18 Oct

காத்திரமான படைப்பு மரணத்தின் வாசனை

கிளிநொச்சியை சேர்ந்த புலம் பெயர் எழுத்தாளரான தட்சணாமூர்த்தி அகிலனின்(த.அகிலன்) மரணத்தின் வாசனை சிறுகதை நூல் நேற்று(2016.09.16) கிளிநொச்சியில் படைப்பாளர்கள் வாசகர்கள் மத்தியில் உரையாடல் செய்யப்பட்டது.கிளிநொச்சி மத்திய கல்லாரியில் மாலை 3.30 மணிக்கு எழுத்தாளரும் ஆசிரியருமான ஜோயல் பியசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் படைப்பாளர்களான பொன்.காந்தன் சி.ரமேஸ் ப.தயாளன் வேல்.லவன் மு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரையாடினர்.

இதில் கலந்துகொண்ட கவிஞர் பொன்.காந்தன் நூல் மீது கருத்துக்களை வைத்து உரையாற்றுகையில் அகிலன் மிக துணிச்சலாகவும் கிளிநொச்சி மண்ணின் ஆத்மாவை பிரநிதிதுவப்படுத்தியும் இந்த நூலில் படைத்துள்ளார்.ஈழத்து இலக்கியத்திற்கு ஒரு கிளிநொச்சியானின் மிகவும் காத்திரமான படைப்பாக இதை கருதலாம்.நாம் தூக்கி கொண்டாடக்கூடிய படைப்பு.பொக்கிசம்.

அகிலனை சின்னப்பையனாக எனக்குத் தெரியும் அவனின் உணர்வுகளை நான் அறிவேன். கிளிநொச்சி மத்தி கல்லூரியில் கல்வி கற்றிருந்த அகிலனின் எழுத்துக்கான முனைப்பை பாத்திருக்கின்றேன்.

கிளிநொச்சி எழுத்துக்களுக்கு மரணத்தின் வாசனை புதிய வாசனை.நாம் எழுத நினைத்ததை.அல்லது நாம் நினைத்துக்கொண்டிருக்கிற எழுத்தை அகிலன் ஆழமான மொழி நடையில் பதிவு செய்துள்ளான்.அகிலனை ஒருமையில் அழைக்க காரணம்.அவன் நான் பார்க்க வளர்ந்த பையன்.நான் படித்த கிளிநொச்சி மத்திய கல்லூரியில் அவனும் படித்தான்.அவன் சந்தித்த மனிதர்களை நானும் சந்தித்தேன்.

மண்ணின் ஆத்மா மரணத்தை பற்றி அவன் எழுத்துக்களில் பேசுகின்றது. நீண்ட காலத்துக்கு பின் மனதை நெருடுகிற கதை களம். அவல நாடகங்களில் வருவது போல பாறைகளின் கீழ் நசியுண்டு சாகின்ற நாயகர்களை போல அவன் எழுத்துக்களில் மனிதர்கள் அலைகின்றார்கள். ஒரிடத்தில் அமராத வாழ்வின் இழந்து இழந்து போகின்ற ஏக்கம் இழையோடுகின்றது எங்கும். கிளிநொச்சி அது சந்தித்த போர்க்காலங்கள் ஆக்கிரமிப்புக்கள் ஆக்கிரமிப்பின் மீதான போர்கள். போர்களில் வீழ்ந்த மனிதர்கள். அவர்களின் வலி துரத்தும் வாழும் மனிதர்களின் ஏக்கம்.இன்னும் நிரவப்படாது இருக்கும் உள்ளத்தில் காயங்கள். மரணத்தின் வாசனையில் பயணப்படுகின்றது. ஒரு கிளிநொச்சியானாக புறப்படுகின்ற த.அகிலனின் மரணத்தின் வாசைன ஒரு மன்னார்காரனாக ஒரு யாழ்ப்பாணத்தானாக ஒரு மட்டக்களப்பானாக ஒரு முல்லைத்தீவானாக திருக்கோணமலையானாகா அம்பாறையானாக மரணத்தின் வாசனையை முகரச்செய்யத்தூண்டுகிறது எழுத்து.

இந்த நூல் பற்றிய உரையாடலில் ஆழமான கருத்துக்களை ஆய்வுகளை உரையாடியோர் முன்வைத்ததுடன் எழுத்தாளர்கள் கவிஞர் கதிரோவியன், பாலா மாஸ்டர், கருணாகரன், பெரு.கணேசன், விஜயசேகரன், பங்கயற்செல்வன், அன்ரன், அன்பழகன் உள்ளிட்டவர்கள் உரையாடல்கள் பற்றிய தங்கள் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டனர்.

நன்றி:  telo.org (18 September, 2016)

07 Oct

மரணவெளியில் உலாவரும் கதைகள்

மரணவெளி.. அழகானது.

எப்போதும் எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் மரணவெளி.

மரணவெளி மாறாதது என்பதுடன் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டதும் கூட.

மரணம் காலத்தை வென்ற காலச்சூத்திரம்.

