில் இருந்தனர். அவன் தந்தையும் திரும்பி வந்துவிட்டார். அவர்கள் வீட்டு விராந்தையில் வெள்ளை பேனியனும் கோடுபோட்ட சாரத்துடன் அமர்ந்திருந்தார். ஒரு சுருட்டு அவர் வாயில் புகைந்துகொண்டிருந்தது. பாட்டியும் வீட்டில்தான் இருந்தாள் அவளுக்கு இப்போதெல்லாம் தென்னோலைக்கு களவெடுக்க தேவையில்லை ஒவ்வொரு பின்னேரமும் அவள் விகாரைக்கு ஒரு கூடை நிறைய நறுமணம் கமழும் மலர்களுடன் போய்வந்தாள்’ இப்படியான வாழ்விற்குதான் சுமனே கனவு கண்டான்.

நேர்மையான வாழ்விற்கான போராட்டம் எல்லா காலத்திலும் எல்லா சமூகத்திலும் துயர்மிக்கதாகவே இருக்கிறது. சுமனேவும் உலகம் தோன்றிய காலத்தில் உருவான அந்த விதியில் இருந்து தப்ப முடியவில்லை.

அம்பரய என அழைக்கப்படுகின்ற கொழுத்த தலையுள்ள திமிங்கலத்தின் எச்சத்தை கடைசி வரை சுமனே காணவேயில்லை.

 

நன்றி: சாம்ராஜ் – அந்நியமற்ற நதி

13 Nov

’அம்பரய’ – நூல் அறிமுகம்.

 போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை

கே.எஸ்.சுதாகர்

 

நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்குகையில், என்னுடன் வேலை செய்யும் சக சிங்கள நண்பர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. ஒருவேளை சொல் மயக்கம் அல்லது உச்சரிப்பு காரணமாக அவர்களுக்கு விளங்காமல் இருந்திருக்கலாம்.

’இலங்கையைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளரான உசுல. பி. விஜய சூரிய ஆங்கிலத்திலேயே அதிகமும் எழுதியவர். அம்பரய 1970 களில் இலங்கையில் வெளியிடப்பட்டது. இதைத்தவிர அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லை.

அதே போல ஆங்கில வழி மூலம் தமிழிற்குக் கொண்டு வந்தவர் தேவா. தேவா சுவிஸ் நாடைச் சேர்ந்தவர் என்பதைத்தவிர அவர் பற்றிய தகவலும் தெரியவில்லை. இவரது மொழிபெயர்ப்பில் ஏற்கனவே ’சைனா கெய்ரெற்சி’ எழுதிய ‘குழந்தைப் போராளி’ சுயசரிதையை வாசித்திருக்கின்றேன்.

இவை ஒன்றுமே இந்த நாவலுக்குத் தேவையற்றவை  என்பதுமாப்போல் அற்புதமான மொழிபெயர்ப்பு, ஆற்றொழுக்கான நடை, எந்த இடத்திலும் வாசிப்பின் ஓட்டத்தை தேவாவின் மொழிபெயர்ப்பு தடை செய்யவில்லை.

 

ஒரு இடத்தில் இந்த நாவல் ‘அம்மாறை’ என்ற இடத்தைப் பற்றிச் சொல்கின்றதோ எனவும் ஐயுற்றேன். இதற்கு ’பாகம் 6’ இல் விடை கிடைக்கின்றது.

அம்பரய (ஆம்பல், மீனாம்பல்) என்பது திமிங்கிலத்தின் ஒர் கழிவுப்பொருள். கெட்ட நாற்றம் வீசும் அதிலிருந்து உலகின் விலை உயர்ந்த வாசனைத் திரவியத்தைத் தயாரிக்கின்றார்கள். இந்த அம்பரயவைத் தேடி கடற்கரை எங்கும் அலையும் சுமனே என்பவனைப் பற்றிய கதைதான் ’அம்பரய’. குழூக்குறியாக சுமனேக்கும் அந்தப் பெயர் அமைந்துவிடுகின்றது.

சுமனே பதினாறு வயது நிரம்பிய சிறுவன். தாய் இறந்துவிட்டார். தந்தையார் ஒரு பலா மரத்துக்கான சண்டையில் தனது சகோதரனைக் கொன்றுவிட்டு வெலிக்கடை ஜெயிலில் இருக்கின்றார். சுமனே தனது பாட்டியுடனும் – சிரியா, றூபா என்ற இரு தங்கைமார்களுடனும் வாழ்ந்து வருகின்றான்.

பாட்டிக்கு நான்கு மகன்மார்கள். தந்தையை ஜெயிலில் இருந்து எடுப்பதற்கான வழக்கிற்குச் செலவு செய்வதற்காக தமது வீட்டை இன்னொரு சித்தப்பாவிற்கு விற்றுவிடுகின்றான் சுமனே. அந்த வீட்டிலேயே ஒரு பத்தி இறக்கி அங்கேயே இவர்கள் நால்வரும் வாழ்கின்றார்கள்.

