07 Oct

மரணவெளியில் உலாவரும் கதைகள்

மரணவெளி.. அழகானது.

எப்போதும் எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் மரணவெளி.

மரணவெளி மாறாதது என்பதுடன் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டதும் கூட.

மரணம் காலத்தை வென்ற காலச்சூத்திரம்.

புத்தனும் ஏசுவும் சித்தர்களும் மரணவெளியில் நட்சத்திரங்களாக இருந்தாலும்

நிகழ்காலத்தின் முன் அவர்கள் கடந்தகாலமாக இருப்பது மட்டுமே மரணம்’

காலத்தை வென்று நிற்கும் காலச்சூத்திரத்தின் முதல் விதி.

பூமியைப் போல உயிரினங்கள் வேறு எந்த கிரஹத்திலாவது இருக்கிறதா என்பதைத் தேடும் அறிவியல் உலகம், அங்கெல்லாம் மரணத்தின் சுவடுகள்

இருக்கிறதா என்பதையே தேடிக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் மரணத்தின்

சுவடுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் வாழ்க்கையின் தடங்களும் இருக்கும்,

‘இருக்கிறது..!

 

மரணத்தைப் பற்றிய அச்சமோ ஆச்சரியமோ கடவுளைக் கற்பித்தது.

கொண்டாட வைத்தது. கடவுளும் மரணத்திலிருந்து தப்ப முடியாது என்பதை

தத்துவமாக்கியது. அந்த தத்துவத்தின் ஊடாக வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் மனநிலையை மண்ணில் விதைக்கவே பாடுபட்டது.

இப்படியாக எப்போதும் மரணம் அழகானதாகவும் அதிசயமானதாகவும்

சித்தர்களின் சித்துவேலைக்குள் அகப்படாத பரம்பொருளாகவும்

பிரபஞ்ச வெளியாகவும் எப்போதும் நம் கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது.

 

மரணத்தைப் பற்றி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை.

நினைக்காத மனிதர்கள் இல்லை.

வெ.இறையன்பு அவர்கள் எழுதிய நாவல் “சாகாவரம்” முழுக்க முழுக்க மரணத்தைப் பற்றி ஒரு நாவல். மரணத்தை வென்ற சிரஞ்சீவி வெளியைத் தேடும் நசிகேதனின் கதை. வேதாளம் சொன்ன கதைகளின் உத்தியில்

14 வரிப்பாடலில் மரணத்தை வென்ற சிரஞ்சீவி வெளியை அடையும்

குறிப்பு சொல்லப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாடலாக வாசித்து வழி

கண்டுபிடித்து அந்த சிரஞ்சீவி வெளிக்கு வரும் போது அந்த இடம்

எப்படி இருந்தது என்பதை மிகச் சிறப்பாக விளக்கி இருப்பார்.

இறந்தகாலமோ எதிர்காலமொ இல்லாத தட்டையான நிகழ்காலம்.

மரங்கள் புதிதாகப் பூப்பதில்லை, இலை உதிர்வதில்லை, பாடாத பறவை,

இயக்கமில்லாத ஜடமான இயற்கை, பசி இல்லை, இரவு இல்லை,

மூப்பு இல்லை, உணர்வுகள் இல்லை, உறவுகளில் அர்த்தமில்லை,

காதலோ காமமோ இல்லை அது மரணத்தை வென்ற சிரஞ்சீவி வெளி அல்ல

என்பதை நசிகேதன் புரிந்து கொள்ளும் போது மரணம் வாழ்க்கையின்

ஜீவனாகிவிடுகிறது!

 

அதைப் போலவே மரணம் குறித்து வெ. வண்ணநிலவன் எழுதிய ‘பிணத்துக்காரர்கள்’ கதையையும் சொல்ல வேண்டும். அனாதைப் பிணங்களை எடுத்து வந்து சாலைகளில் வைத்து பிச்சை எடுக்கும் நான்கு மனிதர்களைப் பற்றிய கதை. ஆண் பிணத்தைவிட பெண் பிணத்திற்குத்தான் அதிகப் பிச்சைக் காசு கிடைக்கும் என்பதைப் போகிற போக்கில் உரையாடல்கள் மூலம் சொல்லிச் சென்ற கதை வாசித்து பல வருடங்கள் ஆனபின்பும் அக்கதையில் வரும் விளிம்பு நிலை மாந்தர்களின்

அந்த வாழ்க்கை அவலம் சாலையோரத்தில் நாம் கடந்து செல்லும்

அந்த மனிதர்களைப் பற்றி யோசிக்க வைத்த கதைகளில் முக்கியமானது.

 

இத்துடன் இப்போது இந்த வரிசையில் சேர்ந்திருக்கும் இரு சிறுகதை தொகுப்புகள் மரணம் குறித்த விசாலமான பார்வையை வைக்கின்றன

ஒன்று: த, அகிலன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு: : மரணத்தின் வாசனை:

அதன் குறுந்தலைப்பாக:  போர் தின்ற சனங்களின் கதை.

 

த. அகிலன் ஈழ சமூகத்தில்; 1983ல் பிறந்தவர். அவர் காட்டும் கதை மாந்தர்கள்

போர்க்களத்தில் மாண்டவர்கள் அல்லர். இன்னும் சொல்லப்போனால் ஈழ

விடுதலைப் போராட்டத்தின் போராளிகளும் அல்லர். ஆனால் அந்தச் சனங்களை போர் தின்று துப்பியது. அந்தப் போர்க்கால சூழலில் தன் வீட்டு நாய் முதல் மிளகாய்க் கண்டுகள் (இளம் மிளகாய்ச்செடி) வரை தங்கள் வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட இழந்துப் போன மனிதர்களைப் பற்றிய கதைகளின் தொகுப்பு. மரணமும் அது குறித்தான செய்திகளும் ஒரு கொடுநிழலைப் போல மனிதர்களைத் துரத்திக் கொண்டிருக்கும் கதை.

ஒவ்வொரு கதையும் வெவ்வேறானவை. அந்தக் கதைகளில் தான் கும்பிட்ட

அம்மனைத் தேடி வரும் “ஓர் ஊரில் ஒரு கிழவி’ கதை பிற கதைகளிலிருந்து வித்தியாசமானது. அக்கதை போர் தின்ற சனங்களின் கதை மட்டுமல்ல,

அந்த சனங்களின் வாழ்க்கையாகவும் வாழ்வின் நம்பிக்கையாகவும் இருந்த

பிம்பங்களை உடைத்து நொறுக்கியதன் வலி தாங்க முடியாத அலறலாக

நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

தன் காணியை காணியில் இருந்த கோவிலைத் தேடி வரும் அம்மம்மா.

அவள் பார்த்தக் காட்சி அங்கே காணியுமில்லை, கோவிலுமில்லை. எல்லாம்

உடைந்து சிதிலங்களாக. :

“என்ர ஆச்சி, தாயே, உன்னை இந்தக் கோலத்திலயா பாக்கோணும்,’ வாய் வார்த்தைகள் குழற குமுறி குமுறி தன் நேசத்தை எல்லாம் தீர்த்துவிடுகிற மாதிரி அழுகிறவள் இறுதியாக ஆவேசம் வந்தவள் போல அடுத்து சொல்லும்

வரிகள் வாசகனை உலுக்கி விடுகின்றன

 

‘வேசை, உன்னை இந்தக் கோலத்திலேயோடி நான் பார்க்கோணும், தோறை தோறை அறுந்த வேசை உன்னை இப்படி நான் பார்க்கோணும் எண்டுதானே என்னை உயிரோட வைச்சிருந்தனி”

 

மரணத்தின் வாசலில் பிறந்து அந்த மரணத்தின் வலியை வேதனையை

ஒவ்வொரு பருவத்திலும் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் கதையாகவே அகிலனின் கதைகள் இருக்கின்றன.

போர் இலக்கிய வரிசையில் மட்டுமின்றி மரணம் குறித்த படைப்புகளிலும்

அகிலனின் இக்கதை தொகுப்பு தனித்த ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது.

 

இரண்டாவதாக அண்மையில் நான் வாசித்த இன்னொரு கதை தொகுப்பு

இல. சைலபதி அவர்களின் “அப்துல்காதரின் குதிரை” என்ற சிறுகதை தொகுப்பு.

சென்னையில் அவரை நேரில் சந்திக்கும் போது கொடுத்தார். கொஞ்சம் தாமதமாகவே வாசித்தேன் என்றாலும் அக்கதைகளின்  ஊடாக சைலபதி

வைத்திருக்கும் மரணம் குறித்த விசாரனைகள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தின.

கதைகளின் ஊடாக அவர் என் கருத்துகளுக்கு முரணான பகுத்தறிவுக்கு ஒவ்வாத சில நம்பிக்கைகளை முன் வைத்திருந்தாலும் அந்த நம்பிக்கைகள்

அனைத்தும் தனிநபர் சார்ந்த நம்பிக்கைகளாக மட்டுமே காட்டப்படுகின்றன.

அந்த நம்பிக்கைகளின் ஊடாகவே அவர் மரணத்தையும் பார்க்கிறார். ஒரு சிறுகதை தொகுப்பில் அனைத்து கதைகளும் மரணம் குறித்த கதைகளாக

இருப்பது தற்செயலா?   அல்லது திட்டமிட்ட ஒரு தொகுப்பா?

அதிலும் அவருடைய முதல் தொகுப்பு இந்நூல் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

 

மரணமே கதைகளின் கருப்பொருளாக அந்த மரணத்தை மனிதர்கள்

உணரும் தருணங்களும் அணுகும் விதமும் சுயம் சார்ந்த அனுபவங்களுக்கு அப்பால் ஒரு மூன்றாவது மனிதனாக நின்று பார்க்கும் பார்வையுடனும்

கதைகள் நகர்கின்றன. மரணத்தைப் பற்றி இத்தனை விதங்களில் சொல்லத்

தெரிந்த ஒரு கதைசொல்லியாக சைலபதி இருக்கிறார் என்பதுடன் தன்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் மரணம் குறித்தும் அந்த மரணத்தைச் சுற்றி

இருக்கும் மனிதர்களைக் குறித்தும் அவருக்கென ஒரு சுயமான பார்வையைக்

கொண்டிருக்கிறார் என்பது இக்கதைகளின் மூலம் அவர் அடைந்திருக்கும்

முதல் வெற்றி எனலாம்.

அதிலும் குறிப்பாக ‘துஷ்டி’ என்ற கதை.

 

மரணத்தை கிராமத்தில் வாழ்பவர்கள் அணுகும் விதமும் நகரத்தில் வாழ்பவர்கள் அணுகும் விதமும் மிகவும் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கும் கதை. கிராமத்தில் ஒரு வீட்டில் மரணம் என்றால் அன்றைக்கு ஊரார் கூடி

அழுது அந்த வீட்டில் கொட்டிக்கிடந்த துயரத்தை ஆளுக்கு கொஞ்சமாக

அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள் என்கிறார்.அவர்கள் அழுகைகள் பிய்த்து’

தின்றது போக மிச்சமிருந்த துயரம் தான் அதன் பின் மரணம் சம்பவித்த

‘வீட்டில் அந்த வீட்டாருடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அதுவே அவர்கள்

வாழ்க்கையை நகர்த்தும் உந்துசக்தியாக மரணத்தின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் கிராம வாழ்க்கையின் பண்பாடாக காட்டுகிறார்.

இந்தப் பண்பாட்டிலிருந்து நகர்ப்புற வாழ்க்கையும் நகர மாந்தர்களும் எவ்வளவு தூரம் விலகி வந்துவிட்டார்கள் என்று துஷ்டி கதையில் வரும் அம்மா அல்லாடுகிறாள். தன் மரணத்திற்குப் பின் தன் பிள்ளைகளுக்கு அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று எண்ணி தன் மரணம் நகரத்தில் நடந்தேறிவிடக்கூடாது. என்று தீர்மானிக்கிறாள். கிராமத்திற்கு மீண்டும் அந்த

தன் கடைசிநாட்களில் அவள் போக விரும்புவதன் நோக்கமே இதுதான்.

‘செத்தவனுக்கு ஒரு கணம் தான். ஆனா அவன் கூட வாழ்றவங்களுக்குக் காலம்பூரா அது ஒரு சும. செத்தப்பவே அழுது தீர்க்கலைன்னா அது ஆயுசுக்கும்  அவங்க மனசு விட்டுப் போகாது. சாவ அன்னயோட அழுது தீர்க்கனும்’ என்று மரணத்தை அணுகும் முறையை அந்த அம்மாவின் மொழியில் தத்துவ பீடங்களின் மீது ஏறாமல் மிக எளிதாக சொல்லிவிடுகிறார்..

 

சைலபதியின் கதைகளில் வரும் மரணம் துஷ்டி வீடுகளில் துக்கம் விசாரித்துவிட்டு வரும் மரணம். நம் பக்கத்து வீட்டில் நம்முடம் நேற்றுவரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த மனிதரின் மரணம். ஆனால் போர்தின்ற சனங்களின் கதையில் த. அகிலன் எழுதியிருக்கும் மரணம் , மரணமே

எழுதிய மரணத்தின் கதைகள். மரணத்தின் வாசனை, அழுது தீர்க்க முடியாத

காலம் பூரா நாம் சுமக்க வேண்டிய மரணத்தின் வலியாக கனக்கிறது.

மரணத்தின் வாசலில் இவர்களின் இந்தக் கதைகள்

மரணத்தைப் போல வாழ்க்கையின் நிஜங்களை விட்டு அகலாமல்

இருப்பதால் வாசகனுக்கு ரொம்பவும் நெருக்கமாகிவிடுகின்றன.

 

நன்றி: புதிய மாதவி

16 Dec

பி.விக்னேஸ்வரனின் நாடக நூல் வெளியீடு

Translation of The Chairs by Eugène Ionesco

 

சென்ற 8ந்திகதி (8.12.12) சனிக்கிழமை மாலை 4.30 அளவில் சன் சிற்றி பிளாசா ஸ்ரீஐயப்பன் ஆலய மணடபத்தில் பி.விக்னேஸ்வரன் மொழிபெயர்த்த இயூஜின் அயனஸ்கோவின் அபத்த நாடகமான “நாற்காலிகள்” நூலின் வெளியீடு நடைபெற்றது.

ஏற்கெனவே மனவெளி கலையாற்றுக்குழுவினரின் அரங்காடல் நாடக நிகழ்விலே மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தை விக்னேஸ்வரனே நெறியாள்கை செய்திருந்தார் எனபதும் இந்நூல் வெளியீட்டு விழாவை மனவெளி கலையாற்றுக் குழுவினரே ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடற்குரியது.

அமைப்பாளர்கள் எதிர்பார்த்தபடி நாடகத்துறை சார்ந்தவர்களே நிறைந்திருந்த அரங்கில் வழங்கப்பட்ட உரைகளும் காத்திரமானவையாகவும் பொருத்தமானவையாகவும் இருந்தன.

மனவெளி கலையாற்றுக் குழுவை சார்ந்த செல்வன் வெளியீட்டுவிழா பற்றியும், மனவெளி குழுவினரின் பங்கு பற்றியும் குறிப்பிட்டு, பேச்சாளர்களை அறிமுகம் செய்து விழாவை தொடர்ந்து நடத்தினார்.

வி.என்.மதியழகன், விக்னேஸ்வரன் பற்றிய அறிமுக உரையில், அவரது ஆரம்பகால கலை ஈடுபாடு, இலங்கை வானொலியிலும், ரூபவாகினியிலும் அவரது பங்களிப்பு, அவரது ஆர்வம்< அவர் முன்னோடியாக செய்த நிகழ்ச்சிகள் எனபனவற்றையெல்லாம் விபரமாக குறிப்பிட்ட்டு சிறப்பான அறிமுகத்தை வழங்கினார்..

நாடகத்துறையில் “பட்டயப் படிப்பு’ பெற்றவரும், கவிஞருமான கந்தவனம் அவர்கள், அபத்த நாடகங்கள் பற்றி உரையாற்றினார். இரண்டாம் உலகப்போர் நடந்ததின் விளைவாகவே அபத்தநாடங்கள் பற்றிய சிந்தனை உருவாகியது என்ற பொதுவான கருத்தை அவர் மறுத்துப் பேசினார். முதலாம் உலக யுத்தகாலத்திலே ஏன் இந்தச்சிந்தனை வரவில்லை என்றார். காலாகாலமாக இப்படி மாற்றங்கள் எல்லாத் துறைகளிலும் வரத்தான் செய்கிறது. எனவே அபத்த நாடகத்தின் வருகைக்கும் யுத்தங்களுக்கும் தொடர்பு இருக்கிறதாக நினைக்க முடியாது என்றும், நாற்காலிகள் நாடகத்தைக்கூட அபத்த நாடகமாக கருதமுடியாது என்றும் கூறினார்..

 

“நாற்காலிகள்” நாடக நூலுக்கு, மிகச்சிறப்பானதும் தெளிவானதுமான நீண்ட முன்னுரைய எழுதியிருந்த கவிஞர் சேரன் உருத்திரமூர்த்தி அடுத்து உரையாற்றினார். “ஒரு படைப்பாளி இதைத்தான் எழுதுகிறேன் என்று வகுத்துக்கொண்டு எழுதுவதில்லை. விமர்சகர்கள்தான் அந்தப்பாகுபாட்டை தீர்மானிக்கிறார்கள்.” என்று கூறி முன்னுரையில் தான் கூறிய :இலக்கியத்திற்கு பிறகுதான் இலக்கணம் உருவாகின்றது” என்ற கருத்தை வலியுறுத்தினார். அபத்த நாடங்கள் வலியுறுத்த முயலும் இருத்தலியல் பற்றிய சிந்தனையினால், வாழ்வின் ஸ்திரமற்ர தன்மை என்ற அடிப்படையில் இந்த கருத்தும் நாடக வடிவமும் முள்ளிவாய்க்காலின் பின்பு எங்கள் மக்களுக்கு மிகவும் நெருங்கியாகியதென்றும், எதையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து போகும் நினைப்பு அவர்களுக்கு வந்த சோகத்தை சொல்லியபோது, அவையினர் அந்த நினைவுகளை பெற்றுக்கொண்டவர்களாக காணப்பட்டர்கள்.

இந்த நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதை எனது கலை வாழ்க்கையின் முக்கியமான கெளரவமாக கருதுகிறேன்.அதே நேரத்தில் ஒரு நாடக அறிவு சார்ந்த அவைக்கு என் கருத்துக்களை முவைக்கும் சந்தர்ப்பம் இதுவரையில் என்னைத்தேடி வந்ததாக நினைவில்லை என்பதையும் கூற விரும்புகிறேன்…

எனது உரையில் விக்னேஸ்வரனுக்கும் எனக்கும் வானொலி, தொலைக்காட்சி காலங்களில் ஏற்பட்ட நெருக்கமான நட்பை, புரிந்துணர்வை தொட்டுக்காட்டி, அவரது தளராத தேடல்களை, மேற்கத்திய இலக்கியங்களோடு அவருக்கு பரிச்சியம் ஏற்பட காலம்சென்ற ஜோர்ஜ் சந்திரசேகரன் எவ்வாறு தூண்டுகோலாக அமைந்தார் என்பதையும் கூறினேன்..

தொடர்ந்து இயூஜின் அயனஸ்கோ உடனான அறிமுகம் எனக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பதை விளக்குமுகமாக அவரது மூண்று நாடகங்களை குறிப்பிட்டேன்..

இலங்கையில் கொழும்பில் எல்பின்ஸ்டன் அரங்கிலே 1989ல் நடைபெற்ற வானொலி நாடக விழாவில் இடம்பெற்ற ஜோர்ஜ் சந்திரசேகரன் மொழிபெயர்த்து இயக்கிய அயனள்கோவின் “Frenzy, doe Two or More “ {தமிழில் :நத்தையும் ஆமையும் என்ற பெயரில்) என்ற அபத்த நாடகத்தில் நானும், ஜீவனி ஞானரத்தினமும் (இரண்டே நடிகர்கள்0 45 நிமிடங்கள் நடித்ததையும்,.

பின்னர் கனடாவில் மனவெளியின் அரங்காடல் நிகழ்வில், விக்னேஸ்வரன் மொழிபெயர்த்து இயக்கிய .நாற்காலிகள் நாடகத்தை பார்த்ததையும், அந்த நாடகத்தில் நடித்த கலைஞர்களான சுமதி ரூபன், சபேசன், குரும்பசிட்டி இராசரத்தினம் ஆகியோரின் சிறாப்பான நடிப்பு திறனையும் நினைவு படுத்திக்கொண்டேன்..

மூன்றாவதாக பின்னொரு அரங்காடல் நிகழ்வில் புராந்தகனின் இயக்கத்தில் மேடையேறிய “அரி ஓம் நம’ என்ற நாடகம் அயனஸ்கோவின் “Lessons” நாடகத்தை தழுவி டெல்கியில் வாழும் “வடக்கு வாசல்” ஆசிரியரும், எனது நண்பருமான பென்னேஸ்வரனால் எழுதப்பட்ட “பாடங்கள்{” என்ற நாடகந்தான் என்றும், அந்த நாடகத்தை பார்த்து ரசிக்க கிடைத்ததையும், இராசரத்தினம் அவர்களின் நடிப்பு சிறப்பையும் குறிப்பிட தவறவில்லை. .

தொடந்து, நாற்காலிகள் நாடக நூலைப்பற்றிப் பேசுகையில் அதை ஒருநாள் பொழுதில் முழுமையாக வாசிக்க முடிந்ததையும், வாசித்து முடிந்ததின் பின்னர் மனதில் எழுந்த சோகம்> நாடகத்தின் இறுதியில் மேடையில் வெறுமனே இருக்கும் கதிரைகளும், கலைந்துபோன அலங்காரத்தின் எச்சங்களும் எழுப்பிய வெறுமை என்பனவற்றை சொல்லி> அயனஸ்கோ இந்த நாடகத்தை அபத்த நாடகம் என்றில்லாமல் “Tragic Farce” என்றே குறிப்பிட்டிருக்கிறார் என்று சொன்னேன்..

பிரெஞ்சிய காலனி ஆட்சியில் அல்ஜீரியாவில் பிறந்த அல்பெயர் காமு (Albert Kamus என்ற தத்துவ சிந்தனையாளர், நோபெல் இலக்கியப் பரிசை பெற்றவர் எழுதிய The Myth of Sisyphus” என்ற உரைநூலில் குறிப்பிட ஒருகிரேக்க ஐதீகக்கதையில் வரும் ஒரு பாத்திரம் கடவுள்களின் சாபத்தின் விளைவாக ஒரு பெரிய பாறங்கல்லை மலை உச்சிக்கு உருட்டிக்கொண்டு போவதும் பிறகு அதை மலையடிவாரத்திற்கு உருண்டு வர விடுவதும், மீண்டும் உச்சிக்கு கொண்டு போவதும், மீண்டும் அடிவாரத்துக்கு விழ விடுவதுமாக தொடர்ந்து அதையே செய்து கொண்டிருக்கிறது. இருத்தலியலின் அபத்த தத்துவத்தை இந்த கதை மூலமாக விளக்குகிறார் காமூ என்பதை சொல்லி, பெக்கெற்றின் “Waiting for Godot” நாடகத்தை பார்த்த காத்திருப்பின் அருமையை உணர்ந்த சிறைக்கைதிகள் கண்ணீர் விட்டதையும், அதேபோல முதுமை தரும் தனிமை, வெறுமை பற்றி உணரத்தொடங்கியுள்ள என்னை நாற்காலிகள் நாடகம் பாதித்ததையும் சொல்லி முடித்தேன்..

Veteran Tamil Writer Late K.S.Balachandran

வெளியீட்டு நிகழ்வில் நாற்காலிகள் மேடை நாடகத்தில் திறம்பட நடித்த சுமதி ரூபன், சபேசன், குரும்பசிட்டி இராசரத்தினம் ஆகிய கலைஞர்களுக்கு நூலின் சிறப்பு பிரதிகளை வழ்ங்கினேன்..

ஏற்புரை வழ்ங்கிய நூலாசிரியர் பி.விக்னேஸ்வரன், மிகப்பெரிய அழிவுகள், யுத்தங்கள் என்பனவற்றின் தொடர்ச்சியாக நாடகம், இலக்கியம், ஓவியம் போன்றவற்றில் சிந்தனை மாற்றங்கள் ஏற்படச்செய்தன என்று கூறினார். ..

வியட்னாம் போரின் பின்னதாக, எப்படி இளஞர்களின் வாழ்வியலில் மாற்றங்களாக – Hippies, Flower people, Peace Marches என்பன முக்கியத்துவம் பெற்றன என்றும், நாற்காலிகள் நாடகத்தை வாசித்த போது தன்னை அது எவ்வாறு பாதித்ததென்றும், அதனாலேயே அதை மொழிபெயர்க்க முற்பட்டதாகவும், அதை மேடையேற்றவும், இப்போது நூலாக வெளியிடவும் மனவெளி கலையாற்றுக்குழுவினர் அளித்த ஆதரவுக்கு நன்றியும் கூறினார்…

மொத்தத்தில் அறிவார்ந்த ஒரு அவைக்கு, ஏற்றதாக காத்திரமாக நடந்த நல்லதொரு வெளியீட்டு விழா.

மனவெளியினருக்கும், நூலாசிரியர் விக்னேஸ்வரனுக்கும் என் பாராட்டுக்கள்.

=

நன்றி: கே.எஸ்.பாலச்சந்திரன்

12 Jun

மரணத்தின் வாசனை

த.அகிலனின் போர் தின்ற சனங்களின் கதைளினூடே..

 

அண்மையில் நான் பார்த்து வியந்த அற்புமான திரைப்படம் Terrence Malick இன் . “The Tree of life”. ஒரு அன்பான குடும்பதில், குடும்ப அங்கத்தவர் ஒருவனின் திடீர் மரணம் அந்தக் குடும்பத்தை எப்படி நிலைகுலைய வைக்கின்றது என்பதுதான் கருத்தளம். இயக்குனர் Terrence Malick ஓர் அற்புதமான இயக்குனர் பல விருதுகளைத் தனது திரைப்படங்களுக்காகப் பெற்றவர். “The Tree of life”

மரணங்கள் வெறும் எண்ணிக்கைகளாய். செய்தியாய் மட்டும் கடந்து போய்விடுகிற மரத்துப் போன ஒரு சூழலுக்கு நாங்கள் வந்துவிட்டேம் என்று தோன்றுகின்றது”. என்ற அகிலனின் கூற்று என்னுள் உழன்று கொண்டிருந்த வேளை “The Tree of life”  திரைப்படத்தின் கரு என் மனதில் பதிய மறுத்தது. வளரும் சூழ்நிலைக்கேற்ப மனித மனங்களின் வலியும் வேறுபட்டுப் போகுமோ?