புத்தனும் ஏசுவும் சித்தர்களும் மரணவெளியில் நட்சத்திரங்களாக இருந்தாலும்

நிகழ்காலத்தின் முன் அவர்கள் கடந்தகாலமாக இருப்பது மட்டுமே மரணம்’

காலத்தை வென்று நிற்கும் காலச்சூத்திரத்தின் முதல் விதி.

பூமியைப் போல உயிரினங்கள் வேறு எந்த கிரஹத்திலாவது இருக்கிறதா என்பதைத் தேடும் அறிவியல் உலகம், அங்கெல்லாம் மரணத்தின் சுவடுகள்

இருக்கிறதா என்பதையே தேடிக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் மரணத்தின்

சுவடுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் வாழ்க்கையின் தடங்களும் இருக்கும்,

‘இருக்கிறது..!

 

மரணத்தைப் பற்றிய அச்சமோ ஆச்சரியமோ கடவுளைக் கற்பித்தது.

கொண்டாட வைத்தது. கடவுளும் மரணத்திலிருந்து தப்ப முடியாது என்பதை

தத்துவமாக்கியது. அந்த தத்துவத்தின் ஊடாக வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் மனநிலையை மண்ணில் விதைக்கவே பாடுபட்டது.

இப்படியாக எப்போதும் மரணம் அழகானதாகவும் அதிசயமானதாகவும்

சித்தர்களின் சித்துவேலைக்குள் அகப்படாத பரம்பொருளாகவும்

பிரபஞ்ச வெளியாகவும் எப்போதும் நம் கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது.

 

மரணத்தைப் பற்றி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை.

நினைக்காத மனிதர்கள் இல்லை.

வெ.இறையன்பு அவர்கள் எழுதிய நாவல் “சாகாவரம்” முழுக்க முழுக்க மரணத்தைப் பற்றி ஒரு நாவல். மரணத்தை வென்ற சிரஞ்சீவி வெளியைத் தேடும் நசிகேதனின் கதை. வேதாளம் சொன்ன கதைகளின் உத்தியில்

14 வரிப்பாடலில் மரணத்தை வென்ற சிரஞ்சீவி வெளியை அடையும்

குறிப்பு சொல்லப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாடலாக வாசித்து வழி

கண்டுபிடித்து அந்த சிரஞ்சீவி வெளிக்கு வரும் போது அந்த இடம்

எப்படி இருந்தது என்பதை மிகச் சிறப்பாக விளக்கி இருப்பார்.

இறந்தகாலமோ எதிர்காலமொ இல்லாத தட்டையான நிகழ்காலம்.

மரங்கள் புதிதாகப் பூப்பதில்லை, இலை உதிர்வதில்லை, பாடாத பறவை,

இயக்கமில்லாத ஜடமான இயற்கை, பசி இல்லை, இரவு இல்லை,

மூப்பு இல்லை, உணர்வுகள் இல்லை, உறவுகளில் அர்த்தமில்லை,

காதலோ காமமோ இல்லை அது மரணத்தை வென்ற சிரஞ்சீவி வெளி அல்ல

என்பதை நசிகேதன் புரிந்து கொள்ளும் போது மரணம் வாழ்க்கையின்

ஜீவனாகிவிடுகிறது!

 

அதைப் போலவே மரணம் குறித்து வெ. வண்ணநிலவன் எழுதிய ‘பிணத்துக்காரர்கள்’ கதையையும் சொல்ல வேண்டும். அனாதைப் பிணங்களை எடுத்து வந்து சாலைகளில் வைத்து பிச்சை எடுக்கும் நான்கு மனிதர்களைப் பற்றிய கதை. ஆண் பிணத்தைவிட பெண் பிணத்திற்குத்தான் அதிகப் பிச்சைக் காசு கிடைக்கும் என்பதைப் போகிற போக்கில் உரையாடல்கள் மூலம் சொல்லிச் சென்ற கதை வாசித்து பல வருடங்கள் ஆனபின்பும் அக்கதையில் வரும் விளிம்பு நிலை மாந்தர்களின்

அந்த வாழ்க்கை அவலம் சாலையோரத்தில் நாம் கடந்து செல்லும்

அந்த மனிதர்களைப் பற்றி யோசிக்க வைத்த கதைகளில் முக்கியமானது.

 

இத்துடன் இப்போது இந்த வரிசையில் சேர்ந்திருக்கும் இரு சிறுகதை தொகுப்புகள் மரணம் குறித்த விசாலமான பார்வையை வைக்கின்றன

ஒன்று: த, அகிலன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு: : மரணத்தின் வாசனை:

அதன் குறுந்தலைப்பாக:  போர் தின்ற சனங்களின் கதை.

 

த. அகிலன் ஈழ சமூகத்தில்; 1983ல் பிறந்தவர். அவர் காட்டும் கதை மாந்தர்கள்

போர்க்களத்தில் மாண்டவர்கள் அல்லர். இன்னும் சொல்லப்போனால் ஈழ

விடுதலைப் போராட்டத்தின் போராளிகளும் அல்லர். ஆனால் அந்தச் சனங்களை போர் தின்று துப்பியது. அந்தப் போர்க்கால சூழலில் தன் வீட்டு நாய் முதல் மிளகாய்க் கண்டுகள் (இளம் மிளகாய்ச்செடி) வரை தங்கள் வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட இழந்துப் போன மனிதர்களைப் பற்றிய கதைகளின் தொகுப்பு. மரணமும் அது குறித்தான செய்திகளும் ஒரு கொடுநிழலைப் போல மனிதர்களைத் துரத்திக் கொண்டிருக்கும் கதை.