சுமனே குடும்பத்திற்கு சாப்பாடு போடும் உழைப்பாளி. மீன் பிடிக்கின்றான், கூலி வேலை செய்கின்றான். எத்துனை இடர் வந்த போதும் தங்கைமாரின் கல்வியில் அக்கறை கொள்கின்றான். ஒரு குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் சிறுவனாக, குழப்படிப் பையனாக, சண்டியனாக, குறும்புகள் செய்பவனாக, கசிப்பு விற்று ஜெயில் தண்டனை பெறுபவான பல அவதாரங்கள் எடுக்கின்றான் சுமனே.

பாட்டிமாருக்கு பகலில் கண் தெரிவதில்லை. ஆ.. ஊ என்று கத்துவார்கள். இரவு வந்துவிட்டால் கண்பார்வை அதிகமாகிவிடும். பேப்பர் படிப்பார்கள். ரிவி பார்ப்பார்கள். யாராவது காதல் செய்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். அப்படிப்பட்டதொரு பாட்டி சுமனேக்கு வாய்த்து விடுகின்றாள்.

 

இடையிடையே நகைச்சுவை இழையோடும் விறுவிறுப்பான சம்பவங்களைக் கொண்டது இந்நாவல்.

ஒரு இடத்தில் ஊரான் ஒருவனின் மாட்டின் கயிற்றை அறுத்துவிட்டு, ‘நான் கிணற்றடிக்கு குளிக்கப் போனேன். கிணற்று வாளியில் கயிறு இல்லை. உனது மாட்டில் கயிறு இருந்தது. அதனால் அறுத்தெடுத்தேன்’ என்கின்றான் சுமனே. கசிப்பு விற்று ஜெயிலில் இருந்தபோது, சிறையதிகாரி சுமனேக்கு மீன்பிடிக்க உதவும் முகமாக படகும் வலையும் கிடைக்க வழி செய்கின்றார். சிறை அதிகாரியின் இந்த உதவிக்கு என்ன கைம்மாறு செய்வேன் எனப் புலம்புகின்றான் சுமனே. ‘நீ இங்கு திரும்பி வராமல் இருந்தால் அதுவே எனக்குப் போதும்’ என்கின்றார் சிறையதிகாரி.

சிறிசேனா ஊரில் கசிப்பு காய்ச்சுபவன். அவனுக்கும் சுமனேக்கும் ஆகாது. ஒருநாள் வேலை தேடி அங்கு போகின்றான். ‘நான் சிறிசேனா மாமாவை பார்க்க வேண்டும்’ சிறிசேனாவின் மனைவியிடம் தெரிவிக்கின்றான். ‘மாமா’ எப்போது இந்த புதுச் சொந்தம் வந்தது? என்கின்றாள் அவள். ‘அவரின் சகோதரி எனது மாமனுடன் ஓடிப்போன அன்றிலிருந்து’ என்கின்றான் சுமனே. இன்னொரு தடவை ‘அம்பரய’ எங்கே என்று சுமனேயிடம் மாட்டீன் கேட்கின்றான். சுமனே அது தன் காற்சட்டைக்குள் என்று பதிலடி கொடுக்கின்றான்.

கதை நிகழும் காலத்தை நினைவில் வைத்துக் கொண்டால், அக்காலத்தில் றணசிங்க பிரேமதாசா பிரதமராக இருந்திருக்கின்றார். இந்தக்கதை பிரதமரின் கிராம மறுமலர்ச்சித்திட்டம் (காணிப் பங்கீடு, வீடமைப்புத் திட்டம்) பற்றியெல்லாம் சொல்லிச் செல்கின்றது. இடையிடையே பில்லி சூனியம் மந்திரித்தல் பேயோட்டுதல் என்று சங்கதிகள் வேறு.

அம்பரய தேடி அலைந்த சுமனேக்கு ஒரு தடவை ஆம்பல் கிடைக்கின்றது. உண்மையில் அது எப்படி இருக்கும் என்று சுமனேக்குத் தெரியாததால் மாட்டீன் என்பவனிடம் குடுத்து ஏமாந்து விடுகின்றான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதைதான். அம்பரய தேடி மூர்க்கமாக அலையும் சுமனேக்கு இறுதியாகக் கிடைத்த ‘அம்பரய’ என்ன என்பதுதான் கதை.

ஒரு மனிதனுக்கு எத்துனை இடர் வந்த போதிலும், அவற்றையெல்லாம் முறியடித்து முன்னேற்றப் பாதையில் சென்று உயர்ந்து நிற்கின்றான் சுமனே.

 

1970களில் வெளிவந்த இந்த நாவல், தமிழிற்கு ‘வடலி’ வெளியீடாக 2016 இல் வந்திருக்கின்றது.