நாம் வாழும் சூழல், எமது நாளாந்த வாழ்க்கைத் தளமென்பன எப்படி எமக்குள் பதிந்து எமை இயக்கிக் கொண்டிருக்கின்ற என்பதனை அண்மையில் ஊரிலிருந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்த நண்பியொருத்தி கூற்றிலிருந்து அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. ”நான் தற்போது போரற்ற ஒரு நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். துப்பாக்கி வேட்டு, குண்டு வெடிச் சத்தங்கள் இல்லாத என் தற்போதைய வாழ்க்கை முறையை நம்புவதற்கு மனம் மறுக்கின்றது. இதுநாள் வரையும் எனக்கு இவையெல்லாம் நிராகரிக்கப்பட்டிருந்தன என்பதும், இன்னும் பலருக்கு வாழ்நாள் முழுவதுமே இவை நிராகரிக்கப்படுகின்றன என்பதை நினைக்கும் போது துக்கமும், கோவமும் எழுகின்றது என்றாள்.

பிறந்தநாளிலிருந்து போர் மட்டுமேயான நிலபுலத்தில் வாழ்ந்து வரும் இளையவர்களுக்கு மரணம் என்பது அன்றாட வாழ்வின் ஒரு செய்தியாக மட்டுமே இருந்திருக்கின்றது. இப்படியான தளத்திலிருந்து பிறந்திருக்கின்றது த.அகிலனின் “மரணத்தின் வாசனை”. அவரைச் சுற்றிய இறப்புக்கள் அனைத்துமே ஏதோவொருகாரணத்தினால் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்து வாசகர்கள் மனத்தில் ச்சீ இப்படியான ஒரு இக்கட்டான நிலையில்கூட போர்சூழல் எப்படியெல்லாம் மனிதர்களைக் காவு கொடுத்திருக்கின்றது என்ற எரிசலை ஏற்படுத்துகின்றது. மருந்தின்மை, உரியநேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாமை போன்ற மிகச் சிறிய விடையங்களுக்காகத் தம் சொந்தங்களைக் கண் முன்னே இழக்கும் கொடுமையை போர்ச்சூழலில் அகப்படாத வாசகியாகிய என் மனம் ஏற்க மறுக்கின்றது. அகிலனின் வாழ்வனுபவங்கள் எனக்கு வெறும் படித்துவிட்டுப் போகும் கதைகளில் ஒன்றாகவும், ”மரணத்தின் வாசனை” அகிலன் எனும் கதைசொல்லியால் புனையப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுதியென்பது மட்டுமே. அதையும் தாண்டி அகிலனாய் ஈழத்து மண்ணை என் வாசனைக்குள் கொண்டுவரும் போது வாழ்வெனும் பரப்பினூடே கிளர்ந்தெழும் யதார்த்தம் எனை உலுக்கியெடுக்கின்றது. அகிலன் ஒரு எழுத்தாளனாய் உண்மையைப் பதிந்துள்ளார்.

வாழ்வியல் அனுபவங்களால் இலக்கியத்தை அர்த்தமுள்ளதாக்கி வரலாறாய் பதியும் படைப்பாளிகளின் நேர்மை எப்போதும் பாராட்டுக்குரியதாகும்.

வரலாற்றை மாற்ற வேண்டித்தன் சொந்தங்களைத் தாரவார்த்துக் கொடுக்க எவரும் மனமுவந்து முன்வருவதில்லை. போரில் இணைந்த, இழந்த சொந்தங்களை எண்ணி ஏங்கும்  மனங்களின் தவிப்பும். கையறுநிலையின் விசனமும் விரிந்து பரந்து கிடக்கின்றது இவர் படைப்புக்களில். அகிலன் உண்மையிலேயே புனைவாளரில்லை. வரலாற்றுப் பதிவாளர்;. வாசகர்களாகிய நாம் இவரிடம் எதிர்வினையாற்றக் கேள்விகளற்றவர்களாகின்றோம்.. நேர்மையான வரலாறுகள் மறுப்பதற்கில்லை. அதனிலிருந்து கற்றுக்கொள்ளல் மட்டுமே சாத்தியம்.

தனது மாறுபட்ட பல சிறுகதை வடிவங்கள் மூலம் படைப்புகளில் பன்முகச் சாவல்களை எதிர்கொண்டிருக்கின்றார் கதைசொல்லி. இங்கு முக்கியமாகக் கருத்திற்கொள்ள வேண்டியது என்னவெனில், கதைசொல்லி முற்று முழுதான போர்சூழலில் பிறந்து வளர்ந்து தமது தனிப்பட்ட விருப்பினால் போராட்ட இயக்கத்தில் இணைந்துக்கொண்டு பின்னர் தமது தனிப்பட்ட விசனத்தினால் போராட்ட இயக்கத்திலிருந்து விடுபட்டவர்;. விடுபடலின் பின்னர் தன்னை வேறு எந்த இயக்கத்துடனோ இல்லாவிட்டால் அரசுடனோ இணைத்துக்கொள்ளாது தனித்து மிகச்சாதாரண வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்நிலையில் இன்னும் பல இளைஞர்களும், யுவதிகளுமிருந்தாலும் அவர்கள் தம்மை ஒதுக்கிக்கொண்ட நிலையிலிருக்கும் பட்சத்தில் த.அகிலன் தன்னை விடுவித்துக்கொண்டு தமது அனைத்து அனுவங்களையும் படைப்பாக்கி வாசகர்கள் முன் கொண்டு வந்துள்ளார். இக்கதைசொல்லி எமது அரசியல் சூழலில் உண்மை கூறல் எப்படிப் பார்க்கப்படும் எத்தகைய முத்திரைக் குத்தல்களுக்குத் தாம் ஆளாக நேரிடும் என்பதனைய அறிந்திருந்த போதும் பின்வாங்கலற்று தமது அனுபவப்பகி;ர்வை முன்வைத்து ஈழஇலக்கியத்தில் மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

போரற்ற வாழ்வை அறியாதவர் அகிலன். மரணத்தைத் தினம்தினம் கண்டு அழுது களைத்த சமூகத்தால் வளர்க்கப்பட்டவர். இன்னுமொருநாள் எனக்கு இருக்கின்றதா என்ற அச்சத்தில் தினம் தினம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் மரணித்தவர்களை எண்ணி அழுவதற்குத்தான் நினைவு வருமா?

சிறுகதையென்றால் என்ன? அதன் வடிவமென்ன? அதுவொரு வரைவிலக்கணக்கத்திற்குள் அடங்கிக்கொள்கின்றதா? என்றெல்லாம் பல கேள்விகளும், அதற்கான ஆய்வுகளும் எழுத்துலகில் இருந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் த.அகிலனின் “மரணத்தின் வாசனை” சிறுகதைத் தொகுதியில் உள்ளடங்கியிருக்கும் சிறுகதைகள், அதன் வடிவங்கள் பற்றிய என் எண்ணக்கருத்தோடு ஒத்துப் போவதாய் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் சிறுகதை பற்றிய இந்த ஆய்வு அமைந்திருக்கின்றது.

“சிறுகதை என்பது சமூக மதிப்பீடுகளை ஆதரிக்க மறுக்கிற ஒரு இலக்கிய உருவம். அது சமூக விமர்சனம் சார்ந்தது. அது அப்படித்தான் இருக்கும். உண்மை வெல்லும் என்பதை வலியுறுத்தும் என்பது ஒரு கதையாக இருக்கும்போதுகூட அது ஒரு சிறுகதையாக இருப்பதில்லை. இது அறவியல் சார்ந்த ஒரு கதை. ஆனால் சிறுகதை அறவியலை வற்புறுத்தாது. நேற்றைய நம்பிக்கைகளை அது வற்புறுத்தவில்லை. வாழ்க்கை சம்பந்தமான போதாமைகளைச் சொல்கிறது அது. நெருக்கடிகளைச் சொல்கிறது அது. உண்மையைச் சொல்லியும் தோற்றுப் போனேனே என்று முடிவடைவது ஒரு சிறுகதையாக இருக்க முடியும். ஆனால் உண்மை இறுதியில் வெல்லும் என்று முடிவடைவது பெரும்பாலும் சிறுகதையாக இராது. கதையின் முடிவாக அது இருக்கலாம். சிறுகதையினுடைய முடிவாக அது இருக்க முடியாது. பழைய சம்பிரதாயங்கள், பழைய மரபுகள் இவற்றை யார் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறாரோ, யார் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்களோ, இதுவரை நாம் சரி என்று நம்பிய ஒன்றை, இதுக்கு மேல் உண்மை கிடையாது என்று சொல்லப்பட்டு வந்த ஒன்றை, மேலானது என்று சொல்லபட்டு வந்ததை இன்றைய வாழ்க்கை ஏற்கவில்லை என்ற உண்மையை யார் வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் சிறந்த சிறுகதை என்ற உருவத்தை அறிந்தவர்கள்.

அடுத்ததாக, என்ன விஷயங்களை சிறுகதையின் கருவாக நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பது முக்கியமான விஷயம். அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. ஒருவன் அவனது வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து, அவனுக்கு எது முக்கியமானதாகத் தோன்றுகிறதோ, எந்த நெருக்கடி அவனுக்கு முக்கியமானதாக இருக்கிறதோ, எந்தத் துக்கம் அவனை ஓயாது வாட்டிக் கொண்டிருக்கிறதோ அதைப்பற்றி அவன் கதை எழுதலாம் – தமிழாலயமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில் ஆற்றிய உரையிலிருந்து – சுந்தரராமசாமி 25.03.95

அகிலன் தட்சணாமூர்த்தியின் “மரணத்தின் வாசைன”  — சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. அச்சிறுகதைகள் அனைத்துமே தமக்கேயான தளத்திலிருந்து மரணத்தின் வாசனையை வாசகர்களுக்கு நுகரக்கொடுத்திருக்கின்றன. மரணம் என்பது யாருக்கு எவ்வடிவில் வந்தாலும் அது சுகித்தலுக்குகந்த சுகந்தமாக வாசனையன்று. மரணத்தின் வாசனையென்று தலைப்பையேன் கதை சொல்லி தேர்ந்தெடுத்தார்? சம்பிரதாயங்களோடான மரணவீடொன்றில் அதற்கான பிரத்தியேகமான வாசனையென்று ஒன்றுள்ளது. பூஜைப்பொருட்கள் கிருமிநாசினி, வியர்வை, கண்ணீர் என்பன ஒன்றிணைந்து மரணரவீட்டின் வாசனையாய் வீசிக்கொண்டிருக்கும். இவ்வாசனையை மீண்டும் மீட்டிப்பார்க்கும் பொது மனதில் பயம் அப்பிக்கொள்ளும். மீண்டும் மீண்டும் நுகர்விற்காய் ஆவலையெழுப்பும் வாசனையன்று இது. மரணத்திற்கான வாசனை அனைவராலும் வெறுக்கப்படும் ஒன்று. ஆனால் நகரமே பற்றியெரிந்துகொண்டிருக்க கருகி, சிதறி, நிராதரவாய் ஈமொய்க்க வீதியோரம் விடப்பட்ட உடல்களடங்கிய நகரத்தின் மரணவாசனையென்பது நிராகரிக்க முடியாதது. இந்த வாசனையிலிருந்து ஓடிஒழிதல் சாத்தியமற்றது. இது நாற்றம். இது போரின் அவலம். இது வாசனையன்று. நாற்றத்தைத் தவிர்க்க மூச்சைப்பிடித்து சுத்தக்காற்றிற்காய் ஓடிச்சென்று மூச்சை இழுத்து இதமாகவிடுவதற்கு சுத்தக்காற்றுள்ள கூ+ழலை எங்குதான் தேடிஓடுவார் கதைசொல்லி.

இச்சிறுகதைத் தொகுப்பின் முதல் கதையான “ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப் போனார்” கதைக்குள் புகுந்து கொள்வதற்கு முன்பாக அகிலன் “பையன்” என்ற ஈழத்தமிழர்களின் பாவனையிலற்ற பதத்தை உபயோகப்படுத்தக் காரணம் என்ன? ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கு மொழியையே அனைத்து சிறுகதைகளிலும் தனது கதை மொழியூடகமாக உபயோகப்படுத்தியிருக்கும் அகிலன் தமிழ்நாட்டுத் தமிழர்களின் புரிதலுக்கென தொகுப்பின் ஆரம்பத்தில் சொல் விளக்கக் குறிப்புக்களையும் கொடுத்திருக்கின்றார். தமிழ்நாட்டு மொழிப்பாதிப்பென்பது அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் பொதுவானதொன்றுதான்.

“அழுதேன் கடைசியாக அப்பாவைச் சுடலையில் கொளுத்தியபோது பட்டுவேட்டியும் சால்வையுமாகப் படுத்திருந்த அப்பாவின் சுருட்டைத் தலைமுடியைப் பற்றிக்கொண்டு மஞ்சள் தீ நடமாடியபோது, அப்பா இனிமேல் வரமாட்டார் என்று எனக்குப் புரிந்து போது வீரிட்டுக் கத்தினேன்.”

அப்பா நித்திரை, அப்பா முழிப்பு அப்பா எழும்புவார் என்று நம்பிக்கொண்டிருந்த சிறுவனுக்கு கொழுந்து விட்டெரியும் தீயில் அப்பாவின் உடல் பற்றிக்கொள்ளும் போது மரணம் புரியாவிட்டாலும் அப்பாவின் நிரந்தரப் பிரிவு புரிந்து போகின்றது. அவன் அகவயமனது காயம் கொள்கின்றது. இது நிரந்தரக்காயம். களிம்பு பூசி மூடப்பட்ட காயாத ஆழமாக காயம். அதனால்தான் கதைசொல்லி இச்சிறுகதையை இப்படி முடிக்கின்றார். “அப்பனில்லாப் பிள்ளைகள் என்ற இலவசஇணைப்பு என்னோடு எப்பவும் கூடவே வந்து அசௌகரியத்தையும் கூடவே அப்பாவின் நினைவையும் தந்துகொண்டிருக்கின்றுத”

“நரைத்த கண்ணீர்” எனும் சிறுகதையில் “எப்போதும் எனது புன்னகையில் ஆயுள் குறைவாயிருக்கின்றது” என்று ஈழத்தமிழ் மக்களின் கையறுநிலையை கண்முன்னே கொண்டுவருகின்றார் அகிலன். துப்பாக்கி வேட்டுச் சத்தத்திற்குள்ளும், ஒப்பாரிக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கும் மனிதவாழ்வில் பிச்சுப் போட்ட பாண் துண்டுபோல் கிடைக்கும் ஒருசில நிமிட அல்ப சந்தோஷ கணங்களில் வாய்விட்டுச் சிரிக்க முடியாது, புன்னகைக்கத்தான் முடியும். அதுவும் இடையில் முறிந்து போகும் நிழல்போல் பின்தொடரும் இன்னுமொரு அவலச்செய்தி கேட்டு.

“நான் பிறக்கும் போது என்னூரில் போர் இருந்தது. விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதொன்றில்தான் என்னைப் பிரசவிப்பதற்காக தான் வைத்தியசாலைக்குப் போனதாக அம்மா நினைவை மீட்டுவாள்.”  இந்தப் போர்சூழல் காலங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கைதான் என்ன? பிறந்தவர்கள் எத்தனைபேர் தமது வாலிபத்தைக் கடந்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உடல் அவயங்களை இழந்தோர் எத்தினை, மனநிலை பாதிக்கப்பட்டோர் எத்தினை, வன்புணர்வை எதிர்கொண்டோர் எத்தனை இவற்றிற்கெல்லாம் கணக்கு இருக்கின்றதா?

“போர்பற்றி அலைந்து கொண்டிருக்கின்ற விடுதலை வீரதீரக் கதைகளுக்குமப்பால் கீறப்பட்ட மனங்களின் குருதி வடிந்துகொண்டிருக்கும் துயரம் என்னை மேலும் மேலும் அச்சமடையச் செய்கின்றது. பிறகு அச்சமடைந்து அச்சமடைந்து சலிப்புற்று என்னை வெறுமையான மனவெளிகளுள் தள்ளுகின்றது”  என்று தன் உள்ளக்கிடக்கைகளை பதிவாகக் கொட்டுகின்றார்

மரணத்தின் அவலங்களும் வடுக்களும் மட்டுமே கதைசொல்லியின் அவதானத்திற்குட்டவையன்று, சமுதாயவிழுமியங்களுக்குட்பட்ட பல தேக்கங்களையும் தனது சிறுகதைகள் மூலம் கூறிச்செல்ல அவர் மறக்கவில்லை, “ஒரு ஊரில் ஒரு கிழவி” எனும் சிறுகதையில் “தனியொருபெண்ணாகத் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயங்களை எழுதத் தொடங்கினா. அவ தானே தன் கதையெழுத ஆத்திரக்காரியாக இருக்கவேண்டியிருந்தது, அடாவடிக்காரியாக வேண்டியிருந்தது, ஒருகட்டத்தில் பைத்தியக்காரியாகவும் கூட ஆகவேண்டியிருந்தது. ஆனால் எல்லாவற்றையும் கடந்தா.” என்று பகுத்தறிந்துகாட்டி, பெண் என்பவள் எந்தக் காலகட்டத்திலும் தனித்தியங்குபவளாகவிருக்குமிடத்து அவள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பலவகை “காரி”யாக மாறவேண்டிய கட்டத்திற்குள் தள்ளப்படுகின்றாள் என்றும், “மந்திரக்காரன்டி அம்மான்டி” எனும் சிறுகதையில் “ச்சீ ஆம்பிளப்பிள்ளைகள் அழக்கூடாது வெக்கக்கேடு.” என்று முதல்நாள் வகுப்பறையில் ஆசிரியர் கூறுவதன் மூலம் சிறுவன் ஒருவன் ஆண் என்ற கட்டமைப்பிற்குள் எப்படித்தள்ளப்படுகின்றான் என்பதையும்;, “ஒருத்தீ” எனும் சிறுகதையில் பெண்களினாலான குடும்பமொன்றில் ஒற்றை ஆணின் கோபத்தைத் தாண்ட முடியாதவர்களாய் அப்பெண்கள் மௌனித்து அல்லல் படுவதையும் கதைசொல்லி கூறிநிற்கின்றார்.

இந்த முற்பது ஆண்டுப் போர்சூழலில் “காணாமல் போனோர்” பட்டியல் என்றொரு நேர்மையான ஆதரங்களோடான பட்டியலொன்றைத் தயாரிக்க முடியாத நிலையில், காணாமல் போன தமது சொந்தங்களை எங்கே தேடுவது? எப்படித் தேடுவது? என்று தெரியாத நிலையில்தான் இன்றும் பலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்குவியலுக்குள் அவர்களுக்கான தடையங்கள் மூலமே தம் சொந்தங்களை அடையாளம் காணுதல் சாத்தியமாகின்றது. அதில் கூடத் தவறுகள் இருக்கலாம். தடையங்களற்ற எலும்புக்கூடுகளைத் தமது சொந்தமாக்கத் தயங்கும் இதயங்கள். இறப்பு நேர்ந்துவிட்டதாய் முற்றுப்புள்ளி வைக்கத் தயங்கும் மனம். எங்கோ உயிரோடிப்பதாய் ஆறுதல் கொண்டிருக்கின்றது இன்றும்.

“இது அவற்ர சேட்டு”

‘இது அவற்ர வெள்ளிமோதிரம்”

“இது அவன்ர சங்கிலி”

“நான் அவளோடு எலும்புக்கூடுகள் அடுக்கிவைக்கபட்டிருந்த இடத்திற்குப் போனேன். அவர்களுடைய எலும்புக்கூடுகள் இருக்கக் கூடாதென்றும் ஏதேனும் சிறைச்சாலை அறைகளில் விழித்துக்கொண்டிருக்கலாம் என்றும் மனம் எண்ணிக்கொண்டிருந்தது. அவள் திடீரென்று கத்தினாள். “அண்ணா…” அவள் அழுத இடத்தில் இருந்தது ஒரு 14வயதுப் பெடியனின் எலும்புக்கூடு, அதனோடு ஒரு பெரிய எலும்புக்கூடு” இவ்வரிகள் கதைசொல்லியின் கற்பனைகளல்ல. எமது நாட்டில் நாம் பிறந்து வளர்ந்த நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் அவலங்கள். இவ்வனுபவங்களை தாம் கடந்துவந்த வாழ்நாட்களின் அன்றாட அனுவங்களாகக் கொண்டவர்கள்தாம் எத்தனை. குடும்பத்திலொருவர் விபத்தில் மரணித்துவிட்டால், குடும்ப அங்கத்தவர்கள் அனைவருக்கும் அம்மரணவலியைத் தாங்கவென்று மனஆலோசனை வழங்க எத்தனை நிறுவனங்கள் மேலை நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மரணவலி, எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி, ஆதரவின்மை எம்மக்களின் புறஅக உளச்சல்களுக்கான விடை எங்கேயென்றறியாது திகைக்கின்றார் கதைசொல்லி.

“ஒருத்தீ” சிறுகதையில் மரணம் எப்படி அறிவிக்கப்படுகின்றது, என்று சிறுகதையை ஆரம்பிக்கும் அகிலன். மின்அஞ்சல் மூலம், தொலைபேசியில் கிரிக்கெட் ஸ்கோர் அறிவிப்பது போல், கடையில் பொருட்கள் வாங்கும் போது சுத்தப்பட்டிருந்த பேப்பர் துண்டில், (புலம்பெயர் மக்கள் பலர் வானொலிச் செய்திகளில் இறந்தவர்கள் பெயர்ப்பட்டியல்கள் வாசிக்கப்படும் போது, தவறாகத் தகவல்கள் கிடைத்து மரணவீடு முடித்துக்கொண்டு பின்னர் தமது சொந்தங்கள் உயிருடனிருக்கின்றார்கள் என்று அறிந்துகொண்டவர்களும் இருக்கின்றார்கள்).

“எனக்கு ஒரு மரணம் அறிவிக்கப்பட்டது? மின்அஞ்சல் வழியாக ஏதோவொரு இணையத்தளத்தின் செய்தியில் இருந்து எடுத்து இரண்டு வரிகள் ஒட்டப்பட்ட மின்னஞ்சலின் மீந்திருந்த கேள்வி இது அவளா?… என்று தொடங்கி அந்த “ஒருத்தீ” யுடனான தனது சொந்த அனுவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து சென்று முடிவில், “காப்டன் ஈழவேணி என்று அழைக்கப்படும் தொண்டமான்நகர் கிளிநொச்சியைச் சொந்த முகவரியாகக் கொண்ட சபாரத்தினம் பாரதி.. நான் பதிலெழுதாமல் இங்கே தொடக்கத்தில் இருக்கும் வரியை எழுதத் தொடங்கினேன்” என்று கதையை முடிக்கின்றார் அகிலன். மரணத்தின் வாசனையில் அனைத்துச் சிறுகதைகளுமே போர்சூழல் மரணங்களால் புனையப்பட்டவை என்பதால் வேறுபட்ட கதைசொல்லும் யுக்திகளைக்  கையாண்டு வாசகர்களைத் தன்வசம் வைத்துக் கொள்ளவும் தவறவில்லை அவர் என்பதும் பாராட்டுக்குரியது.

மனிதமனமென்பது தன்னார்வபூர்த்திக்கான தெரிவொன்றில் தொலைந்து போகும் தன்மையைக் கொண்டது. பொழுதுபோக்கு எனும் சொற்பதத்திற்குள் தமக்கான நேரக்க(ளி)ழிப்பை மனநிறைவாய் செய்து கொண்டிருக்கும் பலர் வாழ்வில் இவற்றிற்கு அடிமையாகிப்போவதுமுண்டு. நிர்ப்பந்தத்தால் இதனிலிருந்து வெளியேற்றப்படுபவர்கள் உளவியல் தாக்கங்களும் உள்ளாகிப் போகின்றார்கள், கடைசியல் அதுவே அவர்களது வாழ்வில் அழிவையும் கொண்டு சேர்க்கும் என்பதைத் தனது “குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்”, “தோற்ற மயக்கங்களோ” போன்ற சிறுகதைகளின் மூலம் ஆராய்ந்துள்ளார் கதைசொல்லி. தாம் ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த செடிகள், செல்லப்பிராணிகள் போன்றவற்றைப் போரின் நிமித்தம் இழந்தபோது ஏற்பட்ட வலியை இச்சிறுகதைகள் கூறுகின்றன.

படைப்பாளியின் அனைத்து சிறுகதைகளும் மரணத்தின் வாசனையை வாசகர்களுக்கு நுகரச்செய்து மரணத்தின் எல்லைவரை அவர்களையும் இழுத்துச் சென்றிருக்கின்றது. தவிர மற்றைய சிறுகதைகளின் தளத்திலிருந்து வேறுபட்டு “கரைகளிற்கிடையே..” சிறுகதை, போரின் நிமித்தம் நாட்டைவிட்டு வெளியேற நினைக்கும் ஒரு தமிழ் குடும்பம் எப்படி இன்னுமொரு தமிழனால் ஏமாற்றப்பட்டு அழிந்து போகின்றது என்பதையும் காட்டி நிற்கின்றது.

“துப்பாக்கிகளில் நல்ல துப்பாக்கிகள், கெட்ட துப்பாக்கிகள் எனப்பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச் சனங்கள். துப்பாக்கிகளுக்குத் தெரிந்ததெல்லாம் கொலை அது மட்டும்தான்” என்று போரின் பால் தான்கொண்ட மனவிசனத்தையும் சொல்லிக்கொள்கின்றார் த.அகிலன்.

மரணத்தின் வாசனையை சிறுகதைத் தொகுப்பை விமர்சனம் செய்த எழுத்தாளர் இமையம் அவர்கள் இப்படி முடிக்கின்றார்கள்

“போர்கள் எதன் பொருட்டு நடத்தப்படுகின்றன?  மனிதர்களை கொன்று குவித்துவிட்டு அடையப்பெறும் வெற்றிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?  போர் மனிதர்களை அகதிகளாக்கியது.  பெயர் தெரியாத ஊர்களுக்கு விரட்டியடித்தது.  மொழி தெரியாத நாட்டில் வாழ வைத்தது.  உறவுகளைப் பிரித்தது.  பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளையும், குழந்தைகளிடமிருந்து பெற்றோர்களையும் பிரித்தது.  குழந்தைகள் இறந்தன.  பெற்றோர்கள் இறந்தார்கள்.  ஊமையாக்கப்பட்டார்கள்.  காணாமல் போனார்கள்.  பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.  இத்தனை கொடூரங்களுக்கு பிறகும் போர் நடக்கிறது.  யாருக்கான, எதற்கான போர், அந்தப்போர் தேவையா என்று த.அகிலன் தன் கதைகளின் வழியே கேட்கிறார்.  மனித சமுதாயம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.

 ஒரு இலக்கியப்படைப்பின் வெற்றி, பலம் என்பது அப்படைப்பில் இருக்கும் உண்மையைச் சார்ந்தே நிர்ணயமாகும். த.அகிலனின் மரணத்தின் வாசனை-போர் தின்ற சனங்களின் கதை- சிறுகதைத் தொகுப்பு- ஒரு இலக்கிய படைப்பு.”