ஒவ்வொரு கதையும் வெவ்வேறானவை. அந்தக் கதைகளில் தான் கும்பிட்ட

அம்மனைத் தேடி வரும் “ஓர் ஊரில் ஒரு கிழவி’ கதை பிற கதைகளிலிருந்து வித்தியாசமானது. அக்கதை போர் தின்ற சனங்களின் கதை மட்டுமல்ல,

அந்த சனங்களின் வாழ்க்கையாகவும் வாழ்வின் நம்பிக்கையாகவும் இருந்த

பிம்பங்களை உடைத்து நொறுக்கியதன் வலி தாங்க முடியாத அலறலாக

நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

தன் காணியை காணியில் இருந்த கோவிலைத் தேடி வரும் அம்மம்மா.

அவள் பார்த்தக் காட்சி அங்கே காணியுமில்லை, கோவிலுமில்லை. எல்லாம்

உடைந்து சிதிலங்களாக. :

“என்ர ஆச்சி, தாயே, உன்னை இந்தக் கோலத்திலயா பாக்கோணும்,’ வாய் வார்த்தைகள் குழற குமுறி குமுறி தன் நேசத்தை எல்லாம் தீர்த்துவிடுகிற மாதிரி அழுகிறவள் இறுதியாக ஆவேசம் வந்தவள் போல அடுத்து சொல்லும்

வரிகள் வாசகனை உலுக்கி விடுகின்றன

 

‘வேசை, உன்னை இந்தக் கோலத்திலேயோடி நான் பார்க்கோணும், தோறை தோறை அறுந்த வேசை உன்னை இப்படி நான் பார்க்கோணும் எண்டுதானே என்னை உயிரோட வைச்சிருந்தனி”

 

மரணத்தின் வாசலில் பிறந்து அந்த மரணத்தின் வலியை வேதனையை

ஒவ்வொரு பருவத்திலும் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் கதையாகவே அகிலனின் கதைகள் இருக்கின்றன.

போர் இலக்கிய வரிசையில் மட்டுமின்றி மரணம் குறித்த படைப்புகளிலும்

அகிலனின் இக்கதை தொகுப்பு தனித்த ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது.

 

இரண்டாவதாக அண்மையில் நான் வாசித்த இன்னொரு கதை தொகுப்பு

இல. சைலபதி அவர்களின் “அப்துல்காதரின் குதிரை” என்ற சிறுகதை தொகுப்பு.

சென்னையில் அவரை நேரில் சந்திக்கும் போது கொடுத்தார். கொஞ்சம் தாமதமாகவே வாசித்தேன் என்றாலும் அக்கதைகளின்  ஊடாக சைலபதி

வைத்திருக்கும் மரணம் குறித்த விசாரனைகள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தின.

கதைகளின் ஊடாக அவர் என் கருத்துகளுக்கு முரணான பகுத்தறிவுக்கு ஒவ்வாத சில நம்பிக்கைகளை முன் வைத்திருந்தாலும் அந்த நம்பிக்கைகள்

அனைத்தும் தனிநபர் சார்ந்த நம்பிக்கைகளாக மட்டுமே காட்டப்படுகின்றன.

அந்த நம்பிக்கைகளின் ஊடாகவே அவர் மரணத்தையும் பார்க்கிறார். ஒரு சிறுகதை தொகுப்பில் அனைத்து கதைகளும் மரணம் குறித்த கதைகளாக

இருப்பது தற்செயலா?   அல்லது திட்டமிட்ட ஒரு தொகுப்பா?

அதிலும் அவருடைய முதல் தொகுப்பு இந்நூல் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

 

மரணமே கதைகளின் கருப்பொருளாக அந்த மரணத்தை மனிதர்கள்

உணரும் தருணங்களும் அணுகும் விதமும் சுயம் சார்ந்த அனுபவங்களுக்கு அப்பால் ஒரு மூன்றாவது மனிதனாக நின்று பார்க்கும் பார்வையுடனும்

கதைகள் நகர்கின்றன. மரணத்தைப் பற்றி இத்தனை விதங்களில் சொல்லத்

தெரிந்த ஒரு கதைசொல்லியாக சைலபதி இருக்கிறார் என்பதுடன் தன்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் மரணம் குறித்தும் அந்த மரணத்தைச் சுற்றி

இருக்கும் மனிதர்களைக் குறித்தும் அவருக்கென ஒரு சுயமான பார்வையைக்

கொண்டிருக்கிறார் என்பது இக்கதைகளின் மூலம் அவர் அடைந்திருக்கும்

முதல் வெற்றி எனலாம்.

அதிலும் குறிப்பாக ‘துஷ்டி’ என்ற கதை.