இந்தப் புத்தகத்தை நான் வாசித்துக் கொண்டிருக்கும்போது, கணேசன் சுப்பிரமணியம் என்பவரின் முகநூல் பதிவு ஒன்று (செப்டம்பர் 23, 2017) என்னை ஈர்த்தது. முகநூலில் பல விடயங்கள் அடங்கிக் கிடக்கின்றன. முகநூலை சரியாகப் பாவித்தால் பல பயனுள்ள விடயங்களை நாம் பெற்றுக் கொள்ளலாம். அவரின் பதிவில் இருந்து, மீனம்பர் AMBERGRIS பற்றி மேலும் சில தகவல்களை இங்கு தருகின்றேன்.

அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது.

 ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் அன்றாட உணவாக பீலிக் கணவாய்களை வேட்டையாடித் தின்பது வழக்கம். இந்த கணவாய்களின் ஓடு செமிபாடு அடைவதில்லை. இதைச் சுற்றி எண்ணெய் வடிவப் படலம் ஒன்று உருவாகும். இந்த எச்சத்தை நீண்டநாட்களின் பின்னர் திமிங்கிலம் வாந்தியாக வெளியே தள்ளும். அதுவே அம்பர்கிரிஸ் என்று சொல்லப்படுகின்றது. பார்ப்பதற்கு அருவருப்பாக துர்நாற்றமாகக் காணப்படும் இதை சூடாக்கினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இவற்றை பலகோடிகள் குடுத்து வாங்குகின்றார்கள்.

 

நன்றி: திண்ணை

09 Nov

அம்பரய

சிங்கள இலக்கியம் பற்றிய புரிதல்கள் பொதுவாகத் தமிழர்களாகிய நமக்கு அதிகம் இருப்பதில்லை. குறிப்பிட்ட வெகுசிலரைத் தவிரப் பெரும்பாலான இலங்கை தமிழ் இலக்கிய வாசகர்களிடம் குறைந்தபட்ச சிங்கள இலக்கியம் பற்றிய சமகாலத் புரிதல் இருப்பதில்லை (என்னையும் சேர்த்து). சிங்கள மொழியை வாசித்துப் புரிந்துகொள்பவர்கள் எம் மத்தியில் மிகச்சொற்பம் என்பது அதற்குரிய மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். எனினும் ஆங்கிலத்தின் ஊடக அங்கு நிகழும் அசைவியக்கத்தை ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருக்க இயலும்.

உசுல.பி.விஜய சூரிய ஆங்கிலத்தில் இலங்கை எழுத்தாளர். அவர் எண்பதுகளின் இறுதியில் எழுதிய நாவல் “அம்பரய”; இந்த நாவல் தற்சமயம் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் ‘தேவா’வினால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.

நாவல் என்ற வடிவத்தில் பதிப்பாளர்களினால் குறிப்பிடப்பட்டாலும், வடிவம் சார்ந்து குறுநாவல் வடிவத்திலேயே அம்பரயவை அணுக வேண்டியுள்ளது. கடல்புரம் சார்ந்த மீனவக்கிராமம் ஒன்றில், ‘சுமனே’ என்கிற பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுவனையும் அவனது சிறிய குடும்பத்தையும் சுற்றி நகருகின்றது கதை. சிறை சென்ற அவனது தந்தையால் அவர்களது குடும்பப் பொருளாதாரம் நலிவடைந்து இருக்கின்றது. வயதில் இளையவனாக இருக்கும் சுமனே குடும்பப் பொறுப்பைச் சுமக்கிறான். அதிகாலை எழும்பி, கடற்கரையில் ஒதுங்கும் பொருளான திமிங்கிலத்தின் உடலில் இருந்து கிடைக்கும் ஒருவகையான கொழுப்புத்தலையான ‘ஆம்பலை’ தேடிச் செல்கிறான். அதனை விற்பதன் மூலம் பெருவாரியான பணத்தை ஈட்ட முடியும். இரு சகோதரிகளுக்கு நன்றாகக் கல்வியறிவை புகட்டுவதையும், சொந்தமான இருப்பிடம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காகவும் பொருளாதாரத்தை நோக்கி தன் பாடசாலை படிப்பை இடைநிறுத்திவிட்டு அல்லல்படுகிறான். உண்மையில் அவன் தேடும் ஆம்பல் என்பது, அவனது குடும்பத்தின் சுயகௌரவமாக வாழும் ஸ்திரம்தான். அதை நோக்கிச் செல்லும் தருணங்களும் முரண்பாடுகளும் எதிர்ப்படும் மனிதர்களின் வஞ்சமும்,குரோதமும்,அன்பும்தான் இக்குறுநாவலின் இயங்குதளம்.