போர் என்னை அழித்தது, என் உடன் பிறப்புக்களை அழித்தது, எனது குடும்பத்தை அழித்தது, எனது சொந்தங்களை, ஊரை, மண்ணை அழித்தது. என்னை இருக்கவிடாமல், உண்ணவிடாமல், உறங்கவிடாமல், கலைத்துக் கலைத்து அடித்தது அழித்தது. உலகெங்கும் சிதறிக்கிடக்கின்றோம் நாம். பணம் கிடைத்தால் ஆயுதங்களை வாங்கிக் குவித்து மனிதர்களை மனிதத்தை அழித்தொழிக்கும் இப்போரில் வீரம் எங்கே வந்தது? வெற்றி தோல்வி எங்கே வந்தது? அனைத்தையும் அழித்தொழித்துக் கிடைக்கும் நஞ்சூரிய நிலத்தைப் பிடிப்பதுதான் போரின் வெற்றியெனில் அது எமக்குத் தேவைதானா? என்ற கேள்வியை மரணத்தின் வாசனை எனும் சிறுகதை மூலம் விட்டுச்சென்றிருக்கின்றார் த. அகிலன். சிறுகதைத் தொகுப்பை மூடியபோது எனக்குள்ளும் இக்கேள்வியே எஞ்சி நிற்கின்றது.

 

நன்றி: கருப்பி (“வெயில் காயும் பெருவெளி – கூர் 2012″)

10 Oct

ஃபஹீமாஜஹானின் “அபராதி”

 

படைப்பொன்றை பதிந்து செல்லும் பொது அது வெவ்வேறு அனுபவங்களை படைப்பாளிக்கும் வாசிப்பவனுக்கும் விட்டுச் செல்கிறது. படைப்பாளி நின்று பேசும் தளம் யாதாகவிருப்பினும் எந்த சூழ்நிலையில், எதன் பொருட்டு நிகழ்த்தப்படிருப்பினும் அந்தப்படைப்பை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் வாசிப்பவரின் பிரவேசம் எழுத்துக்குள் நிகழ்கிறது. ஒரு படைப்பின் பின் படைப்பாளி மரணித்துவிடுகிறார் என்று குறிப்பிட்டார் ஒருவர். அவ்வாறே, ஃபஹீமாஜஹான் அவர்களின் கவிதைத் தொகுப்பான அபராதியை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இந்தப் பதிவு.

“ஆருயிரே வருக” என்ற தலைப்பிட்ட கவிதையுடன் திறக்கும் அபராதியின் பக்கங்களை முப்பத்தொரு கவிதைகள் நிரப்பியிருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் வாசகருக்கு வெவ்வேறு அனுபவங்களைத் தந்து நகர்கின்றன.
“நிழல் மரங்களற்றுச்
சூரியன் தவிதவித்திடும் நெடுஞ்சாலையோரம்
வெய்யிலை உதறி எறிந்தவாறு
நடக்கிறாள் மூதாட்டி”
என்பதாகத் “துயர்” என்னும் கவிதையில் எழுதும் கவிஞர் கொதிமண்ணில் நடக்கும் அவளின் முன்
“வெயில்
மிகப் பெருந் தண்டனையை
வழி நீளப் பரவ விட்டுள்ளது” என்கிறார்.
ஆதி முதல் தொடரும் பயணத்தில் ஒளிந்திருக்கும், ஏலவே அனுமானிக்கக் கூடிய முடிவு தெருவின் வளைவுக்குள் மறைந்திருக்கிறது. கூடவே வரும் ஆனால் நீள அகலம் மாறி மாறித் தோன்றும் நிழல் போல அவளுடனும், அவளுள் உறைந்தும் பயணிக்கிறது துயர்.
“என்றோ விதியாகித் தொடரும்
நியதிகளில் நசுங்குண்டவாறு
இரவு நெடு நேரம் வரை
துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்”
என்றவாறு “அம்மா”வை உருவகிக்கும் கவிஞர், எல்லா வீடுகளிலும் விறாந்தையில் தலைக்குக் கை வைத்துப் படுத்தபடி காவலிருக்கும் தாய்மார்களை நினைவுகளில் காட்சிப்படுத்தி மௌனிக்கிறார். ஊரில் விறாந்தைகளில் காவலிருக்கும் தாய்மார்களின் பிரதிநிதிகளை இங்கே, புலம்பெயர் தேசங்களில் குளிர் ஊறும் அறைகளுக்குள்ளே ஆற்றாமையில் புலுங்கியழும் மனதுகளுக்கு சொந்தக்காரர்களாய் காணக் கிடைக்கிறது. தாய்மார்கள் மீது அமைதியாகக் கட்டவிழ்க்கப்படும் வன்முறையை யாரும் ஆத்மார்த்தமாக உணர்ந்து கொண்டதாகத்தான் தெரியவில்லை.
“கருங்கல் சிலையொன்று
அதிகாரம் செய்தபடி அலைகின்ற வீட்டில்
மோதி மோதியே செத்துவிட்டன
அவள் வளர்த்த எல்லா மான் குட்டிகளும்..”
என்று முடியும் அந்தப் பதிவில் இவ்வாறாகத் தங்கள் மனதுக்குள் பிறப்புவித்து உயிர் கொடுத்து வளர்த்தெடுத்த உணர்வுகளைக் காவு கொடுத்து நடைப்பிணமாய் வாழும் தாய்மார்கள் எனப்படும் பெண்களை நினைத்து எம்மாலும் மௌனம்தான் கொள்ள முடிகிறது.
“முறைப்பாடுகளுக்கு அஞ்சிய
எல்லாக் காவலரண்களும்
அவளை வெளியே துரத்துகின்றன”
என்று “எல்லைக் கோட்டில் தடுக்கப்பட்டவள்” கவிதையில்
“இன்று
கின்னரர் தம் இசையிழந்த
நிலமெங்கும்
அவளது ஒப்பாரி அலைகிறது
அரசரைத் துதி பாடிச் செல்வோரின்
கால்களின் கீழே
பேரவலத்தின் ஓசை மாண்டழிகிறது” என்கிறார்.
ஆமாம்; பேரவலத்தின் ஓசை, தாய்மார்களின், மனைவிமார்களின், குழந்தைகளின், எல்லோரினதும் குரலுந்தான் மாண்டழிந்தது. மாண்டழிகிறது. தங்கள் புத்திரர்களை வெறிகொண்டு தாழப்பறக்கும் பருந்தொன்றுக்குப் பறிகொடுத்துவிட்டு வீதிவீதியாய், தெருத்தெருவாய் மெல்லிய தீற்றாய்ப் பதிந்த அவர்களது காலடித் தடங்கள் தேடி அலையும் தாய்மார்களையும், உறவுகளையும் நினைத்து அதிர்ந்து அடங்குகிறது மனது.
“மழை” என்ற கவிதையில்
“இறுகி மூடப்பட்ட
வீட்டினும் வர முடியாது
நனைந்து கொடிருக்கிறது
மழை”
என்னும் கவிஞர்
“அது புகார் கொண்டு
தன்னைப் போர்த்தியவாறு
தென்னந் தோப்பினுள்
வழி தவறியலைகிறது” என்று தொடர்கிறார்.
யன்னலின் வெளியே தூறிக் கொண்டிருக்கும் மழை பெலத்து மனதுக்குள் துமிக்கிறது ஊர் ஞாபகங்களை அதே கருஞ்சாம்பல் நிறத்துடன் உடல் சுற்றிப் படரும் புகாருடன்;
“இன்னொரு வெப்பமழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமேல்லாம் ஒடுங்கிப் போய்விட
பெய்வதை நிறுத்தி
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை”
என்றவாறு முடியும் அந்தக் கவிதை தனித்திருக்கும் பெண்ணின் பிரிவின் வலியை, தனிமையின் கனத்தை, வஞ்சிக்கப்பட்ட கோபத்தை உவமித்து அகல்கிறது. மழை மட்டுமா பெருமூச்செறிந்தது?
“நொந்த உடலுக்கான நஞ்சு” என்ற கவிதையில் பால்ய பருவத்தைப் பீடித்து நிற்கும் நோயையும், நோயிலிருந்து மீட்கும் பொருட்டு அன்னைமாரால் நிகழ்த்தப்படும் சாகசங்களையும் பகிரும் கவிஞர் நிகழ்காலத்தைக் குறித்து இப்படி சொல்கிறார்.
“துடைத்தழித்திட முடியாமல்
நோயின் வழியைத் தாங்கி நிற்கும் முகத்தை
விசாரிக்க வருவோரிடமிருந்து
மறைப்பது பற்றிச் சிந்திக்கிறேன்”
கனவுகளாலும், எதிர்பார்ப்புக்களாலும் நிரப்பப்பட்ட பால்ய பருவத்தின் நாட்கள் அற்ப ஆயுள் கொண்டவை. அந்த நாட்களில் எம்முடன் பயணிக்கும் உறவுகளை வெறுத்துவிட அல்லது கோபப்பட ஒரு சிறு நூழிலையளவுக்கான காரணம் போதுமாக இருக்கிறது. அவர்களை அன்பு செய்யவும் அதுவுமே போதும். விரைவாக சுழலும் காலத்தின் மாற்றங்கள் ஏற்படுத்திப் போகும் பாதிப்புக்களில் வாழ்க்கையை, உறவுகளைப் புரிந்து கொள்ளவும் அனுபவங்கள் தேவைப்படுகின்றன. இல்லாவிடின் உணர்ந்து கொள்ளும் பக்குவத்தை உலக நடப்புக்கள், சம்பவங்களைப் பார்த்தாவது அறிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகிறது. இந்தப் பொழுதில் பிறரிடமிருந்து எமது இயலாமையை, வலியை மறைத்துவைக்கும் மனதின் விருப்பத்தை செயலாற்றுவதற்கு உடல் எவ்வாறு ஒத்துழைக்கும் என்ற கேள்வி தொக்கி நிற்கவே
“மின் கம்பியில் குந்தியவாறு
எனதறையையே பார்த்திருந்த வெண் பறவைக்கு
மரணத்தின் துர்க்குறிகள் கிட்டவில்லை”
என்று சொல்லிக் கொள்கிறார் கவிஞர்.
தற்கொலை குறித்தும், மரணம் குறித்தும் பாடாத கவிஞர்கள் வெகு குறைவு எனலாம். மரணத்தைப் பாடுதலும், அதிலும் சுய மரணத்தைப் பாடு பொருளாகக் கொள்வதற்கான மனம் எந்தப் பொழுதில் வாய்க்கும் என்ற கேள்வி எப்போதாவது மனதில் அலையாய் அடித்து மறைவதுதான். தற்கொலை செய்துகொண்ட (பெண்) கவிஞர்கள் எழுதிவைத்துப் போன பாடல்களின் தாக்கமும், கனத்த மனதும் ஒன்றாய் வாய்க்கையில் பீடிக்கும் அந்த ஒரு பொழுதின் அடர்த்தியை வார்த்தைகளில் கொண்டு வருதல் எத்துனை சாத்தியமாயிருக்கும் என்பதுதான் சூட்சுமமானது.
ஃபஹீமாவின் “தற்கொலை” என்ற கவிதையில்
“ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கும்
விழுமியங்களினூடாக
பரவிச் சென்றிருக்கும் வேரினை
விடுவிக்க முடியாதவளாக
அண்ட சராசரங்களின் எதிரே வீழ்ந்து கிடக்கிறாள்”
“நீ கொடுத்த சுமைகளையும்
அந்த உடலையும்
உன்னிடமே எறிந்துவிட்டாள்
இனி எக்காலத்திலும்
உன்னெதிரே வரப்போவதில்லை
நீ துன்புறுத்திய
அவள் ஆத்மா”
தொடரும் ஆதிப் பெருந்துயரின் வீச்சுக்குள் மூழ்கிப் போயின தொன்மைமிகு முகங்கள் எனினும் புதியனவற்றையும் தன் சுழல் நாக்குக்கு தின்னக் கொடுத்து நகர்கிறது அது. வழங்கப்பட்ட உடலைத் துறந்து புது உடல் கொண்டு விலகும் பெண்மையின் பிறப்பு எத்துணை சுலபமானதாக அமைந்துவிடும்? மரணித்த தன் உணர்வுகளைக் கனவுகளைக் கொண்டு கட்டிய வாழ்க்கையின் இன்னொரு பாதையை நோக்கிய புதிய அடிகளின் அமைவு அந்த அரூபத்தின் மரணத்தின் பின்னானதாக எந்தவகையில் அவளால் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும், தெரியவில்லை.
“நம்மெதிரே வீழ்ந்து கிடக்கிறது
காலத்தின் பிறிதொரு முகம்”
என்று “கடைசிச் சொல்” கவிதையில் பிரிவைக் காட்சிப்படுத்தும் கவிஞர் “கிரீடங்களை அவமதித்தவள்” என்ற இன்னொரு கவிதையில்
“ஆதி முதல் போற்றிவரும்
அந்தக் கிரீடங்களின் மீது
அவமதிப்பை விட்டெறிகிறேன்” என்கிறார்.
அபராதியின் கவிதைகளூடே பயணிக்கும் பெண்ணொருத்தியைக் கண்கூடாகக் காணக்கிடைக்கிறது. அவளின் உணர்வுகளை, பிரிவின் கதையை, நினைவுகளை அவை நிகழ்ந்த நொடிகளின் உயிர்ப்பு மாறாமல் தன் கவிதைகளுக்குள் பொதித்து வைத்திருக்கிறார் கவிஞர். அந்தப் பெண்ணுடன் உரையாடும் பொருட்டு ஒவ்வொரு கவிதையையும் நெருங்கின் அவலச்சுவையை, வலியின் நுனியில் துளிர்த்திருக்கும் புது இரத்தத்துளியை அதன் சூட்டுடன், துவர்ப்புச் சுவை மன நாக்கின் மெல்லிய இடுக்குகளில் பரவ உணரமுடிகிறது.
“தம்பிக்கு” என்ற தலைப்பிட்ட கவிதையில்
“அபயம் தேடித் தவித்த
உன் இறுதிச் சொற்கள்
எனது அறையெங்கும்
எதிரொலித்தபடியலைகின்ற இந்நாளில்
நம்பிக்கையும் ஆறுதலும் தரக்கூடிய
எல்லாச் சொற்களையும் நானிழந்து நிற்கிறேன்” என்கிறார்.
தங்கள் உறவுகளைப் புலம்பெயர அனுப்பிவிட்டு ஊர் எல்லையில் தொடர்பு வெளிக்கு அப்பால் நிற்கும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான உறவுகளைக் காணக்கிடைக்கிறது இந்தக் கவிதையில். மொழி மௌனித்து நிற்கும் அந்தப் பொழுதில் உறைந்து நிற்கும் அன்பின் வெளிப்பாடு யாதாகவிருக்கும், கண்ணீராக, இந்நிலைக்குக் காரணமானவருக்கான சாபமாக, சுயபச்சாபத்தின்/கையாலாகாததனத்தின் பொருட்டுக் கிளம்பும் கதறலாக, அடுத்த கவிதையை நோக்கி நகருவதற்கு சில நொடிகள் தேவைப்படுகிறது.
“அபராதி” என்ற தொகுப்பின் தலைப்பைத் தாங்கி வரும் கவிதை இவ்வாறு முடிகிறது.
“கொடூரச் சாவுகளைக்
கண்டு கண்டு அதிர்ந்த மண்
பலி கொல்லும் கண்களுடன்
உன்னையே பாத்திருக்கிறது
உனது அரசியல்
சகித்திட முடியாத் துர் வாடையுடன்
வீதிக்கு வந்துள்ளது
சுபீட்சம் மிகுந்த தேசத்தின் ஆன்மா
கைவிடப்பட்ட களர் நிலமொன்றில்
புதையுண்டு அழுகிறது”
“அபராதி” என்ற கவிதை பேசும் நுண்ணரசியல் வலிமையானதாக இருக்கிறது. அதிகாரத்தைச் சாடும் கவிஞர் நீ செய்தவற்றுக்கான அபராதத்தை நீ கட்டும் வேளை வரும், அதை உன்னைப் பழிவாங்கக் காத்திருக்கும் கண்களின் தீவிரம் உனக்கு உணர்த்தும் என்பதாக உருவகிக்கிறார். “அபராதி” என்னும் தலைப்பு தொகுப்புக்கு எங்கணம் பொருந்துகிறது எனக் கேட்டால், ஏலவே குறிப்பிட்டபடி கவிகளுக்குள் ஊடாடித் திரியும் பெண்ணால் எழுப்பப்படும் கேள்விகள் நினைவின் பதிவுகள் வஞ்சிக்கப்பட்டவளுக்கான அல்லது காயப்படுத்தப்பட்டவளுக்கான குரலில் ஒலிக்கின்றன. ஆக கவிதைகளின் தொனியும் செலுத்தப்படவேண்டிய அபராதத்தின் மையத்தை நோக்கி எறியப்படும் கயிறின் வழியே தம் சுவடுகளைப் பதியவிட்டுக் காத்திருக்கின்றன என்றும் கொள்ளலாம்.
“அவளை வழியனுப்பிய இடம்,” “பேய்களால் தின்னப்பட்டவள்,” “அவள் வளர்க்கும் செடிகள்,” “நஞ்சூட்டப்பட்ட செடி,” “உயிர்வேலி” அடங்கலாக முப்பதொரு கவிதைகளின் தொகுப்பான ஃபஹீமாஜஹானின் தொகுப்பான “அபராதி” வாசிப்பின் முடிவில் வார்த்தைகளின் கனதியை மனதில் பதியவிட்டு தான் கொண்ட கவிதைகளின் பேரால் படைப்பிற்குரிய வெற்றியைப் பெறுகிறது.
————————————-
குறிப்பு – கனடாவில் 09-10-2011 அன்று இடம்பெற்ற வடலியின் நான்கு நூற்கள் அறிமுகவிழாவில் வாசிக்கப்பட்டது சில திருத்தங்களுடன் மீள் வாசிப்புக்குட்படுத்தப்பட்டு இங்கே பதியப்படுகிறது.
———————————
நன்றி : மயூ மனோ
25 Nov