 

மரணத்தை கிராமத்தில் வாழ்பவர்கள் அணுகும் விதமும் நகரத்தில் வாழ்பவர்கள் அணுகும் விதமும் மிகவும் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கும் கதை. கிராமத்தில் ஒரு வீட்டில் மரணம் என்றால் அன்றைக்கு ஊரார் கூடி

அழுது அந்த வீட்டில் கொட்டிக்கிடந்த துயரத்தை ஆளுக்கு கொஞ்சமாக

அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள் என்கிறார்.அவர்கள் அழுகைகள் பிய்த்து’

தின்றது போக மிச்சமிருந்த துயரம் தான் அதன் பின் மரணம் சம்பவித்த

‘வீட்டில் அந்த வீட்டாருடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அதுவே அவர்கள்

வாழ்க்கையை நகர்த்தும் உந்துசக்தியாக மரணத்தின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் கிராம வாழ்க்கையின் பண்பாடாக காட்டுகிறார்.

இந்தப் பண்பாட்டிலிருந்து நகர்ப்புற வாழ்க்கையும் நகர மாந்தர்களும் எவ்வளவு தூரம் விலகி வந்துவிட்டார்கள் என்று துஷ்டி கதையில் வரும் அம்மா அல்லாடுகிறாள். தன் மரணத்திற்குப் பின் தன் பிள்ளைகளுக்கு அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று எண்ணி தன் மரணம் நகரத்தில் நடந்தேறிவிடக்கூடாது. என்று தீர்மானிக்கிறாள். கிராமத்திற்கு மீண்டும் அந்த

தன் கடைசிநாட்களில் அவள் போக விரும்புவதன் நோக்கமே இதுதான்.

‘செத்தவனுக்கு ஒரு கணம் தான். ஆனா அவன் கூட வாழ்றவங்களுக்குக் காலம்பூரா அது ஒரு சும. செத்தப்பவே அழுது தீர்க்கலைன்னா அது ஆயுசுக்கும்  அவங்க மனசு விட்டுப் போகாது. சாவ அன்னயோட அழுது தீர்க்கனும்’ என்று மரணத்தை அணுகும் முறையை அந்த அம்மாவின் மொழியில் தத்துவ பீடங்களின் மீது ஏறாமல் மிக எளிதாக சொல்லிவிடுகிறார்..

 

சைலபதியின் கதைகளில் வரும் மரணம் துஷ்டி வீடுகளில் துக்கம் விசாரித்துவிட்டு வரும் மரணம். நம் பக்கத்து வீட்டில் நம்முடம் நேற்றுவரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த மனிதரின் மரணம். ஆனால் போர்தின்ற சனங்களின் கதையில் த. அகிலன் எழுதியிருக்கும் மரணம் , மரணமே

எழுதிய மரணத்தின் கதைகள். மரணத்தின் வாசனை, அழுது தீர்க்க முடியாத

காலம் பூரா நாம் சுமக்க வேண்டிய மரணத்தின் வலியாக கனக்கிறது.

மரணத்தின் வாசலில் இவர்களின் இந்தக் கதைகள்

மரணத்தைப் போல வாழ்க்கையின் நிஜங்களை விட்டு அகலாமல்

இருப்பதால் வாசகனுக்கு ரொம்பவும் நெருக்கமாகிவிடுகின்றன.

 

நன்றி: புதிய மாதவி

07 Dec

மரணத்தின் வாசனை- ஒரு அறிமுகம்

அகிலனின் மரணத்தின் வாசனை கனடாவில் வெளியிடப்பட்டு, அது என்னுடைய கையுக்குக் கிடைத்து 2 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் ஒருவாறு வாசித்து முடித்திருக்கிறேன். ‘போர் தின்ற சனங்களின் கதை’ என்கிற உபதலைப்போடு, வடலி பதிப்பகத்திடமிருந்து வெளியாகியிருக்கிற அகிலனின் பன்னிரண்டு சிறுகதைகள் அல்லது அனுபவத் தூறல்களின் தொகுப்புத்தான் ‘மரணத்தின் வாசனை’.

 

 • ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்
 • ஒரு ஊரில் ஓர் கிழவி
 • மந்திரக்காரன்டி அம்மான்டி
 • குமார் அண்ணாவும் மிளகாய்க்கண்டுகளும்
 • ஒருத்தீ
 • சித்தி
 • நீ போய்விட்ட பிறகு
 • சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்
 • தோற்ற மயக்கங்களோ
 • கரைகளிற்கிடையே
 • செய்தியாக துயரமாக அரசியலாக
 • நரைத்த கண்ணீர்

 

மேற்சொன்ன தலைப்புகளில் படைக்கப்பட்டிருக்கிற படைப்புகள் அத்தனையிலும் ஒரேயொரு ஒற்றுமை இருக்கிறது. அது ‘மரணத்தின் வாசனை’. முதலில் வருகிற ‘ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்’ கதையில் நாசி துளைக்கிற அந்த வாசம், அம்மம்மா, சித்தி, நண்பன் தொடக்கம் நேசித்த நாய் எனப் பல தாங்கிகளில் வந்தாலும் புத்தகத்தை மூடிவைத்த பின்னரும் விலகாமல் இருக்கிறது.