கதைக்களத்தில் எதிர்ப்படும் மனிதர்கள் மிக எளிமையானவர்கள் அன்றைய பொழுதுகளே மகிழ்ச்சியையும் துன்பத்தையும் அவர்களுக்குத் தருகின்றன. பொருளாதாரம்தான் எல்லோருக்கும் இருக்கும் முக்கியப் பிரச்சினை. எனினும் அந்தக் கிராமத்தில் செல்வம் மிக்கவர்களும் இருக்கிறார்கள். இங்கிருக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் அன்பு மிக்கவர்களாகவும் மற்றைய குடும்பங்களுடன் முரண்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் தங்களுக்குள்ளே மோதல் கொண்டாலும், வெளியேயிருந்து ஒரு பிரச்சினை அவர்களுக்கு வரும்போது ஒற்றுமையாகத் திரண்டு தங்களின் ஒருவனை விட்டுக்கொடுக்காமல் எதிர்க்கிறார்கள். இந்தக் குணாம்சத்தை நாம் தமிழர்களிடமும் மற்றைய இந்திய இனக்குழுக்களிடம் அவதானிக்கலாம். நுட்பமாக அவதானித்தால் சிங்களவர்களுக்ம் தமிழர்களுக்கும் இடையிலான பல ஒற்றுமைகளில் இதுவும் ஒன்று.

சுமனே மெல்ல மெல்ல எழுவதும், பின் தடுமாறி வீழ்வதும் உணர்வெழுச்சியில் தத்தளிப்பதும் நிகழுகின்றது. கருணை மிக்கவனாக இருந்தாலும், தீமையின் எல்லையில் அவன் இருப்பதும் சிறிது காலத்தில் அதிலிருந்து வெளியேறி முன்னேறிச் செல்வதும் கதையில் இயல்பாக நிகழ்கிறது. முதிர்ச்சி வாய்ந்த, பெரியவர்கள் போல் கதைக்கும் சுமனேயை பதின்மவயதுச் சிறுவனாக உள்வாங்க மனம் மறுக்கின்றது. எனினும் அவன் அனுபவத்தால் திரட்டிய அறிவு அவனின் முதிர்ச்சியை நியாயப்படுத்துகின்றது. விஜேய மஹத்தையா,நோணா போன்ற பாத்திரங்களின் கருணையும், அன்பும் மென்மையான சலனங்களுடன் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

நாவலில் இழையோடும் மதம் சார்ந்த நம்பிக்கைகளையும், அவர்களின் பண்பாடுகளையும் அவதானித்து உள்வாங்கும்போது அவர்களிடம் இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியையும் அவதானிக்கலாம்.

மொழிபெயர்ப்பு என்பது எந்த இடத்திலும் சறுக்கவைக்காமல் சீராக வாசிக்கவைகின்றது. சிங்கள நாவல் என்பதை வாசிக்கும்போதே உணர்ந்துகொள்ள இயலுகின்றது. கொல்லோ, நோனா போன்ற வார்த்தைகள் மொழிபெயர்ப்பின் கச்சிதம் கருதி அப்படியே உரையாடல்களில் வருகின்றது.

குக்கிராமம் ஒன்றின் கடல்புரத்தில் நிகழும் இக்கதை வண்ணநிலவனின் “கடல்புரத்தில்” நாவலை நினைவு படுத்தலாம். அதே களம், மனிதர்களின் குணாம்சங்களும் ஏறக்குறைய ஒன்றுதான். ஆனால், தேடலும் தரிசனமும் வெவ்வேறானவை.

வடலிப்பதிப்பகம் இந்தநாவலை கட்சிதமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

நன்றி: அனோஜன்

07 Sep

சல்வீனியா

பஷீரின், மஜீத்திடம் ஒன்றும் ஒன்றும் எத்தனையென ஆசிரியர் கேட்கிறார். அவன் கொஞ்சம் பெரிய ஒன்று என்கிறான். பிரிந்து கிடக்கும் இரண்டு ஆறுகள் சேர்ந்து பெரிதாகுவதை ஊர்க் கோடியில் பார்த்திருக்கிறான் மஜீத். பஷீரின் கதைகளில்,  பிரிந்தும் பிளந்தும் கிடப்பவை பிணைந்துகொள்ளும் இரசவாதம் நிகழ்கின்றது. பஷீரின் சிறுவர்கள் தனியான உடைந்த மீமொழியும், பார்வையுமுள்ளவர்கள். அவர்களுடைய உலகில் கோணல்களும் அழகாகிவிடுகின்றன. ஆனால் அம்பரய ’சுமனே’ சிறுவனாகவும், வளர்ந்தவனாகவும் இருக்கிறான். ஊராருக்குக் கோணலாகவும் ஊராருடன் எதிர்வினைபுரிபவனாகவும் இருக்கிறான். அவனது சிந்தனை, செயலில் முதிர்ச்சியும் வயதில் சிறியவனாகவும் இருக்கிறான். சுமனேயைப் பஷீரின் சிறுவர்களிடமிருந்து நகர்த்தி இன்னொரு தளத்திற்குக் கொண்டுசெல்வது அவன் கிராமத்தினருடன் கொள்ளும் முரணும் நட்பும்தான். அவனுக்கு நண்பர்கள் என யாருமில்லை. நோனாவின் தோட்டத்தில் தென்னங்கன்றுகளின் ’பூரானை’ உடைத்துச் சாப்பிடுகிறான். நோனா கோபத்துடன் விசாரித்தால் ‘நான் உன்னிடமிருந்து கடைசி வரையும் களவெடுக்க மாட்டேன்’ என்கிறான். குணபால மாத்தையாவின் மாட்டின் கயிற்றை வெட்டிவிடுகிறான். குணபால சாத்தானுக்குப் பிறந்தவனே என்று திட்டினால் அவன் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ‘நான் குளிக்கப் போனேன். வாளியில் கயிறு இல்லை. உனது மாட்டின் கழுத்தில் கயிறு இருந்தது. அது மாட்டிற்குத் தேவையில்லை அதனால் வெட்டினேன்’ என்கிறான். சுமனே சிறையிலிருந்து திரும்பிவரும் போது குணபால சொல்கிறார் ‘இனி இந்த ஊரில் மாடுகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை’. சுமனே தன்னைத் தானே வழிநடத்திச் செல்லும் இயல்பில் இருக்கிறான்.