நீலம் பாவிய நிலம்

நாயகர்களைப்போல்
அவர்கள் சண்டையிட்டபோது,
அவர்களின் போற்றத்தக்க
இதயங்கள் அமைதியாகவும்
வாள்கள் வன்முறை
கொண்டும் இயங்கின.
சாகவும் கொல்லவும்
அவர்கள் எப்போதோ
தயாராகி விட்டிருந்தார்கள்.
– ஜோர்ஜ் லூயி போர்ஹே
ஃபஹீமா ஜஹான் இலங்கையைச் சேர்ந்த கவிஞர். 90-களின் மையப்பகுதியில் எழுதத் தொடங்கினார். ஒரு கடல் நீருற்றி (2007) அபராதி (2009) என்று இரு கவிதைத் தொகுப்புகளையும் ஆதித்துயர் (2010) என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பையும் வெளியிட்டிருக் கிறார். ஃபஹீமா போயம்ஸ் என்ற வலைத் தளத்திலும் பதிவுகளைச் செய்துவருகிறார்.
அழகிய படிமங்களைக் கொண்டவை. ஆரவாரமற்ற இயற்கையோடு ஒன்றிப் போகக் கூடிய மானுடத்தின் குரல். ஆணாதிக்கத்தைப் பொதுத்தன்மையோடு எதிர்ப்பவை. போர் சூழலில் கூடிழந்து அலையும் பறவைக் கூட்டங் களாக மனிதர்கள் அலையுறுவதையும் நிலம் சார்ந்த பிடிப்பை, ஆர்வத்தை, அக்கறையை வெளிப் படுத்துவனவாகவும் இருக்கின்றன. நிலத்தை கூர்மையாக அவதானிப்பதையும் அதன் முகிழ்ந் தலை இரசனையோடு விவரிப்பதையும் கொண்டிருக்கின்றன.
மீன்கள் நிரம்பிய சின்னச்சட்டையை நனைத்துக் கூத்தாடும் கவிஞர் நதி நனைத்து சுமந்து வந்த பல்லாயிரம் வேர்களின் மொழிகளின் சூட்சுமத்தில் கரைந்து போகிறார்.
ஃபஹீமாவின் கவிதைகள் எளிமை யானவை தனித்துவம் மிக்கவை. இவர் இன அரசியல் பிரச்சனைக்குரிய நாட்டில் வாழ்பவர். குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர். இஸ்லாத்தைப் பின்பற்றுகிற பெண்கள் எழுத வருவது குறைவு. அவர்களை வரவேற்க எழுது வதற்கு உந்துதலை அளிக்க வேண்டி யிருக்கிறது.
ஃபஹீமாவின் கவிதைகளில் பெண்ணுக் கான குரல் தீவிரமாக எழுகிறது. பழைய நடைமுறைகளைக் கேள்விகேட்கிறது. அழுத்தித் திணிக்கும் பழைய மரபுகளுக்கு எதிராக நிற்கிறது. நிலவுடமையும் மதமும் பெண்ணை ஒடுக்குகிற அம்சங்களின்மீது தொடர்ந்து விசாரணைகளை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. பெண்ணாக பலங் கொண்டமட்டும் அவற்றின் அடக்கு முறையை எதிர்க்க வேண்டிய துணிவைப் பெற வேண்டி யிருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்குமான மாறு பட்ட நியதிகளைக் களையெடுக்க வேண்டி யிருக்கிறது. இந்நிலையில் ஃபஹிமாவின் கவிதை கள் பெண்ணின் குரலாக வெளிப்படுகின்றன. பெண்ணின் கருத்தை நெரித் திடும் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிற இவர் பெண்ணைப் பெண்ணாக வாழவிடச் சொல்கிறார்.
 எக்காலத்திலும் இனி
உங்கள் பீடங்களில்
முழந்தாளிட வரமாட்டேன்
நீங்கள் ஆராதிக்கும்
நாமங்களிலும் சேரமாட்டேன்
ஆதிமுதல் போற்றிவரும்
அந்தக் கிரீடங்களின்மீது
அவமதிப்பை விட்டெறிகிறேன்
என கோபத்தை வெளிக்காட்டத் தயங்காத குரல் ஃபஹிமாவுடையது.
காதலின் துவக்கத்தில் இருபாலருக்குமான வேறுபாடுகள் கருத்து வேறுபாடுகளை அதிகம் நிகழ்த்துவதில்லை. ஒருவர் மற்றொருவரின்மீது எடுத்துக் கொள்ளும் உரிமையின் ஜ்வாலையைத் தாண்டி பால்சார்ந்து இயற்றப்படும் நியதிகள் முன்வைக்கப் படுகின்றது.
உன்மனத்திரையினூடு சட்டமிட்டுப்பார்க்கும்
எல்லைகள் உள்ளவரை
எனது குரலின் நியாயத்தை நீயுணர முடியாது
என காதல் சரிசமமாக நிகழ்வதற்குக்கூட பால்பாகுபாடு தடையாக இருப்பதை அதன் தீவிரத்தைப் பதிவுசெய்கிறார். அன்பிற்குக்கூட தடைகளும் முரண்களும் செயலூக்கமற்ற நிலைக்குக் கொண்டு செல்வதைச் சுட்டுகிறார்.
காதலின் பெயரால் அடிபணிவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். காதலின் பெயரால் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து தலையசைப்பவளாக உரிமையற்றவளாக இருப்பதை மறுக்கிறார். பெண்ணாக இருப்பதனால் அடிபணிய முடியாது சக உயிராக சமதையாக காதலின் இருபாலினமும் இருக்கவேண்டும் என்பதை விழைகிறார்.
வாழ்வின் விதிமுறைகள்
எனதுலகையும் உனதுலகையும்
வேறுபிரித்த வேளையில்
விடைபெற்றோம்
ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம்
இறுதியாக அன்றுதான்
அழகாகச் சிரித்தோம்
என பால்வேறுபாடின்றி ஒன்றிப் பறந்த நாட்களின் நினைவெச்சத்தை ஆதங்கத்தோடு முன்னிறுத்துகிறார் வாழ்வின் உயிர்த்தலைமீறி வகுத்துக் கொண்ட சட்டகங்கள் அழுத்தங்களை ஏற்படுத்தத் தக்கனவாக மட்டுமல்ல. மகிழ்ச்சியைக் களவாண்ட தருணமாகவும் மாறிவிட்டது. ஓரிடத்தில் கலாசாரம் பண்பாடு எனும் அரிகண்டங் களை அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்என உனதடி பணிதலில் அவளுக்கு ஈடேற்றம் கிடைக்குமென்கிறாயே என்கிறார். வானதி கவிதைகள் எனும் தொகுப்பில் கவிஞர் வானதி தாலியை கேள்விக்குட்படுத்தி இனப்போர் நடக்கும் வேளையில் சயனைடு குப்பிகளே கழுத்தை அலங்கரிக்கிறது என மரபார்ந்த தாலியை விமர்சிப்பார். அந்த வரிகள் இயல்பாகவே நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.
அவளைப் பலவீனப்படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்தபின்பும்
அவளை உள்நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?
போரிலும் பகையிலும் முதல்பொருளாய்அவளையே சூறையாடினாய்
அவளுக்கே துயரிழைத்தாய்
உன்னால் அனாதையாக்கப்பட்ட
குழந்தைகளையெல்லாம் அவளிடமே
ஒப்படைத்தாய்
தலைவனாகவும் தேவனாகவும் நீ
நிமிர்ந்து நடந்தாய்
போர்ச் சூழலிலும் பெண்ணினமே துயரத் தைச் சுமந்து அலைவதாக இருக்கிறது. பாரங்களை முற்றிலும் சுமந்து கொண்டு இனத்தை வளர்க்க பிரயத்தனப்படுகிறார். ஆனால் இவையெல்லா வற்றையும் சுமத்திவிட்டு ஆணாதிக்கம் – அரசாங்கம் எனும் படிநிலைகளின்படி ஆண் மனித இனத்திற்கு தலைமையேற்கிறான். சுமத்துபவனுக்கும் சுமைதாங்கிக்குமான வேறுபாடு இரு இனங்களுக்கிடையே நிறைந்திருப்பதைக் காட்டுகிறார்.
ஃபஹிமா பேசும் முக்கியமான இடம் நிலம். காலங்காலமாக மனிதனின் வாழ்க்கையில் முக்கிய வினையாற்றுவது நிலம். ஐம்பூதங்களுள் ஒன்றான நிலம் இருப்பின் ஆதாரம். ஆதிமனிதன் தொடங்கி இக்கால நவீனமனிதன் வரை அனைவருடைய வாழ்விலும் இன்றியமையாத கூறு நிலம். நிலத்தில் மனிதன் நிலை பெறுதலி லேயே நாகரிகம் வளர்ச்சி பெற்றது. நிலம் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக் கிறது. வாழ் வதற்கு நிலமற்றவனுக்கும் பெரு நிலத்தைக் கொண்டிருப்போருக்குமான வேறுபாட்டைக் கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம். ஆதிக்கம் அரசு உருவாக்கிய சட்டகங்கள் அனைத்தும் நிலத்தை கையகப்படுத்தவும் பாது காக்கவும் பயன்பெறவுமாக உண்டாக்கப் பட்ட வையே! நிலமில்லாதவனை துச்சமென மதிக்கும் போக்கு எல்லாக் காலத்திலும் உள்ளது போலவே நிலத்திற்காகப் போராடுவதும் தொடர்ந்து வருகிறது. ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்வதன் பொருட்டாக அந்நிலத்தில் வாழும் இன மக்கள் வெவ்வேறு காலங்களில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர் என்பதைக் காண் கிறோம்.
நிலம் வாழும் மனிதனுக்கு நம்பிக்கை யளிப்பது. மனிதனின் பண்பாட்டு வேர் அவன் வாழுகின்ற நிலத்தை ஒட்டியே அமைகிறது.
பூர்விக குடிகள் விட்டுச்சென்ற தடயங்களைப்
பாறை இடுக்குகளில்
மூலிகைச் செடிகளிடையே பத்திரப்படுத்தியிருப்பாய்
பூர்விகமாக வாழும் இடத்தில் அவர்களுக் கான வாழ்வியல் முறைகள் இருக்கும். அவர்களுடைய உடை, உணவு, மருத்துவம் சார்ந்த அடிப்படை விடயங்களிலும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு இனமும் தன் குழந்தைகள் மூலமாக இந்த அடிப்படைகளையும் கடத்துகின்றன ; நிலைபெறுகின்றன ; பின்பற்றுகின்றன.
ஏகாதிபத்தியம் முழுப்பண்பாட்டையும் ஒரு சேரத் தாக்குகிறது. சமூக அமைப்புகள் பொருளாதார உறவுகள் பண்பாட்டு மரபுகள் முதலானவற்றையும் ஏகாதிபத்திய அரசியல் பாதிக்கிறது. இதற்கு எதிராக பண்பாட்டை நிலைநிறுத்த வேண்டிய தேவையும் எழுகிறது. அன்னிய கலாச்சாரம் திணிக்கப்படுவதை எதிர்ப்பது போலவே சொந்த கலாச்சாரம் சிதைக்கப்படுவதையும் தடுக்க வேண்டியிருக்கிறது.
கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன்
கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு
இரத்தக் கறைகளை அப்படியே விட்டுவிட்டு
இனமக்களின்மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை அவர்களது அடையாளச் சிதைவாக மாறுகிறது. அடையாளத்தை வேரறுத்தல் என்பது வரலாற்றின் பக்கங்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியப் பழங்குடிகளை அழித்தொழிக்க பங்காற்றிய ஆஸ்திரேலிய அரசு. சொந்த மண்ணில் வாழும் அதிக மக்கள் தொகை கொண்டவர்களை அழிக்க இறங்கிய இலங்கை அரசு மற்றும் உலகம் முழுவதும் இன அழித் தொழிப்புப் போர்கள் நடைபெறுவதைக் கண் கூடாகக் காண்கிறோம்.
பெரு முதலாளிகளின் கூட்டிணைவில் நாட்டிற்கு வந்துசேரவேண்டிய இலாபத்தைக்கூட தனியார் பெருமுதலாளிகளிடம் தாரைவார்க்க பழங்குடிகளை அழித்தொழிப்பு செய்வது நடுநிலை நாடென உலக அரசியலில் பெயர்பெற்ற நாட்டில் அப்போது இருந்த அதே கட்சி நடத்தும் ஆட்சியின்போது நிகழ்த்தப்படுகிறது.
இங்கெல்லாம் புரியாதமொழி பேசியவாறு
துப்பாக்கி மனிதர்கள்
ஊடுருவத் தொடங்கியவேளை
விக்கித்துப் போனோம்
எமது கல்லூரி நூலகம் கடற்கரை விளையாட்டுத்திடல் ஆலயமெங்கிலும் அச்சம் விதைக்கப்பட்டு
ஆனந்தம் பிடுங்கப்பட்டதை
விழித் துவாரங்களினூடே
மௌனமாய்ப் பார்த்திருந்தோம்
குறிப்பிட்ட இன மக்களின் அடையாளத்தை அழிக்கும் பொருட்டாக மற்றொரு இன மக்களை அவ்விடங்களில் குடியமர்த்துவதும் இராணுவத்தை யும் காவல் துறையையும் களமிறக்குவதும் இலங்கையில் சர்வ சாதாரணம். போர் அபாயம் இல்லாத பகுதிகளில் முன்பே வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட இம்முறைமை போர்பாதித்த பகுதிகளிலும் தற்போது நிகழ்ந்துவருகிறது. மிகச் சாதாரணமாக பூர்வீகத்தை, மூலத்தை, வேர்களைப் பிடுங்கி எறிய ஏகாதிபத்தியத்தியத்தின் கொடுங் கோல் ஆட்சியின் கோடரிகளால் நிகழ்த்தப்படுகிற அவலம் பார்க்க இயலாதது. சொந்த மண்ணில் சொந்த நாட்டில் தன் தாய்மொழியைக்கூட உரத்துப்பேசிவிட முடியாதது அவலத்தின் உச்சம்.
தோற்றுப்போன அரசியலின் பின்னர்
அமைதியைத் தேடித் தூரதேசம் ஒன்றில்
அடைக்கலம் புகுந்தாய்
மனச்சுமைகள் அனைத்தையும்
மௌனமாக அஞ்ஞாத வாசத்தில் கரைத்தாய்
நானும் நீயுமன்றி
இந்தப் பரம்பரையே தோள்களில் சுமையழுத்திடத்
திசைக் கொவ்வொன்றாய்ச் சிதறுண்டுபோனது
மண்ணையிழந்தவர் தம் படிமங்களையும்
மொழியையும் இழப்பார்களென்று
உனது நிழலில் அமர்ந்து அந்தச் சிறுமியர் படித்த. . .
தட்பவெட்ப நிலை மாறுதலைமுன்னிட்டு பறவைகள் சொந்த நிலத்தைவிட்டு இனப் பெருக்கத்திற்காக வேறொரு நிலத்திற்கு வருகிற இயற்கையை பறவைகள் சரணாலயங்களில் பார்க் கிறோம். பெயர் தெரியாத எந்த தேசத்திலிருந்து வந்தது என்ற ஆய்வை தொடர்ந்து நிகழ்த்தச் செய் கிறது இயற்கை. ஒரு விதை விளைந்த மரத்தை விட்டு தொலைதூரம் சென்றுவிழ எச்சங்கள் உதவுகின்றன.
ஆறு தன்போக்கில் நிலையில்லாமல் ஓடிக் கடந்து கொண்டே போகும் பாதையை வளம் மிக்கதாக மாற்றுகிறது. இயற்கை எல்லை கடத்தலை நிலம் மாறுவதை இனசுழற்சிக்காக பயன்படுத்திக் கொள்கிறது. இயற்கையின் படைப் பான மனிதன் மனிதநேயமின்றி ஆயுதமெடுப் பதன்மூலம் மானுட இனத்தின் பகுதியை இரத்தக் களரி யாக்குகிறான், நரபலியிடுகிறான், சுயதேவை, அதிகாரம், பணபலம் இவற்றின் காரணமாக இதயத்தை அறுத்துவிட்டு இடிஅமீன்கள் தழைத்துக் கொண்டிருக்கின்ற அரசியல் சூழல் நிலவுகிறது. இல்லைஎன மறுக்க முடியாத அளவு சூழலியல் சார்ந்த நிலைப் பாட்டில் உலகின் வல்லரசு நாடுகளும் அதன் ஆதரவு நாடுகளும் தேர்ந்தெடுத்திருக்கும் கொடிய பாதை கண்முன் விரிகிறது.
சிறுதீவுகளின் அழிவை கவனத்தில் கொள்ளாத சுற்றுச்சூழல் மாநாட்டின் உதவாத சடங்குத் தனம் செரிமானத்தை நிறுத்துகிறது. இதைமிக இயல்பாக எடுத்துக்கொள்வதற்கு பிறநாடுகள் பழக்கப் படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் வன்முறையை மிகச் சாதாரண கண்களோடு கண்டு கடந்து விடுகிறது. அவ்வாறே உலக நாடுகள் மனிதநேயத்தை வெறும் பேச்சளவில் மட்டுமே கடைபிடிக்கவேண்டிய கட்டாயத்தின் எல்லையில் நிறுத்தப்பட்டிருக் கின்றன. மண்ணைவிட்டு சிதறடிக்கப் படுகிற இனத்தின் மொழி தழைக்குமா? அழியுமா? எனும் ஐயம் உள்ளது. காலப்போக்கில் அழிவதற்கான சாத்தியங்களே அதிகம். இவ்வுண்மையை ஃபஹிமாவின் கவிதை வரிகள் சுட்டுகின்றன.
ஃபஹீமா இஸ்லாமிய பெண்ணியலாளராக தன் பெண்சார்ந்த உணர்வை முன்வைக்காமல் பால் வேறுபாட்டுத் தளத்தில் மட்டுமே இயங்கு கிறார். பெண் அடக்கப்படும் பல்வேறு சட்டகங்களை விமர்சிக்கிறார். போர்நிகழும் சூழலில் பெண்ணியம் மலர்வது அரிது. உயிரைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் ஏற்கப்பட்ட ஆயுதங்களுமே இவர்களை வழி நடத்தும். போரச்சம் இல்லாத சூழலில் வாழ்ந்து வருகிற ஃபஹிமாவின் கவிதைகளில் நிலத்தை பிறர் ஆக்கிரமிக்கும் பொழுது சுயம் அழிக்கப்பட்ட இனத்தினராக இயல்பான நடைமுறைக்கு ஊறுநேர்வதாக சுதந்திரம் கட்டுப்படுத்தப் படுவதான அவலம் பதிவாகிறது. செழித்தநிலம், திரிந்த நிலம், கருணைமிக்க நிலம், வாழ்வா தாரத்தின் துணையாக இருக்கின்ற நிலம் இந்த நிலத்தை வளப்பமாக்கிய பெண்ணின் வாழ்க்கையைப் பேசுகிறது.

– ச. விசயலட்சுமி

நன்றி: கீற்று; 

பெருவெளிப்பெண்

24 Jun

நூல் அறிமுகம்: ‘பலிஆடு’

கவிஞர்.கருணாகரன் நமக்குத் தந்திருக்கும் மூன்றாவத் கவிதை நூல் ‘பலிஆடு’ ஆகும்.

‘..உனனை என்னுள் திணிப்பதையும்
என்னை உன்மீது ஏற்றுவதையும் வெறுக்கிறேன்
உன் மகிழ்ச்சியை நீயே பாடுவதிலும்
என் பாடலை நானே இசைப்பதிலும்
ஆனந்தமுண்டல்லவா?…’

கவிஞர் முதல் நூலின் முதல் கவிதையுடன் தன்னை அறிமுகம் செய்தாலும் கவிஞருக்கு அறிமுகம் தேவையற்றது. ஏற்கனவே ‘வெளிச்சம்’ சஞ்சிகை மூலமும், தமிழீழ தேசிய தொலைக்காட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தவர். உலக இலக்கியங்களில் அதி தீவிரம் காட்டியவர். நல்ல இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தவர்.எனக்கு சுந்தரராமசாமியின் எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்தவர். இவரின் கவிதைகள் வாழ்வின் அணைத்து பரிமாணங்களையும் உள்வாங்கிய படி எழுதப்பட்டிருக்கிறது. காலடிக்குள் நழுவிப்போகும் வாழ்வின் வசந்தங்கள்..கைகளுக்குள் அகப்படாமல் விலகிப்போகும் சுதந்திரம்..வண்ணாத்திப்பூச்சியை தேடி ஓடும் குழந்தையை பதுங்கு குழிக்குள் அடைக்கின்ற சோகம்,வீரியன் பாம்பு நகரும் போதும்…குண்டுகள் வீழ்கின்ற வழவுக்குள் இருளில் அருகாய் கேட்கின்ற துப்பாக்கி வேட்டுக்கள்…எது வாழ்க்கை?எங்கே வாழ்வது?பசிக்கின்ற வயிற்றுக்கு உணவு எங்கே?எல்லாவற்றுக்கும் மேலான சுதந்திரம் பற்றிய சிந்தனை அறவே அற்று வாழ்வா சாவா என்கிற ஓட்டத்தில் நின்று நிதானித்து கவிதை பாடும் நேரப் பொழுதை ஒதுக்க முடியுமா? அதற்குள்ளும் தன்னை பதிய வைக்கின்ற முயற்சிக்கிற ஒரு கவிஞனின் முயற்சியைப் பாராட்டத் தான் வேண்ட்டும்.

அறுபதிற்குப் பிறகு முகிழ்க்கின்ற நமது நவீன கவிதைப் படைப்புக்கள் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையிலேயே சென்று கொண்டிருப்பதையே உணர முடிகிறது.மகாகவி முதல் இன்றைய த.அகிலன் வரை விதைக்கப்பட்டிருக்கிறது எனலாம். ‘உண்மையைக் கண்டறியும் போதும் அதனோடு இணைந்திருக்கும் போதும் தனிமையும் துயரமும் இயல்பாக வந்து சேர்கின்றன.இந்த தனிமையும் துயரமுமே என் வாழ்வின் பெரும் பகுதியாகவும் இருக்கின்றது.ஆனாலும் இது பேராறுதலைத் தருகின்றது….’என கவிஞர் சுதாகரிப்பதும் தெரிகிறது.

‘என்னுடைய புன்னகையைத் தந்துவிட்டு
எல்லோருடைய கண்ணீரையும்
எடுத்துச் செல்கிறேன்.
மாபெரும் சவப்பெட்டியில்
நிரம்பியிருக்கும் கண்ணீரை போக்கி விடுகிறேன்.
கள்ளிச்செடிகள் இனியில்லை.
காற்றுக்கு வேர்களில்லை.
ஒளிக்குச் சுவடுகளிலை.
எனது புன்னகை
நிலவினொளியாகட்டும்.’

இவரின் முதல் இரண்டு (ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்(1999),ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்.(2003) நூல்களினூடாக தன்னை ஒருமுகமாக ஸ்திரப்படுத்தியபடி ‘பலிஆடு’ எனும் மூன்றாவது கவிதை நூலுடன் னம்மைச் சந்திக்க வந்துள்ளார்.

‘நிலவெறிக்குது வெறுங் காலத்தில்
வீடுகள்
முற்றங்கள்
தோட்டவெளி
தெரு
எல்லாமே சபிக்கப்பட்டு உறைந்தன போல
அமுங்கிக் கிடக்கின்றன..’
கவிஞனின் கவலை
நமக்கும் வலிக்கவே செய்கிறது..
‘நாங்கள் எதற்கு
சாட்சிகளாக்கப்
பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக
சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கேதும்
புரியவில்லை.
பகலையும் இரவையும்
கண்டு
அஞ்சும் என்
கண்களை
என்ன செய்வேன்..’

போரினுள் அன்பையும் கருனையையும் எதிர்பார்க்கும் உண்மைக் கவிஞனின் வார்த்தை வடிவங்கள் அவைகள். இன்பங்கள் அணைத்தும் துடைத்தெறியப்பட்டுள்ள சூழலில் துன்பத்தை மட்டுமே காவியபடி பதுங்குகுழி,காடுகள்,அகதிமுகாம் என வாழ்விழந்து பலிக்கடாவாக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதகுலத்தின் விடுதலை எப்போது என்கிற ஏக்கம்…

‘பூக்கள் இனி எப்படியிருக்கும்
மரங்கள் மிஞ்சியிருக்குமா
பறவைகளின் சிறகுகளில்
சாவு வந்து குந்திக் கொண்டிருக்கும்
காலம் இதுவல்லவா…’
‘நாடு கடக்க முடியவில்லை
சுற்றி வரக் கடல்
சிறைப் பிடிக்கப்பட்ட தீவில்
அலைகளின் நடுவே
துறைமுகத்தில்
நீண்டிருக்கும் பீரங்கிக்கு
படகுகள் இலக்கு.
மிஞ்சிய பாதைகளில்
காவலர் வேடத்தில் கொலையாளிகள்..
குற்றமும் தண்டனையும் விதிக்கப்பட்ட
கைதியானேன்…’

ஒவ்வோரு முறையும் தப்பி ஓடுதல் ஆபத்தானது.சுடப்படுவர்.கடலுக்குள் மூழ்கடிக்கப் படுவர்.கைதியாக்கப்படுவர்.

‘எனது மொழி என்னைக் கொல்கிறது
மொழியொரு தூக்கு மரம்
என்றறிந்த போது
எனது தண்டனையும் ஆரம்பமாயிற்று
எனது குரல்
என்னை அந்தர வெளியில் நிறுத்துகிறது
விரோதியாக்கி…’

நமது சாவு நம்மை நோக்கி வருகிறது அல்லது நாமே அதை நோக்கி நகர்கிறோம்.முப்பது வெள்ளிக்காசுக்காய் யேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஒருபுறம்…உலக வல்லாதிக்கப் போட்டிகளில் அழிகிறது எம் பூமி..இரத்தவாடை வீசுகின்ற நிலத்தில் நிமிடத்திற்கொரு பிணம் வீழ்கிற கொடுமைக்கு விதியா காரணம்?

எமக்கான நிலத்தில்,எமக்கான கடலில் வாழ்வுக்கான தேடலை சுதந்திரமாக தேட முடியாத அவலம்….கொடுமையிலும் கொடுமை! முகம் தெரியாத துப்பாக்கிகளின் விசையை அழுத்தும் வேகத்தில் மனிதம்…

‘யாருடயதோ சாவுச் செய்தியை
அல்லது கடத்தப்பட்டதான
தகவலைக் கொன்டுபோகக்
காத்திருந்த தெரு…’
….’சொற்களை முகர்ந்து பார்த்த நாய்கள்
விலகிச் சென்றன அப்பால்
கண்ணொழுக..
பாம்புகள் சொற்களினூடே
மிக லாவகமாய் நெளிந்து சென்றன
நடனமொன்றின் லாவகத்தோடு…’

சொற்கள் சுதந்திரமாய் விழுந்திருக்கின்றன. அணைத்து விஞ்ஞான பரீட்சாத்தங்களும் பரீட்சித்து பார்க்கப்படுகின்ற பூமி எங்களது. பலஸ்தீனம் பற்றி பேசத் தெரிந்த பலருக்கு நமது பலம், பலவீனம், கொடூரம், சோகம் தெரியாதது மாதிரி இருப்பது தான் வலிக்கிறது. மனு நீதி சோழனின் வருகை எதுவும் நடந்துவிடவில்லை.

…’வானத்தை நான் பார்க்கவில்லை
நட்சத்திரங்களையும் காணவில்லை
பதுங்கு குழியின்
இருளுக்குள் வீழ்ந்த வாழ்வின்
சருகு நான்….
….. நிலம் அதிர்கிறது.
குருதியின் மணத்தையும்
மரணத்தின் அருகாமையையும் உணர்கிறேன்
கந்தகநெடில்
கபாளத்தைப் பிளக்கிறது
வீரர்கள் முழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்
அழியும் வாழ்வின் பிரகடனத்தை
ஒவ்வொரு துப்பாக்கியிலும்
ஒவ்வொரு பீரங்கியிலும்…’

உண்மையாக,உண்மைக்காக,சொல்லவந்த சேதியை சரியாகச் சொன்ன கவிஞனின் வரலாற்றுப் பதிவு இந் நூலாகும். உலக ஒழுங்கின் மாற்றத்தால் ஏற்பட்ட அழிவுகளை ஓரளவுக்கேனும் தன் மொழியில் சொல்லியுள்ள கருனாகரன் ‘பலிஆடு’ போன்று தொடர்ச்சியாக நூல்களைத் தருவதனால் உலகம் தன்மௌனம் கலைக்கலாம். அன்று தொட்டு இன்று வரை வீச்சுள்ள படைப்புகளை போருக்குள் வாழ்ந்த எழுத்தாளர்களே தந்துள்ளார்கள்.புதுவை. இரத்தினதுரை, தீபச்செல்வன்,சித்தாந்தன், வீரா,அமரதாஸ், த.அகிலன் என கருனாகரனுடன் வளர்கிறது. 113 பக்கங்களில் அழகிய வடலி வெளியீடாக (2009) நம் கரம் கிட்டியுள்ள நூலுக்குச் சொந்தக்காரர்களுக்கு (படைப்பு / பதிப்பு) வாழ்த்துச் சொல்வோம்.

நன்றி: முல்லை அமுதன், காற்றுவெளியிடை

12 Jun

நூல் அறிமுகம்: ‘மரணத்தின் வாசனை.

ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான ஆர்னல்ட் சதாஸிவம் பிள்ளை எழுதிய சிறுகதையே முதல் கதையென அறிஞர்கள் சுட்டுவர். நவீன சிறுகதை 1930ற்கு பின்பே ஆரம்பமாகிறது எனவும் கொள்ளப்படுகிறது.1983ற்குப் பின்னரே அதிக படைப்பாளர்களின் வருகை நிகழ்ந்துள்ளது.இனக் கலவரம், இடப்பெயர்வு, பொருளாதார இழப்பு / தடை, விமானத் தாக்குதல்கள், போக்குவரத்து அசொளகரியங்கள், உள்ளக / வெளியக புலப்பெயர்வுகள் என்பன படைப்பாளர்களையும் உருவாக்கியிருக்கலாம். வளர்ந்து வந்த இனச் சிக்கல் பெரும் போராக வெடித்ததில் போருக்குள் வாழ்ந்த / வாழ்கின்ற / வாழ்ந்து மடிந்த மக்களிடமிருந்து எழுதிய படைப்பாளர்கள் நிஜத்தை எழுதினார்கள்/எழுத முற்பட்டார்கள். போருக்குள் நின்று புதுவை இரத்தினதுரை , கருனாகரன் ,நிலாந்தன் , அமரதாஸ், வீரா , திருநாவுக்கரசு , சத்தியமூர்த்தி ,புதுவைஅன்பன் ,முல்லைகோணேஸ் , முல்லைகமல் , விவேக் , மலரன்னை ,மேஜர்.பாரதி , கப்டன்.வானதி என விரிந்து இன்றைய த.அகிலன் வரை தொடர்கிறது.

‘தனிமையின் நிழற்குடை’யைத் தொடர்ந்து நமக்கு அகிலன் தந்திருக்கும் நூலே ‘மரணத்தின் வாசனை’.போர் தின்ற சனங்களின் கதை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதனை ‘வடலி.கொம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளனர்.

1.ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப் போனார்..
2.ஓர் ஊரிலோர் கிழவி.
3.மந்திரக்காரன்டி அம்மான்டி.
4.குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்.
5.ஒருத்தீ.
6.சித்தி.
7.நீ போய்விட்ட பிறகு.
8.சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்.
9.தோற்றமயக்கங்களோ.
10.கரைகளிற்க்கிடையே
11.செய்தியாக துயரமாக அரசியலாக…
12.நரைத்த கண்ணீர்.

என பன்னிரண்டு கதைகளைக் கொண்ட தொகுதி சிறப்பான தொகுதியாக கொள்ளலாம்.அழகிய பதிப்பு. வெளியீட்டுத் துறையில் ஓர் மைல் கல்.

சிறுகதைக்கான தொடக்கம் விரிவு உச்சம் முடிவு என படித்த எமக்கு விதியாசமான கதை நகர்வினைக் கொண்டது. சிறந்த ஆவணப்பதிவு. முழுமையான ஒரு இனத்தின் வரலாற்றுப்பதிவின் ஒரு சிரு துளி எனினும் நல்ல பதிவு. 83 தொடக்கம் அல்லது இந்திய இராணுவத்தின் கொடூரங்கள் / மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையான கொடுமைகள், இன்று வரை தொடர்கின்ற இன அழிப்பு,அவலம் என்பவற்றின் ஒரு புள்ளி. அவலத்துள் வாழ்ந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். பதுங்கு குழி வாழ்வு, காடுகளுக்கூடான பயணம்… ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்கு களத்துக்குள் அழைத்து செல்லுகின்ற வல்லமை அகிலனின் கதைகளுக்கு கிடைத்திருக்கின்றது. பாம்பு கடித்து இறக்கின்ற தந்தை,கடலில் மூழ்கிப் போகும் இளைஞன்,தான் வாழ்ந்த மண்ணில் மரணிக்கிற கிழவி,தான் நேசித்த தோழி பற்றிய நினைவின் வலி …. பாத்திர வார்ப்பு அபாரம்.அகிலனின் சொந்த கதையாகவும் இருக்கலாம்.ஆனால் நமக்கு நடந்தது போல உணர முடிகிறது. அனுபவம் தனக்கு நடந்தது அல்லது பிறருக்கு நடந்தது.எனினும் நமக்குள் நடந்த நமக்கான சோகத்தை சொல்லிச் செல்வதால் நெருக்கமாகின்றது.சொல்லடல் இயல்பாகவெ வந்து வீழ்கிறது.எங்கள் மொழியில் எழுத முடிகின்றதான இன்றைய முயற்சி வெற்றி பெற்றே வருகிறது எனலாம்.சில சொற்களுக்கான விளக்கங்கள் தரப்பட்டுள்ளனவெனினும் நம் மொழியில் பிறழ்ச்சி ஏற்படாதவாறு எழுதியுள்ளமை வரவேற்கக் கூடியதே.போரின் கொடுமைகளை அவர்களின் மொழியில் பேசவேண்டும்.இங்கு அது சாத்தியமானது அகிலனுக்கு கிடைத்த வெற்றி. கதியால் , குத்தியாக , திரிக்கிஸ் , குதியன்குத்தும் , அந்திரட்டி, உறுக்கி, கொம்புபணீஸ் , புழூகம் ,தத்துவெட்டி, தோறை , எணேய் , நூக்கோணும், அம்மாளாச்சி , ரைக்ரர், விசர் , மொக்கு , சாறம் , சாமத்தியப்பட்டிட்டாள் … இவைகள் சில விளக்கங்களுக்கான சொற்கள்..

‘நரைத்த கண்ணீர்’ எனும் கதையில் வயதான தம்பதியரைப் பார்க்கப் போகும் இளைஞனின் நிலை பற்றிச் சொல்கிறது.தங்கள் மகன் பற்றிக் கேட்டதற்கு விசாரித்துச் சொல்ல முற்பட்டும் அந்த தம்பதியர்க்கு அவர்கள் மகன் வீரமரணம் அடைந்தது பற்றிச் சொல்லி அவர்களை சோகத்தில் ஆழ்த்த விரும்பாது தவிர்த்த போதும் மணைவியின் சந்தோசமே பெரிதென அந்த பெரியவர் மறைத்தது தெரிய வர அவனுடன் சேர்ந்து எமக்கும் வலிக்கிறது. தப்பிச் செல்ல இன்றோ நாளையோ என்றிருக்கையில் திடீர் பயணிக்க நேர்கையில் மூட்டை முடிச்சுகளுடன் பயத்துடன்… தோணிக்காரனுடன் புறப்படுகின்ற அவர்களுடன் நாமும் பயணிக்கிற அனுபவம் (கிளாலி,கொம்படி,ஊரியான் பாதைப்பயணங்கள்/96ன் பாரிய இடப்பெயர்வுகள்) தோணிக்காரன் இடை நடுவில் ஒரு மணற் திட்டியொன்றில் இறக்கிவிட்டுச் சென்றுவிட தவித்த தன் குடும்பத்தை தானே காப்பாற்ற எண்ணி படகுக்காரனுடன் வருவதாகக்க் சொல்லி கடலுள் குதிக்க மூழ்கிப் போகிறான்.பத்திரிகைச் செய்தியில் படித்திருந்தாலும் உண்மைக்கதையின் பதிவாகியிருக்கிறது ‘கரைகளிற்கிடையே’ கதையில்.. மக்களுடன் இடம்பெயர்ந்து பின் தன் காணி/மிளகாய்க் கண்டுகளை பார்க்கச் சென்ற குமார் அண்ணையின் அவலம்/சோகம் ‘குமார் அணாவும் மிளகாய்ச் செடிகளும்’கதை சொல்கிறது.