 

எல்லா மரணங்களுக்கும் பொதுவான ஒரே விஷயமாக இருப்பது, போர். நீண்ட கொடும் போர். மண்ணில் மரங்களைக்கூட வேரூன்றவிடாமல் விரட்டியடிக்கிற போர். சனங்களைத் தின்கிற போர். அந்தப் போரின் காரணமாக அகிலனும் முண்டியடித்து ஓடுகிறார். அந்த ஓட்டத்தில் அவர் சந்திக்கிற சாவுகள்தான் இங்கே கதைகளாக உருப்பெற்றிருக்கின்றன. பல சமயங்களில் நாங்கள் மறந்துபோய்விட்ட, அல்லது மறந்துபோய்விட்டதாய் நாங்கள் நம்ப முயன்றுகொண்டிருக்கிற எங்களின் வாழ்வியல்க் கோலங்களை அகிலன் தொட்டுச்செல்கிறார், கூடவே பக்கச்சார்பு குறைவான ஒரு சாதாரண ‘தமிழ்ப் பொடியன்’ கண்ட அரசியலையும்தான்.

 

அகிலனின் ஒவ்வொரு கதையிலும் ஈழத்தில் ஒரு இருபது வருடம் காலம் கழித்தவன் என்கிற ஒரு தகுதியில், என்னை இணைத்துப் பார்க்க முடிகிறது. அகிலன் போன்றோர் அனுபவித்த துயரங்களை நான் அனுபவித்திருக்கவில்லை. ஆனாலும் அவர் சொல்கிற கதைகளின் பின்னணிகள் என்னுடன் ஒட்டியதாய் இருப்பதாக ஒரு மன ஓட்டம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அகிலன் அனுபவித்த பல இன்பதுன்பங்கள் எனக்கு நேரடியாகக் கிட்டவில்லை. ஆனால் ஒரு பார்வையாளனாகவாவது பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

 

அகிலன் இரண்டுபேரை வைத்தியம் கிடைக்காத காரணத்தால் இழந்திருக்கிறார். அவரது அப்பா, வைத்தியசாலைக்குக் கொண்டுபோகமுடியாமல் இறந்திருக்கிறார். (ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப்போகிறார்). இளமையில் அப்பா செத்துப்போனார் என்பதைவிட, ‘அப்பா வைத்தியம் கிடைக்காமல் செத்துப்போனார்’ என்கிற ஒரு அங்கலாய்ப்பு அகிலனிடமிருந்து வருகிறது. அவரது சித்திகூட இப்படியாக வைத்தியசாலையில் மருந்து கிடைக்காமல் செத்துப்போகிறார். அந்த மரணமும் அகிலனின் மனதில் ‘சித்தி மருந்து கிடைக்காமல் செத்துப்போனா’ என்றுதான் விதைத்துச் செல்கிறது. எனக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையில், விசக்கடியில் தப்பிப் பிழைத்து, காய்ச்சலுக்கு மருந்தில்லாமல், இரண்டு வயதும், ஒரு வயதும் நிரம்பிய இரண்டு சின்னைப் பையன்களைத் தவிக்கவிட்டு இறந்துபோன ஸ்ரீ அண்ணா மனதில் வந்து போகிறார்.

 

கணவன்/காதலனால் கைவிடப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றியும் அகிலன் சொல்லிப்போகிறார் (ஒரு ஊரில் ஓர் கிழவி, சித்தி). அந்தப் பெண்களிடம் இயல்பாகத் தொற்றிவிட்ட பிடிவாதம் போன்றவற்றையும் தொட்டுச்செல்கிறார். அதுவும் யார் வீட்டிலும் நிலையாகத் தங்காமல், அங்கும் இங்குமாக அலைபாய்ந்து திரிகிற, உறவினர்களால் ‘அடங்காப்பிடாரி’யாகப் பார்க்கப்படுகிற அவரது ‘சித்தி’யின் உருவில் நான் என்னுடைய மாமியைப் பார்க்கிறேன். அம்மனுடன் சகோதரியாக, தாயாக, மகளாக ஏன் ‘வேசை’ என்று விளிக்குமளவு உரிமையுள்ளவளாகப் பழகும் அவரின் அம்மம்மா (ஒரு ஊரில் ஓர் கிழவி) எனக்கு எங்களூர்க் கிழவிகள் சிலரைக் கண்முன் நிறுத்துகிறார். அம்மாவிடம் அடிவாங்காமல் சின்னப் பொடியனைக் காப்பாற்றும் அக்காக்கள் ஊரெல்லாம் பரவி இருந்திருக்கிறார்கள். தம்பிகளைப் பிள்ளைகளாய் வளர்க்கும் அந்த உறவுகளைப் பற்றிய எண்ணக் குவியல்களை மீட்டு வருகின்றன அக்காக்கள் பற்றி பெரும்பாலான கதைகளிலும் அகிலன் காட்டும் பிம்பங்கள்.