தினவாழ்விற்கும், ஒரு வேளை சாப்பாட்டிற்குத் திண்டாடும் சூழலில் அவன் தன் நல்வாய்ப்பை நம்பி ஆம்பல் தேடி அலைகிறான். நல்வாய்ப்புத்தேடி கடற்கரை முழுவதும் அலைந்து திரிந்தாலும் அதை மட்டுமே நம்பியவனல்ல.  ஆம்பல் ஒரு முரணாக அவன் முன்னே இருக்கிறது, அதுவோ அவனுக்கு மிக இலகுவில் பணம் கிடைக்கும் வழியாகவும் இருக்கிறது.  விலையான ஆம்பல் தேடி கடற்கரையில் அலைந்து திரியும் சுமனேயை ஊரார் அம்பரய என்று பகடி செய்கின்றனர். அழுகிய வாசனையும் சாணம்போன்ற வழுவழுப்புமாக இருக்கும் ஆம்பல் ஒருமுறை அவனுக்குக்கிடைக்கிறது. ஆனால், அதன் அழுகிய வாசனையால்  அவனால் அதை ஆம்பல் தானாவென்று சந்தேகித்து  அதனை நண்பனும் ஊரின் பெரும் ஏமாற்றுக்காரனுமான மார்டீனிடம் கொடுத்து விடுகின்றான். ஆம்பலின் ஒரு சிறுதுண்டு கிடைத்தாலும் வாழ்வின் சிறுதுரும்பைப் பற்றிப் பிடித்து ஏறிவிடும் மூர்க்கத்துடனும் அலையும் அவனுக்கு, ஆற்றில் மலிவான மீன்களே  கிடைக்கின்றன. நல்ல விலையான மீன்களைப் பிடிக்க வலையோ படகோ அவனிடமில்லை. கிடைக்கும் வேலைகளைச் செய்தாலும் ஒரு வேளை பசிக்குச் சாப்பிடவே வருமானம் போதவில்லை. கொலைகாரனின் மகனாக, நல்வாய்ப்பு அற்றவனாக அவன் ஊரிலிருந்து சாராயத்தை  நகரிற்கு மறைவாக எடுத்துச் செல்கிறான்.

குறைந்த சொற்களில் கோட்டுச் சித்திரம் போல கிராமத்தவர்கள் அறிமுகமாகின்றனர். குரோதமும், அன்பும் கொண்டவர்கள். அவன் நல்வாய்ப்பைப் பற்றிக் கொள்ளும் போது சண்டைக்குவரும் கிராமத்தார் அவன் அடிபட்டுத் துவளும் போது உதவிக்கு முதல் ஆட்களாக வந்து நிற்கிறார்கள். அவனால்  கிராமத்தவர்களைப் விளங்கிக் கொள்ள முடிவதில்லை. கிராமம் விளங்கிக் கொள்ளப்பட முடியாத புதிராகத் தன்னுள்ளே பிளவுகளும், குரோதமும்  நிறைந்ததாகவும் சேர்ந்தும் பிளந்தும் கிடக்கிறது. யதார்த்தவாதக் கதை சொல்லல் ஒரு லட்சியவாதத்தை அவன் முன்னே வைக்கிறது.  கிராமத்துச் சிறுவனின் பெருவிருப்பாக ஒரு அழகிய வீடும் துண்டுநிலமுமிருக்கிறது.  நாவல் லட்சியவாதத்தை முன்வைத்தாலும் சுமனேயை ’லட்சியவாதம்’ வழிநடத்திச் செல்லவில்லை. அவனே அவனுக்கு ஒளியாக இருக்கிறான். அவனைப் புரிந்து கொள்வதும் அவனோடு உறவாடுவதும் சிக்கலாக இருக்கிறது. பசிக்கும்போது நோனாவின் தோட்டத்திலிருந்து திருடிக் கொள்கிறான்; கேட்டால் மேலதிகமாக இருப்பதை எடுத்ததாகச் சொல்கின்றான், மீன்களைத் திருடுகிறான், சாராயம் கடத்துகிறான், சிறைக்குப் போகிறான், சித்தப்பாவைக் கொலை வெறியோடு துரத்துகிறான், தங்கைகளுக்கு நல்ல அண்ணனாகவும் இருக்கிறான், எல்லாப் பக்கங்களும் கூரான கத்தி போல பளபளப்புடனும் கூர்மையுடனுமிருக்கிறான்.