இப்படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கதை சொல்லி அசத்துகிறது. ஏகலைவர்களின்றி நகர்கின்ற போருக்குள் வாழ்ந்த மக்களிடத்திலிருந்து புறப்பட்ட படைப்பாளர்கள் சரியான தளத்தை நோக்கிப் பயணிப்பது ‘மரணத்தின் வாசனை’ சொல்லி நிற்கிறது. ஜனவரியிலும்(2009)மேயிலும் இரண்டு பதிப்புக்களை கண்டுள்ள இந் நூலின் அட்டைப்படம் மருதுவின் ஓவியத்தால் மிகச் சிறப்பாக இருக்கிறது. த.அகிலனிடமிருந்து நிறைய ஆவணப்பதிவுகளை படைப்புலகம் வாழ்த்துக்களுடன் எதிர் பார்த்து நிற்கிறது.

29 Mar

காணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி!

– கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் –

சிவபாலன் தீபன்
1..
“சித்தாந்தமாய், சிந்தனையாய், கருத்தியலின் மொழியாய், குருவியின் குறியாய் களத்தினில் வழிந்த உயிராய், நிலத்தினில் கிடந்த உடலாய் என்று எல்லா விதங்களிலுமாய் நாங்கள் போரை சந்தித்திருக்கிறோம். எங்கள் அன்றாடம் போர் எழுதிய துயரம் மிகுந்த வாழ்வாய் இருந்தது.கட்டங்கள் கடந்தததும் காலங்கள் கடந்ததுமான போரின் சகல விளைவுகளையும் சுமந்து ஒரு சனக்கூட்டம் எஞ்சியிருக்கிறது. வாய் விட்டழவும் வலிகள் எதுவும் நினைவில்லாத மனித கூட்டம் அது. துயரத்தின் பேசாத சாட்சிகளாக போரின் தடயங்கள் ஒரு ரேகையைப்போல படர்ந்திருக்கிறது எல்லாவிடமும் எல்லோரிடமும். சாவையும் பிறப்பையும் சாதாரணமாக்கியதில் பெரிய பங்கு போருக்கு போகிறது. ஏணிகளை எடுத்தெறிந்து விட்டு பாம்புகளை மட்டும் வைத்து சாவு ஆடிய பரமபதம் நிகழ்ந்தது நேற்று. எங்களை துரத்தி துரத்தி தீண்டியது மரணம். அதற்கொரு எல்லையும் இருக்கவில்லை எவரும் தடுக்கவுமில்லை .அழுவதை மறந்து நாங்கள் ஓடிக்கொண்டே இருந்தோம். எங்கள் இனத்தில் வடிந்த துயரத்தை நீங்கள் கைகள் கொண்டு கழுவ முடியாது காலம் கொண்டு நழுவ முடியாது எங்கள் உயிரை, சதையை, குருதியை, கண்ணீரை பெருங்கதறலை உங்கள் காலடிக்கு கொண்டுவந்தபோது நீங்கள் வேட்டைப்பற்கள் தெரிந்துவிடும் என்ற சங்கடத்தில் மௌனித்தீர்கள். எங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுப்போம் நீங்கள் நீதி பேசும் சபையில் சிரிக்க.”
இறப்பு குறித்தான நிஜங்களும் வாழ்வு குறித்தான கற்பனைகளும் ஒரு கதையாகவே நிகழ்கின்ற ஒரு நிலத்தின், இனத்தின் தொடச்சியாக நாமிருக்கிறோம். இந்த தொடர்ச்சி அதன் சகல பரிமாணத்திலும் பதிவு செய்யப்பட வேண்டியாதாகிறது. இங்கே எமக்காக நாமே அழவும் சிரிக்கவும் தேவைகள் இருக்கிறது.
2..
போர்ச் சர்ப்பம் வால் விழுங்கிச் சுழலும் ஒரு வேளையில் எழுதப்பட்ட கவிதைகளை வடலி வெளியீடாக தொகுத்திருக்கிறார்கள். பலியாடு என்ற பெயரில் வெளிவந்திருக்கின்ற கருணாகரனின் கவிதைகள் குறித்து பேச நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது எனக்கு. விடுபடுதல்கள் விளங்கிக்கொள்தல்களின் இயல்பான அச்சம் இது குறித்து தடுத்தாலும் என்னால் பேசாமலும் இருக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
“நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப் பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கெதுவும் புரியவில்லை
பகலையும் இரவையும் கண்டு
அஞ்சும் என் கண்களை என்ன செய்வேன்”
என்கின்ற முகப்பு கவிதை பேசுகின்ற மொழிதான் இந்த தொகுப்புக்கான கட்டியம். உண்மையிலேயே அச்சந்தருவதாயிருக்கிறது இந்த தொகுப்பு முழுவதும். ஏன் என்றும் புரியவில்லை எது குறித்து என்றும் தெரியவில்லை எந்தன் வாசிப்பனுபவம் முழுதும் விந்தி விந்தி வழிந்தது அச்சத்தின் எல்லாச் சாயலும். நான் அதை மறைத்து மறைத்து வாசித்து ஒவ்வொருதடவையும் தோற்றேன்.
“வன்னிக்கான தொடர்புகளை யுத்தம் முற்றாக அழிக்குமுன் கிடைக்கப் பெற்ற அவரது கவிதைகளது தொகுப்பு அவருடன் தொடர்புகள் ஏதுமற்ற இந்த யுத்த காலத்தில் வெளிவருகிறது.” – என்பது தான் இந்த கவிதை தொகுப்பின் அட்டையில் உள்ள மிக இறுதி வாசகம். இப்போது சொல்லுங்கள் நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம்? அல்லது எதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்?
ஒரு முதியவனை கண்டேன், அவன் பிறந்த போதும் வளர்ந்த போதும் இருந்தது ஒன்றே அது போர்; அது சார்ந்த மரணங்கள் வலிகள் இன்னபிறவும் சேர்ந்து எப்போதும் சூழ்ந்து கொள்ளும் அவமானங்களாயும்.. அவன் அதற்குள்ளே பிறந்தான் அங்கேயே வளர்ந்தான் அவன் இருப்பு முழுதும் மரணம் சூழ்ந்திருந்தது. எதற்கும் அவன் பெயர்ந்தவன் இல்லை. அவனை எடுக்க அச்சப்பட்டேன் அவன் பேசியது கேட்க பயப்பட்டேன். எந்தன் கையில் கிடந்தான் ஒரு தொகுதித் துயரமாய். எனக்கு தாகமாக இருந்தது நீரருந்தவும் தயங்கினேன் அவன் சாலை முழுதும் பாலையாய் இருந்தது குருதி காய்ந்து. அவனிடம் ஒரு சோடிக் கண்கள் இருந்தது அது பேச வல்லதாயும் புலன் நிறைந்ததாயும் இருந்தது. அவன் இரப்பவனாய் இருக்கவில்லை. அவன் இரந்தபோது அதை கொடுப்பவனாயும் எவனும் இங்கு இருக்கவில்லை. இப்போது சொல்லுங்கள் நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம் அல்லது எதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்? – ஒரு முதியவனை கொண்டிருந்த முகப்போவியம் என்னுள் எழுப்பிய வாசிப்பு இது.
முகப்போவியமாய் இங்கே முதுமையோடு தீட்டப்பட்டிருப்பதை எங்கள் வாழ்க்கை என்றே வாசிக்கத்தோன்றுகிறது. இந்த இடத்தில் மறைந்த பெண் கவிஞர் சிவரமணியின் பின்வரும் கவிதைகளின் மீதான வாசிப்பும் பொருத்தம் மிக்கது என நினைக்கிறேன் .
யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்
நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.
எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்….
எங்கள் குழந்தைகள்
திடாரென்று
வளர்ந்தவர்களாகி விடுகிறார்கள்
“பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.”
-சிவரமணி
யுத்தகாலம் சகலதையும் முதுமைக்குள்ளாக்கும் நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது நீண்ட காலமாய். எல்லோரிடமும் பாதுகாப்பு வேண்டி நாங்கள் முதுமையடைகிறோம் , இதில் இயற்கையாகவும் யுத்தத்தின் இயல்பாகவும் மரணம் நம்மை நிரந்தரமாக ஆட்கொள்கிறது. யுத்த காலத்தில் தவறிப்போன இளமைக்காலம் குறித்த வருத்தம் வேதனை தருவதாக இருக்கிறது.
சாவை வளர்த்து வாழ்வுக்கு கொடுத்ததன் மூலம் சாவே வளர்ந்த சூழலில் வந்த கவிதைகள் இவை, கரு முட்டையை நோக்கி சிரமத்துடன் நீந்திச் செல்லும் விந்தணுவைப்போல இந்தக் கவிதைகளினது ஜீவிதம் குறித்தான முனைப்புகளும் பெரியவை. வாழ்ந்தாக வேண்டும் என்ற உயிரின் துடிப்பு ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் குரலாய் ஒலிக்கிறது. ஒவ்வொருவருடைய குருதியாலும் உடைந்துபோன சுவரில் எழுதப்பட்டிருக்கிறது மானுடத்தின் பாடல்.
“போர் அறுத்தெறிந்த வாழ்க்கை
குருதி சிந்தக் கிடக்கிறது நடுத்தெருவில்
நாய் முகர…
……………………..
யாரும் உரிமை கோராத
இந்த இரத்தத் துளியை என்ன செய்வது?
அதில் மிதக்கும் மிதக்கும் கண்களையும்
ஒலிக்கும் குரல்களையும் என்ன செய்வது?”
எங்கள் எல்லோரிடமும் அடை காக்கப்பட்ட மௌனங்களை தவிர பதில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
என்றென்றும் நான் ஆராதிக்கின்ற கவிதை இது. வாழ்தலின் உச்சபட்ச வேண்டுதலையும் இருத்தலின் எல்லாவித சாத்தியப்பாட்டையும் வெளிப்படுத்திய மானுடத்தின் மண்டியிட்டழும் குரல் இது. விழியோடும் உவர்ப்போடும் விரல் கொண்ட நடுக்கத்தோடும் நான் இதனை வாசித்து முடித்தேன் ..
“எந்தப் பெருமையும் இல்லை
போங்கியோடும் கண்ணீரின் முன்னால்
மரணத்தின் முன்னே
மண்டியிட்டழும் நாட்களை பெறுவதில்
எந்தச் சிறுமையும் இல்லை
மரணத்திலும் எளியது
கசப்பின் துளிகள் நிரம்பியதெனினும்
ஒரு பொழுதேனும் வாழ்தல் மேலானது
என்று எவ்விதம் உரைப்பேன்? …..” .
(சாட்சிகளின் தண்டனை)
ஊசலாடுகின்ற பெண்டுலம் கடிகாரத்தை உயிர்ப்பிப்பது போல இந்தக் கவிதை என்னுள்ளே அலைந்து கொண்டே இருக்கிறது படித்த நாள் முதல். மிக அண்மையில் யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட சிறுவர்களை மறுவாழ்வின் முடிவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வின் புகைப்படங்களை காண நேர்ந்த போது கண் நெடுக வழிந்தது மேற்சொன்ன கவிதை வரி. மகாகனம் பொருந்தியவர்களே போரை முடித்து விட்டீர்கள், போர்க்கணக்கை நீங்கள் விரும்பியவாறு எழுதிக்கொள்ளுங்கள், புகழை எப்படியும் எழுப்பிக்கொளுங்கள் வேண்டுவதை எடுத்துக்கொள்ளுங்கள்; கூண்டுகளில் இருக்கும் எங்கள் மனிதர்களை திருப்பிதாருங்கள். மண்ணுலகில் உங்களின் மாட்சிமைக்கெதிரே மண்டியிடுகிறோம் வேண்டுவதெல்லாம் அவர்கள் வாழ்க்கை ஒன்றே! விட்டுவிடுங்கள் எல்லோரையும்.
“ஒரு வரிசையில் நீ
இன்னொரு வரிசையில் நான்
சனங்களின் கண்களை எடுத்துக் கொண்டு
அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்…”.
சனங்களின் கண்கள் இரண்டு வரிசையிலும் பிடுங்கப்பட்டது எந்த வரிசையில் இருந்தவர்களும் தப்பவில்லை. அவர்களிடம் கண்களை தவிர வேறதுவும் இருக்கவில்லை அதனால் அவர்கள் கொடுக்கவும் இல்லை. போர் தனக்கு ஒரு முகமே இருப்பதாகச் சொல்லி எல்லோர் கண்களையும் பிடுங்கியது. போரிடம் நல்ல முகம் என்பதே இல்லை என்றறிந்த மக்களிடம் கண்கள் பிடுங்கப்படிருந்தன.
3..
கருணாகரனின் கவிதைகள் பேசும் அரசியல் குறித்து அவதானத்தோடே பேச இருக்கிறது. அவரது படைப்புலக அரசியல் குறித்த ஆய்வை ஒரு பாதுகாப்பு கருதி சற்று வெளியே நிறுத்தி விட்டு இந்த தொகுப்பை வாசிக்க வேண்டிய பொறுப்பு உயிர் குறித்தான அச்சங்கள் அற்று இலக்கியம் பேசுகின்ற எங்களுக்கு இருப்பதாகவே உணர்கிறேன். அதுவே இங்கு அரசியல் சார்பு விமர்சனங்களை மீறி இந்த தொகுப்பு மீதான ஒரு மட்டுப்படுத்திய வாசிப்பை கொடுக்கிறது ஆனால் அது கவிதை அனுபவத்தில் எந்தக் கட்டுப்பாட்டையும் விதித்தாக தெரியவில்லை . ஆனாலும் அவரும் தீவிர நிலையில் கவிதைகளை எழுதிய படைப்பாளியே என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இங்கே கருணாகரனின் படைப்புகளில் உள்ள சிறப்பம்சமாக ஒன்றை சொல்ல வேண்டும், அவருடைய கவிதைகளுக்கும் வாசகனுக்கும் இடையில் எப்போதும் இன்னொன்றை அனுமதிப்பதில்லை. அவரது கவிதைகளே அதன் வாசகனோடு இயல்பாய் பேசிவிடுவதால் அவரது கவிதை குறித்து பேச வருபவர்களுக்கு இன்னொரு தளம் இலகுவாக கிடைக்கிறது அதன் விளைவுகள் குறித்து உரையாட .இது ஏற்படுத்தி தரும் வெளி வசதியானது இது போன்ற வாசிப்புநிலை குரல்களை செவிமடுக்க.
கருணாகரனின் கவிதைகளில் நாங்கள் சரளமாக சந்திக்க கூடிய இன்னொரு நபர் கடவுள் மற்றும் தேவதூதன், தேவாலயம், கோவில் சார்ந்த அவரது துணைப்படிநிலைகள் – குறியீடுகளாகவும் படிமங்களாகவும் நிறைந்திருக்கிறது கவிதைகள் நெடுக. நிராசைகள் நிறைந்திருக்கும் உலகில் முதல் விமர்சனப் பொருள் நம்பிக்கைகளும் கோட்பாடுகளும்தான். அவர்களால் நம்ப வைக்கப்படுகின்ற – அல்லது அவர்கள் நம்புகின்ற ஒன்றிடம் அலைகழிக்கப்பட்ட கேள்விகள் சென்றடைகின்றன. சார்போ எதிர்ப்போ பதிலளிக்க வேண்டியது அங்கே அவர்கள் தான். கையறு நிலையில் துயரம் மிகுந்தவர்களின் பிரார்த்தனைதான் பிதாக்கள் மீதான ஏளனப்பாடலாகிறது – அவர்களுமறியாமல். எல்லாமறிந்த கடவுள்களின் அபயமளிக்கின்ற புன்னகையையும் குண்டு துளைத்திருக்கிறது. கோபுரத்தில் கொல்லப்பட்டிருக்கின்ற புறாக்களின் குருதி பீடத்தில் வழிந்திருக்கும் போது கேள்விகள் இடம்பெயர்ந்தலைகின்றன உயிரை காப்பாற்றிக்கொள்ள.
“…………………………………………………
முடிவற்ற சவ ஊர்வலத்தில்
சிக்கியழிகிறது பொழுது
புனித நினைவாலயலங்கள்
ஒவ்வொன்றாக வீழ்கின்றன
எங்களை கைவிட்ட கடவுளர்கள்
எங்களால் கைவிடப்பட்ட கடவுளர்கள்
எல்லாம் இங்கேதான்
இனிவரும் முடிவற்ற இரவு
நமது பிணங்களின் பரிசாக “
(இருள்)
முடிவற்ற இரவு குறித்தான பதட்டங்களில் எழுதப்படுகிறது பிரார்த்தனையின் பாடல் – நம்பிக்கை அழிந்திருப்பவர்களிடம் இருந்து – எழுத்துப் பிழைகளுடன் தாறுமாறாக..
……………………………………………………………
சந்தையிலுருந்து திரும்பிய
பெண்ணிடம்
தன்னை அறிமுகப்படுத்திய கடவுள்
கேட்டார் இரண்டு காசுகளை கடனாக
பசி தணிந்த பிறகு காத்திருந்த
கடவுளை ஏற்றிச் செல்லவில்லை
எந்தப் பேருந்தும்
யாரும் பேசாமல் சென்றபோது
தனித்த கடவுள்
வாழ்ந்து விட்டு போங்கள் என்றார்
சலிப்பு நிரம்பிய கோபத்தோடு
…………………………………………………………………
( கண்ணழிந்த நிலத்தில் )
மேற்குறித்த வரிகளை கடந்து செல்ல எமக்கு தேவையாயிருப்பது ஒரு புன்னகை மட்டும் அன்று – கைவிடப்பட்ட மனிதர்களின் சார்பாக கடவுளை புறக்கணிக்க வேண்டியிருக்கிறது வருத்தத்துடன்.
மேலும் கடவுளர்கள் குறித்து நிரம்புகிறது கவிதைக்கான பாடு பொருள்
..கொலை வாளை வைத்திருந்தான் என்று
குற்றஞ்சாட்டப்பட்ட பழக்கடைக்காரனின்
தலையை கொய்துகொண்டு போன
புதிய கடவுளை சனங்கள் திட்டினார்கள்..
பாடுகள் சுமக்கின்ற மனிதர்களால் வரையப்படும் கடவுள் குறித்தான சித்திரங்கள் முடிவுறுவதாக தெரியவில்லை, கொடும் பாலையில் அனல் காற்று வீசியிறைக்கும் மணல் துகளாய் நிறைகிறது விழியோடும் வழியோடும்.
சாத்தானும் கடவுளும்
ஒரே ராஜ்ஜியத்தில் பங்கு வைத்துக்கொண்ட
உலகத்தில்
சனங்களின் நிழலைக் கண்டு
நெடுங்காலம் என்று சொல்லிச் செல்லும்
ஒருவனை கண்டேன்
அன்றிரவின் இறுதிக் கணத்தில்
( வளாகத்தின் நிழல்களில் படிந்திருக்கும் பயங்கரம்)
சாத்தான்களாலும் கடவுளர்களாலும் பங்கு போடப்பட்டிருக்கும் உலகில் சனங்களின் நிழலைத் தன்னும் கண்டவனை காணமுடியாமை உச்சநிலைத் திகிலை வாசிப்பு மனதில் நிகழ்த்துகிறது. மேற்குறித்த கவிதைகளில் எல்லா நிலைகளிலும் கடவுளர்கள் ஒருவராக இருப்பதில்லை அனால் சோதிக்கப்படும் பாடு நிறைந்த மக்கள் ஒருவராகவே இருக்கிறார்கள் என்பது எத்தனை முரண் நகை.
4.
இந்த தொகுப்பு ஏறத்தாள நூற்றுப்பதினைந்து பக்கங்களில் கருணாகரனின் ஐம்பது கவிதைகளை உள்ளடக்குகிறது. வடலி வெளியீட்டின் தொகுப்பு. அவரது கவிதைகளை நன்கு புரிந்த அவரது நண்பர்களால் பெரும் சிரமத்தின் மத்தியில் நேர்த்தியோடு பதிப்பிடப்பட்டிருகிறது. இதில் உள்ளடக்கப்படிருக்கும் எல்லாக்கவிதைகளையும் யுத்தத்தின் அவலச்சுவை என வகைப்படுத்த முடியாது. குற்றமும் தண்டனையும் மன்னிப்பும், தேவ தேவனின் பறவை, மூடிய ஜன்னல், சிரிக்கும் பறவை, பெண்நிழல், மாமிசம், பறக்கும் மலைகள், உறக்கத்தில் வந்த மழை, குழந்தைகளின் சிநேகிதன் முதலிய கவிதைகள் வாழ்வியலின் தொடர்ச்சியை அதன் தருணங்களில் பதிவு செய்பவை. அந்த வகையில் குழந்தைகளின் சிநேகிதன் எனக்குபிடித்த கவிதை – இன்பம் தொற்றிக்கொள்ளக் கூடியது எப்போதும் நீங்கள் அதை காவிச் செல்பவராய் இருங்கள் என்கிறது ஒரு பொன்மொழி – இங்கே குளிர் விற்பவர்கள் குழந்தைகளிடம் அப்படித்தான் இருக்கிறார்கள் இன்பத்தை அதன் கரைந்து விடும் (நிலையற்ற) நிலையில் எடுத்துச் செல்பவர்களாக..
“குளிர் விற்பவனின் மணியொலியில்
காத்துக்கொண்டிருக்கிறது
குழந்தைகளின் மகிழ்ச்சி“
என்ற எளிய கவிதை மொழி சிறுவர்களை நோக்கி பேசுகிறது. இதன் எளிமைக்காகவே இதனை நேசிக்கிறேன்.
…………………..
என்னிடமும் உண்டு
பள்ளி நாட்களில் குளிர் விற்றவனின்
மணியொலியும்
குளிர்ந்தினிக்கும் துளிகளும்
அவனிதயத்தில் நிறைந்திருந்த குழந்தைகளின் மகிழ்ச்சியும்”
யாரிடம் இல்லையென்று சொல்லுங்கள்? மணியொலி, மகிழ்ச்சி மற்றும் குளிர்ந்தினிக்கும் துளிகளைத் தந்தவர் புன்னகை.
போர் தன் சமன்பாட்டை எங்களில் எழுதிவிடுகிறது, அதற்கு விடையளிக்க முடியாதவர்களை தன் வாயால் விழுங்கி விடுகிறது. உண்மையில் அதற்கொரு விடையும் இல்லை எனக் கண்டிருக்கின்ற நாங்கள் இறந்திருக்கிறோம் எல்லா விதமாகவும். யுத்தத்தின் விளைவுகள் எவருக்கும் எப்போதும் மகிழ்ச்சிகுரியவை அன்று. யுத்தம் தன் சாட்டையை எல்லோரிடமும் விசிவிட்டு செல்கிறது அதன் வலிகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமாய் இருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் போரின் வால் எங்களை சூழ்ந்திருக்கிறது. அது தருகிற அப்பாலான விளைவுகள் வெளிவருகிறது வேறுபட்ட வடிவங்களில்.
“வாசலைத் திறந்து
செல்ல முடியாத
பொம்மை
எல்லோரும்
வெளியேறிச் சென்றபின்
தனித்திருக்கிறது
குழந்தையின் ஞாபகங்களுடன்”
குழந்தைகளும் வாசலைத் திறந்து வெளியேறிவிட்ட வீடுகளில் ஞாபகங்களுடன் பொம்மைகளாக இருக்கிறார்கள் அவர்களை பெற்றவர்கள். உண்மையில் போர் வரின் பிரிதலோ இல்லை பொருள் வரின் பிரிதலோ, பிரிதல் வேதனையானது அது வாழ்வின் பிடிமானம் குறித்தான கடைசி நூற்புரியையும் பரிசோதித்து விடும் வல்லமை உள்ளது. எங்கள் பிடி நழுவிக்கொண்டிருக்கிறது எல்லா வகையிலும். மேற்குறித்த அருமையான கருணாகரனின் இந்தக் கவிதை இத் தொகுப்பில் இடம் பெறவில்லை. அனால் மேற்குறித்த கவிதை எம்மக்குள் நிகழ்த்தும் கிளர்வை இன்னொரு கவிதை சாத்தியப்படுத்துகிறது தொகுப்பில்.
“பின்னிரவில் தூக்கமின்றித் தவிக்கும் கிழவன்
கனவு அழைத்து போகும்
இளமைக் காலத்துக்கும்
பிள்ளைகள் கொண்டு சென்ற
தூக்கத்துக்கும் இடையில் கிடந்தது அவிகிறான்“
என்று ஆரம்பிக்கிறது தூக்கத்தை தொலைத்த கிழவன் கவிதை
“கால முரணுக்கிடையில்
தன்னை கொடுத்திருக்கிறது
அன்பை ஊற்றிச் செல்லும் தொலைபேசி
கண்டங்களுக்கும் கடலுக்கும் அப்பாலான கருணையில்..“
காலம் எல்லாவிதத்திலும் முரண்தான் – யார் அறிந்தோம்?
சர்வதேச தேதிக்கோடு என்று சொல்லப்படுகின்ற பூமிக்கோட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு நீர்த்துளிகளின் இடைவெளியை தூரக்கணக்கில் சொன்னால் பூச்சியம் நேரக்கணக்கில் சொன்னால் நாள்; அது போலதான் உறவுகளை கருணையின் கணக்கில் ஒன்றாகவும் காலத்தின் கணக்கில் வேறாகவுமாக பிரித்து வைக்கிறது கண்டங்கள்.
“வெவ்வேறு கண்டங்களுக்கு இடையில்
வெட்டித் துண்டாடப்பட்ட
அன்பின் உடல் கிடந்த துடிக்கிறது
தந்தையென்றும் பிள்ளை என்றும்
அங்கும் இங்குமாக“
அன்பின் உடலின் துடிப்பு குழந்தையின் ஞாபகங்களோடு தனித்திருக்கின்ற பொம்மையை அழைத்து வருகிறது மீண்டும் மீண்டும்.
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை. சிலர் காணமல் போனபோது அழுதோம் சிலர் காணாமல் போனபோது மகிழ்ந்தோம். சிலர் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார்கள். சிலர் எழுத வைத்து விட்டு காணாமல் போனார்கள். சில காணாமல் போதலுக்காய் இன்னும் சில காணாமல் போதலை நியாயம் செய்தார்கள். நாங்களே எங்களுக்குள் காணாமல் போதலை நிகழ்த்தினோம் இன்னும் என்னவாய் எல்லாம் சாத்தியமோ அவ்வாறாய் எல்லாம் நாங்கள் காணாமல் போயிருக்கிறோம். சரியோ-தவறோ, நியாயமோ- அநியாயமோ, காலத்தின் தேவையோ-களத்தின் தேவையோ ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரொரு துயர் மிகுந்த இரவை உருவாக்கியது எங்கள் வரலாற்றில் . அந்த இரவில் விளித்திருந்தவர்களுக்கு தெரியும் அதன் வலி.
காணாமல் போனவனின் புன்னகை என்கின்ற கவிதை எங்கள் ஞாபகங்களில் சில கேள்விகளை எழுப்புகிறது. திரும்பிச் செல்லவும் முடியாது அங்கிருக்கவும் முடியாது என்கின்ற நிலையில் காணாமல் போனவன் புன்னகை எங்களை தொடர்கிறது அல்லது எங்களை தடுக்கிறது. காயமறுக்கும் கண்ணீர்த்துளிகளின் முன்னிலையிலும் குருதியின் அருகாமையிலும் சில கேள்விகள் சிந்திக்கிடக்கிறது – காலம் பதில் சொல்லக் கடவது.
” திரும்பிச் செல்ல முடியவில்லை
காணாமல் போனவனின் புன்னகையை விட்டு..”
பெருந்துயரமாக இருக்கிறது காணாமல் போனவனின் புன்னகையில் இன்றும் உறைய மறுத்திருக்கும் குருதித் துளி குறித்து.
நன்றி: தீபன், வைகறை மாதஇதழ் (கனடா)
07 Mar