 

அவர் சொல்கிற ஜாம் பழம், வீரப்பழம் போன்ற பழங்கள் எனக்கு எங்கள் உறவுகள் இருந்த முரசுமோட்டையை ஞாபகப்படுத்திச் செல்கின்றன. எங்கள் சின்ன மாமா வீட்டில் ஒரு ஜாம் பழ மரம் இருந்தது. ராஜி அண்ணா ஏறிப் பறித்துத் தருவான். மறக்கமுடியாது. அந்த மரத்தின் கீழ் முதன் முதலாக சின்ன மாமாவிடம் கேட்டுவாங்கிச் சுவைத்த சுருட்டையும். நேமி அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு போய் வந்த அந்தக் கோவில் திருவிழா, எனக்கு அருகில் வந்து அடிப்பதுபோல் பாவனை காட்டிக் காட்டி மேளம் அடித்த அந்த மேளக்காரர், ஒரு கட்டைக்கு ஒன்றாக இருக்கிற வீடுகள், 2004ல் கிரிக்கெட் விளையாடிய அந்த விவேகானந்தாப் பள்ளிக்கூட மைதானம், இவ்வளவு தூரம் அடிக்கிறியள் என்று வியந்த பெறாமக்கள், இரவில் படுத்துறங்கிய அந்தக் கொட்டில்….. முற்றுமுழுதாக வன்னியில் வாழாவிட்டாலும், அவர்களின் இந்த வாழ்வியல் எனக்குப் பிடித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் காணாத ஒரு சுகமான வாழ்வு அங்கே இருந்தது.

 

இந்தத் தொகுப்பிலேயே என்னைப் பாதித்த கதை ‘தோற்ற மயக்கங்களோ’. மேலோட்டமாகப் பார்த்தால் அந்தக் கதையில் மரணம் இல்லையோ என்று தோன்றும். ஆனால், நுண்ணிய பாதிப்பைத் தரவல்ல இரண்டு ஜீவன்களின் மரணத்தை அகிலன் அந்தக் கதையில் படம்பிடித்திருந்தார். அவர் செல்லப் பிராணிகளுக்கு வைத்த பெயர்கள், அதை எங்கிருந்து பெற்றார் என்பதெல்லாம் எங்கள் பால்யகாலச் சுவாரஸ்யங்கள். நானும் ‘டெவில்’ என்றொரு நாயை பாலில் எறும்பெல்லாம் போட்டு ஊட்டி வளர்த்தேன். என் ‘டெவிலை’யும் யுத்தம் பிரித்தது, வேறுவிதமாக.

 

அகிலனின் எழுத்தில் ஒரு அப்பாவித்தனம் இழையோடிக் கிடக்கிறது. அந்த அப்பாவித்தனம்தான் அவரது பலமும், பலவீனமும். இப்படி அப்பாவித்தனமான எழுத்துக்களை ‘மேதாவிகள்’ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதனால் அகிலனின் இந்தப் படைப்பு ஒதுக்கப்படலாம், இன்றைய மேதாவி இலக்கியச் சூழலில். ஆனாலும், அந்த அப்பாவித்தனத்தினூடே ஊமைக் குசும்பனாக அவர் பேசும் அரசியல் எனக்குப் பிடித்திருந்தது. நண்பன் ஒருவனின் மரணம் பற்றிய ‘சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்’ என்கிற கதையில் அவரது நண்பன் கேசவன் போர் காரணமாக ஆறு வருடங்களாக இடுப்புக்குக் கீழ் இயங்காமல் போய் இறந்திருப்பான். அந்தக் கதையில் சில இடங்களில் அகிலன் நுட்பமாக அரசியல் பேசுகிறார். இடுப்புக்குக் கீழே உணர்ச்சியற்றிருக்கும் கணவர்களைச் சுமக்கும் அக்காமார்களின் ‘தியாகம்’ என்று கட்டமைக்கப்பட்ட வாழ்வைத் தொட்டுக்காட்டி, பல விஷயங்களை எங்களின் சிந்தனைக்கு விட்டுச்செல்கிறார்.

 

ஆறு வருடமாகப் படுக்கையில் கிடந்த கேசவனின் மரணத்தில், அவனது அவஸ்தையிலிருந்தான விடுதலை பற்றிய தனது நிம்மதியைப் பதிவு செய்யும் அதேவேளை, ‘இனியும் கேசவன்கள் உருவாகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்கிற கேள்வி மனசைக் குடைகிறது. துப்பாக்கிகளைத் துதிப்பவர்களுக்குத் தெரியாதபோது எனக்கெப்பிடித் தெரிந்திருக்கும்?’ என்கிற கேள்வியோடு அவர் அந்தக் கதையை முடித்திருக்கிற விதம், வலிமை மிகுந்தது. அதே போல் ‘துப்பாக்கிகளில் நல்ல துப்பாக்கி கெட்ட துப்பாக்கி எனப் பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச் சனங்கள். துப்பாக்கிக்குத் தெரிந்ததெல்லாம் கொலை. அது மட்டும்தான்’ என அவர் சொல்லிச் செல்லுகிற அந்தச் செய்தி கவனிக்கப்படவேண்டியது (கரைகளுக்கிடையே).