சிறைச்சாலை அதிகாரிகளிலிருந்து,  நாட்டின் பிரதமர் வரை மிக நல்லவர்களாக இருக்கிறார்கள். நல்ல நிர்வாகமுள்ள நாட்டில் உதவிகள் மிகக் கடைக்கோடிகிராமம் வரையும் வேர்பிடிக்கிறது.  பிரதமர் குறித்த சித்திரிப்புகளைப் பார்த்தால் அவரைப் ‘பிரேமதாச’ என ஊகித்துக் கொள்ளலாம். இது வாசிப்பின் குதர்காமான அனுமானம்தான்.  சிறையிலிருக்கும் சுமனேயின் செயலும், பேச்சும்  பிடித்துப்போகும் சிறையதிகாரி அவனுக்குப் பெரியமீன்களைப் பிடிக்க படகும், வலையும் கிடைக்க ஏற்பாடு செய்கிறார். அவருடையை உதவிகளை பார்த்து சுமனே இவற்றுக்கெல்லாம் உங்களுக்கு எப்படி மறு உதவிசெய்யப் போகிறேன் என்கிறான். ’நீ இங்கு திரும்ப வாராமலிருந்தலே பெரிய உதவி தான்’ என்கிறார். அவன் ஒருபோதும் அங்கு திரும்பிச் செல்லவில்லை. சிறை அவனுடைய சீற்றத்தை எல்லாம் உறிஞ்சிவிடுகிறது. வன்முறையற்ற சிறை, நல் நோக்கங்களையும், சீர்திருத்தங்களையும் முன்வைக்கும் சிறையாகவும் இருக்கிறது. ஆனால், அது எல்லோரையும் சுமனே போல உருமாற்றி விடுவதில்லை.

அம்பரய என்ற மிகச் சிறிய நாவலை வாசித்து முடித்ததும் இதனை எப்படி வகைபடுத்திக் கொள்வதெனச் சிறு குழப்பம் வந்தது.கதை அதிக சிக்கலில்லாத நேர்கோட்டில் செல்கிறது. மொழி கிராம வாழ்வை மிக நுட்பமாகச் சித்திரிக்கின்றது. குறைந்த சொற்களில் பிருமாண்டமான கிராமம் உருப்பெறுகிறது. அதன் இயல்புகளை, செயல்களை, பகடியான பேச்சுகளையும் நாவலில் நுட்பமாக வாசித்துக் கொள்ள முடியும். நாவல் அதன் குறைந்த சித்திரிப்புகளிலும் நுட்பமான கூறு முறையிலும் தனித்துவமாக இருக்கிறது.அதை மொழிபெயர்ப்பாக உணர்ந்து கொள்ள முடியாதவளவு தேவாவின் மொழிபெயர்ப்பு சரளமாக இருக்கிறது. தமிழ்நாவல் போன்றே வாசித்துக் கொள்ள முடியும். அதன் களமும், மனிதர்களும் நாம் மிக நெருக்கி வாசித்துக் கொள்ளும் விரிவுடனிருக்கிறது.

அம்பரய / சுமனே என்ற இந்தச் சிங்களப் கதாபாத்திரமும், மீன்பிடி செய்யும் ஆற்றோரக்கிராமமும்  தமிழுக்குப் புதிதானவை அல்ல. ஆனால், அவற்றின் தனித்துவமான தன்மை  இனவாதத்தின் விஷ நாக்குகள் தீண்டாத ’புனிதவுருக்கள்’ என்பதாக உருவாக்கப்பட்டிருப்பதே. இன்னொரு பண்பாட்டுத் தளத்தில் நாவல் கனதியாக இருக்கிறது. கிராம வாழ்வின் கூடிவாழும் தன்மையை, அதன் குரோதமும், அன்பும் படரும் மேன்மையைப் பேசுகின்றன. கிராமம் மீண்டு செல்ல நினைக்கும் கனவின் வழித்தடமாகவும் இருக்கிறது. இனவாதம் போரலையாக சிறுபான்மையினங்கள் மீது கொடூரமாக ஆதிக்கம் செய்யத் தொடங்கிய காலத்தினை புனைவினூடு சொல்லும் போது அதன் விஷ நாக்குகள் தீண்டாததாக கிராமம் நம் முன்னே விரிகிறது. இனவாதத்தின் பேரலையில் சிதைத்திருக்கும் சமூகச் சட்டகங்கள், கிராமிய வாழ்வும், அதிகாரத்தின் நெருக்கமான கண்கானிப்பில் இருக்கும் நம் சூழலிலிருந்து இந்த நாவலை வாசிப்பதினூடு நாம் இனவாதம் தீண்டாதவொரு காலத்தை வாசித்துக் கொள்ளலாம். நாவல் சொல்லும் வாழ்வை மறுத்தவொரு காலத்தில் வாழவே நமக்கு வாய்த்திருக்கிறது. அதுவே பேரழிவான போரை நமக்குக் கொடுத்திருக்கிறது.