ஃபஹீமா ஜஹான் கவிதைகள் – எம். ஏ. நுஃமான்

1
ஃபஹீமா ஜஹான் 1990களின் பிற்பகுதியில் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலை மாணவி. கலாசாலை ஆண்டுமலருக்காக என் னிடமிருந்து ஒரு பேட்டி எடுக்கவேண்டும் என அவர் விரும்பினார். என் மனைவி மூலம் தொடர்புகொண்டு பேட்டிக்கான வினாக்களை எழுதி அனுப்பியிருந்தார். அந்த வினாக்களைப் படித்தபோது அவர் ஒரு சராசரி ஆசிரியை அல்ல, நன்கு விபரம் தெரிந்தவர்தான் என்று நினைத் தேன். அவரை நேரில் சந்திக்காமலே தபால் மூலம் நிகழ்ந்த அந்தப் பேட்டி கலாசாலைச் சஞ்சிகையான கலையமுதத்தில் வெளிவந்தது.
அப்போது அவர் கவிதைகளும் எழுதுபவர் என்று எனக்குத் தெரியாது. பின்னர் பத்திரிகைகளில் அவ்வப் போது வெளிவந்த அவரது சில கவிதைகளைப் படித்த போது அவர் மேலெழுந்துவரக்கூடிய கவிஞர் என்பது உறுதிப்பட்டது. மிக அண்மையில்தான் ஒரு கடல் நீரூற்றி என்ற அவரது முதலாவது தொகுப்புப் படிக்கக் கிடைத்தது. அதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் ஃபஹீமாவின் கவியாளுமை பற்றிய ஒரு மன நிறைவைத் தந்தன.
சமீபத்தில் வெளியான தனது இரண்டாவது தொகுப்பான ‘அபராதி” க்கு ஒரு முன்னுரை தருமாறு அவர் கேட்டபோது மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். ஆயினும் பதிப்பகத்தாரின் அவசரம் காரணமாகவும், எனது அவ காசமின்மை காரணமாகவும் எனது முன் னுரை இல்லாமலே அபராதி வெளிவர நேர்த்தது. இப்போது தனது முன்னையத் தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகளையும் சேர்த்து தனது மூன்றாவது தொகுப்பை ஃபஹீமா வெளியிடுகிறார். இது எனது முன்னுரையோடு வெளிவர வேண்டும் என்பது அவரது விருப்பம். அவ ரது கவிதைகளைப் பற்றிய எனது அபிப்பிராயத்தைத் தெரிவிப்பதற்கு இது ஒரு சந்தர்ப்ப மாக அமைவதால் அதை நானும் விருப்புடன் ஏற்றுக்கொண்டேன்.
ஃபஹீமாவின் உடனடியான இலக்கியச் சூழல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அவரை இன்னும் நேரில் சந்தித்ததில்லை. அவர் இலங்கையில் சிங்களம் பேசுவோர் பெரும்பான்மையாக வாழும் குருணாகலை மாவட்டத்தில், தமிழ் பேசும் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழும் மெல்சிரிபுரவில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே கல்வி கற்று அங்கேயே கணித ஆசிரியராகப் பணிபுரிகிறார். இடையில் ஆசிரிய பயிற்சிக்காக கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் பெரும் பான்மையினராக வாழும் சூழலில் இரண்டு ஆண்டுகளைக் கழித்திருக்கிறார். என்றாலும் அவரது தமிழ் மொழி ஆளுமையும் இலக்கிய ஆர்வமும் அபார மானது. சமீபத்தில் நான் படித்த ஃபஹீமாவின் சில கட்டுரைகளும் விமர்சனக் குறிப்புகளும் அருக்கு ஒரு பரந்துபட்ட வாசிப்புத் தளமும், இலக்கியப் பரிச்சய மும், சுய நிலைப்பாடும் இருக்கின்றன என்பதை உணர்த்தின. இது பெரிதும் அவரது சுயமுயற்சியின் அறுவடை என்று நினைக்கிறேன். எனினும் பள்ளியில் தனக்குத் தமிழ் கற்பித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனது ஆசிரியை பராசக்தி இளையதம்பியை நினைவு கூர்ந்து அவருக்குத் தனது இரண்டாவது தொகுதியை சமர்ப்பணம் செய்திருக்கிறார். தனது மொழித் திறனின்; மூலவேரை தனது தமிழாசிரியரிடம் இனங்காணும் இவரது மனப்பாங்கு மகிழ்ச்சிக்குரியது.
ஃபஹீமா 90களின் நடுப்பகுதியிலிருந்து கவிதை எழுதிவருகிறார் என்று நினைக்கிறேன். என்றாலும் கடந்த சுமார் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் இவர் ஏராளமாக எழுதிக் குவித்தவர் அல்ல. அவரது முதல் தொகுதியில் (ஒரு கடல் நீரூற்றி) 28 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது தொகுப்பில் (அபராதி) 30 கவிதைகள் உள்ளன. பத்திரிகைகளில் வெளிவந்த, வானெலியில் ஒலிபரப்பாகிய அவரது ஆரம்பகாலக் கவிதைகளையும் சேர்த்தால் அவரது மொத்தக் கவிதைகள் சுமார் இருநூறைத் தாண்டியிருக்கா என்று நம்புகிறேன். இத்தொகுப்பில் அவர் தன் எல்லாக் கவிதைகளையும் சேர்த்துக்கொள்ளவில்லை. தான் எழுதிய வரிகள் எல்லாம் பொன் வரிகள் என்று கருதும் மனப்பான்மை அவரிடம் இல்லை. தன் வளர்ச்சிப் போக்கில் ஒரு சுயமதிப்பீட்டையும் சுய விமர்சனத்தையும்கூட வளர்த்திருக்கிறார் என்பது இன்றைய இலக்கி யச் சூழலில் முக்கியமானது.
இத்தொகுப்பில் அவர் எழுதியவற்றுள் அவரே தேர்ந்தெடுத்த 60 கவிதைகள் உள்ளன. சுமார் 15 ஆண்டுகால அறுவடை இவை. ஆண்டு ஒன்றுக்கு சராசரி நான்கு கவிதைகள். இலக்கிய உலகில் ஒரு படைப்பாளியின் நிலை எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படு வதில்லை, தரத்தினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அந்தவகையில் குறைவாக எழுதி தன் இருத்தலை உறுதிப்படுத்திக்கொண்டவர்களுள் ஃபஹீமாவும் ஒரு வராகிறார். இளம் தலைமுறையைச் சேர்ந்த ஈழத்தின் முக்கியமான கவிஞர்களுள் ஃபஹீமாவும் ஒருவர் என்பதை இத்தொகுப்பில் உள்ள அவரது கவிதைகள் உறுதிப்படுத்துகின்றன என்பதை நான் அழுத்திக் கூறலாம்.
ஃபஹீமாவை ஒரு பெண் கவிஞர் என்றோ, பெண் ணியக் கவிஞர் என்றோ நான் அடையாளப்படுத்த விரும்பவில்லை. அவர் ஒரு பெண் என்ற உயிரியல் அம்சமும், ஆணாதிக்கச் சமூகச் சூழலில் அவர் தான் பெண் என்ற பெண்ணிய அரசியல் சார்ந்த சமூகநிலைப் பட்ட பிரக்ஞை பெற்றிருப்பதும் அவரது கவிதைகளில் அழுத்தமாக வெளிப்படுவது உண்மைதான். ஆனால், பெண் என்ற அடையாளத்துக்கு அப்பாலும் அவரது கவிதைகள் விரிவுபெற்றுள்ளன. தனது சமூகத்தின், தனது தேசத்தின், தான் வாழும் உலகத்தின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அவரது கவிதைகளின் உணர்வுத் தளம் இவை எல்லாவற்றையும் தழுவி நிற்கின்றது.
2
1980க்குப் பிறகு தமிழ்க் கவிதையில் வலிமையாக ஒலிக்கத் தொடங்கிய பெண்ணின் குரல் – பல ஆண் கவிஞர்களையும், ஆண் முதன்மைச் சிந்தனை வட்டத் தினரையும் அசௌகரியப்படுத்திய அதே குரல் – ஃபஹீமாவின் கவிதைகளிலும் தீர்க்கமாக ஒலிப்பதை நாம் காண்கிறோம். பெண் என்ற வகையில் தனக்கு ஆண்களால் வரையறுக்கப்பட்ட எல்லையை அவர் உடைக்கிறார். அதை அவர் கேள்விக்கு உட்படுத்து கிறார். ‘அவள் அவளாக” என்ற கவிதை இதுபற்றிய ஒரு பிரகடனமாகவே அமைகின்றது
உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம்
உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூசைப்பீடம் வேண்டாம்
உனது ஆபாசத் தளங்களில்
அவளது நிழலைக்கூட
நிறுத்தி வைக்க வேண்டாம்.
வாழ்க்கைப் பாதையில்
அவளை நிந்தனை செய்திட
உனது கரங்கள் நீளவே வேண்டாம்
அவளது விழிகளில்
உனது உலகத்தின் சூரிய சந்திரர்கள் இல்லை
அவளது நடையில்
தென்றல் தவழ்ந்துவருவதில்லை
அவளது சொற்களில்
சங்கீதம் எழுவதும் இல்லை
அவள் பூவாகவோ தளிராகவோ
இல்லவே இல்லை
காலம் காலமாக நீ வகுத்த
விதிமுறைகளின் வார்ப்பாக
அவள் இருக்கவேண்டுமென்றே
இப்போதும் எதிர்பார்க்கிறாய்……..
எல்லா இடங்களிலும்
அவளது கழுத்தை நெரித்திடவே
நெருங்கிவருகிறது உனது ஆதிக்கம்
அவள் அவளாக வாழவேண்டும்
வழிவிடு.
‘கிரீடங்களை அவமதித்தவள்” என்ற கவிதையிலும் இதே குரல் இன்னும் உரத்து ஒலிக்கின்றது.
எக்காலத்திலும் இனி
உங்கள் பீடங்களில் முழந்தாளிட வரமாட்டேன்
நீங்கள் ஆராதிக்கும் நாமங்களிலும் சேரமாட்டேன்.
ஆதிமுதல் போற்றிவரும்
அந்தக் கிரீடங்களின்மீது
அவமதிப்பை விட்டெறிகிறேன்
உங்கள் அலங்காரப் பட்டினங்களின்
துர்வாடையையும் பேரிரைச்சலையும்
சகித்திட முடியாமல் அகன்று போகிறேன்.
இந்த வகையான எதிர்ப்புணர்வு ஃபஹீமாவின் பல கவிதைகளில் வெளிப்படுகிறது. பெண்ணின் துயரத் துடனும், குமுறலுடனும், கோபத்துடனும் அது பதி வாகியுள்ளது. அம்மா, அவளை வழியனுப்பிய இடம், எல்லைக் கோட்டில் தடுக்கப்பட்டவள், காட்டுமிராண் டியிடம் சிக்குண்டவள், ஊற்றுக்களை வரவழைப்ப வள், பேய்களால் தின்னப்படுபவள், பேறுகள் உனக்கு மட்டுமல்ல, எனது கைமாற்றி ஏந்திக்கொள், அவளுக் குச் சட்டம் வகுத்தது யார்? தற்கொலை, வயற்காட்டுக் காவற்காரி போன்ற கவிதைகளை இதற்கு உதாரண மாகக் காட்டலாம். விழிப்புற்ற பெண்மைபற்றிய பிரக் ஞையின் வெளிப்பாடாக நாம் இக்கவிதைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆதித் துயர், ஆதித் திமிர் ஆகிய தொடர்களை சமூகத்தில் வேரோடியுள்ள நெடுங்காலப் பால்நிலைப் பிளவின் குறியீடுகளாகத் தன் கவிதைகள் சிலவற்றில் ஃபஹீமா கையாண்டுள்ளார். இவ்வகையில் ‘ஆதித் துயர்” என்ற கவிதை மிகவும் கவனிப்புக்குரியது. பாலை வெய்யிலில் ஒரு மூதாட்டியின் வழிநடைப் பயணத்தின் ஊடாக துயர் படிந்த பெண்ணின் வாழ்வு இக்கவிதையில் சித்திரமாகின்றது. பெண்ணின் நெடுங் காலத் துயரின் குறியீடாகவே இச் சிறிய கவிதை அமை கின்றது எனலாம்.
நிழல் மரங்களற்றுச்
சூரியன் தவித்திடும் நெடுஞ்சாலையோரம்
வெய்யிலை உதறி எறிந்தவாறு
நடக்கிறாள் மூதாட்டி
குதி கால்களால்
நெடுங் களைப்பை நசுக்கித் தேய்த்தவாறு
காற்றைப் பின் தள்ளிக்
கைகளை வீசுகிறாள்
வெய்யில்
மிகப் பெரும் தண்டனையை
வழி நீழப் பரவ விட்டுள்ளது
வேட்டை நாய்போல
அவள் முன்னே ஓடிச் செல்கிறது நிழல்
பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும் தேங்கித் துடிக்கிறது
ஆதிமுதல் அவளைத் தொடரும் துயர்
பெண்ணின் துயர் ஆதித் துயரெனின், ஆணின் திமிர் ஆதித் திமிராகின்றது ஃபஹிமாவின் கவிதை களில். ‘தற்கொலை’ ஆணால் வஞ்சிக்கப்பட்ட பெண் ணைப்பற்றிய கவிதை. வலுவான மொழியில் ஆணின் ஆதித் திமிர் பற்றி அது பேசுகிறது:
அற்ப புழுதான் – நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித் திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்…..
நீ கொடுத்த சுமைகளையும்
அந்த உடலையும்
உன்னிடமே எறிந்துவிட்டாள்
இனி எக்காலத்திலும்
உன்னெதிரே வரப்போவதில்லை
நீ துன்புறுத்திய அவள் ஆத்மா
ஆணின் ஆதித் திமிரை நிராகரிக்கும் பிறிதொரு கவிதை ‘கடைசிச் சொல்.’ ‘நம்மெதிரே வீழ்ந்து கிடக் கிறது காலத்தின் பிறிதொரு முகம்” என கவித்துவ வீச்சோடு தொடங்குகிறது கவிதை.
நீ உரிமை கொண்டாடிய
எல்லாவற்றிலிருந்தும்
எனை விடுவித்துக்கொண்டேன்
துயரத்தில் பதைபதைத்த சொற்களையும்
துரோகத்தால் நசுங்குண்ட சத்தியங்களையும்
உனது சுவர்களுக்குள்ளேயே விட்டுவிட்டு
வெளியேறிப் போகிறேன்
இப்பொழுதும்
ஆதித்திமிர் தடுத்திட உன்னிடம் எஞ்சியுள்ளது
ஒரு சொல்
விதி தன் கண்ணீரை வழியவிட்ட சொல்
நாம் நமக்குக் கிடைத்திடக்
காத்திருந்த கடைசிச் சொல்
அந்தக் கடைசிச் சொல் எதுவாகவும் இருக்கலாம். அது அவ்விருவரின் இழப்பையும் மீட்டெடுக்கக்கூடிய சொல். ஆதித்திமிர் அதையும் தடுத்துவிட்டது என் கிறாள் பெண். இவ்வாறு ஆணின் ஆதித் திமிருக்கு எதிரான, பெண்ணின் ஆதித் துயரிலிருந்து மீழ்வதற்கான விழிப்புற்ற பெண்ணின் குரலாக அமைகின்றன ஃபஹி மாவின் பெரும்பாலான கவிதைகள்.காதல் உணர்வு சார்ந்த அவரது சில கவிதைகளிலும்கூட ஆண்மைக்கு அடிமைப்பட்டுப் போகாத சமத்துவமான காதலுக்கான குரலே ஒலிக்கின்றது. மிகை யுணர்ச்சியற்று வாழ்வின் முரண்பாடுகளை எதிர்கொள் ளும் குரல் இது.
அன்பு பொங்கிப் பிரவகித்த அபூர்வ நாட்களில்
நிழல்போலப் பிரிவைச் சொல்லிப் பின்வந்தது காலம்
நான் வரச் சாத்தியமற்ற இடங்களில் நீயும்
நீ வரத் தேவையற்ற இடங்களில் நானும்
வாழ்வின் விதிமுறைகள்
எனதுலகையும் உனதுலகையும்
வேறு பிரித்தவேளையில்
விடைபெற்றோம்
ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம்
இறுதியாக அன்றுதான் அழகாகச் சிரித்தோம்
எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தேபோயிற்று
(எனது சூரியனும் உனது சந்திரனும்)
உனது மகிழ்ச்சிகளையெல்லாம்
என்னிடமிருந்தே பெற்றுக் கொண்டாய்
எனது துயரங்களையெல்லாம்
நீயன்றோ ஏற்படுத்தித் தந்தாய்?
தாங்க முடியாத வலிதருகின்ற உன்
தளைகளிலிருந்து
என்னை விட்டுவிடேன் – போகிறேன்…
உனது அதிகாரங்களையும்
எனது அண்டிவாழ்தலையும்
கீழிறக்கிவைத்துவிடுவது
சாத்தியமெனில் ஒன்று சேர்வோம்
(நீ அவனைக் காதலித்தாயா)
நெடுங்காலத் தாமதத்தின் பின்
இப்போது அழைக்கிறாய்
எந்த மன்னிப்புமற்ற வியாக்கியானங்களோடு
பதுங்கிப்பதுங்கி வந்திருக்கிறாய்
முதன் முறையாக உன்னை எறிந்தேன்
இதயத்திலிருந்து சாக்கடைக்கு
மாசுற்றவைகளைத் தூக்கியெறிந்திட
இருதடவைகள் சிந்தித்ததேயில்லை நான் …
சொல்
அன்பானவனாக இருந்தாயா? ..
தாரை வார்த்துத் தந்திட
எவருமே முன்வராத வாசலொன்றில்
தாகித்தக் கிடந்தவளைக் கைவிட்டுச் சென்றபோதும்
அன்பானவனாக இருந்தாயா?
எனக்கும் உனக்குமான உலகின்
கடைசி வாசலையும் மூடி
முத்திரையிட்டாயிற்று
அந்தப் பிசாசை இருகூறாக்கி
நெஞ்சத்துச் சீசாக்களில் அடைத்தாயிற்று
(உன்னால் நான் நனைந்த மழை)
3
இனத்துவ மோதல், அரசியல் வன்முறை, யுத்தம் என்பவற்றால் நேரடியாகப் பாதிக்கப்படாத தென்னி லங்கைக் கிராமம் ஒன்றை வாழிடமாகக் கொண்டவர் ஃபஹீமா ஜஹான். ஆயினும் ஒடுக்குமுறைக்கு எதிரான, யுத்தத்துக்கும் வன்முறைக்கும் எதிரான மனச் சாட்சியின் குரலாக அவரது கவிதைகள் சில அமைந் திருப்பது அவரது அரசியல் பிரக்ஞையின் விசாலத்தைக் காட்டுகின்றது எனலாம். 1980களிலிருந்து ஈழத்தில் வளர்ச்சியடைந்த – தமிழ் இலக்கிய வரலாற்றில் முற்றிலும் புதுமையான, இன விடுதலை சார்ந்த அரசி யல் போராட்ட – எதிர்ப்புக் கவிதைகளில் ஃபஹீமா வின் பங்கு சிறிதெனினும் இது தொடர்பான குறிப்பிடத் தக்க சில கவிதைகளையேனும் அவர் எழுதியுள்ளார்.
இலங்கையின் இனத்துவ அரசியல் சூழல் சிக்கலானது, குழப்பங்கள் மலிந்தது. இனத்துவ முரண்பாட் டையும் மோதலையும் வெள்ளை, கறுப்பு என மிகை எளிமைப்படுத்தி, அதன் ஒரு பக்கத்தைச் சார்ந்து நிற்பது இனத்தேசியவாதிகளைத் தவிர நிதானமான அரசியல் பார்வை உடையவர்களுக்குச் சாத்தியமல்ல. இது தொடர்பான ஃபஹீமாவின் ஒரு சில கவிதைகளில் ஒரு புறச் சார்பு, அதாவது தமிழ்த் தேசிய நோக்குநிலை, வெளிப்படுகின்றது எனினும் பொதுவாக அரசியல் வன்முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிரானவராகவே அவர் இருக்கிறார். ‘அவர்களுக்குத் தெரியும்’ கவிதை அமைதி நிலவிய தமிழ்ப் பிரதேசத்தில் அரச வன்முறை புகுந்தமை பற்றிப் பேசுகின்றது.
அறிமுகமற்ற பேய் பிசாசுகளையெல்லாம்
அழைத்துக்கொண்டு இரவுகள் வந்தடைந்தன
எமது வான வெளியை
அவசரப்பட்டு அந்தகாரம் ஆக்கிரமித்தது
அடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவியபடி
எம் மீது பூச்சொரிந்த வேம்பின்
கிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே
அட்டுப்பிடித்த கவச வாகனங்கள்
யாரையோ எதிர்கொள்ளக் காத்திருந்தன
எமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்
எமது பெண்களின் வாழ்வில் கிரகணம் பிடித்திட எதிர்காலப் பலாபலன்கள் யாவும்
சூனியத்தில் கரைந்தன
தற்போதெல்லாம் குழந்தைகள்
இருளை வெறுத்துவிட்டு
சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்
அவர்தம் பாடக் கொப்பிகளில்
துப்பாக்கிகளை வரைகிறார்கள்
பூக்களும் பொம்மைகளும் பட்டாம்பூச்சிகளும்
அவர்களைவிட்டும் தூரப் போயின
இத்தகைய சித்திரத்தை 1980க்குப் பிந்திய ஈழத்துக் கவிதைகளில் நாம் அடிக்கடி காணலாம். அரச வன் முறையின் வருகை ஆயுதப் போராட்டத்தின் உடன் விளைவுதான். கடந்த சுமார் முப்பது ஆண்டுகளில் வன் முறை, வன்முறைக்கு எதிரான வன்முறை என தொடர்ச் சியாக ஈழத்து வாழ்வு சிதறடிக்கப்பட்டது. அரச வன் முறையினால் வெஞ்சினமுற்ற இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் விடுதலை இயக்கங்களில் இணைந்து விடு தலைக்காகத் தம் வாழ்வைத் தியாகம் செய்ய முன்வந்த னர். (இன்னும் ஆயிரக் கணக்கானோர் சுயவிருப்பற்று பலாத்காரமாக இயக்கங்களுள் உள்வாங்கப்பட்டனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.) முக வரியற்ற நெருப்பு நிலவுக்கு, ஒரு கடல் நீரூற்றி அகிய ஃபஹீமாவின் கவிதைகள் இவ்வாறு உயிர்த்தியாகம் செய்ய முன்வந்த தமிழீழ விடுதலைப் போராளிகளை மகிமைப்படுத்தி அங்கீகரிக்கும் கவிதைகளாக உள்ளன. முகவரியற்ற நெருப்பு நிலவுக்கு என்ற கவிதையில் ஆதிரை என்ற பெண் போராளி அவளது சக மாணவி யால் நெருப்பு நிலவாக உருவகிக்கப்படுகிறாள். அதன் சில வரிகள்:
…….
ஆதிரை
கடைசியாக நீ கல்லூரி வந்த தினம்
அதுவென்றுதான் நினைக்கிறேன்
அன்று சிரித்திடவே இல்லை நீ
சிந்தனை வயப்பட்ட முகத்துடன்
கல்லூரி வளவெங்கும் அலைந்து திரிந்தாய்
பின்னர் நான் பார்க்க நேர்ந்த
போராளிகளின் படங்களிலெல்லாம்
உன் முகத்தைத் தேடித் தோற்றேன்…
துப்பாக்கி வரைந்த
உன் இரசாயனக் குறிப்பேட்டைப்
பத்திரப்படுத்திவைத்துள்ளேன்
பாடத்தை விட்டு
உன் கவனம் திசைமாறிய தருணங்களில்
ஓரங்களில் நீ எழுதியுள்ள வாசகங்கள்
விட்டுவிடுதலையாகும்
உன் சுதந்திரக் கனவைச் சொல்கின்றன
உன் நகர்வுகளை மோப்பம் பிடிக்கும் அறிமுகமற்ற சப்பாத்துக்கால்கள்
சனியன்களால் ஆட்டுவிக்கப்படும் நாளைகளிலும்
எமது வாழிடங்களில் பதிந்துசெல்லலாம்
நீ கவனமாயிருந்து இலட்சியத்தை வெற்றிகொள்
ஒருகடல் நீரூற்றி என்ற கவிதை கடற்போரில் மாண்ட போராளிக்காக இரங்கும் அவனது காதலியின் ஆழ்ந்த சோகக் குரலாக அமைந்துள்ளது. அக்கவிதை யின் இறுதிப்பகுதி:
பரணி..
உன் நினைவுகள் தேய்ந்துகொண்டிருந்த வேளை
மாரிக்கால அந்திப்பொழுதொன்றில்
நனைந்த சீருடைகளிலிருந்து நீர் சொட்டச்சொட்ட
மீளவும் வந்தாய்
அலையெழுப்பும் கடல்பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட
மழைப் புகாரினூடே மறைந்து போனாய்
திரைகடல் சென்ற திரவியமானாய்
ஆழிப்பரப்பெங்கும் ஊழித் தீ எழுந்து தணிந்தது – நீ
திரும்பிவரவே இல்லை
இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெருமௌனம் கவிந்துள்ளது
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே!
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் அதன் முளையிலேயே மக்கள் விரோத அம்சத்தையும் கொண்டிருந்தது. அரச அடக்குமுறைக்கு எதிராக எழுச்சியடைந்த போராட்டம் விரைவிலேயே சகோதர இயக்கங் களுக்கு எதிரானதாகவும், அப்பாவித் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாகவும் வளர்ச்சியடைந் தது. இதன் ஊடாக விடுதலைப் போராட்டம் ஒரு பயங்கரவாதக் குணாம்சத்தைப் பெற்றுக்கொண்டது. அரச பயங்கரவாதம் அதற்கு எதிரான தமிழ் தேசிய பயங்கரவாதம் என இது விரிவடைந்தது. இதுபற்றிய ஃபஹீமாவின் எதிர்வினைகள் தாக்கமானவை. ‘ஒரு மயானமும் காவல் தேவதைகளும்” என்னும் கவிதை முஸ்லீம்களுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் வன் முறை பற்றிப் பேசுகின்றது. புலம் பெயர்ந்த ஒரு இளை ஞனை முன்னிறுத்திப் பேசுவதாக அது அமைந்துள் ளது. அதேவேளை பொதுவாக வன்முறையின் கொடூரம் பற்றியும் பேசுகின்றது.
அக்கவிதையின் சில பகுதி கள் இவை:
சுழலும் சோகச் சூழலிடை
உனக்கு எதை எழுத?
ஆடிப்பாடி பின் அவலம் சுமந்து நீங்கிய
சோலை வனத்தைத் தீயின் நாக்குகள் தின்று தீர்த்தன
நெற்கதிர்கள் நிரம்பிச் சலசலத்த வயல்வெளிகளை
இரும்புச் சக்கரங்கள் ஊடுருவித் தகர்த்தன
எஞ்சிய எமது பள்ளிவாசல்களும் அசுத்தமாக்கப்பட்டன
மண்ணை மீட்டெடுக்கும்
போராட்டத்தில் மனிதர்கள் வீழ்ந்திட
பேய்கள் உலாவிடும் பூமிமாத்திரம்
தரிசுதட்டிக் கிடக்கிறது
இரத்தம் உறிஞ்சிய மண்ணில்
எத்தகைய வசந்தம் துளிர்த்திடுமினி …
தளைகளை வெட்டியெறிந்திடப் புறப்பட்ட விடுதலைப்
பிரவாகம் உனை வீடுதுறக்கவைத்தது
நீ வாழ்ந்த தேசம் இன்றுன்னை
எந்தப் பாடலைக் கொண்டும்
வரவேற்கும் நிலையிலில்லை …
உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப் பட்டபின்… என்னும் கவிதையும் முஸ்லிம் விவசாயிகள் மீது கட்விழ்த்துவிடப்பட்ட புலிகளின் வன்முறை பற்றியே பேசுகின்றது.
அந்த வயல்வெளி மீது வாழ்வும் மொழியும்
வேறுபிரிக்கப்பட்டது
வானமும் திசைகளும் விக்கித்து நின்றிட
விதியெழுதப்பட்டது
எனத் தொடங்கும் கவிதை இவ்வாறு முடிகின்றது:
மாலைப் பொன்னொளி கவியெழுத வரும்
அழகிய வயல்வெளியைச்
சனியன்கள் தம் துயரப் போர்வை கொண்டு மூடின
மரணப் பீதியுடனான ஓலம் திசைகளை உலுப்பிற்று
வயல்வெளி கடந்து அவ்வதிர்வு
நீலம் பூத்த மலைகளையும் அடிவானையும்
நீண்டு தொட்டது
அறுவடைக்குச் சென்ற அப்பாவிகள்
அறுவடை செய்யப்பட்டனர்
பின் உழவு இயந்திரப் பெட்டிகளில்
நெல் மூடைகளுக்குப் பதிலாகத்
துண்டாடப்பட்ட சடலங்கள்
எடுத்துவரப்பட்டபோது
எல்லாம் தடுமாறி நின்றன
இவ்வாறு வன்மமும் வெறுப்பும்
வாரியிறைக்கப்பட்ட
வரலாற்றுக்காயம் நிகழ்ந்தது எல்லாவற்றையும் வீழ்த்திச் சிதைத்து
அள்ளிப்போனது பிரளயத்தின் பெருங்காற்று
பொதுவாக வன்முறைக்கு எதிரான கவிதை வரிகள் ஃபஹீமாவின் கவிதைகளில் விரவிக்கிடக்கின்றன. என் றாலும், ஈழத்தின் வன்முறைச் சூழல் பற்றிய ஒரு மொத் தமான சித்திரத்தைத் தருகிறது அவரது அடவி – 2007 என்ற சிறிய கவிதை. செறிவான படிமங்களால் நிரம்பிய இக்கவிதை ஈழத்தின் அவலம் பற்றிய ஒரு முழுமை யான குறியீடு எனலாம்.
தீ மூட்டப்பட்ட
வனத்தை விட்டுத்
தப்பித்துப் பறக்கிறது
பறவை
சிங்கத்தோடு நரிகளும்
புலியோடு ஓநாய்களும்
அணிதிரண்ட அடவியில்
அபயம் தேடியலைகிறது
மான்குட்டி
வற்றிய குளத்தில்
வந்திறங்கிய கொக்குகள்
நீர் ததும்பும் நதிகளில்
சேர்ப்பிக்கும் கதைகள் பேசி
மீன்களைக் காவிப்
பறக்கின்றன மலையுச்சிக்கு
தேனீக்களை விரட்டியடித்துத்
தேன் சொட்டும் வதையை
அபகரித்துக்கொண்டது
கரடி
அடவியெங்கும்
அதிர்ந்து ஒலிக்கிறது
என் தேசத்து
மானுடத்தின் பேரவலம்
சிங்கத்தோடு நரிகளும் புலியோடு ஓநாய்களும் அணிதிரண்ட அடவியில் அபயம் தேடி அலையும் மான்குட்டி ஈழத்து வாழ்க்கையைக் கச்சிதமாக உரு வகிக்கும் படிமமாகும்.
4
ஃபஹீமாவின் கவிதைகள் இயற்கையின் வண்ணங் கள் பற்றிய காட்சிப் படிமங்களால் நிறைந்திருக்கின் றன. அவை தனித்து நிற்காது சங்கக் கவிதையியல் கூறுவதுபோல் முதல், கரு, உரி மூன்றும் பின்னிப் பிணைந்தனவாக உரிப்பொருளுக்கு ஊட்டம் கொடுப் பனவாக அமைகின்றன. இனிய குரலெடுத்துப் பாடும் உன் பாடலுடன்
வசந்தகாலமொன்று என் அடவிகளில் வந்துவிழும்
துயரங்கள் நிரம்பித் தாக்கும் வேளைகளில்
வேதனையில் உன் சிரிப்பொலி எழும்போது
அகால இடிமுழக்கத்தில் என் வானம் அதிரும்
ஏதோ ஓர் ஆறுதலில்
நீ என் கிளைகளில் தாவிக் குரலலெழுப்பும்போது
கார்காலமொன்று என் வேர்களைச் சூழும்
மரணத்தைப் பற்றியும்
நிலையற்ற வாழ்வின் நியதிகள் பற்றியும்
மகானைப்போல் நீ போதிக்கும் தருணங்களில்
கடும் கோடைகாலமொன்று என்
கால்களைச் சுற்றிவந்து பெருமூச்செறியும்
ஆனாலும் அன்பே!
இலையுதிர் காலத்தில் விக்கித்து நின்றபோது
ஓராயிரம் இலைகளும் உதிர்ந்துபோகையில்
என்னிடம் புன்னகைக்கக் கெஞ்சிய
உன் கீச்சலுடன் பனித்துளிகள் சொரிந்திடலாயின
(குரங்குகள் பிய்த்த கூடு)
பொன்னந்திக் கிரணங்கள் படியத்தொடங்கிய மாலையில்
குளிர்ந்த மலையை விட்டுக் கீழிறங்கித்
தும்பிகள் பறந்து திரிவதும்
தங்கநிறக் கதிர்கள் ஆடுவதுமான வயல் நிலங்களையும்
நீரோடைகளையும் தென்னந் தோப்புகளையும் ஊடுருவி
மனிதர்கள் வடிந்துபோன சந்தைக் கட்டடங்களையும்
மஞ்சள் வண்ணப் பூச்சொரியும் பெருவிருட்சத்தையும்
தாண்டி நீ சந்திக்கு வந்தாய்
(எனது சூரியனும் உனது சந்திரனும்)
பகல் முழுதும்
மலைகளின் சாம்பல் நிறப் போர்வைகள்
தேங்கிக்கிடக்கும் இருள்
மாலையில் பதுங்கிப்பதுங்கி மலையிறங்கி
ஊரின் திசைகளெங்கிலும்
உறைந்திட ஆரம்பிக்கும் கணங்களில்
என்னை வழியனுப்பிவைப்பாய்
(இரகசியக் கொலையாளி)
நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது
எமக்குப் பின்னால்
பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது
தூரத்து வயல்வெளியை மூடியிருந்தது வெண்பனி
தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி
எம் செவிவழி நுழைந்தது
வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை
சந்தடி ஓய்ந்த தெருவழியே
நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் (ஒரு கடல் நீரூற்றி)அழகிய படிமங்களால் நிறைந்த மழை, வெயில் ஆகிய கவிதைகள்கூட  தனியே மழையையும் வெயி லையும் பற்றியவை அல்ல. அவையும் பெண்ணுடனும் சமூக யதார்த்தத்துடனும் உறவுபடுத்தப்படுகின்றன.
இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வரமுடியாது
நனைந்துகொண்டிருக்கிறது
மழை
எனத் தொடங்கும் ‘மழை’ கவிதை
ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்துகொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெல்லாம்
ஒடுங்கிப்போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை
என முடிகிறது. வெயில் கவிதையின் சில பகுதிகள் வருமாறு:
வெட்டியகற்றப்பட்ட மரம்
விட்டுச்சென்ற வெளியில்
அதிரடியாக
இறங்கிக்கொண்டிருக்கிறது வெயில்…
தாய்த்தேசத்தில் அனாதையாக்கப்பட்ட மகள்
புகலிடம் ஒன்றைத் தேடிப் போகிறாள்
நிழல்களை விரட்டும் பிறிதொரு வெயில்
அவள் பின்னே போகிறது
கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன்
கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு
இரத்தக்கறைகளை அப்படியே விட்டுவிட்டு
‘நஞ்சூட்டப்பட்ட மரம்”, ‘அழிவின் பின்னர்’ ஆகிய கவிதைகள் இயற்கை அழிக்கப்படுவதை மிகுந்த கோபத்துடனும் சோகத்துடனும் பேசுகின்றன. பெண் ணுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிணைப்பை யும் உறவையும் ஃபஹீமாவின் கவிதைகள் மிக நுட்ப மாகச் சித்திரிக்கின்றன. ‘ஊற்றுக்களை வரவழைப்ப வள்”, ‘அவள் வளர்க்கும் செடிகள்”, ‘நிலம்” ஆகிய கவிதைகள் நிலத்தை உயிர்ப்பிக்கும் பெண்களைப் பற்றி மிகுந்த கவித்துவத்துடன் பேசுகின்றன. இந்தக் கவிதைகள் அவரின் இளமைக்கால அனுபவங்களின் வெளிப்பாடு என நினைக்கிறேன். இந்தக் கவிதைகளில் வரும் சிறுமி அவராகவே இருக்கலாம். இயற்கையை ரசிக்கும் உள்ளத்தில் இருந்துதான் கவிதை ஊற்றெடுக் கும். அவள் வளர்கும் செடிகள் ஃபஹீமாவின் சிறந்த கவிதைகளுள் ஒன்று எனலாம். ஃபஹீமாவின் கவிதை களிலே மிகவும் நீளமானது நிலம் என்னும் கவிதை. இதுவும் அவருடைய சிறந்த கவிதைகளுள் ஒன்று எனத் தயக்கமின்றிக் கூறலாம். நிலத்தை உயிர்ப்பித்து, நிலத் துக்கே தன் வாழ்வை அர்ப்பணித்து, அந்த நிலத்தி லேயே அடங்கிப்போன ஒரு பெண்ணைப் பற்றிய ‘காவியம்’ என இதனைக் கூறலாம். இதில் வரும் பெண் அவருடைய அம்மம்மாவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்;. தன் சிறு பராயத்தோடு பிணைந்திருந்த அம்மம்மா பற்றி உணர்வு கொப்பளிக்கும் கவிதைகள் சிலவற்றை ஃபஹீமா எழுதியிருக்கிறார். ‘இரகசியக் கொலையாளி” அதில் முக்கியமானது. அம்மம்மாவின் மரணத்தின் துயர் வழிந்தோடும் கவிதை அது. நிலம் என்னும் கவிதை நிலத்தோடு பிணைந்த பாட்டியைப் பற்றிய சிறுமியின் நினைவுகளாக விரிகிறது. பாட்டி நிலத்துக்கு உயிர் கொடுத்தவரலாற்றையும் அவளது அன்றாட உழைப்புச் செயற்பாடு பற்றியும் பேசுகிறது. அவளது ‘வியர்வையையும் நீரையும் பருகிப்பருகி அவளைச் சூழப் புதிது புதிதாய்” செழிப்படைந்த நிலத்தோடு அவளுக்கு இருந்த பிணைப்பு பற்றிப் பேசுகிறது. கடைசியாக அவளுடை தனிமைத்துயர் பற்றிப் பேசுகிறது.
இறுதியில்,
ஓயாது அழைத்துக் கொண்டிருந்த
அரூபக் குரல் ஒன்றுக்குப் பதில் அளித்து
அவள் போனாள்
புற்களையும் செடிகளையும் வளரவிட்டு
அந்த நிலம்
அவளைப் பத்திரப்படுத்திக் கொண்டது
என முடிகிறது கவிதை.
விழிப்படைந்த பெண்மையின் குரலாகவும், அதி காரத்துக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான குரலாக வும், அன்பு, பாசம், சமத்துவமான காதல் என்பவற்றின் குரலாகவும், இயற்கையின் குரலாகவும் அமையும் ஃபஹீமாவின் கவிதைகள் எளிமையானவை, நேரடியா னவை, அதிக அலங்காரங்கள் அற்றவை. அதேவேளை, படிமச் செறிவு மிக்கவை. இவை இவரது கவிதைகளின் பலம் என்று சொல்வேன். இளம் தலைமுறையைச் சேர்ந்த முக்கியமான ஈழத்துக் கவிஞர்களுள் ஒருவராக ஃபஹீமாவின் கவிதைகள் அவரை அடையாளப் படுத்துகின்றன.
இன்று எழுதும் பெரும்பாலான கவிஞர்களைப் போல் ஒரேவகையான மொழி நடையையே இவரும் கையாள்கின்றார். பன்முகப்பட்ட கவிப் பொருளும் பன்முகப்பட்ட மொழி நடையும் கவிதைக்கு ஒரு பன்முகத் தன்மையைத் தருவன. ஃபஹீமாவின் எதிர்காலக் கவிதை இப்பன்முகத்தன்மையைப் பெற்று தமிழ்க் கவிதைக்கு மேலும் வளம் சேர்க்கும் என்று நம்புகிறேன்.