 

அகிலனின் எழுத்துக்களில் குறை இல்லாமலில்லை. தொழில் முறை எழுத்தாளர்களின் எழுத்துக்களோடு ஒப்பிடும்போது சில கதைகளில் அகிலனின் எழுத்தின் செழுமை குறைவாகவே இருப்பதாகப்படும் (என்னால் இந்தளவுகூட எழுதமுடியாது என்பது வேறு விஷயம்). ஆனால் எழுத எழுத அகிலனின் எழுத்து இன்னும் செழுமை பெற்று வீரியமாக வரும் என்பதில ஐயமில்லை. ஏனென்றால் ‘ஆக்க இலக்கியங்கள்’ உருவாவதற்கு அத்தியாவசியம் என்று மெலிஞ்சி முத்தன் சொல்லும் ‘சூழலை உற்றுப் பார்க்கிற’ தன்மையும், சுஜாதா சொன்ன ‘காரணங்களும்’ அகிலனுக்கு இருக்கின்றன. களம் கிடைத்தால் அகிலன் அடித்து ஆடுவார் என்பது திண்ணம்.

பதிப்பகம்

வடலி பதிப்பகம் மேற்கொண்ட ஒரு நல்ல முயற்சி இது. சமீபகாலமாகத்தான் இவர்கள் இந்தத் துறைக்குள் காலடிவைத்திருக்கிறார்கள். ஈழத்துப் படைப்பாளிகளுக்குப் புத்தகம் அடித்துக்கொடுப்பதில் இருக்கிற பொருளாதாரச் சிக்கல்கள் இவர்களை விழுங்கிவிடாமல் இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அச்சுக்கோர்ப்பு ரீதியாக முன்னேறுகிறார்கள். கானா பிரபாவின் ‘கம்போடியா’ சிறப்பான அச்சுக்கோப்பு அல்ல. ‘மரணத்தின் வாசனை’ கூட அவ்வளவு சிறந்த ஒன்றாகச் சொல்லமுடியாவிட்டாலும், ‘கம்போடியாவை’ விட நன்றாக வந்திருந்தது. சமீபத்தில் வெளியான கே.எஸ்.பாலச்சந்திரனின் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ அற்புதமாக வந்திருக்கிறது.

வடலி சரியான திசையில் போகிறது, என்ன எம்மவரிடம் இருந்து ஆதரவேதும் பெரியளவில் இல்லை என்கிற குறைதான் இவர்கள் நிலைத்து நிற்பதில் பெரும் சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது.

 

சின்னச் சர்ச்சை

ட்விட்டரில் இந்தப் பதிப்பைத் திறந்தவுடனே ஒரு குறை கண்டதாகச் சொல்லியிருந்தேன். சாயினி கூடக் குறை காண்பது பற்றி ஒரு மறைமுகக் குத்துக் குத்தியிருந்தார். தொப்பி அளவாயிருந்ததால் போட்டுக்கொண்டேன் :). அந்தக் குறை இதுதான். ‘சொல் விளக்கக் குறிப்புகள்’ எதற்காக? வணிக ரீதியான சில நோக்கங்களுக்காகத்தானே. அதாவது இந்தப் படைப்பு இயலுமானளவு பெரியதொரு வீச்சத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்கிற நோக்கத்தால்தானே? இதுவும் ஒரு வகையிலான பெரியண்ணன்களைக் குசிப்படுத்தும் நோக்கம் இல்லையா? (தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம்)

0

நன்றி: கிருத்திகன்

07 May

ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்

இந்த மிக எளிமையான வரியில் ஆழம் நிறைந்த வலியை பதிவு செய்திருக்கும் என் சகோவின் (என் சகோதரன் என்று தன்னிச்சையாக நான் அழைக்கும் அகிலனின்) இந்தப்புத்தகத்தை எந்த வித வண்ணத்தின் வழி பரிதாபத்தையும் எதிர்நோக்காத ஒர் ஆவணப்படத்தின் எழுத்துருவாக்கமாகவே உணர்கிறேன்.

மதிப்புரை வழங்கும் அளவிற்கு நான் என்னை உயர்த்திக்கொள்ளாத(சரியான வார்த்தையா தெரியவில்லை) இந்த சூழலிலும், இந்த பதிவை ஒரு வாசகப்பதிவு என்றும் அந்நியப்படுத்த ஏலாது. மேலும் என் சகோவிற்கும் (மற்ற ஈழநண்பர்கள் பலருக்கும்) எனக்கும் இடையில் எளிதில் கடக்க முடியாத எப்பொழுதும் நிறைந்திருக்கும் நிழல்களின் சில அடையாளங்களை அறிய ஏதுவாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது.

(இந்த பதிவின் உண்மைத்தன்மை அறிய விரும்புவோர்க்கு ஒரு தகவல். இன்னொரு மரணத்தின் வாயிலில் நானே நேரில் சகோவிடம் கேட்டுப்பெற்ற இந்த புத்தகத்தில் அவர் கையெழுத்திடவும் இல்லை. நான் பணம் தரவுமில்லை)

 

ஒவ்வொரு பகுதி தொடங்கும் பொழுதும் அந்தப்பகுதியில் முன்னிலை படுத்தப்படும் உயிரின் மரணம் இறுதியில் அறிவிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. மேலும்

போருக்கும் மரணத்திற்குமான தொடர்பும் புதிதல்ல.