சிங்களத்திலிருந்து தமிழுக்கு மிகக் குறைவான படைப்புகளே மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. இரண்டு மொழிச் சமூகங்களும் கருத்துக்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட முடியாதவொரு சிடுக்கான சூழலிலேயே இந்த மொழிபெயர்ப்புகள் அவசியமானதாக இருக்கின்றன.  சல்வீனியா போல இனவாதத்தின் அடரிலைகள் மூடியிருக்கும் பொதுவுரையாடல் வெளியை இனவாதக் கருத்துகளே நிரப்பியும் கொள்கின்றன. அம்பரய போன்ற நாவல்களை  நாம் இன்னும் வலிமையாக மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. புனைவுகளை மொழிபெயர்ப்பதனூடாகவும் அவற்றை உரையாடுவதனூடாகவும்  இனவாதச் சிக்கல்களுக்கான பன்முகவெளியைத் திறந்து கொள்ளலாம். சுய வரலாற்றுப் பெருமிதங்களிலும், போலிக் கற்பிதங்களிலும் திளைத்திருக்கும் பொது உரையாடல் வெளியில் சுமனோயைப் போன்ற தன்னைத் தானே வழிநடத்திச் செல்லும் கதாபாத்திரத்தின் வருகையே தேவையாயிருக்கிறது. அவனாலேயே இனவாதச் சல்வீனியாவை விலத்தி நல்ல கொழுத்த தம்பலையாவைப் பிடித்துக் கொள்ள முடியும்.

0

நன்றி: தர்மு பிரசாத்,  புதிய சொல்

10 Feb

அம்பரய

மனிதர்களின் நம்பிக்கைகளை கேள்வி கேள். நீ கலகக்காரனாவாய், ஆனால் ஒரு போதும் அவர்கள் நம்பிய மனிதர்களை கேள்வி கேட்காதே. நம்பிக்கையின் பேரால் நீ வெறுத்தொதுக்கப்படுவாய். காரணம், அவர்கள் நம்புவது நம்பிக்கைகளை அல்ல. நம்பிக்கைகளைச் சொன்ன மனிதனை. அவன் கடவுளாக்கப்பட்டு அவன் பெயரால் ஸ்தோத்திரங்களும் வைக்கப்பட்டால் மூச்சுவிடாதே. கடவுளை அவமதிப்பது எதற்குச் சமம் என்று யோசி. மனிதர்களிடம் பேசு, ஏன் பக்தர்களிடம் கூடப் பேசு, ஆனால் பூசாரிகளிடம் பேசிவிடாதே. அவர்கள் அடுத்த கடவுளாக காத்திருப்பவர்கள். உன்னைப் பலிகொடுப்பதன் மூலம் அவர்கள் கடவுளாக மாறிவிடும் அபாயத்தை நீ வழங்கிவிடாதே.

நிற்க.

தஸ்தாயெவ்ஸ்கியை சீட்டாடும் இயேசுவாக மட்டுமே அடையாளம் கண்டு வந்திருந்தேன்.  தஸ்தாயெவ்ஸ்கியை எப்படி அடையாளம் காணுவது, தமிழ்ச் சூழல் அவருக்கு  எண்ணற்ற ஸ்தோத்திரங்களை இயற்றியிருக்கிறது. பக்தர்களின் முன் பகுத்தறிவாளானாக எப்படி நிற்பது. அடையாளங்கள், குறியீடுகள், என வார்த்தைகளை கலைத்துப் போட்டு மானிடரை அடையாளம் காட்ட வந்தவராய், அவரை முன்னிருத்துகையில், தஸ்தாயெவ்ஸ்கியை கேள்வி கேட்பதும், சந்தேகம் கொள்ளுவதும் நம்மை சிலுவையில் அடிக்க அவர்களுக்கு நாமே வாய்ப்புத் தருகிறோமே என்ற சந்தேகத்தால் அலைக்கழிந்திருக்கிறேன்.

ஆனால், அவை அத்தனையையும் மீறி பிடிக்காததை பிடிக்காது என முகத்தில் அறைந்தார் போல் சொல். அதற்கும் முன்னதாக நீ அறிந்து கொண்ட அனைத்தையும், அதனை அறிமுகப்படுத்திய அனைவரும் மனிதர்கள், சார்பு நிலை கொண்டவர்கள் என்பதை மனதில் கொள். வியாக்கியானங்களை விடுத்து, மாற்றத்திற்கான சாவிகளைத் தயாரிப்பவர்களை, அது கள்ளச்சாவிகளானாலும், பரவாயில்லை கண்டுகொள் என்கிற பிடிவாதம் மட்டுமே ஈவு இரக்கம் இல்லாமல் என்னை வாசிக்கவும் வாசித்தபின்பு அதாற்கான கேள்விகளையும் வைக்கத்தூண்டியது.