 

 

நன்றி:

01 Feb

‘அபராதி’ எனும் குற்றமிழைத்தவன்

01.
கால ஓட்டத்தில் எதையும் நின்று இரசிக்கவிடாதபடி கணங்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. தாண்டிவந்த ஒவ்வொரு கணத்திலும் ஏதாவதொரு பாதிப்பு இல்லையெனில், அக் கணங்கள் நினைவுகளில் தேங்கிவிடுவதுமில்லை. கவிதைகளாகி விடுவதுமில்லை. ஒரு கவிஞன் எனப்படுபவன் தான் காணும் எல்லாவற்றிலும் கவிதையைத் தேடுகிறான். காண்கிறான். கண்டடைகிறான். பழைய நினைவுகள் பாரமாக உணரும்வேளை அவற்றை கவிதையாக இறக்கி வைத்துவிட்டு அடுத்தடுத்த நினைவுகளில், நிகழ்வுகளில் அவன் மூழ்கி விடுகிறான். அவையும் பின்னாட்களில் கவிதைகளாகி விடும்.

அவ்வாறு நினைவுகளாலும், நிகழ்வுகளாலும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட கவிதைகளால் பூரணம் பெற்றிருக்கிறது கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘அபராதி’. குற்றமிழைத்தவனெனப் பொருள் தரும் ‘அபராதி’யில் சிறு வயது முதல் தன்னைப் பாதித்த, தனது நினைவுகளில் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் கணங்களில் பலவற்றைக் கவிதைகளாக்கியிருக்கிறார் கவிஞர். தொகுப்பிலுள்ள கவிதைகளனைத்துமே நேரடியாக அக்கணங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்பவை. அந்தக் கணங்களில் கவிஞர் உணர்ந்தவற்றை நாமும் உணரச் செய்பவை.

ஒரு பெண் என்பவள் சமூகத்தால், தன்னைச் சூழ இருப்பவர்களால் பல வகை இன்னல்களுக்காளாக நேரிடுவதால் அதனைச் சாடியே அனேக கவிதைகள் முந்தைய தொகுப்பான ‘ஒரு கடல் நீரூற்றி’யில் உள்ளவை போல இத் தொகுப்பிலும் உள்ளன. ஆனால் வேறு வேறு பரிணாமங்கள். வேறு வேறு துயரங்கள். முன்னர் எழுதப்படாதவற்றின் மிச்சங்கள். யாரும் இன்னும் தொட்டுக் காட்டி விடாதவை புதுவிதமான, தனக்கேயுரித்தான கவிதை மொழியில் வெளிப்பட்டிருக்கின்றன.

‘ஆதித் துயர்’ தலைப்பே அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை பெண்கள் அனுபவிக்கும் துயரங்களைச் சொல்கிறது. காலங்காலமாக அதிகாரமிக்கவர்கள் காட்டும் வழியில் பெண் பயணிக்க வேண்டியவளாகிறாள். அவ் வழியில் ஏற்படும் இடர்களை அவள் பொறுத்துக்கொள்ள வேண்டும். அவளாக வேறு வழி தேடிக் கொள்வாளாயின் சமூகத்தை இழிவுபடுத்துபவளென பல வேறு பெயர்களால் முத்திரை குத்தப்பட்டு விடுகிறாள். அக் கவிதையில்

வெய்யில்
மிகப் பெரும் தண்டனையை
வழி நீளப் பரவவிட்டுள்ளது

இங்கு வெய்யில், இயற்கைக் காரணிகளால் பெண்கள் படும் துயரங்களையும்,

வேட்டை நாய் போல
அவள் முன்னே
ஓடிச் செல்கிறது நிழல்

இங்கு வேட்டை நாய், சமூகத்தாலும் சூழ்ந்திருப்பவர்களாலும் ஏற்படும் துயரங்களையும் குறிப்பதாகக் காண்கிறேன். ஏதேனுமொரு முன்னேற்றப் பாதையில் பெண்ணானவள் தன் பாதங்களை எட்டிவைக்கும்போதெல்லாம் வேட்டை நாயைப் போல அழியா நிழல் அவளை வழி மறிக்கிறது. குறுக்கிடுகிறது. அதையெல்லாம் பொறுமையாகத் தாண்டி அவள் நடைபோட வேண்டியவளாகிறாள். அக் குறுக்கீடுகள் வழிவழியாகத் தொடர்வதை கவிதையின் இறுதிப்பகுதி இப்படிச் சொல்கிறது.

பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்
தேங்கி நடுநடுங்குகிறது
ஆதியிலிருந்து தொடரும் துயரம்

அம்மா எனும் ஒற்றைச் சொல், ஒரு வெளிச்சப் புள்ளியாக நம் ஒவ்வொருவருடனும் என்றென்றும் கூடவே வருவது. இடர் சூழும் கணம் தோறும் வாய் தவறியேனும் அம்மா என்று உச்சரித்து விடுகிறோம். வலியகற்றும் மருந்து போல அந்தச் சொல்லுக்கே அவ்வளவு வலிமையிருக்கிறது.

வாழ்க்கை முழுதும் நாம் கடந்துபோகும், நம்மைக் கடந்துபோகும் ஜீவன்களில் தாய் மட்டுமே இதயத்தின் அடித்தளத்தில், முதல் தடமாக, என்றென்றும் நம்மால் மறக்கமுடியாதபடி வீற்றிருப்பாள். நம் மனதின் மகிழ்வு கண்டு உண்மையாய் பூரிக்கவும், துயரம் கண்டு உண்மையாய் வருந்தவும் அவளால் மட்டுமே முடியும்.

அன்பு முழுவதற்கும் ஒரு உருவம் கொடுக்க நினைத்தால், அது அம்மா என எழுந்து நிற்கும். ஆனால், நம்முடன் கூடவே இருக்கையில் அந்த முழுமையான அன்பை நாம் கண்டுகொள்ளத் தவறி விடுகிறோம். ஒளி மிக்க சூரியனை அருகில் வைத்துக் கொண்டு, வெளிச்சத்தைத் தேடி அலைவது போல வேறெங்கெங்கோ எல்லாம் அன்பைத் தேடி அலைந்தபடி இருக்கிறோம்.

கவிஞர் ஃபஹீமா ஜஹானின் ‘அம்மா’ கவிதை சொல்லும் செய்தியும் அதுதான்.

இருக்கும் இரு கரங்களும்
போதாதெனப் புலம்பும் அம்மாவின் முதுகின் பின்னால்
எப்பொழுதும் துரத்திக் கொண்டிருக்கும்
இரக்கமற்ற சொற்களும்
இங்கிதமில்லாக் கட்டளைகளும்
ஓய்ந்திருக்கும் இடந்தன்னைப் பறித்துக் கொண்டிருக்கும்
ஓராயிரம் பணிவிடைகளும்

என ஆரம்பிக்கும் கவிதையானது நமது எல்லோர் வீடுகளிலும் நிகழும் பல விடயங்களை வெளிப்படையாகச் சொல்கிறது. வீடுகளில்  இல்லத்தரசி என எளிதாக வகைப்படுத்தப்படுபவள் வீட்டிலாற்றும் பணிகளெதுவும் எவராலும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதேயில்லை.

வருத்தம் கவிழ்ந்த உடலுடன்
என்றாவது அவள் வீழ்ந்து தூங்கும்
ஆழ்ந்த உறக்கத்தை அதிரவைத்துக் கலைக்கும்
தண்ணீர்க் குவளையொன்றுக்காகவோ
அற்பச் சொல்லொன்றுக்காகவோ
கூச்சலிடும் ஒரு குரல்
நடைப்பிணம் போல எழுந்து வரும்
அவளது பாதங்களில் பின்னும்
யுகங்களாகச் சிதைக்கப்பட்டுவரும் நிம்மதியொன்று

என்றோ விதியாகித் தொடரும்
நியதிகளில் நசுங்குண்டவாறு
இரவு நெடு நேரம் வரைத்
துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்
எல்லோரும் உண்டு முடித்து எஞ்சும்
குளிர்ந்த உணவுக்காக

என நிதர்சனங்களை வெளிப்படையாகச் சொன்னபடி தொடர்கிறது கவிதை.

02.
இலட்சியங்கள் பலவற்றைக் கொண்ட பெண்ணை, பல பொறாமைக் கரங்கள் வழி மறித்து நிற்கும். பறக்கவென நாடும் அவளது சிறகுகளைப் பிடுங்கி எறியவெனக் காத்துக் கிடக்கும். அவளது நடைபாதைகளை முட்களால் நிரப்பிவிட்டு, தடுக்கிவிழுகையில் கைகொட்டிச் சிரிக்கும். ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகள் சமூகக் கட்டமைப்பு, காதல், கலாச்சாரம் எனப் பலவற்றாலானது. அவ்வாறாக பலவகையான தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன தொகுப்பிலுள்ள ‘அவளை வழியனுப்பிய இடம்’ , கிரீடங்களை அவமதித்தவள்’,  ‘காட்டுமிராண்டியிடம் சிக்குண்டவள்’, ‘தற்கொலை’,  ‘எல்லைக்கோட்டில் தடுக்கப்பட்டவள்’  ஆகிய கவிதைகள்.

பாதைகள் அழைக்கின்றன
ஆசைகள் நிரம்பிய உள்ளம் அழைக்கிறது
ஆனாலும்
அவளை ஆழிக்குள் புதைக்கிறாய்

எனத் தொடங்கும் ‘அவளை வழியனுப்பிய இடம்’ கவிதையானது,

அதிகாலையில்
தூய அருவியொன்றிலிருந்து
அவளது எளிய குடிசை நோக்கிச்
சுமந்து வந்த தெள்ளிய நீர்க்குடத்தை -நீ
கல்லெறிந்து உடைத்த வேளை
தவத்தில் மூழ்கியிருந்த
அவள் கானகத்து மான்கள்
திகைத்தோடித் திசை மறந்தன

எனத் தொடர்கிறது. இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் தெள்ளிய நீர்க்குடம் எனும் அழகிய குறியீடு, சலனமேதுமற்றிருக்கும் பெண்களின் இளகிய மனதிற்கு மிகப் பொருத்தமாகக் கையாளப்பட்டிருக்கிறது. தூய அருவியிலிருந்து அவளேந்திச் சென்ற தெளிந்த நீரைச் சிதறடிப்பதன் மூலம் அவளை தாகத்திற்குள்ளாக்கி தன்னிடம் கையேந்தச் செய்வது உடைத்தவனின் திட்டமாக இருந்திருக்கக் கூடும்.

மீளவும் உடைத்திட முடியாக்
கலயம் சுமந்து புறப்பட்டவளைக்
கலங்கிய நீர் ஓடைகளில்
திரும்பத் திரும்ப இறக்கிவிட்டாய்
வீடடைய முடியாத
இருள் வழியெங்கும்
அவளது பாதங்களை அலைக்கழித்தாய்

அவள் நீர் ஊற்றிக் காத்திருந்த
செழிப்புமிகு பயிர் நிலங்களில்- உனது
அடங்காப்பிடாரி ஆட்டுக் குட்டிகளை
விளையாட அனுப்பினாய்

அடுத்ததாக அவளைப் பட்டினியில் ஆழ்த்துவதற்காக, அவளது பயிர் நிலங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் மிகுந்த வன்மத்தோடு இறங்குகிறான். தாகத்திலும் பட்டினியிலும் அவளைத் தள்ளிவிடுவதன் மூலம் அவளது முழுவதுமான வாழ்வாதாரங்களைச் சிதைப்பது அவன் நோக்கமெனில், இது பல பெண்களின் வாழ்வினை அடியொற்றிய கவிதைதானே ?!