ஆயினும் இங்கு எளிமையான ஒரு மனிதனின் அண்ணன் பாட்டி சித்தி தந்தை தோழி காதலி நாய்குட்டி பூனை இன்ன பிற உறவுகளின் / உற்ற உயிர்களின் வாழ்க்கைக்கும் போருக்கும் உள்ள அதீதத்தொலைவும் அந்த தொலைவை மிகச்சில நொடிகளில் வென்றுசெல்லும் செல்களையும் பற்றிய உண்மைகளோடும் தீராத அமைதியோடு அழுகுரல்களையும் பதிவுசெய்திருக்கிறது இந்த புத்தகம்.

 

குறுக்காசும், பெடியல் மற்றும் ஆமிக்காரர்கள் எல்லாரும் போரின் சாட்சிகளாக வந்துபோகிறார்கள்.அதாவது இங்கு சொல்லப்படும் அனைத்து மரணத்திற்கும் போர் காரணம் எனபதை மட்டும் சொல்லிவிட்டு போருக்கு யார் காரணம் என்ற கேள்வியை காலத்தின் கையிலேயே விட்டுவிட்டுத் தொடரும் இந்த எழுத்துக்களின் மௌனம் நம்மை தடுமாறவே செய்கிறது.

 

இந்தப்புத்தகத்தில் உள்ளது போல குண்டு விழுந்ததை கூட ‘நேற்று இரவு குண்டு விழுந்தது’ என்று இயல்பாக எழுத முடியுமா என்பது அதிர்ச்சியாய் தோன்றுகிறது. அகிலனைப்போன்று போருக்கிடையிலே வாழ்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு எழுதமுடியும் என்றும் இது போரின் மிகக்குரூரமான முகம் என்றும் சற்றே நிதானிக்கும் பொழுது அவதானிக்கமுடிகிறது.

 

அதே நேரம் போர் சூழலிலே பிறந்து வளர்ந்த மனிதனுக்குள்ளும் நகைச்சுவை உணர்வு உள்ளது என்பதை பதிவு செய்ய மறக்கவில்லை அகிலன். முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகம் பதற்றத்தோடு கேட்டறிந்த ‘தந்திரோபாய பின்நகர்வு’ என்ற சொற்றொடர் இந்த புத்தகத்தில் பயன்படுத்திய இடத்தில் வாய்விட்டு சிரிக்க வைத்ததை மறக்க ஏலாது. மற்றும் ‘தொடங்கீற்றான்ரா சிங்கன்’

 

இந்த புத்தகத்தின் மூலம் ஈழ வாழ்வை நெருங்கிபார்க்க முடிந்தது என்பதில் நிறைவும் அதை வேளை துர்மரணங்கள் ஏற்படுத்தும் வெறுமையும் ஒரே நேரத்தில் உணர்வது சற்றே எதிர்கொள்ள இயலாத கணத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இங்கு மரணத்தின் வாசனை யின் உள்ளீடுகளை அதிகம் பதிவு செய்ய விருப்பமில்லை.அதன் மீதான என் மீ-பார்வைகளை மட்டுமே பதிவுசெய்கிறேன்.மற்றவை படித்து அறியவும்.

 

மரணத்தின் வாசனை என்ற தலைப்பு முதலில் என்னை அசௌகரியப்படுத்தியது. அதற்கு அகிலன் காரணமல்ல.இங்கே பலவார்த்தைகளை நம் வியாபார நோக்கிற்காக அதன் அர்த்த ஆழங்களை பற்றி சிறிதும் அக்கறையற்று வெறும் உவமையாகவும் ஈர்ப்புக்காகவும் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு முலை,யோனி,மரணம்,ரத்தம்,வெளி,பிரபஞ்சம் இன்னபிற.

 

ஈழம் குறித்து பலரும் எழுதுகிறோம். அது கேள்வி ஞானத்தால் ஆனது. வாசனை என்பது நேரில் சந்தித்த வாழ்க்கை என்பதன் தெளிவை ஏற்படுத்துகிறது. உண்மையில் இந்த புத்தகம் ஒரு சிறுவனின் வாக்குமூலத்தின் வழி ‘மரணத்தின் வாசனை’ என்ற இரண்டு வார்த்தைகளின் ஆழத்தை நோக்கி பயணிக்கிறது.

 

ஈழம்வாழ்வின் பகல் இரவை அறிய எண்ணுபவர்களுக்கு இந்தப்புத்தகம் மிகவும் நெருக்கமானதாக அமையும் என்றே கருதுகிறேன்.

நன்றி : இராவணன்

16 Jan

த.அகிலனின் மரணத்தின் வாசனை

வடலி வெளியீடு

போர் தின்ற சனங்களின் கதை

அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக் கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம்.

நன்றி:

 ஆனந்த விகடன் (2009 ஜனவரி)