ஒருவழியாக தஸ்தாவெஸ்கியை எப்படி புரிந்துகொள்வது என எனக்குக் கற்றுக்கொடுத்தவர் மக்சீம் கார்க்கி.

“தஸ்தாயெவ்ஸ்கி உண்மையைத் தேடுபவர் என்று அழைக்கப்படுகிறார்; அவர் தேடினார் ; உண்மையைக் கண்டார்; எல்லாம் உண்மைதான்; ஆனால் மனிதனின் விலங்குத்தனமான இயல்பூக்கங்களுக்கு மத்தியில் உண்மையைக் கண்டார். அப்படிக் கண்டுபிடித்தது, அவற்றோடு போராடி அவைகளை அழிப்பதற்கு அல்ல; மாறாக அவைகளை ஞாபகப்படுத்துவதற்கும், காரண காரியம் கூறி விளக்குவதற்காகவுமே. ”

கார்க்கியின் இந்த வாக்கியங்கள் என் வாசிப்பை இன்னும் கூர் தீட்டியது. வாசிப்பது என்றால் என்ன என்பதையும் சுட்டிக்காட்டியது.

‘அம்பரய’ நாவலின் மொழி தஸ்தாவ்யெஸ்கியும் டால்ஸ்டாயும் சேர்ந்து எழுதியது போல் இருக்கிறது. ஆனால் அதன் உள்ளடக்கம் மக்சீம் கார்க்கியினுடையதாக இருக்கிறது. அவநம்பிக்கைகளை முன்வைத்து நகரும் கிறிஸ்துவுக்கு அங்கு எந்த இடமுமில்லை. பாவப்பட்ட கிறிஸ்துவையோ, நம்பிக்கைகளை, மதச்சொற்களால் கட்டும் கிறிஸ்துவையோ காணமுடியவில்லை. ஆனால் மனிதன் எத்தகைய அற்புதமான சொல் எனச் சொன்ன கார்க்கியின் மனிதனைக் காணமுடிகிறது. நாவல் நெடுக அம்பரய தன்னைத்தானே வழிநடத்திச் செல்லுகிறான். அவனே சிறுவனாகவும், முழுமனிதனாகவும் நடந்து செல்கிறான்.

பொறாமை வெற்றியாளனிற்கான மரியாதையால் அழகாக மூடிமறைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் மூலம் அம்பரய எனும் சுமனேவின்  வாழ்வு இழப்பிலிருந்தும் அலைச்சலிலிருந்துமே தொடங்குகிறது. அச்சிறுவனின் ஆகப்பெரிய கனவுகள் சந்தர்ப்பங்களைத் திசைமாற்றுகிறது. பழிவாங்கப்பட்ட மனநிலையால் அவன் அலைவுறும் வாழ்க்கையில் நம்பிக்கையை அவன் எங்கிருந்து பெற்றான் என்பதற்கு நாவலில் எந்த வார்த்தைகளும் கடவுளின் பெயரைச் சொல்லிக் கூவவில்லை. சுமனே சுமனேவிடமிருந்தே அனைத்தையும் பெற்றான் இழந்தான். பெற்றதும் இழந்ததும் சகமனிதர்களால்  மட்டுமே. மேலும் முக்கியமாக சூழலை விதைக்கவும் அறுக்கவுமாக இருக்கும் மனிதர்களாக சூழப்பட்ட ’ ‘அம்பரய’ வின் உலகம்தான் நாவல். கெட்டவர்களாக அறிமுகம் செய்துகொள்கிறவர்களும், நல்லவர்களாக அடையாள அட்டைக் கட்டிக்கொள்பவர்களும் அவ்வுலகத்தில் நிறைந்து இருக்கிறார்கள். சிறுவனாக இருக்கும் அவனுக்குள் பெரியமனிதர்களின் வலிகளும் கடமைகளும்தான் அவனது அலைச்சலை நிர்ணயிக்கின்றன.

அம்பரய

சிறுவன்

ஆம்பல் தேடி அலைகிறவன்

கொலைகாரனின் மகன்

சுற்றியிருக்கும் மனிதர்களில் இத்தகைய அடையாளங்களோடு தன்னை பார்வைக்கு வைத்த அந்த சிறுவன், ஒரு முழுமனிதனின் நம்பிக்கையை தன் பதின்மவயது பருவத்தில் நடந்து கடக்கிறான்.

மொழிபெயர்ப்பை பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. மொழிபெயர்ப்பாகவே தெரியவில்லை.

 

அம்பரய

சிங்கள் நாவல்

ஆசிரியர் உசுல.பி.விஜய சூரிய

தமிழில் தேவா

வடலி வெளியீடு

விலை; 110