இதே போன்றதொரு இன்னுமொரு கவிதைதான் ‘எல்லைக்கோட்டில் தடுக்கப்பட்டவள்’ கவிதையும்.

முறைப்பாடுகளுக்கு அஞ்சிய
எல்லாக் காவலரண்களும்
அவளை வெளியே துரத்துகின்றன

எனத் தொடங்கும் கவிதை, தனக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முறையிடச் சென்ற இடத்திலும் அநீதியிழைக்கப்படுவதை ஆரம்பவரிகளில் உணர்த்துகிறது. தொடர்ந்து பெண் வாழ்வின் பல அவலங்களைச் சொல்லி,

இன்று…
கின்னரர் தம் இசையிழந்த
நிலமெங்கும்
அவளது ஒப்பாரி அலைகிறது
அரசனைத் துதிபாடிச் செல்வோரின்
கால்களின் கீழே
பேரவலத்தின் ஓசை மாண்டொழிகிறது

என முடிகிறது. ‘காட்டுமிராண்டியிடம் சிக்குண்டவள்’  கவிதையில் சிறுவயது தொட்டே ஒரு பெண்ணின் வாழ்வில் கொடூர ஆட்சி செலுத்தும் அதிகாரங்கள் நிறைந்த, நேரடியாக தீய நடவடிக்கைகள் கொண்டவரைச் சாடுகிறார் இப்படி.

உனது காலடியோசைகளில்
அவளது பாடல்கள் மெளனித்துப் பதுங்கிக் கொண்டன
தீவைத்த மலரெனப் பொசுங்கிவிழும்
அவளது புன்னகையை மிதித்தவாறு
நித்தமும் வலம் வந்தாய்
அவள் ஒளியினைத் தரிசித்த
எல்லா வாசல்களையும்
வாளேந்தியவாறு அறைந்து சாத்தினாய்
மலையென அழுத்தும் இம்சைகளை
அந்த வீடெங்கும் அவிழ்த்து விட்டிருந்தாய்

………….
………….
அந்தச் சிறுபெண்
உணர்வுபெற்றெழுந்த ஒவ்வொரு வேளையிலும்
உன் கோரப்பற்களால் தீண்டித் தீண்டித்
துடிதுடிக்க விட்டாய்
எக்காலத்திலும் கருணையைச் சிந்தாத கண்களில்
தீயினைக் காவித்திரிந்தாய்
‘தற்கொலை’ கவிதையில் இதே கருத்து வேறு விதமாக வெளிப்பட்டிருக்கிறது.

அற்பப் புழுதான் – நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித்திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்

03.
காதல் இரு பார்வைகளின் சங்கமத்தில் பிறக்கிறது. பார்த்துக் கொள்ளும் வேளையில் பேரழகென மிளிரும் அது, எதிர்காலமும், தம்மைப் பார்த்திருக்கும் சுற்றுச் சூழலும், சமூகமும் குறித்த சிந்தனை எழும்போது அச்சத்தைத் தந்துவிடுகிறது. அது விருப்பமின்றி ஒரு பிரிவுக்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இவ்வாறாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் பரஸ்பர நேசம் பார்வைகளால் பகிரப்படும் தருணங்கள் நிறைந்த மழை நாளின் பயணமொன்றை அழகுறச் சொல்கிறது ‘காட்டில் பெய்த மழை’ கவிதை.

மழை முகில்கள் தொங்கிக் கிடந்த அதிகாலையில்
நெடுந்தூரம் கடந்தோம்
உடனிருந்த சிறுவர்களின் சேட்டைகளில்
ஒருவரையொருவர்
எண்ணிப் பயணிக்கும்
கனவுகளில் இருந்து மீண்டோம்

எனத் தொடரும் கவிதையில் மலையையும் ஏந்தும் தைரியமும் பலமும் பெற்றவனாக ஆணையும், வீழ்ந்து சிதறி நீரோடு கலந்து பயணிக்கும் மழைத்துளியாக, இன்னொன்றுடன் சார்ந்து பயணிக்கவேண்டியவளாக  பெண்ணையும் சித்தரித்து, ஆணின் பலம் வாய்ந்த நிலையையும், பெண்ணின் பலவீனமான நிலையையும் இப்படிப் பிரித்துக் காட்டுகிறார் கவிஞர்.

வழி நீளப் பேரிடிகள் முழங்கி அச்சுறுத்தச்
சிறியவர் எதிரே
உனது தைரியம் எனையும் தொற்றியது
மலையை ஏந்தும் வல்லமையுடன் நீ
வீழ்ந்து கொண்டிருக்கும்
மழைத் துளியொன்றன்றி வேறேது நான்?

வல்லமைகள் கொண்டவனாகவும், தனக்குப் பிடித்தமானவனாகவும் ஒருவனைக் கண்டுகொள்ள நேர்ந்த போதிலும், பெண்ணுக்கென காலங்காலமாகத் தொடரும் சமூகக்கட்டமைப்புக்களாலும், சூழ்நிலைகளாலும், நாணத்தாலும் அவள் அவனை நிராகரிக்கவேண்டியிருக்கிறது. அதை மிகவும் அருமையாகச் சொல்கிறது கவிதையின் இறுதி வரிகள். பெண்களைச் சூழ மூடியிருக்கும் அனைத்தையும் ‘ஆண்டாண்டு காலப் போர்வைகள்’ எனும் சொற்றொடர், அருமையாக வெளிப்படுத்துகிறது.

ஓய்ந்திருந்த இசையும் ஓசையும்
மீள வலுத்தது
நுழைவாயிலருகே
எனை விடுவிக்கும் வேளையில்
ஆழ்ந்து ஊடுறுவுமொரு பார்வையை எறிந்தாய்
இப்போது
அடர் வனத்தினுள்ளே பெரு மழையாய் நீ
எனதான்மாவினுள் நுழையத் தொடங்குகையில்
ஆண்டாண்டு காலப் போர்வைகள் கொண்டு
எனை மூடிப் போகிறேன் நான்

இதையெழுதும் இக் கணத்தில் கூட எத்தனை எத்தனையோ இல்லங்களில் முதிய ஆத்மாக்கள் தாங்கள் விட்டுவந்த, தங்களைக் கை விட்ட வழித் தோன்றல்களை எண்ணி எண்ணிக் காத்துக் கொண்டிருக்கின்றன. தங்களை ஆதரிக்க நீளும் கரமொன்றினை எதிர்பார்த்து வழி பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்களிடம் அன்பினையும் எஞ்சியிருக்கும் உயிரையும் தவிர்த்து வேறேதும் இல்லை. அதனாலேயே அநாதரவாகவும், கைவிடப்பட்டவர்களாகவும் அவர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். ‘மரணத்தை யாசித்தவள்’ கவிதையானது தனது அந்திமக் காலத்தில் உறவுகளால் நிராகரிக்கப்பட்டு கூற்றுவனை எதிர்பார்த்துக் காத்திருந்த  ஒரு முதிய ஆத்மாவின் கதையைச் சொல்கிறது.

நீ
இறைவனின் தோற்றமொன்றை
எதிர்பார்த்துக் காத்திருந்தாய்
தீண்டத் தகாத பொருளாக்கி
இருளின் மூலையொன்றில்
உனைக் கிடத்தியிருந்தது முதுமை

அந்த வீட்டில் முதியவளின் அருகமர்ந்து அவளது வேதனைகளை, வலிகளை அன்பாக விசாரித்து, பணிவிடை செய்ய யாருமற்ற நிலையை மிகத் தெளிவாக விவரிக்கின்றன கீழுள்ள வரிகள்.

உன் வாழ்வு முழுதும் சேகரித்த
வேதனைகளைப் பகர்ந்திட
எந்தச் செவியுமே
அவ்வீட்டில் இல்லாதிருந்தது

பேரன்புடன்
அவதரிக்கச் செய்து ஆளாக்கி வளர்த்த
உருவங்களுக்குள்ளிருந்து
திரும்பி வரவே இல்லை
உனக்கான பரிதவிப்புகளும் பாசங்களும்
எனினும், அவளது மரணத்தின் பின்னர், அவள் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் நீருற்றி நட்டு வளர்த்த மரங்கள் மட்டும் அவளை நன்றியோடு தேடிக் கொண்டிருப்பதை இறுதிவரிகள் இப்படிச் சொல்கின்றன.

நீ நீரூற்றியதால்
வளர்ந்தோங்கிய மரங்களெல்லாம்
இன்று
உன் கருணையின் காலடிகளைத்
தேடியவாறு
தலைகவிழ்ந்து நிற்பதைக் காண்

இங்கு ‘நீரூற்றியதால் வளர்ந்தோங்கிய மரங்களெல்லாம்’ எனும் சொற்றொடரானது நேரடியான ஒரு அர்த்தத்தைக் குறிப்பதோடு, அந்த முதியவள் பிரதிபலன் எதிர்பாராமல் வளர்த்து, பின்னர் அவளைப் போல அன்பு காட்ட யாருமற்று நிராதரவாக்கப்பட்ட அனைத்து உயிர்களையும்தான் குறிப்பிடுகின்றன.

ஒரு மழை என்னவெல்லாம் செய்யும்? அடாது பெய்யும். எல்லா இடங்களையும் நனைத்துப் போகும். வெள்ளமெனப் பெருக்கெடுத்துச் சென்று நீர்வாழ்ப் பிராணிகளின் வாழ்விடங்களை மாற்றும். சிலவற்றை அழகாக்கும். சிலவற்றை அவலட்சணப்படுத்தும். இன்னும் தான் வந்துபோனதை உறுதிப்படுத்த இலைகளிலும் குட்டைகளிலும் தெருக்களிலும் தேங்கி நின்று ஈரம் காட்டும். இவையெல்லாவற்றையும் செய்து கொண்டிருந்த மழை, நின்று போன காரணத்தை கவிஞர் ஃபஹீமா ஜஹான் ‘மழை’ கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.  இங்கு ஒரு பெண்ணின் விழிநீரின் சக்தி, மழையை நிறுத்திவிடப் போதுமானதாக இருக்கிறது.

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப் போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை

‘மழை’யைப் போலவே ‘வெயில்’ கவிதையானது காடுகள் அழிக்கப்படுவதால் விளையும் சுற்றுச் சூழலின் வெப்ப அதிகரிப்பையும், அதன் காரணமாக நிகழும் பறவைகளின் இடப்பெயர்வுகளையும், இன்னும் தீவுக்களத்தில் இரத்தம் காயாத நிலையையும் ஒரே கவிதையில் தெளிவாகச் சொல்கிறது.


04.

தொகுப்பிலுள்ள ‘நொந்த உடலுக்கான நஞ்சு’, ‘ஊற்றுக்களை வரவழைப்பவள்’ ஆகிய இரு கவிதைகளும் கவிஞரின் சிறுவயதில் அவருக்கும் அவரது அம்மம்மாவுக்குமிடையிலான சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. தனது நினைவுகளில் ஆழமாக வேறூன்றியிருக்கும் நிகழ்வுகளை, கிளைகளாக கவிதைகளில் விரித்திருக்கிறார்.

‘நொந்த உடலுக்கான நஞ்சு’ கவிதையில், பால்யத்தின் பருவங்களில் எல்லாக் குழந்தைகளையும் போலவே, நோய் கண்டு வாய் கசக்கும் குழந்தையாகக் கவிஞர் தனது நோய் தீர்க்கத் தரப்படும் மருந்தினை வெறுக்கிறார்.

காற்றில் திரிதலாகா
தண்ணீர் அளைதலாகா
ஓயந்திருக்க வேண்டுமன்றி ஓடிவிளையாடலாகா
காய்ச்சலின் உச்சகட்டத்தில்
டாக்டர் தாத்தாவின் கட்டளைகள் நீளும்
நாடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுக்கும் மந்திரியாக
நின்றிருப்பாள் அருகே அன்னை
நிறைவேற்றவியலாக் கட்டளைகளைக் கேட்டவாறு
சின்னஞ் சிறுமி மௌனமாக அமர்ந்திருப்பேன்

இங்கு மருந்து குடிக்க வைக்கும் அன்னையை ‘நாடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுக்கும் மந்திரியாக’ விவரித்திருக்கிறார். தாய் தனது ஆரோக்கியத்துக்காகப் பாடுபடுகிறார் என்ற உண்மையை அறியாது தாயை எதிரியாகப் பார்க்கும் சிறு குழந்தையின் மனோபாவத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அத்தனை மனிதருக்கும் இவ்வனுபவம் தவறாமல் வாய்த்திருக்கும்.

விளையாட்டும் முற்றமுமெனை
வந்தனங்கள் கூறியழைக்க
வயல் காற்றுலவும் வெளியெங்கும்
அலைந்து திரிவேன்
இசைவானதொரு தருணம் வாய்ப்பின்
காகித ஓடங்களை
வயலோர வாய்க்காலில்
மிதந்து போகவிட்டு மீள்வேன்
மருந்துண்ணும் வேளையதில்
பெரியம்மா, அண்ணன்மார்களெனும்
அயல்வீட்டு இராணுவமெனைக் கைப் பற்றிக்
கொண்டுவரும் அம்மாவினெதிரே

காய்ச்சல் கண்டிருக்கும் குழந்தையை முற்றவெளி விளையாட அழைக்கிறது. நீரோடும் வாய்க்கால்கள் கப்பல் விடக் கூப்பிடுகின்றன. காற்றில் திரியக் கூடாதென்றும், தண்ணீரளையக் கூடாதென்றும் மருத்துவர் விதித்திருக்கும் கட்டளைகளை அலட்சியப்படுத்தி விளையாட்டில் நோய் மறந்த குழந்தையை மருந்து கொடுக்கவென கதறக் கதற தூக்கிவருகிறார்கள் உறவினர்கள்.

மாத்திரைத் துண்டொன்றையும் சீனியையும்
கரண்டியில் இட்டுக்
கரைத்தெடுத்துவரும் கொடுமை கண்டு
எனதழுகை உரக்கத் தொடங்கும்
……………………
……………………
கசக்கும் பிசாசு வாய் நோக்கி வரும் போது
தாரை தாரையாய் வழிந்தோடக் கண்ணீர்
இறுக மூடிக் கொள்வேன் உதடுகளை
கடும் பிரயத்தனத்துடன் அம்மா
கரைசலை வாய்க்குள் இடச்
சிந்தியதும் உமிழ்ந்ததும் போக
ஒரு துளியை விழுங்கிய பின்
அனைத்துக்குமாக
ஆரம்பத்திலிருந்து அழத்தொடங்குவேன்

தொடரும் இவ் வரிகளில் மருந்துண்ண அடம்பிடிக்கும் சிறு குழந்தைகளின் அழுகையும் ஆர்ப்பாட்டமும் கண்முன்னே தெரியும்படி மிக அருமையான விவரிப்பு.

அப்போது வருமென் காவல் தேவதை
தூக்கி அணைத்திடுவாள்
வாய் கொப்பளிக்க வைத்துக்
கசந்த நாவில் வெல்லமிட்டு
ஆறாகப் பெருகுமென் கண்ணீர் துடைத்திடுவாள்
தோளிலே படுக்க வைத்துச்
சேலைத் தலைப்பைப் போர்வையாக்கித்
தோட்டமெங்கும் சுமந்தலைவாள்
கதைகள் நூறு சொல்லி
அழ வைத்தவர்களைப் பேசி
அழுகையை ஓய வைப்பாள்
நானுமொரு பறவையென
மாமரக் கிளைகளில் தத்திப் பாயும்
புள்ளினங்களில் இலயித்திருக்கையில்
மீண்டுமெனைப் படுக்கையில் கிடத்திக்
காவலிருப்பாள்

அக் குழந்தையின் அழுகையை நிறுத்தும் மந்திரங்களறிந்த அம்மம்மாவை இங்கு தன்னைக் காத்த காவல் தேவதையெனச் சொல்லியிருக்கிறார் கவிஞர். செல்லக் குழந்தையின் அழுகையை பொறுமையுடன் ஆற்றும் வித்தையை பாட்டிகள் எப்போதும் அறிந்திருக்கிறார்கள். பாட்டிகளின் அன்பும், அவர்களது சேலை வாசங்களும் இன்னும் இனிய நினைவாய் நெஞ்சுக்குள் உறைந்திட அக்காலம் பொற்காலமென்போம்.

‘ஊற்றுக்களை வரவழைப்பவள்’ கவிதையிலும் இதே போன்று அம்மம்மாவுடன் தோட்டத்தில் திரிந்த தனது சிறுபராயக் காலங்களை நினைவு கூர்ந்திருக்கிறார் கவிஞர். இங்கும் சிறுமியினதும், முதியவளினதும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் காட்சிப்படிமங்களாய் கண்முன்னே விரிகின்றன.

அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்
பதுங்கிப் பதுங்கி நோட்டம்விட்டுத்
தோட்டம் பார்த்து ஓட்டமெடுப்பேன்.
அச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய்
கையிலே ஓர் தடி
அத் தடியையும் செருப்பொரு சோடியையும்
மரத்தடியில் விட்டுக்
கிளையொன்றில் அமர்ந்து கொள்வேன்.
கற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி
பள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்

அம்மம்மாவின் பார்வைக்குத் தப்பிய கணங்களில் சிறுமியின் குறும்புகளைச் சுட்டித் தொடரும் இக் கவிதையானது கோடை பற்றிச் சொல்லி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

மாலைப் பொழுதொன்றில்,
தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்
சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்
தீர்க்கதரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா
மண்வெட்டியை ஊன்றி ஊன்றி.
காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ
புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்.
நானும் தொடர்வேன்

அம்மம்மாவின் குணவியல்புகளை, பழக்கவழக்கங்களை மேலுள்ள வரிகள் சொல்வதோடு, தோட்டத்தில் வாடிய பயிர்களை நோக்கி நீர் செல்லவென, ஆற்றின் கரையிலிருந்து அம்மம்மா கால்வாய் வெட்டிவிட்டதையும், அதனைப் பின்னர் குளிக்கவென வந்துசெல்பவர்கள் சிதைக்க, மீளவும் மீளவும் அம்மம்மா கால்வாய் வெட்டியதையும் அருமையாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.

ஆற்றோரத் தோட்டமொன்றில் மிக ஆவலாக செடிகள் வளர்க்கும் சிறுமியொருத்தியின் ஒருநாள் நிகழ்வினை ‘அவள் வளர்க்கும் செடிகள்’ எனும் கவிதை மிக அருமையாக விவரிக்கிறது. அவள் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றிடவென ஆற்றிலிருந்து நீரள்ளி வருகிறாள் சிறுமி.

சலசலத்தோடும் தெள்ளிய நீரைச்
சிறிய வாளிக்குள் பிடித்து வருவாள்
வாளி கொள்ளா உற்சாகத்துடன்
துள்ளிப் பாயும் தண்ணீர்
மீன்கள் நிரம்பிய அவளது
சின்னச் சட்டையை
நனைத்து நனைத்துக் கூத்தாடும்

வழமையாக தண்ணீரைத் தேடும் மீன்களுக்கு மத்தியில் மீன்களைத் தேடி நீர் துள்ளும் அதிசயத்தைக் கவிதையில் அழகாகச் சொல்லும் கவிஞர்,

செடிகளின் வேரடியில் அவள்
தண்ணீரைப் பாய்ச்சும் வேளை
இசையுடன் பாய்ந்தோடும்
வரும் வழி நீள
நதி நனைத்துச் சுமந்து வந்த
பல்லாயிரம் வேர்களின் மொழிகள்

என அந் நதி நனைக்க வளர்ந்து வரும் கரையோரப் பெருமரங்களைப் போல, தான் வளர்க்கும் செடிகளும் வளரவேண்டுமெனத் தண்ணீர் ஊற்றியதையும் நினைவுபடுத்திக் கொள்கிறார். வேர்களுக்கென்று தனி மொழி இருக்கின்றதா? எப்பொழுதும் கரையோர வேர்களின் உச்சரிப்புகளை நதி திருடிக் கொண்டு வேர்களை மௌனமாக்கி விடுகிறது.

05.
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் வாழ்வில் விரிசல் விழுவதையும், அவர்களது மனங்களிடையிருந்து விலகிச் செல்லும் காதலைப் பற்றியும், அவ்வாறாக ஆத்மார்த்த அன்பை இழந்து நிராதரவாக்கப்பட்ட ஒரு மனைவியின் நிலையையும் தெளிவாகச் சித்தரிக்கிறது ‘பேய்களால் தின்னப்படுபவள்’ கவிதை.

………………….
………………….
எப்பொழுதும் ஆறுதலையும்
அலைததும்பும் காதலையும் எடுத்துக் கொண்டு
இல்லம் மீள்வாய்
பற்றியிருக்கும் கரங்களுக்குள்
அன்பினைப் பத்திரப் படுத்தி
என் பிரார்த்தனைகளுடனும்
செல்ல மொழிகளுடனும்
புறப் பட்டுச் செல்வாய்

சமையல்காரியாகவோ
சலவைக்காரியாகவோ அன்றி
உனதுயிராகவோ அதனிலும் உயர்வாகவோ
எனைக் காத்திருந்தாய்

காதலிக்கும் காலங்களில் காதலனின் அன்பின் வெளிப்பாடுகள் பலவாறாக இருக்கும். அவற்றைக் குறித்து மேலுள்ள வரிகள் தெளிவுபடுத்துவதோடு ,

சாட்சிகளை முன்னிருத்தி
வேதவசனங்களை ஒப்புவித்து
கணவனாக மாறினாய்
நீ அழைத்து வந்த பேய்களிடம்
உன் காதலியைக் குதறிடக் கொடுத்தாய்

இனி என்றுமே ஒழுங்குபடுத்த முடியாத
கண்ணீர் பிசுபிசுக்கும் இல்லத்தினுள்
கவனிப்பாரின்றி வீழ்ந்துகிடந்த
காதலையும் வாழ்வையும் அள்ளியெடுத்துக் கொண்டு
வெளியேறிப் போய்விட்டது
எங்களைப் பிணைத்திருந்த ஏதோவொன்று…..
என திருமணத்திற்குப் பிறகான காதலனின் நேசம் மாறுபடுவதையும், காதலின் அவல நிலையையும் தெளிவாகச் சொல்லி முடிகிறது இக் கவிதை.

நம்மெதிரே வீழ்ந்து கிடக்கிறது
காலத்தின் பிறிதொரு முகம்

என ஆரம்பித்திருக்கும் ‘கடைசிச் சொல்’ கவிதையும் இதே போல காலம் பிரித்துப் போட்ட நேசர்களின் கதையொன்றாகத்தான் பாடப்பட்டிருக்கிறது.

மகத்தான பொறுமையொன்றின்
காத்திருப்பைக் கண்டு கண்டே
புறக்கணிப்புக்களை வளர விட்டிருந்தாய்
மனதில் பதிந்த உனது நிழல்
சிதறிய வாசனைத் திரவியம் போல
மெல்ல மெல்ல மறைந்தே போயிற்று

நீ உரிமை கொண்டாடிய
எல்லாவற்றிலிருந்தும்
எனை விடுவித்துக் கொண்டேன்
துயரத்தில் பதை பதைத்த சொற்களையும்
துரோகத்தால் நசுங்குண்ட சத்தியங்களையும்
உனது சுவர்களுக்குள்ளேயே விட்டு விட்டு
வெளியேறிப் போகிறேன்

பரஸ்பர அன்புக்குள் துரோகமும் புறக்கணிப்பும் சந்தேகமும் தலைதூக்கும்போது அன்பும் பொறுமையும் வெளியேறிவிடுகிறது. பின்னாட்களில் காலம், நினைவுகளில் பதிந்திருப்பவற்றையும் அழித்துவிடுகிறது.

கருங்கற் பாறைகளெனத் தொடர்ந்திருக்கும் மலைகளை நாம் ஒரு பார்வையில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் கவிஞரோ மலையை ஒரு மூதாட்டியுடன் ஒப்பிட்டு, மலையின் குணவியல்புகளை மிக அருமையாக விவரித்திருக்கிறார். மலை, அது வழிய விடும் நீர்வீழ்ச்சிகள், எப்பொழுதாவது கீழே விழும் சிறு பாறைகள், இடுக்குகளில் வளர்ந்திருக்கும் மூலிகைச் செடிகள், மலையோடு பிணைந்திருக்கும் மர வேர்கள், மலையின் விம்பம் தாங்கும் மலையடிவார நீர் நிலைகளெனப் பலவற்றை நினைவுறுத்துகிறது ‘மலைகளின் மூதாட்டி’ கவிதை. நிச்சயமாக இனி மலைகளைக் காண நேரும் பொழுதெல்லாம் இக் கவிதை நினைவுக்கு வரும்.

அதைப் போலவே கட்டுமானங்களைத் தன் வேர்கள் மூலமாகத் தகர்ப்பதாலும், அடர்ந்து வளர்ந்திருக்கும் தன் கிளைகள் விஷப் பிராணிகளின் சுதந்திர நடமாட்டங்களுக்கு இடமளிப்பதாக இருப்பதாலும் வேருக்கு நஞ்சூட்டப்பட்டு அழிக்கப்பட்ட ஒரு பெரிய நிழல் மரத்தைப் பற்றி ‘நஞ்சூட்டப்பட்ட மரம்’ கவிதையில் மிகக் காத்திரமாக விவரித்திருக்கிறார்.

தொகுப்பிலுள்ள ‘தீவில் தனித்த மரம்’, ‘உயிர் வேலி’, ‘மீட்டெடுக்க முடியாமற் போன விம்பம்’ ஆகிய கவிதைகள் அநாதரவாக்கப்பட்ட ஒரு பறவை, கண்ணாடி, மரம் ஆகிய குறியீடு, படிமங்களைக் கொண்டு தனித்து விடப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை தெளிவுபடுத்தியிருக்கின்றன.

பறவைக்கு பயணப்பாதையென்று ஒன்று இல்லை. அதற்கு வானமே எல்லை. பெண்களுக்கும் அப்படித்தான். எதிர்காலத்தில் அவர்களது பாதைகள் எங்கெங்கு விதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாராலும் எதிர்வுகூற முடியாது. சிறுவயதில் தனது வீட்டோடும், குடும்பத்தாரோடும் மகிழ்வோடு கழிக்கும் காலங்களெல்லாம், பெண்களால் பிறிதொரு இட்த்துக்கு பிரிந்துசெல்லப் போகிறோம் என்ற மெல்லிய திரையால் மூடப்பட்டே கொண்டாடப்படுகின்றன.  அவ்வாறாக தான் கடந்துவந்த காலங்களை, கவிதைகளாக மீட்டிப் பார்த்திருக்கிறார் கவிஞர் ஃபஹீமா ஜஹான். அவரது மொழியாளுமையும், சொற்செழுமையும் அவரது நினைவுகளையும் உணர்வுகளையும் வாசிப்பவர்களும் தெளிவாக உணரும்படி கையாளப்பட்டிருக்கின்றன. ‘அபராதி’ எனும் தொகுப்பு, நிச்சயமாக குற்றமிழைத்தவர்களைச் சுடும். சுடட்டும் !

நன்றி:

எம். ரிஷான் ஷெரீப்